( தலையங்கம்)
2015 டிசம்பரில் ஸ்தாபனம் மீதான கொல்கத்தா பிளீனத்தால்
அளிக்கப்பட்ட குறிக்கோளான, ஓர் அகில
இந்திய வெகுஜனத் தளத்துடன் ஒரு வலுவான கட்சியாக, கட்சியை எப்படிக் கட்டி
எழுப்புவது என்பதை ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
அகில இந்திய 22ஆவது மாநாடு விவாதித்தது. அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட
அரசியல்-ஸ்தாபன அறிக்கையும் பிளீனத்தால் உருவாக்கி அளிக்கப்பட்டிருந்த ஸ்தாபனக் கடமைகள்
அமலாக்கத்தினை மறுஆய்வுக்கு உட்படுத்தியது.
கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களால்
மேற்கொள்ளப்படும் வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை முடுக்கிவிடுவதன் மூலமாக
மட்டுமே கட்சி மற்றும் வெகுஜன அடித்தளங்களை விரிவாக்கிட முடியும் என்று பிளீனம்
சுட்டிக்காட்டி இருந்தது. இந்தத் திசைவழியில் ஆழமான முயற்சிகள்
எடுக்கப்பட்டிருக்கின்றன.
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள்
மற்றும் விவசாயி சங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு, இயக்கங்களை விரிவாக்கி
முன்னெடுத்துச்சென்றதுடன், மாநிலங்கள் அளவிலும் தொடர்ந்து பிரச்சாரங்களும்
போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. தெலங்கானாவில் 154 நாட்கள் நடைபெற்ற மகாஜன
பாதயாத்திரை, மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் விவசாயப் போராட்டங்கள், கொல்கத்தாவில்
போலீஸ் அடக்குமுறையைக் கண்டித்து தலைமைச்செயலகம் நோக்கி நடைபெற்ற வீரஞ்செறிந்த
பேரணி, ஆந்திரப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தல் மற்றும்
மக்களைப் புலம்பெயரச் செய்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற எண்ணற்றப்
போராட்டங்கள், கேரளாவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய மோடி அரசின்
நடவடிக்கைக்க எதிராக நடைபெற்ற வெகுஜனப் போராட்டம் ஆகியவைகள் இவற்றில் குறிப்பிடத்
தக்கவைகளாகும்.
எனினும், வெகுஜன நிலைப்பாட்டைப்
பின்பற்றுவதற்கான அழைப்பு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நடைமுறை வேலைமுறையை
மாற்றியமைத்தல் மற்றும் மக்களுடன் உயிரோட்டமுள்ள தொடர்புகளை நிறுவிக்கொள்ளுதல்
போன்றவை இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையும், அவற்றை மேலும் ஆழமான
முறையில் பின்பற்றிட வேண்டிய தேவையும்
தொடர்கின்றன.
ஒரு புரட்சிகர கட்சி ஸ்தாபனத்தைக் கட்டி
எழுப்புவதில் கட்சி உறுப்பினரின் தரம்தான் மிகவும் முக்கியமான காரணியாகும். தேவைப்படும்
அரசியல்-தத்துவார்த்த சிந்தனை மட்டத்துடன் ஊக்கத்துடன் செயல்படும் கட்சி
உறுப்பினர்களால் மட்டுமே,
அர்ப்பணிப்புடனும், ஒழுங்கு கட்டுப்பாட்டுடனும் செயல்படக்கூடிய கட்சி
உறுப்பினர்களால் மட்டுமே, இவ்வாறானதோர்
கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலுவான வெகுஜனத் தளத்துடன் கட்டியெழுப்பிடும் பொறுப்பினை
நிறைவேற்றிட முடியும்.
இது தொடர்பாக, கட்சிப் பிளீனம், ஒவ்வொரு
கட்சி உறுப்பினரும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமானால், கட்சி
உறுப்பினர்களுக்கென்று வகுத்துள்ள ஐந்து அம்ச அடிப்படை விதிகளையும் அமல்படுத்திட
வேண்டும் என்று பணித்திருந்தது. பல மாநிலங்களில் இதனை அமல்படுத்துவது இன்னமும்
முழுமையாக நிறைவேறாத நிலையில், சில மாநிலக் குழுக்கள் கட்சி உறுப்பினர்களின்
தரத்தை உயர்த்திட மிகவும் ஆழமான முறையில்
முயற்சிகளை மேற்கொண்டன. இவ்வாறு அடிப்படை விதிகளைக் கறாராக அமல்படுத்த முயன்றதன்
காரணமாக பல மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கும்
இட்டுச் சென்றிருக்கிறது.
2017ஆம் ஆண்டு கட்சியின் 21ஆவது அகில
இந்திய மாநாடு நடைபெற்ற சமயத்தில் 10,58,750 ஆக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை,
2017இல் 10,12,315ஆகக் குறைந்துள்ளது. எனினும், குறைந்தபட்சம் அரசியல்-ஸ்தாபனப்
பொறுப்புக்களை நிறைவேற்றுபவர்களை மட்டுமே கட்சி உறுப்பினர்களாக நீட்டித்திட
வேண்டும் என்பதே முக்கியமாகையால், இவ்வாறு உறுப்பினர் எண்ணிக்கையில் சற்றே
வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ல. இவ்வாறு கட்சி உறுப்பினர்களைத்
தரப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள், கட்சியை விரிவாக்குவதற்குத் தேவையான
அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளை
முன்னெடுத்துச்செல்லக்கூடிய வல்லமையைக் கட்சி ஸ்தாபனத்திற்குத் தந்திடும்.
கட்சி உறுப்பினர்களின் வயது வித்தியாசம் ஏற்ற இறக்கத்துடன் இல்லாது அனைத்து
வயதினரும் இருக்கக்கூடிய கட்சியாக முன்னேற்ற வேண்டும் என்பதற்காக கட்சிக்குள் இளம்
உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பிளீனம் கட்டளையிட்டிருந்தது. இதனை
நிறைவேற்றக்கூடிய விதத்தில் அனைத்து மாநிலக்குழுக்களும் அடுத்த மூன்றாண்டுகளில் 31
வயதுக்குக் கீழானவர்களில் 20 சதவீதத்தினரைச் சேர்த்திட வேண்டும் என்று குறியீடும் நிர்ணயிக்கப்பட்டது.
சில மாநிலங்கள் இந்தத் திசைவழியில் முன்னேற்றம்
அடைந்திருக்கின்றன. அதிக
உறுப்பினர்களைக் கொண்டுள்ள கேரளத்தில், 31 வயதுக்குக் கீழானவர்களின் உறுப்பினர்
எண்ணிக்கை 23.45 சதவீதமாகும். அதாவது 1,08,699 பேர் 31 வயதுக்குக் கீழானவர்கள்.
சில மாநிலங்கள் தங்கள் மாநிலக்குழு உறுப்பினர்களின் வயது 45 வயதுக்கும் குறைவானவர்கள் 10 முதல் 15
சதவீதம் வரை இருக்கக்கூடிய அளவிற்கு முன்னேறியிருக்கின்றன.
அதேபோன்று, கட்சியில் பெண் உறுப்பினர்கள்
சேர்ப்பிலும் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சில மாநிலங்கள் இதில் பின்னடைந்துள்ள
போதிலும், ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் கூட பல மாநிலங்களில் முன்னேற்றம்
ஏற்பட்டிருக்கிறது. 2015இல் பிளீனம் நடைபெற்ற சமயத்தில் 2015இல் பெண் உறுப்பினர்
எண்ணிக்கை 15.28 சதவீதமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில், தற்போது 2017இல் ஒட்டுமொத்த சராசரி 16.63 சதவீதமாக
அதிகரித்திருக்கிறது. குறிப்பிட்ட
காலவரையறை நிர்ணயித்து, பெண் உறுப்பினர் சேர்க்கையை 25 சதவீதமாக உயர்த்திட
வேண்டும் என்று கட்சியின் அகில இந்திய மாநாடு மீளவும் வற்புறுத்தி இருக்கிறது.
கட்சி உறுப்பினர்களின் வர்க்க
சேர்மானத்திலும்கூட, அதாவது தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள், விவசாயத்
தொழிலாளர்கள் போன்ற அடிப்படை வர்க்கங்களின் சேர்மானத்திலும்கூட, பொதுவான முன்னேற்றம் காணப்படுகிறது.
தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் உறுப்பினர்
சேர்ப்பில், தலித்துகள் மற்றும் பழங்குடியினர்
கட்சி உறுப்பினர்களானதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில்,
முஸ்லீம் சிறுபான்மையினரை இன்னமும் பதிவு செய்யவேண்டிய நிலை நீடிக்கிறது.
கட்சி ஸ்தாபனத்தின் மிக முக்கியமான பகுதி
என்பது, ஊழியர்கள் கொள்கை, ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, மேம்படுத்தி
அவர்களைப் பயன்படுத்திக்கொள்வதாகும். கட்சி ஸ்தாபனத்தின் அச்சாணியாக இருப்பது
முழுநேர ஊழியர்களேயாகும். சில மாநிலங்களில் முன்னணி ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச
அளவிற்காவது ஊதியம் வழங்கிடக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர் கொள்கையை வகுத்திட
சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றபோதிலும், பல மாநிலங்களில் எவ்வித
முன்னேற்றமும் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவிற்குத் துண்டு
விழுந்திருக்கிறது. நாட்டில் பல இடங்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக பூதாகரமாக
விரிவாகிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில்,
கட்சியின் வலுவான தளங்கள்கூட தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய
சூழ்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய விதத்தில்
மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு முன்னணி ஊழியர் கொள்கையை உருவாக்கி வளர்த்தெடுக்க
வேண்டியது கட்சிக்கு மிகவும் அவசியமானதாக
மாறியிருக்கிறது. இது தொடர்பாக ஒரு திசைவழியை அரசியல்-ஸ்தாபன அறிக்கை
அளித்திருக்கிறது.
ஸ்தாபன அறிக்கை, கட்சிக் கல்வி திட்டமிட்டமுறையில்
பல மாநிலங்களில் நன்கு விரிவடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. இருந்த
போதிலும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடமும் கட்சியின் அடிப்படைக் கல்வியைக்
கொண்டுசெல்ல வேண்டும் என்கிற குறிக்கோள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படா நிலை
நீடிக்கிறது. கட்சியின் சார்பில் ஆறு நாளேடுகளும் எண்ணற்ற வார, மாத சஞ்சிகைகளும்
பல மொழிகளில் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல்-தத்துவார்த்தப் பணிகளை
வலுப்படுத்தக்கூடிய விதத்தில் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவிற்கான
தலையீட்டிற்காகவும், இணையதள செய்தி நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கும் திட்டங்கள்
தீட்டப்பட்டிருக்கின்றன.
அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள
அரசியல்-ஸ்தாபன அறிக்கை, கட்சி ஸ்தாபனத்தை மேலும் மெருகூட்டுவதற்கும், ஸ்தாபனம் மீதான
கொல்கத்தா பிளீனம் உருவாக்கி அளித்திட்ட
கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஓர் உந்துதலைக் கொடுத்திடும். அப்போதுதான்,
வெகுஜனத்தளத்துடன் (mass line) செயல்படக்கூடிய ஒரு புரட்சிக் கட்சியைக் கட்டி
எழுப்பிட முடியும்.
(ஏப்ரல் 25, 2018)
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment