Sunday, April 22, 2018

காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம்



தி டெலிகிராப் நாளேட்டுக்கு சீத்தாராம் யெச்சூரி பேட்டி
[காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம் என்று தி டெலிகிராப் நாளேட்டுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாட்டில் ஞாயிறு அன்று மீண்டும் ஒருமனதாக சீத்தாராம் யெச்சூரி பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது தி டெலிகிராப் நாளேட்டின் செய்தியாளருக்கு அவர் சுருக்கமான முறையில் பேட்டி அளித்தார். அதன் சாராம்சங்கள் வருமாறு:]
கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்த கருத்துவேறுபாடுகளை தாங்கள் மாநாட்டில் தொகுப்புரை வழங்கியபோது எப்படி வெளிப்படையாகக் குறிப்பிட்டீர்கள்?
சீத்தாராம் யெச்சூரி: கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்திடவும், அதன்முன் வந்துள்ள சவால்களை எதிர்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ள கட்சியின் அகில இந்திய மாநாடு இதுவாகும்.
கேள்வி: தங்களால் முன்வைக்கப்பட்ட சிறுபான்மைக் கருத்தை கட்சியின் அகில இந்திய மாநாடு ஏற்றுக்கொண்டிருப்பது குறித்து, எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்? 
சீத்தாராம் யெச்சூரி: நிறைவாக, இரு கருத்துக்களின் அடிப்படையில் ஒரு புரிதல் உருவாகியிருக்கிறது. வழிகாட்டும் குழு (ஸ்டியரிங் கமிட்டி) முன்கொணர்ந்த பரஸ்பர திருத்தத்தின் மூலம் இது சாத்தியமானது. அதுதான் ஏற்றுக்கொண்டமைக்கு அடிப்படையாகும். அதனால்தான், எங்கள் ஒற்றுமையும் எங்கள் உறுதியும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறினேன்.
கேள்வி: கடந்த மூன்றாண்டுகளில் நீங்கள் எதிர்கொண்ட சிரமங்களைப் பரிசீலனை செய்கையில், எதிர்வரும் நாட்களில் உள்ள சவால்களைப்பற்றி…?
சீத்தாராம் யெச்சூரி: இப்போது எங்கள்முன் உள்ள சவால் இந்த அரசை (நரேந்திர மோடி அரசாங்கத்தை)த் தூக்கி எறிவதாகும்.   இந்த அரசுக்கு எதிரான சவால்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெதிராக உடனடியாக வேலைகளைத் துவங்க வேண்டியிருக்கிறது.
கேள்வி:  கட்சியின் அகில இந்திய மாநாட்டு முன்பும் பின்பும் அரசியல் நிலைப்பாட்டின் மீதான விவாதத்தில் முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ள கேரளம், வங்கம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? 
சீத்தாராம் யெச்சூரி: எங்கள் அடிப்படை ஆயுதம், மக்கள் இயக்கங்கள்தான், அவற்றை வலுப்படுத்துவோம் என்பதுதான்.
கேள்வி: அரசியல் தீர்மானத்திலிருந்து அடிக்கப்பட்டுள்ள காங்கிரசுடன் எவ்விதமான அரசியல் கூட்டணி என்று நீங்கள் எப்படி விளக்குகிறீர்கள்? 
சீத்தாராம் யெச்சூரி: ஆளும் வர்க்க கட்சியுடன் அணிசேர்தல் என்கிற கேள்விக்கே இடமில்லை. எங்கள் குறிக்கோள், ஒரு மாற்றுக் கொள்கை வடிவமைப்பை (an alternative policy framework) உருவாக்குவதுதான். அது இன்னமும் உருவாகாத நிலையிலிருக்கிறது.
தேர்தல்கள் என்ற பிரச்சனை வருகிறபோது,  அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் பொருத்தமான உத்திகள் வகுக்கப்படும் என்று தெள்ளத் தெளிவாக நாங்கள் கூறியிருக்கிறோம்.
அதேபோன்று, நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் ஒத்துழைப்பு, நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் ஒத்துழைப்பு மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் போராட்டங்களில் ஒத்துழைப்பு என்று "புரிதல்" என்பது குறித்தும் வரையறுத்திருக்கிறோம்.
கேள்வி:  அரசியல் கூட்டணி என்றால் என்ன?
சீத்தாராம் யெச்சூரி: ஐக்கிய முன்னணியில் ஓர் அங்கமாக இருக்கக்கூடிய விதத்தில் அமைக்கப்படுவதுதான் ஓர் அரசியல் கூட்டணி என்பதாகும். இவ்வாறு அமைப்பது என்பது எந்தக் காலத்திலுமே எங்கள் கட்சியின் குணம் அல்ல.
கேள்வி: ஐமுகூ-1 ஆட்சிக்காலத்தின்போது (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து ஆதரவு அளித்தது போன்ற ஏற்பாட்டிற்கு சாத்தியப்பாடு இருக்கிறதா?
சீத்தாராம் யெச்சூரி: நான் என்ன கூறிக்கொண்டிருக்கிறேன் என்றால்,  நாங்கள் எந்தக் காலத்திலும் எந்தவிதமான அரசியல் கூட்டணியிலும் அங்கம் வகித்தது இல்லை என்பதுதான். அது  1996-98ஆக இருந்தாலும் சரி, அல்லது ஐமுகூ-1ஆக இருந்தாலும் சரி. நாங்கள் எப்போதும் வெளியிலிருந்துதான் ஆதரவு அளித்திருக்கிறோம். அரசியல் முன்னணி என்பதும் கிடையாது. அவர்களுடன் சேர்வது என்பதும் கிடையாது.
கேள்வி: ஆனால், ஐமுகூ-1 அல்லது 1996 போன்ற ஏற்பாடு சாத்தியமா?
சீத்தாராம் யெச்சூரி:  எப்படி எதிர்காலத்தில் துல்லியமான நிலைமைகள் உருவாகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு அவை குறித்தெல்லாம் நாம் பார்க்கலாம்.
கேள்வி: அரசியல் கூட்டணி இல்லாதபோது, அதுபோன்ற ஏற்பாடுகள் எல்லாம் சாத்தியமா? 
சீத்தாராம் யெச்சூரி: நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால், துல்லியமான சூழ்நிலையின் அடிப்படையில், பொருத்தமான தேர்தல் உத்திகளை வகுத்திடுவோம் என்பதேயாகும். அதற்கெல்லாம் காலம் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும், எப்போது நடக்கும் என்றெல்லாம் இப்போதே ஊகிக்க வேண்டாம்.
கேள்வி: நீங்கள் தொகுப்புரை வழங்கும்போது, ஒற்றுமை குறித்து அழுத்தம் தந்தது ஏன்?
சீத்தாராம் யெச்சூரி: நாங்கள் எப்போதும் செய்வதுதான்  அது. தோழர் ஹோசிமின் அனைத்துக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும், கட்சியின் ஒற்றுமையை "கண்ணின் மணியைப் போன்று காத்திட வேண்டும்," என்று கூறியிருக்கிறார். அதுதான் எங்களுடைய ஆயுதம். எனவே, அந்த ஆயுதத்தை நாங்கள் பாதுகாத்திட வேண்டியிருக்கிறது.
கேள்வி: மேற்கு வங்கத்தில் புதிய நிலைப்பாடு எப்படி வேலை செய்யும்? 
சீத்தாராம் யெச்சூரி: காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம்.  இப்போதைக்கு எங்கள் மனதை இதற்கு மேல் செலவிடவில்லை. காலம் வரும்போது நாங்கள் அதைச் செய்வோம்.
கேள்வி: புதிய அரசியல் நிலைப்பாடு கேரளாவை எப்படிப் பாதிக்கும்? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் ஒரே பக்கத்தில்தான் இருக்கின்றன என்று பாஜக முன்னிறுத்தும் என்கிற ஐயுறவு இருக்கிறதே?
சீத்தாராம் யெச்சூரி: கேரளத்தில் நாங்கள் காங்கிரஸ் கட்சியை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். அதனைச் செய்வது தொடரும். 2006இல் மத்தியில் ஐமுகூ அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்த சமயத்திலும் வங்கத்திலும் கேரளாவிலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றோம்.
எனவே குழப்பத்திற்கே இடமில்லை. கேரளாவிலும்கூட காங்கிரசை எதிர்த்துப் போராடும் அதே சமயத்தில், பாஜகவை எதிர்ப்பதிலும் மிகவிரிவான அளவில் ஒற்றுமையை ஒருமுகப்படுத்திட முயற்சிப்போம்.
கேள்வி: அகில இந்திய மாநாட்டில் தாக்கல் செய்திருந்த அரசியல்-ஸ்தாபன அறிக்கையில், அரசியல் நிலைப்பாட்டில் இருந்த கருத்து வேறுபாடுகள் எப்படி கட்சி மையத்தின் வேலைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அதனைப் பரிசீலிக்கும்போது, இப்போது உருவாகியுள்ள புதிய மத்தியக்குழுவும், அரசியல் தலைமைக்குழுவும் கட்சிக்குப் புத்தியிரூட்டுவதற்கு உங்களுக்கு உதவிடுமா? 
சீத்தாராம் யெச்சூரி: நாங்கள் புதிய திசைவழியைப் பெற்றிருக்கிறோம். அதன் அடிப்படையில் கட்சி மையத்தை ஸ்தாபித்திட உறுதிபூண்டிருக்கிறோம். அது எப்படி வடிவம் கொள்ளும் என்று நாங்கள் வேலையைத் துவங்கும்போது மட்டுமே தெரியும். இதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் எல்லாமும் எந்தவொரு அரசியல் நடவடிக்கையின்போதும் இயல்பாக நடைபெறும் விஷயங்கள்தான். எப்போது இவற்றையெல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு கூட்டு முடிவினை எடுத்துவிட்டோமோ, அதனை அமல்படுத்திட நாங்கள் அனைவரும் வேலை செய்திடுவோம்.
கேள்வி: புதிய நிலைப்பாடு, இதர எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மக்கள் இயக்கங்களைக் கட்டி எழுப்பிட, உங்களுக்கு அதிக வாய்ப்புகளை அனுமதித்திடுமா?
சீத்தாராம் யெச்சூரி: அதைத்தான் நாங்கள் மிகவும் தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம்.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: