Wednesday, April 25, 2018

காவிப் பயங்கரவாதம் என்பது ஆதாரமற்ற கற்பனை அல்ல என்பது, ஏன்? -பேரா. அசோக் ஸ்வெயின்



(மோடி அரசாங்கம், இந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களைப் பாதுகாத்திடுவதன்மூலம், மாபெரும் தவறைச் செய்து கொண்டிருக்கிறது. அது பாகிஸ்தான் செய்திட்ட கண்மூடித்தனமான தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.)

தேசியப் புலனாய்வு முகமை (நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸி), 2000 மாலேகான் வெடிகுண்டுத்தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சாமியாரிணி பிரக்யா சிங் தாகூர் என்பவருக்கு எதிராக, பயங்கரவாதம் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்திடுவது என்று சமீபத்தில் முடிவு செய்திருக்கிறது.  தேசியப் புலனாய்வு முகமை சிங்கிற்கு எதிராக இதற்கு முன்பு கண்டிருந்த புலனாய்வு முடிவுகள் அனைத்தையும், நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றபின்பு, மூடிமறைத்திட முயலும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

சமீப தினங்களில், தேசியப் புலனாய்வு முகமை இதுபோன்று காவிப் பயங்கரவாதிகள் பலருக்கு எதிரான மிகவும் சீரியசான குற்றச்சாட்டுகளை எல்லாம் நீர்த்துப் போகச் செய்வதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. ராணுவ அதிகாரியாக இருந்த ஸ்ரீகாந்த் புரோகித் மற்றும் ஆர்எஸ்எஸ் பேர்வழியான ஸ்வாமி ஆசிமானந்த் என்கிற இரு பெரும் புள்ளிகள், 2007இல் 68 பேர் (இவர்களில் பெரும்பாலோர் முஸ்லீம்கள்) கொல்லப்பட்ட சம்ஜூதா எக்ஸ்பிரஸ் தகர்க்கப்பட்ட சம்பவம் உட்பட  முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர்களை விடுவிப்பதற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறது. இவ்வாறு, தாகூருக்கு எதிரான அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவிப்பதற்கான முடிவு, இந்துத்துவா குழுக்களுக்கு, தாங்கள் காவிப் பயங்கரவாதிகள் என்று கூறப்படுவது கற்பனையே தவிர வேறல்ல என்று சித்தரிப்பதற்கான வாய்ப்பை அளித்திருக்கிறது.

சங் பரிவாரக் கூட்டம், காங்கிரஸ் மீது அது பயங்கரவாதத்தின் மீது மிக மென்மையான அணுகுமுறையைக் கொண்டிருக்கிறது என்றே எப்போதும் குற்றஞ்சாட்டி வந்திருக்கிறது.  உண்மையில், சங் பரிவாரக் கூட்டம் பயங்கரவாதம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போதெல்லாம், அது இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறது. அதுவே இந்துத்துவாக் குழுக்கள், ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவற்றின் பயங்கரவாத நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டினோமானால், அவற்றை ஏற்றுக்கொள்ளவே அவை மறுக்கின்றன.

காவிப் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்

குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களில் முஸ்லீம்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னர், மேற்கத்திய விமர்சகர்கள் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக இந்து பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் பற்றி எழுதினார்கள். எனினும் அந்த விமர்சனங்கள் எல்லாம் 2010 வரை இந்தியாவை வந்து சேரவில்லை. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தன்னிடம் வந்த உளவுத்துறை அதிகாரிகள் அளித்திட்ட விவரங்களின் அடிப்படையில்,  காவிப் பயங்கரவாதம்என்ற சொற்றொடைரைப் பயன்படுத்திய பின்னர்தான்,  இது பூதாகாரமாக வெளிச்சத்திற்கு வந்தது. அந்த சமயத்தில் நரேந்திர மோடி, குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார். அவர், ப.சிதம்பரத்தைத் தாக்குவதாகக் கருதிக்கொண்டு, காஷ்மீரில் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு என்ன பெயர் என்று கேட்டார். மேலும் அவருடைய மாநிலத்தில் சிதம்பரத்தின் கருத்துக்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்து இருதய சாம்ராட் என்னும் அமைப்பின் சார்பில் காவிப் பெருமை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

உண்மையில் காவிப் பயங்கரவாதம் குறித்து முதலில் பிரச்சனையை எழுப்பியது ப.சிதம்பரம் அல்ல. 2010 டிசம்பரில் விக்கிலீக்ஸ் கேபிள்கள் வெளிப்படுத்தியிருந்த விவரங்களில், அதற்கு ஓராண்டிற்கு முன்பே, காங்கிரஸ் கட்சித் தலைவரான ராகுல் காந்தி, தில்லியில் இருந்த அமெரிக்கத் தூதருக்கு, முஸ்லீம்களுக்கு எதிராக மதப் பதட்டத்தையும் அரசியல் மோதலையும் உருவாக்கிக்கொண்டிருந்த இந்து பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்துகொண்டிருப்பது பற்றி எச்சரித்திருந்தார்.

2013இல் ப. சிதம்பரத்திற்குப் பின்னர் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த சுஷில் குமார் ஷிந்தே அவர்ள் மீண்டும் காவிப் பயங்கரவாதத்தின் அபாயம் குறித்து பொதுவெளியில் கொண்டுவந்தார். எனினும் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகள் அவரது கூற்றைத் திரும்பப் பெற வேண்டுமென்று நிர்ப்பந்தித்தன. ஷிந்தே தன் அறிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொண்டபோதிலும் கூட, அப்போது உள்துறை செயலாளராக இருந்தவரும், தற்போது பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமான ஆர்.கே. சிங், ஷிந்தேயின் அறிக்கை, தேசியப் புலனாய்வு முகமையின் புலனாய்வுகளின் அடிப்படையிலேயே அளித்திட்டார் என்று உறுதிப்படுத்தினார்.

சங் வரிவாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் குறைந்தபட்சம் பத்து பேர், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற, பல்வேறுவிதமான பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்று 2013இல் புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்திருந்தன. அந்த சமயத்தில் ஆர்எஸ்எஸ் தலைவராக  மோகன் பகவத், தங்களுடைய அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று சதிசெய்து கூறுவதாக காங்கிரஸ் கட்சியின் மீது குற்றஞ்சாட்டினார். இந்துத்துவா கூட்டத்தின் ஓர் அங்கமாகத் திகழும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் என்பவரும் காவிப் பயங்கரவாதம் என்ற  சொற்றொடரைப் பயன்படுத்துவதற்கு ஆட்சேபணை தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு ஆர்எஸ்எஸ் கூடாரம், காவிப் பயங்கரவாதம் என்ற சொற்றொடருக்குக் கடுமையாக ஆட்சேபணை தெரிவித்தபோதிலும்கூட, அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதம் என்கிற சொற்றொடரில் தவறெதையும் காணவில்லை. 2001இல் மோடி ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது, நியூயார்க்கில் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் கைவரிசை என்று முத்திரை குத்தியிருந்தார்.

இந்துக்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வல்லமையற்றவர்களா?

இந்துயிசம் என்பது உலகிலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மதம் என்றும், எனவே காவி என்பதும் பயங்கரவாதம் என்பதும் இரண்டு எதிரெதிரான சொற்கள் என்றும் எனவே அவற்றை ஒன்றிணைக்காதீர்கள் என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் அடிக்கடி கூறிவருகிறது. பாஜக-வின் சிந்தனாவாதி என்று கூறப்படும் கோவிந்தாசார்யா, காவிப் பயங்கரவாதம் என்று கூறுவது பாலை, கருப்பு வர்ணத்துடன் ஒப்பிடுவதற்குச் சமம் என்று விவாதித்தார். சென்ற ஆண்டு, உள்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங், முஸ்லீம்களைத் திருப்திப்படுத்துவதற்காக, காங்கிரஸ் கட்சி இந்து பயங்கரவாதம் என்கிற சொற்றொடரைக் கண்டுபிடித்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.

தங்களுக்கு எதிரானவர்களை வென்றெடுப்பதற்காக, பயங்கரவாதத்தை ஓர் உத்தியாகப் பயன்படுத்திடக்கூடிய அளவிற்கு இந்துக்கள் வல்லமையற்றவர்களாக இருக்கிறார்களா? உலகப் பயங்கரவாத அமைப்புகளில் மிகவும் ஆபத்தானவர்களாகவும், பயங்கர வாதிகளாகவும் இருந்தவர்களில் ஒரு பிரிவினர்தான் இலங்கைத் தமிழ்ப் புலிகள். இவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். 1984இல், அல் கொய்தா இயக்கத்தாரின் தாக்குதல்கள் நடைபெறுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, இந்துக்களின் அவதாரப் புருஷன் என்று தன்னைத்தானே அறிவித்துக்கொண்ட ரஜ்னீஷின் சீடர்களால் அமெரிக்கா பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது. எனவே, இந்துக்கள் என்றால் அவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட வல்லமையற்றவர்கள் என்றெல்லாம் கூற முடியாது.

எல்லா மதங்களையும்போலவே, இந்து மதமும், பயங்கரவாதத்தை மேம்படுத்திடவில்லைதான். ஆனாலும், ஒரு மதத்தை தனித்துவமானது என்று கூறி, பிற மதங்களை இழிவாகக் கருதுகிற குணத்தைக் காட்டும்போது, அதன் அருவருப்பான பக்கம் முனைப்பாகத் தெரியத் துவங்கிவிடுகிறது. உலகில் உள்ள அனைத்து மதங்களுமே ஏதேனும் ஒரு சமயத்தில் யுத்தத்தையும் வன்முறை வெறியாட்டங்களையும் நியாயப்படுத்தக்கூடிய விதத்தில் உருக்குலைக்கப்பட்டிருக்கின்றன. இந்து மதமும் இதற்கு விதிவிலக்கல்ல.  மோடி அரசாங்கத்தின் ஆதரவுடன் இந்துத்துவா குழுக்கள் இந்துயிசத்தை அத்தகையதொரு கொடூரமான திசையை நோக்கி இப்போது இழுத்துச்சென்று கொண்டிருக்கின்றன.

சுதந்திரம் கிடைத்தவுடனேயே, நாட்டின் தந்தை என்று அழைக்கப்பட்ட மகாத்மா காந்தியை முஸ்லீம்களிடம் மென்மையாக நடந்துகொள்கிறார் என்று குற்றஞ்சாட்டி ஆர்எஸ்எஸ் அவரைக் கடுமையாக நிந்தித்தது. இது, அவர் கொலை செய்யப்படக்கூடிய அளவிற்கு இட்டுச் சென்றது. மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த, நாதுராம் கோட்சே, ஓர் இந்து மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினராவார்.

சுதந்திரத்திற்குப்பின்னர் பல ஆண்டு காலம், காங்கிரஸ் கட்சி இந்துத்துவா சக்திகளை தலை தூக்க  முடியாதவாறு வைத்திருந்தது. எனினும், காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியுறத் துவங்கியபின், குறிப்பாக அயோத்தி இயக்கம் தொடங்கியதற்குப் பின்னர், இந்துத்துவா குழுக்கள் வலுப்பட்டதானது, காவிப் பயங்கரவாத அச்சுறுத்தல்களை மீண்டும் முன்னணிக்குக் கொண்டு வந்திருக்கிறது.

1999இல் ஒடிசாவில் ஒரு குக்கிராமத்தில் ஆஸ்திரேலியக் கிறித்தவப் பாதிரியார் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு குழந்தைகள் உயிருடன் கொளுத்தப்பட்டபோதே இந்துத்துவா பயங்கரவாதம் தொடங்கிவிட்டது. இந்து மதத்தைப் பாதுகாப்பது என்ற பெயரில் இந்தக் கொடூரமான கொலைகளைச் செய்ததாகக் கூறிய தாரா சிங், இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான விசுவ இந்து பரிசத்தின்  இளைஞர் பிரிவாகச் செயல்பட்டு வரும் பஜ்ரங் தளத்தின் தலைவர்களில் ஒருவர்.

சமீபத்தில் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம்.கல்புர்கி போன்ற பகுத்தறிவாளர்கள் கொல்லப்பட்டிருப்பதும், அவர்களைக் கொன்றவர்கள் இந்துத்துவ குழுக்களில் ஒன்றுதான் என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பின்னர் மறுத்தபோதிலும், முன்னதாக கேரவன் மாத இதழுக்குப் பேட்டி அளித்திருந்த ஸ்வாமி ஆசீமானந்த்தா (இவரது நேர்காணல்  அந்நிறுவனத்தால் முழுமையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது) ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அனுமதி பெற்றுதான் 2006க்கும் 2008க்கும் இடையே அக்கொலைபாதக வெடிகுண்டுத் தாக்குதல்களைச் செய்ததாக ஒப்புக்கொண்டிருந்தார்.

தில்லியில் நரேந்திர மோடி பிரதமராக வந்திருப்பது, இந்துத்துவா குழுக்களின் கைகளை வலுப்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில், இந்து இளைஞர்கள் தர்ம சேனா என்ற பெயரில் 15 ஆயிரம் பேருக்கு இந்து நாட்டை உருவாக்க வேண்டும் என்று கோரி கத்திகள், துப்பாக்கிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்து உயர் ஆதிக்கத்தை மேம்படுத்துவதற்காக இந்து இளைஞர்களை ராணுவ ரீதியில் தயார் செய்வதற்காக நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக  மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில், எண்ணற்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நிஷா பஹூஜா என்பவர் வெளியிட்டுள்ள ‘அவளுக்கு முன் உள்ள உலகம்’ (The World Before Her) என்னும் ஆவணப்படம், இத்தகைய முகாம்களில் ஏராளமான இந்துப் பெண்களும் ராணுவப் பயிற்சி மேற்கொண்டு வருவதைக் காட்டுகிறது.

பாகிஸ்தான் ராணுவம், அங்கு இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும்  பயங்கரவாதக்குழுக்களுக்கு ஆதரவு அளித்து வந்ததானது, அவர்களையே மிகவிரைவில் திருப்பித் தாக்கியது. அதேபோன்ற தவறை இங்கே மோடி அரசாங்கம் இந்து பயங்கரவாதிகளைப் பாதுகாப்பதன் மூலம் செய்து கொண்டிருக்கிறது. இவ்வாறு நம் கொல்லைப்புறத்தில் உள்ள பாம்புகள் விரைவில் இந்தியாவின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒரு மாபெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை.

(கட்டுரையாளர், ஸ்வீடன், உப்சாலா பல்கலைக் கழகத்தில் அமைதி மற்றும் மோதுதல் ஆய்வுத்துறை (Peace and Conflict Research) பேராசிரியர்.

நன்றி: ஸ்குரோல்.இன்

(தமிழில்: ச. வீரமணி)


No comments: