Sunday, April 15, 2018




தோழர் ஜே.வி. ஸ்டாலின் எழுதிய “விமர்சனமும் - சுய விமர்சனமும்” என்ற இச்சிறுநூல் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் வழி நின்று, தொழிலாளர் வர்க்க போர்க்குணத்துடன் பிரச்சனைகளை அணுகவும், போராட்டங்களை உறுதியாக நடத்தவும், தவறுகளை திருத்திக் கொண்டு சோர்வின்றி முன்னேறவும், பலமிகு புரட்சிகர வெகுஜனக் கட்சியைக் கட்டவும் இந்நூல் வழிகாட்டுகிறது.

நமது கட்சியின் மாநிலக்குழு 1968ஆம் ஆண்டு ஜூன் திங்கள் இந்நூலை வெளியிட்டது. பின்னர் அது தஞ்சை மாவட்டக் குழு 1983 மார்ச் 14 அன்று “காரல் மார்க்ஸ் நினைவு நூற்றாண்டில்” மறுபதிப்பாக வெளியிட்டது. இப்போது நாம் வெளியிடுகிறோம்.




விமர்சனமும் - சுய விமர்சனமும்

நமது கட்சியின் பதினைந்தாவது காங்கிரஸ் நடைபெற்ற காலத்திலிருந்து சுய விமர்சனம் என்ற கோஷம் நன்றாகப் பரவி வளர்ச்சி அடைந்திருக்கிறது. காரணம் என்ன? எதிர்ப்பைத் தோற்கடித்த பதினைந்தாவது காங்கிரசுக்குப் பிறகு, கட்சியில் புதிய நிலைமை உருவாயிற்று. நாம் அதைப் புறக்கணிக்க முடியாது.

புதிய நிலைமை என்ன? நமக்கு எதிர்ப்பு இல்லை, அநேகமாக நமக்கு எதிர்ப்பு இல்லை. எதிர்ப்பை நாம் எளிதாக வென்றுவிட்டதால், இந்த வெற்றி நமது கட்சிக்கு லாபம் என்பது சரிதான். நமது வெற்றிப் போதையால் சோம்பேறித்தனம் உண்டாவதும், நமது வேலையில் உள்ள குறைபாடுகளை நாம் தெரிந்துகொள்ளாமல் இருப்பதும் ஆகிய ஆபத்து நமது கட்சியில் தோன்றலாம்.

எதிர்ப்பின்மீது நாம் அடைந்துள்ள சுலபமான வெற்றி, நமது கட்சிக்கு மிகுந்த லாபமே. ஆனால், தனியான நஷ்டங்களும் அதனுள் மறைந்துள்ளன.

அதாவது, நம்முடைய வேலையில், சுயதிருப்தி உண்டாகி, நம் கட்சி, புகழை ரசிக்கத் தொடங்கிவிடும். புகழை ரசிப்பது என்றால் என்ன? நமது முன்னேறும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகும். இது ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், நமக்கு சுய விமர்சனம் வேண்டும். எதிர்க்கட்சி கையாண்ட பொறாமையும், எதிர்ப்புரட்சி தன்மையும் வாய்ந்த விமர்சனம் அல்ல நாம் வேண்டுவது. நேர்மையான விமர்சனம், கள்ளம் கபடம் அற்ற புரட்சிகரமான சுய விமர்சனம்தான் நமக்குத் தேவை.

நமது கட்சியின் பதினைந்தாவது காங்கிரஸ் இந்த நிலைமையைக் கணக்கிலெடுத்து, சுய விமர்சனம் என்ற கோஷத்தைக் கொடுத்தது. அதுமுதல் சுய விமர்சனம் அலை அலையாக வளர்ந்து ஓங்கியது. ஏப்ரல் மாதம் மத்தியக் கமிட்டியின் விரிவான கூட்டத்திலும், கட்சியின் மத்திய கண்ட்ரோல் கமிஷனிலும் விமர்சனம் சிறப்பான இடம் பெற்றது.

