Saturday, March 24, 2018

உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள், உணர்த்துவது என்ன?



உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவைக்கு, கோரக்பூர் மற்றும் பூல்பூர் ஆகிய இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக எவரும் எதிர்பாராவிதத்தில் அதிர்ச்சிகரமான முறையில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. 2014இல் இந்த இரு தொகுதிகளிலும் இப்போது முதலமைச்சராக இருக்கின்ற யோகி ஆதித்யநாத்தும், துணை முதலமைச்சராக இருக்கின்ற கேசவ் பிரசாத் மௌர்யாவும் தலா மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்கள். இந்தத்தடவை இவ்விரு தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்த பின்னணியில் சமாஜ்வாதிக் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் தேர்தல் முடிவுகள் எதிர்கால அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்திடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 2014 மக்களவைத் தேர்தலின் போது பாஜக உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. அதனை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ் வாதிக் கட்சிக்கு வெறும்5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓரிடம் கூடக் கிடைக்கவில்லை.
இப்போது அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் தேர்தல் முடிவுகள் வந்திருப்பது எப்படி? இருதொகுதிகளிலுமே சமாஜ்வாதிக் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தன. பகுஜன் சமாஜ் கட்சி இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என்ற தங்கள் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் வேட்பாளர்எவரையும் நிறுத்திடவில்லை. ஆனாலும், தேர்தல் நடைபெற இருந்த சமயத்தில் அதற்கு ஒருவாரத்திற்கு முன்பு, இரு இடங்களிலும் போட்டியிடும் சமாஜ்வாதிக்கட்சி வேட்பாளர்களுக்கு, பகுஜன்சமாஜ் கட்சி தன் ஆதரவை அறிவித்தது. அவ்வாறு அறிவித்த தோடு மட்டும் நின்றுவிடாமல், தங்கள் கட்சி ஊழியர்களும் ஆதரவாளர்களும் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்கிறசெய்தியை அனைவரிடத்திலும் எடுத்துச்சென் றார்கள். இவ்வாறு இரு கட்சிகளும் இணைந்ததன் மூலம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், சிறுபான்மையினர் ஆகியோரின் வாக்குகள் ஒருங்கிணைந்து ஒரே வேட்பாளருக்கு விழுவதற்கு இட்டுச்சென்றன என்பதையே தேர்தல் முடிவுகள் தெரி விக்கின்றன. இதோடு, கடந்த ஓராண்டுகாலயோகி ஆதித்யநாத் ஆட்சியின்வெறித்தனத்தால் வெறுப்புற்றுள்ளவர்களின் வாக்குகளும் சேர்ந்து கொண்டிருக்கின்றன.
முதல் முறையாக...
உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் தேர்தலில்ஒன்றிணைந்து செயல்பட்டது என்பது இதுவே முதல் தடவையாகும். 1993 சட்டமன்றத் தேர்தலின்போது இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு நல்கியபோது இது குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் நடைமுறையில் அப்போது தேர்தல் கூட்டணி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. தேர்தலுக்குப் பின்னர்தான் இரு கட்சிகளும் இணைந்து, முலாயம்சிங் யாதவை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டு ஓர் அரசாங்கத்தை அமைத்திட இரு கட்சிகளும் முன்வந்தன. இரண்டு ஆண்டுகளில் அந்தக் கூட்டணி உடைந்தது. அதன்பின்னர் இதுவரை இவ்விருகட்சிகளுக்கும் இடையே எவ்விதமான ஒத்துழைப்பும் இருந்ததில்லை.
பாஜகவை தோற்கடிக்கும் தேர்தல் உத்திகள்...
பாஜகவைத் தோற்கடிப்பதற்கு தேர்தல் உத்திகள் எப்படி இருந்திட வேண்டும் என்பதற்கு உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியமான படிப்பினைகளை அளித்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் இந்த அளவிற்கு பாஜக இடங்களைக்கைப்பற்றியிருந்திருக்காவிட்டால், மக்களவையில் அதற்கு இந்த அளவிற்குப் பெரும்பான்மை கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை. பாஜக அல்லாத பெரிய கட்சிகள்ஒன்றுபட்டு நின்றால், பின்னர் சிறிய கட்சிகளும் கூட அவற்றின்பின்னே அணிசேர வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகும்.இப்போது நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ் வாதிக் கட்சிக்கு ஆதரவினை அளித்திட முன்வந்த தைத்தொடர்ந்து, இடதுசாரிக் கட்சிகளும் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர்களுக்குத் தங்கள் ஆதரவினை அறிவித்தன. இதைத்தொடர்ந்து இதர சிறிய கட்சிகளும் அக்கட்சிக்கு ஆதரவினை நல்கின. காங்கிரஸ் கட்சி தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளாத நிலையில், மிகவும் மோசமான முறையில் வாக்கு களைப் பெற்று தன்னுடைய பிணைத் தொகைகளையும் இழந்தது. எனினும், இவ்விரு கட்சி களும் தங்கள் ஒத்துழைப்பை நீட்டித்திடுமா என்பதையும், அது மாநிலங்களவைத் தேர்தல்வரை நீடிக்குமா என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் காட்டிடும் இரண்டாவது படிப்பினை என்னவெனில், பாஜகவைத் தோற்கடிப்பதற்கு அகில இந்திய அளவில் ஒரு கூட்டணி உருவாக வேண்டும் அல்லது அனைத்து எதிர்க்கட்சிகளின் முன்னணி உருவாக வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதேயாகும். பாஜகவை எதிர்கொள்ள ஐமுகூ பாணியில் ஒரு கூட்டணியை அமைத்திட வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால் இது வெற்றி பெறப் போவதில்லை. காங்கிரஸ் கட்சி மாற்றுத் திட்டத்தை முன்வைத்து ஒரு கூட்டணியை உருவாக்கக்கூடிய அளவிற்கான நம்பகத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம், தெலுங்கானாவில் உள்ள தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி, ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் போன்று பல மாநிலக் கட்சிகள், காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதை ஏற்கவில்லை. தங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமையேற்பதற்குப் பல கட்சிகள் எச்சரிக்கையாகவே இருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசுடன் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறது.அதேபோன்று, தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.ராவ் முன்மொழிந்துள்ள பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத சமஷ்டி முன்னணி (Federal Front) யும் தோல்வியையே தழுவும். திமுக, ஆர்ஜேடி போன்ற சில மாநிலக் கட்சிகள் தங்கள் மாநிலங்களில் காங்கிரசுடன் கைகோர்த்திருக்கின்றன. மேலும், மாநிலக்கட்சிகளுக்கு மத்தியிலும்கூட கொள்கைகள் மற்றும் மாநில அளவிலான நலன்களைப் பொறு த்தவரை பல்வேறுவிதமான முரண்பாடுகள் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஒருங்கிணைவதை இத்தகைய முரண்பாடுகள் தடுக்கின்றன.எனவே, மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டுமென்றால் அந்தந்த மாநிலங்களில் உள்ள பாஜகவிற்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைக்கக்கூடிய விதத்தில் ஒரு வலுவான தேர்தல் உத்தியைஉத்தரவாதப்படுத்திட வேண்டும். உத்தரப் பிரதேச மாநில இடைத் தேர்தலில் இதுதான் நடந்தது.
ஜோதிபாசுவின் வேண்டுகோள்
இதுதொடர்பாக இதற்கு முன் நடைபெற்ற ஒருநிகழ்வைக் குறிப்பிடுவது நலம் பயக்கும். 1993ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது தோழர்ஜோதிபாசு நான்கு நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, பாஜக அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தைத்தொடர்ந்து இத்தேர்தல் நடைபெற்றது. அரசமைப்புச்சட்டம் மற்றும் மதச்சார்பின்மை மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்காக பாஜகவைத் தோற்கடிப்பது அவசியமாக இருந்தது.வாரணாசியில் முதல்நாள் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தோழர் ஜோதிபாசு, உங்கள் தொகுதியில் பாஜக வேட்பாளரைத் தோற்கடிக்கக்கூடிய விதத்தில் இருக்கின்ற கட்சிக்கும், வேட்பாளருக்கும் வாக்களியுங்கள், என்று மக்களுக்கு வேண்டு கோள் விடுத்தார். பாஜகவிற்கு எதிரான அனைத்து சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்பதே இதன் சாராம்சமாகும். பாஜக தோற்கடிக்கப்பட்டது. சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் அரசாங்கம் அமைந்தது.1993இல் உத்தரப்பிரதேச மாநிலத்துடன், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில் ஆட்சி செய்த பாஜக அரசாங்கங்களும் பாபர் மசூதி இடிப்பிற்கு அவை ஆற்றியிருந்த பங்களிப்புகளின் காரணமாக, டிஸ்மிஸ் செய்யப்பட்டதால் அம்மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. இங்கேயும், கட்சி எங்கே சற்றே வலுவாக இருக்கிறதோ அங்கே ஒருசிலஇடங்களில் மட்டும் போட்டியிடுவது என்றும்இதர இடங்களில் பாஜகவைத் தோற்கடிப்ப தற்காகப் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், அப்போதுதான் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் ஒரு சேர ஒரே இடத்தில் சேர்ந்திடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முதன்முறையாகத் தீர்மானித்தது.
இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராகவுள்ள பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.பாஜகவைத் தோற்கடிப்பதற்காக கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் பின்பற்றப்படவுள்ள உத்தி குறித்து சில மதச்சார்பற்ற வட்டங்களிலிருந்து கேள்விகள் எழும்பின. மோடி அரசாங்கத்தின் பணக்காரர் ஆதரவு பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்திடுவதற்கான போராட்டங்களை உக்கிரப்படுத்திடவும், மதவெறி சக்திகள் மற்றும் எதேச்சதிகாரத் தாக்குதல்களை எதிர்த்துப்போரிடுவதற்காக ஒரு விரிவான ஒற்றுமையைக் கட்டி எழுப்பிடவும் அந்த அரசியல் நிலைப்பாடு அறைகூவல் விடுத்தது.ஆர்எஸ்எஸ்/பாஜகவிற்கு எதிராக மக்கள் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட இந்தப் போராட்டங்களும் இயக்கங்களும் திட்ட மிட்டன. பாஜக பின்பற்றிவரும் இதே நவீன தாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றிடும் காங்கிரசுடன் ஒரு தேர்தல் கூட்டணியோ அல்லது புரிந்துணர்வோ வைத்துக்கொள்வது எவ்விதப் பயனையும் அளித்திடாது.இத்தகைய நிலைபாட்டின் அடிப்படையில், பாஜகவிற்கு எதிரான வாக்குகளை அதிகபட்ச அளவில் பெறக்கூடிய விதத்தில் தேர்தல் உத்திகளை வகுத்திட முடியும். 1993இல் மூன்று மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மேற்கொண்ட தேர்தல் உத்திகளும், சமீபத்திய உத்தரப்பிரதேச மக்களவை இடைத் தேர்தல்களும் காட்டியதைப்போல, ஒவ்வொரு மாநிலத்திலும், பாஜகவைத் தனிமைப்படுத்தி தோற்கடித்திடுவதற்கு மிகவும் சரியான நடைமுறையாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் கட்சியின் நலன்களைப் பாதுகாத்திடவும் இடது ஜனநாயக சக்திகளை முன்னெடுத்துச் சென்றிடவும் பாதை அமைத்தும் தரும்.
(1993இல்) கட்சி எங்கே சற்றே வலுவாக இருக்கிறதோ அங்கே ஒருசில இடங்களில் மட்டும் போட்டியிடுவது என்றும் இதர இடங்களில் பாஜகவைத் தோற்கடிப்பதற்காகப் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், அப்போதுதான் பாஜகவிற்கு எதிரான வாக்குகள் ஒரு சேர ஒரே இடத்தில் சேர்ந்திடும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு முதன்முறையாகத் தீர்மானித்தது. இவ்விரு மாநிலங்களிலும் பாஜகவிற்கு எதிராகவுள்ள பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் கட்சி இருந்தது.
(மார்ச் 21, 2018)
(தமிழில்: ச.வீரமணி)

1 comment:

tamilblogs.in திரட்டி said...

தமிழ் வலைதிரட்டிகளும் அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளது மற்றும் பதிவுகளை சுலபமாக இணைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
http://thiratti.tamilblogs.in/