கட்சிக்குள்ளேயும், வெளியேயும் உள்ள விரோதிகள் நமது குறைகளைப்பற்றிய விமர்சனத்தை சாதகமாகக் கொண்டு, போல்ஷ்விக்குகள் தவறு செய்கிறார்கள் என்று பிரமாதப்படுத்துவார்கள் என்பதற்காக நாம் பயப்படலாமா? அப்படியானால் போல்ஷ்விக்குகளான நம்மிடையே ஏதோ தவறு இருக்க வேண்டும். போல்ஷ்விஸம் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளத் தயங்குவது இல்லை. இதில்தான் போல்ஷ்விஸத்தின் வலிமை அடங்கியுள்ளது.

கட்சியும், போல்ஷ்விக்குகளும் நாணயம் உள்ள எல்லாத் தொழிலாளிகளும், நம் நாட்டில் உள்ள எல்லா உழைப்பாளிகளும் நமது வேலையிலும், நமது நிர்மாண வேலையிலும் உள்ள குறைகளை வெளிப்படுத்தட்டும், நம் குறைகளைப் போக்கும் வழியைக் காட்டட்டும், இவ்வாறு செய்தால்தான், நமது நிர்மாண வேலையில் தடங்கலோ, ஊழலோ இருக்காது. நமது வேலைகளும் நிர்மாணமும் ஒவ்வொரு நாளும்அபிவிருத்தியாகி வெற்றிமேல் வெற்றி கிட்டும். இதுதான் இப்போது முக்கிய தேவை. நம் விரோதிகள் நம் குறைகளைப் பற்றி உளறட்டும். இத்தகைய சிறிய காரியங்களால் போல்ஷ்விக்குகள் கலவரம் அடையக்கூடாது.

கடைசியாக, சுய விமர்சனம் செய்யும்படி நம்மைத் தூண்டக்கூடிய மற்றொரு விஷயம் உண்டு. மக்கள், தலைவர்கள் என்ற பிரச்சனையை நான் நினைவில் கொண்டே பேசுகிறேன். தலைவர்களுக்கும், மக்களுக்கும் இடையே சில நூதன தொடர்புகள் சமீபகாலத்தில் வெளித்தோன்ற ஆரம்பித்து இருக்கின்றன. ஒருபுறம் வலுவான சரித்திரரீதியில் வளர்ச்சி பெற்ற தலைவர்களின் குழு, அந்தக் குழுவின் ஆதிக்கம் மேலும் மேலும் வளர்ந்து வருகிறது. அந்தக்குழு பொது மக்களோடு தொடர்பு இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. மற்றொருபுறம், பொது மக்கள் மிக மெதுவாக வளர்ச்சியடைகின்றனர். அவர்கள் எதற்கு எடுத்தாலும் தலைவர்களின் கட்டளையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தலைவர்களைப் பற்றி விமர்சிக்க பெரும்பாலும் தயங்குகிறார்கள்.

நம் நாட்டில் தலைவர்களின் குழு ஒன்று பெருவாரியாகத் தோன்றி இருக்கிறது. அந்தக் குழு மிகவும் ஆதிக்கம் உள்ளது. இதுவே நம் கட்சியில் மாபெரும் சாதனை என்பதில் சந்தேகம் இல்லை. இத்தகைய செல்வாக்கு உள்ள தலைவர்களைக் கொண்ட குழு இல்லாமல், ஒரு பெரிய நாட்டுக்கு வழிகாட்டுவது என்பது முடியாத காரியம். தலைவர்களின் கட்டளையை எதிர்நோக்கி, தங்கள் தலைவர்களைப் பற்றி விமர்சனம் செய்யப் பொது மக்கள் தயங்கும்பொழுது, செல்வாக்கு மிகுந்துவரும் தலைவர்களைப்பற்றி விமர்சனம் செய்யப் பொது மக்கள் தயங்கும்பொழுது, செல்வாக்கு மிகுந்துவரும் தலைவர்கள் பொது மக்களிடம் தொடர்பு இல்லாமல் தனித்து நிற்பது, பொது மக்களிடமிருந்து தலைவர்களும், தலைவர்களிடமிருந்து பொது மக்களும் தனித்து நிற்பதான ஆபத்தை விளைவிக்காமல் இருக்க முடியாது.

தலைவர்கள் தற்பெருமைகொண்டு, தாங்கள் தவறு செய்யாதவர்கள் என்று கருதக்கூடிய நிலைமைக்கு இது வழிதிறக்கும். தலைவர்கள் தற்பெருமை கொண்டவர்களாகவும், மக்களை அவமதிப்பவர்களாகவும் மாறினால், அவர்களால் என்ன நன்மை ஏற்படமுடியும்? நிச்சயமாக இதன் விளைவு கட்சிக்கு அழிவைத்தான் உண்டாக்கம். ஆனால் கட்சிக்கு ஏற்படும் அழிவை நாம் விரும்பவில்லை. நாம் முன்னேறிச் சென்று, நமது வேலையை அபிவிருத்தி செய்வதையே நாம் விரும்புகிறோம். முன்னேறிச் செல்லவும், பொது மக்களுக்கும் தலைவர்களுக்கும் உள்ள தொடர்பை அபிவிருத்தி செய்யவும் நாம் அடிக்கடி சுயவிமர்சனம் செய்ய வேண்டும். சோவியத் மக்கள் தங்கள் தலைவர்களைப்பற்றி அடிக்கடி விமர்சனம் செய்யவும், அவர்களை எடுத்துக்காட்டவும் வாய்ப்பு அளிக்க வேண்டும். தலைவர்கள் சுயதிருப்தியில் சிக்கிவிடாமலும், பொது மக்களிடம் இருந்து தலைவர்கள் தனிமைப்பட்டு விடாமலும் இருப்பதற்காக, நாம் மேற்கண்டவாறு செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கும், தலைவர்களுக்கும் உள்ள உறவு பற்றிய பிரச்சனையை, மேல்பதவிக்கு உயர்த்தும் பிரச்சனையோடு சில வேளைகளில் குழப்புகிறார்கள். தோழர்களே! இது தவறு. இந்த வேலை நமது கட்சியின் கவனத்துக்கு உரிய மிக முக்கியமான பிரச்சனையாக இருந்தாலும், நாம் விவாதிக்கும் விஷயம் புதிய தலைவர்களை மேல் பதவிக்கு உயர்த்தும் பிரச்சனை அல்ல. ஏற்கனவே, மேல் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ள பிரதான தலைவர்களை ஸ்தாபனரீதியில் ஒழுங்குபடுத்தி, அவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இருகிய, நெருங்கிய தொடர்பை நினைவுபடுத்தும் பிரச்சனையைப்பற்றித்தான் நாம் இப்போது கவனிக்கிறோம்.

கட்சியின் பரந்த வெகுஜன அபிப்பிராயத்தையும், தொழிலாளி வர்க்கத்தின் பரந்த வெகுஜன அபிப்பிராயத்தையும் உருவாக்குவது இடைவிடாத ஒரு பிரச்சனை. நமது குறைபாடுகளை ஆராய்ந்து, விமர்சனமும் சுய விமர்சனமும் செய்துகொள்வதன் மூலம் இப்பிரச்சனையைத் தீர்க்க முனைகிறோம். இந்த வெகுஜன அபிப்பிராயத்தை, உயிர் ஆற்றலும் விழிப்புத்தன்மையுமிகுந்த ஒழுக்க நியதியாக நாம் கருதுகிறோம். எனவே, கட்சியின் நம்பிக்கையையும், தொழிலாளி வர்க்கத்தின் நம்பிக்கையையும் இழக்காமல் இருக்க விரும்பினால், மாபெரும் தலைவர்களும், அந்த விமர்சனக் குரலுக்குச் செவிசாய்த்தே தீரவேண்டும்.

இந்த முறையில் நம் பத்திரிகை, கட்சி, சோவியத் பத்திரிகை ஆகியவற்றின் முக்கியத்துவம் அளவு கடந்தது. “தொழிலாளி - விவசாயியின் பரிசோதனை” என்ற கட்டுரையை வெளியிடுவதில் பிராவ்தா பத்திரிகை கொண்டுள்ள முயற்சியைப் பாராட்டாமல் இருக்கமுடியாது. நமது வேலையில் காணப்படுகின்ற குறைகளை அது முறையாக விமர்சனம் செய்கிறது. அந்த விமர்சனம் மேல் எழுந்தவாரியாக இல்லாமல், ஆழ்ந்த கருத்துள்ளதாக இருப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டியது அவசியம். இந்த முறையில் கம்ஸமால் பிராவ்தா பத்திரிகை எடுக்கின்ற முன்முயற்சியையும் நாம் வரவேற்க வேண்டும். நமது வேலையில் உள்ள குறைகளை அது தீவிரமாகவும் நுட்பமாகவும் விமர்சிக்கிறது.

சில வேளைகளில் விமர்சனம் முற்றிலும் சரியாக இல்லை என்பதற்காக விமர்சகர்கள் கோபிக்கப்படுகிறார்கள். விமர்சனம் செய்யப்படும் அத்தனை விஷயங்களும் சரியானதாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லப்படுகிறது. விமர்சிக்கப்படுகின்ற ஒவ்வொரு விஷயமும் சரியானதாக இல்லையேல் அது அலட்சியம் செய்யப்பட்டு நிராகரிக்கப்படுகிறது.

தோழர்களே! இது தவறு. இது பெரிய ஆபத்தில் கொண்டுவிடக்கூடிய தவறான கருத்து. விமர்சிக்கப்படும் ஒவ்வொரு விஷயமும் சரியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீங்கள் முன் வைத்தால், நமது குறைகளைத் திருத்த விரும்பியபோதிலும், தங்களுடைய எண்ணங்களைச் சரியாக உருவாக்க முடியாத ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை தொழிலாளிகளின் நிருபர்களை விவசாயிகளின் நிருபர்களைப் பேசவிடாமல் வாயடைத்துவிடுவீர்கள். இது சுயவிமர்சனம் அல்ல, விமர்சனத்தையே கழுத்தை நெரிப்பதாகும்..

நமது வேலையில் உள்ள குறைகளை வெளியிடுவதற்குத் தொழிலாளர் சில வேளைகளில் தயங்குகிறார்கள். அவர்கள் அவ்வாறு தயங்குவதற்குக் காரணம் என்ன? அரைகுறையான விமர்சனம் என்பதற்காக அவர்கள் வாய் அடைக்கப்படுவதுடன் கேலியும் செய்யப்படுவார்கள் என்பதற்காக அவர்கள் விமர்சனம் செய்யத் தயங்குகிறார்கள். நம் வேலையிலும், நமது திட்டத்திலும் உள்ள குறைகளை உணருகிற ஒரு சாதாரணத் தொழிலாளி அல்லது விவசாயி, எப்படி விமர்சனக் கலையின் விதிகள் அனைத்தையும் அனுசரித்து விமர்சிக்க முடியும்? விமர்சனம் நூற்றுக்கு நூறு சரியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக இருந்தால், கீழ் ஸ்தாபனங்களில் இருந்து விமர்சனம் வரக்கூடிய சாத்தியப்பாடுகளையும், சுய விமர்சனத்துக்குள்ள எல்லா சாத்தியப்பாடுகளையும் நீங்கள் ஒழித்துவிடுவீர்கள். எனவேதான், ஒரு விமர்சனம் ஐந்து அல்லது பத்து சதவிகிதம் உண்மையாக இருந்தாலும், அத்தகைய விமர்சனத்தை வரவேற்க வேண்டும். கவனமாகக் கேட்க வேண்டும். சரியான விஷயத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், சோவியத் அபிவிருத்திக்காகத் தங்களை அர்ப்பணித்துள்ளவர்களும், விமர்சனத்தில் அனுபவர் இல்லாதவர்களும், ஆனால் உண்மை பேசுகிறவர்களும் ஆன ஆயிரக்கணக்கான மக்கள் வாய் அடைத்துப்போகும்படி செய்ய வேண்டியது இருக்கும்.

சில வேளைகளில் முழுவதும் அல்லது எல்லாப் பகுதிகளும் சரியாக இல்லாதிருந்தபோதிலும், சுய விமர்சனத்தை அவமதிக்கும் பொருட்டு அல்லாமல், அதை அபிவிருத்தி செய்யும்பொருட்டு, சோவியத் மக்களின் ஒவ்வொரு விமர்சனத்தையும் கவனத்துடன் கேட்க வேண்டும். அத்தகைய நிலைமைகளில்தாட்ன அரைகுறையான விமர்சனத்துக்காக அவர்களின் வாய் அடைக்கப்பட மாட்டாது. அவர்களின் விமர்சனத்தில் ஏற்படும் சில தவறுகளுக்காக அவர்கள் கேலி செய்யப்பட மாட்டார்கள் என்ற உறுதி பொதுமக்களுக்கும் உண்டாகும்.

அத்தகைய நிலைமைகளில்தான் சுயவிமர்சனம் பொதுமக்களின் உண்மையான விமர்சனம் ஆகும்.

“எந்தவிதமான” விமர்சனத்தையும் பற்றி நாம் பேசிக்கொண்டு இருக்கவில்லை என்பது தெளிவாக வேண்டும். எதிர்ப்புரட்சிக்காரனின் விமர்சனமும் விமர்சனம்தான். ஆனால், அதன் நோக்கம், நம் தொழிலைச் சீரழித்து, நம் கட்சியின் வேலையைச் சீர்குலைத்து சோவியத் அதிகாரத்தைப் பாழ்படுத்துவது ஆகும். அத்தகைய விமர்சனத்தைப் பற்றி நாம் இங்கு ஆராய்ச்சி செய்யவில்லை. அத்தகைய விமர்சனத்தைப்பற்றி நான் பேசவில்லை. ஆனால் நான் சொல்லும் விமர்சனம், சோவியத் மக்களின் விமர்சனம். சோவியத் அதிகார ஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நோக்கத்துடன் செய்யப்படும் விமர்சனம். நமது தொழில், நமது கட்சியின் வேலை, நமது தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்காகச் சொல்லப்படும் விமர்சனமே. நாம் விமர்சனத்தை விரும்புவது, சோவியத் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துவதற்காக அல்ல. பலப்படுத்துவதற்காகவே. நமது லட்சியத்தைப் பலப்படுத்தி அபிவிருத்தி செய்யும் நோக்கத்தைக் கருத்தில் கொண்டு, விமர்சனம் சுய விமர்சனம் என்நற கோஷத்தைக் கட்சி வெளியிட்டிருக்கிறது.

சுய விமர்சனம் என்ற கோஷத்தில் இருந்து முதலாவது நாம் எதிர்பார்ப்பது என்ன? சரியாகவும், உண்மையாகவும் அதைக் கையாண்டால் இதனால் ஏற்படும் விளைவுகள் எவை? முதலாவது, தொழிலாளி வர்க்கத்தை அது விழிப்புறச் செய்யும். நமது குறைகளைப் பற்றிய அதன் கவனத்தைத் தீவிரப்படுத்தும். இந்தக் குறைகளை நிவர்த்திக்க வசதி அளிக்கும். நமது நிர்மாண வேலையில் எவ்வித “எதிர்பாராத நிகழ்ச்சிகளையும்” அது சாத்தியம் அற்றதாக ஆக்கும். இரண்டாவது, தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் நிலையை உயர்த்தும். அது நாட்டின் எஜமானன் என்ற உணர்ச்சியை அபிவிருத்தி செய்யும். அது நாட்டின் எஜமானன் என்ற உணர்ச்சியை அபிவிருத்தி செய்யும். நாட்டை ஆட்சி செய்யும் வேலையில் தொழிலாளி வர்க்கத்துக்குப் பயிற்சி அளிப்பதை அது சுலபம் ஆக்கும்.

சக்தா விஷயம் மட்டும் அல்லாமல், 1928 ஜனவரி மாதத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையும், நாம் “எதிர்பாராத விஷயங்கள்” எனக் கருதவில்லையா? இந்த அம்சத்தில் சக்தா விஷயம் தனி குணாம்சம் உள்ளது. சர்வதேச முதலாளித்துவத்தின் சோவியத் எதிர்ப்பு ஸ்தாபனங்களின் கட்டளைகளின்படி முதலாளித்துவ எதிர்ப்பு புரட்சிக் குழு 5 வருடங்களாக அழிவு வேலைகளைச் செய்தன. நமது ஸ்தாபனங்கள் ஐந்து வருடங்களாக எல்லாவிதமான தீர்மானங்களையும் நிறைவேற்றின. நமது நிலக்கரி ஆலையின் உற்பத்தி உயர்நிலையை அடைந்தது. ஏனென்றால், சோவியத் பொருளாதார முறை அத்தகைய முக்கியம் வாய்ந்தது. சக்தி வாய்ந்தது. நாம் கவனக்குறைவாக இருந்த போதிலும், முதலாளித்துவ நிபுணர்கள் நாச வேலை செய்த போதிலும், அது வெற்றி பெற்றது. நமது ஆலைகளில் இயந்திரங்களை உடைத்து எறிந்து ஐந்து வருடங்களாக எதிர்ப்புரட்சி நிபுணர் குழுவினர் அழிவு வேலை செய்து வந்தார்கள். எனினும், எதுவும் குறுக்கிடாதது போல நாம் முன்னேறினோம். “திடீர்” என்று சக்தா விஷயம் நிகழ்ந்தது.

தோழர்களே! இது சர்வ சாதாரண விஷயமா? என் அபிப்பிராயத்தில் அது மிகச் சர்வ சாதாரணமானதே. கப்பலின் சுக்கான் முன் நின்று ஆபத்தைக் கண்ணெதிரே கொண்டுவந்து நிறுத்தும் வரை நாம் ஒன்றையும் கவனிக்காமல் இருப்பது, கப்பலை நடத்திச் செல்வதாகாது. வழிகாட்டுவது என்பதற்கு போல்ஷ்விஸம் கூறும் விளக்கம் இது அல்ல. வழிகாட்டுவதற்கு எதிர்காலத்தைப் பற்றிய நிர்ணயிப்பு அவசியம் தோழர்களே! எதிர்காலத்தைப் பற்றி நிர்ணயிப்பது எப்பொழுதும் சுலபமான காரியம் அல்ல.

குறைகளைப்பற்றி கவனிப்பதற்கு தொழிலாளி மக்கள் விருப்பம் இல்லாமலோ அல்லது கவனிக்க முடியாமலோ இருக்கின்ற காலத்தில், பத்து அல்லது இருபது பிரதான தோழர்கள் நமது வேலையில் உள்ள குறைகளைப் பற்றிக் கவனிப்பது ஒரு விஷயம். அந்த நிலைமையில் நீங்கள் எதையாவது கவனிக்கத் தவறிவிடுவீர்கள். நீங்கள் ஒவ்வொன்றையும் கவனிக்க முடியாது. ஆனால் பத்து அல்லது இருபது பிரதான தோழர்களுடன் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் சேர்ந்து, நமது வேலையில் உள்ள குறைகளைக் கவனித்து, நமது குறைகளை வெளிப்படுத்தி பொது நிர்மாண வேலையில் தாங்களாகவே ஈடுபட்டு வேலை அபிவிருத்தி அடைவதற்கான வழியைக் காட்டுவதானது, முற்றிலும் மாறுபட்ட விஷயம். எதிர்பாராத நிகழ்ச்சிகள் ஏற்படாமலிருக்க இது உத்தரவாதம் அளிக்கும். தவறான போக்கு காலாகாலத்தில் கவனிக்கப்பட்டு, அதை நிவர்த்திக்க குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தொழிலாளி வர்க்கத்தின் உஷார் தன்மை ஒடுக்கப்படாமல் வளர்க்கப்பட வேண்டும். லட்சக்கணக்கான தொழிலாளிகள் பொது வேலையான சோஷலிஸ நிர்மாணத்தில் தாங்களாகவே ஈடுபடும் முறையில் ஊக்கமளிக்கப்பட வேண்டும். பத்து தலைவர்கள் மட்டும் நமது நிர்மாண வேலையில் கவனம் செலுத்துவதுடன் நின்றுவிடாமல், லட்சக்கணக்கான தொழிலாளிகளும், விவசாயிகளும் விழிப்பாக இருக்கும்முறையில், லட்சக்கணக்கான தொழிலாளிகளும் விவசாயிகளும் நமது தவறுகளைக் கவனித்து அவற்றை வெளிப்படுத்தும் முறையில் நாம் நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டும். அத்தகைய நிலைமைகளில் மட்டும்தான் ‘எதிர்பாராத நிகழ்ச்சிகள்’ நிகழமாட்டா. ஆனால், இதை அடைவதற்கு, நமது குறைகளைப்பற்றி, கீழ் ஸ்தாபனங்களிலிருந்து வரும் விமர்சனத்தை நாம் ஆதரித்து அபிவிருத்தி செய்ய வேண்டும். விமர்சனத்தை வெகுஜன வேலையாக்க வேண்டும். சுய விமர்சன கோஷத்தை நாம் கடைப்பிடித்து வாழ்க்கையில் நிறைவேற்ற வேண்டும்.

முடிவாக, சுய விமர்சன கோஷத்தைக் கையாளுகின்ற சந்தர்ப்பத்தில், தொழிலாளி வர்க்கத்தின் கலாச்சார சக்திகளை உயர்த்தும் பிரச்சனையிலும், நாட்டை ஆட்சி செய்வதற்காக தொழிலாளி வர்க்கத்தின் தகுதியை அபிவிருத்தி செய்வதிலும் நமது கவனத்தைத் திருப்ப வேண்டும். லெனின் கூறுவதாவது:

“நமது பிரதான தேவை கலாச்சார அபிவிருத்தி. பொருளாதார, அரசியல் துறைகளில் ஆட்சி செய்யும் சோஷலிஸப் பொருளாதாரத்துக்கு அஸ்திவாரம் அமைப்பது சாத்தியம் என்பதைப் புதிய பொருளாதாரத் திட்டம் நமக்கு முற்றிலும் உத்தரவாதம் அளிக்கிறது. பாட்டாளிகளின் கலாச்சார சக்திகளையும் அதன் முன்னணிப் படையின் கலாச்சார சக்திகளையும் ‘மட்டும்’தான் அந்தப் பிரச்சனை பொருத்திருக்கிறது.”1

இதன் அர்த்தம் என்ன? நமது நிர்மாணத்தின் அடிப்படை வேலைகளில் ஒன்று, நாட்டை ஆட்சி செய்யவும், பொருளாதாரத்தையும், தொழிலையும் நிர்வகிக்கவுபம் தொழிலாளி வர்க்கத்தைத் தகுதி உள்ளதாகவும், திறமை உள்ளதாகவும் அபிவிருத்தி செய்வதே.

தொழிலாளிகளின் சக்திகளையும், திறமையையும் விடுவிக்காமலும், தொழிலாளிகளில் மிகச்சிறந்தவர்கள் நமது தவறுகளை விமர்சிப்பதற்கும் நமது குறைகளை எடுத்துக்காட்டுவதற்கும், நமது வேலையை முன்னேற்றுவதற்கும், அவர்களுடைய சக்திகளையும், திறமையையும் விடுதலை செய்யாமலும், இந்தத் தகுதிகளையும் திறமைகளையும் தொழிலாளி வர்க்கம் பெறுவது சாத்தியமா? நிச்சயமாக அது சாத்தியம் ஆகாது.

தொழிலாளி வர்க்கத்தின் சக்தியையும், திறமையையும் பொதுவாக உழைப்பாளிகளின் சக்திகளையும், திறமைகளையும் விடுவிப்பதற்கும், நாட்டை ஆட்சி செய்வதற்கு அவர்கள் தகுதி பெறுவதற்கும் நாம் செய்ய வேண்டுவது என்ன? முதலாவது, நேர்மையான முறையிலும் போல்ஷ்விக் முறையிலும் சுய விமர்சன கோஷத்தை அமல்நடத்துவது. நமது வேலையில் காணப்படும் குறைகளையும், தவறுகளையும் கீழ் ஸ்தாபனங்களில் இருந்து வருகின்ற விமர்சனத்தை நாணயமான போல்ஷ்விக் முறையில் அமல்நடத்துவது. நமது வேலையில் உள்ள குறைகளை வெளிப்படையாக விமர்சித்து, நம்முடைய வேலையை அபிவிருத்தி செய்து, அதை முன்னேறச் செய்வது என்ற இந்த சாத்தியப்பாட்டை, தொழிலாளிகள் பயன்படுத்துவதாக இருந்தால், அதன் விளைவுதான் என்ன? நாட்டை நடத்திச் செல்வதிலும், அதன் பொருளாதாரத்திலும் , அதன் தொழிலிலும் தொழிலாளிகள் பங்கெடுத்துக்கொள்கிறார்கள் என்பதே. தாங்கள் நாட்டின் எஜமானர்கள் என்ற உணர்ச்சியையும், அவர்களின் உழைப்பையும், அவர்களுடைய உஷார்த் தன்மையையும், அவர்களுடைய கலாச்சாரத்தையும் அதிகரிப்பதற்கான உணர்ச்சியையும் இது தட்டி எழுப்பத் தவறாது.

தொழிலாளி வர்க்கத்தின் கலாச்சார சக்திகளின் பிரச்சனையானது, முடிவான பிரச்சனைகளில் ஒன்று. ஏன்? இதுவரை இருந்துவந்த ஆளும் வர்க்கங்களில், தொழிலாளி வர்க்கம் ஆளும் வர்க்கம் என்ற முறையில் முற்றிலும் சாதகமான நிலைமை இல்லையானாலும், வரலாற்றில் ஓரளவு விசேஷ நிலைமையைப் பெற்றுள்ளது. ஆண்டைகள், நிலப் பிரபுக்கள், முதலாளிகள் ஆகிய முந்தைய ஆளும் வர்க்கங்கள், பணக்கார வர்க்கங்கள், அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆட்சி செய்வதற்கு உரிய அறிவும் திறமையும் உடையவர்களாக்க அவர்களுக்குப் பயிற்சி அளிக்க முடிந்தது. இந்த வர்க்கங்களிலிருந்து தொழிலாளி வர்க்கம் வேறுபட்டது. அது பணக்கார வர்க்கம் அல்ல, நாட்டை ஆட்சி செய்வதற்கு அவசியமான அறிவை அதன் குழந்தைகள் பெறுவதற்கு உரிய வாய்ப்பு கடந்த காலத்தில் இல்லை. இப்பொழுதுதான் அதாவது அதிகாரத்திற்கு வந்தபிறகுதான் இந்த வாய்ப்பை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

நம் நாட்டின் கலாச்சாரத்தை அதிதீவிரப்படுத்த வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. நிலப்பிரபுக்களும், முதலாளிகளும் நூறு வருடங்களில் சாதிக்காததை, தொழிலாளி வர்க்கம், பத்து வருட ஆட்சியில் சாதித்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால், சர்வதேச நிலைமையையும், உள்நாட்டு நிலைமையையும் கவனிக்கும்பொழுது, மேற்படி சாதனை மிகக் குறைந்த அளவே. ஆதலால், தொழிலாளி வர்க்கத்தின் கலாச்சார சக்திகளின் நிலையை அபிவிருத்தி செய்யக்கூடிய எந்த உபாயங்களையும் நாட்டை ஆட்சி செய்வதற்கும், தொழிலை நிர்வகிப்பதற்கும் உரிய திறமையையும், அறிவையும் தொழிலாளி வர்க்கத்துக்கு அபிவிருத்தி செய்யக்கூடிய வேலையைச் சுலபமாக்கும் எந்த உபாயத்தையும், நாம் நம்மால் கூடிய மட்டும் பயன்படுத்த வேண்டும்.

இதுவரை சொன்னவற்றில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், பாட்டாளிகளின் கலாச்சார சக்திகளை அபிவிருத்தி செய்யவும், ஆட்சி செய்வதற்கு தொழிலாளி வர்க்கத்தின் திறமையை அபிவிருத்தி செய்வதற்கும் சுய விமர்சனம் என்ற கோஷம் முக்கிய உபாயங்களில் ஒன்று. சுய விமர்சனம் என்ற கோஷத்தை நடைமுறைச் சாத்தியம் ஆக்குவது நமது பிரதான வேலை என்பதைத் தெளிவாக்க மற்றொரு காரணம் இதிலிருந்து தோன்றுகிறது.

சுயவிமர்சனம் என்ற கோஷம் நடைமுறை கோஷம் என்பதற்கு இவையே பொதுவான காரணங்கள்.

ஆதலால், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற மத்தியக் கமிட்டியின் பிளீனமும், மத்திய கண்ட்ரோல் கமிஷனின் பிளீனமும் சுய விமர்சனம் என்ற விஷயத்தை ஆலோசனைக்கு எடுத்துக்கொண்டன என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

அடிக்குறிப்பு:

1. V.I. Lenin Collected Works, 3rd Russian Edition, Vol. XXVII,Page 207.





No comments: