(இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு)-வின் மே தின
அறிக்கை)
இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு), சர்வதேச
தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினம், மே தினமான இன்று, உலகம்
முழுதும் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சேவைத்துறைகளிலும்,
சுரங்கங்களிலும், வனங்களிலும், நீர்நிலைகளிலும் பாடுபடும் பாட்டாளிகள்
அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மிகவும் கடினமாகப் போராடி வென்ற தங்கள் உரிமைகளைப்
பாதுகாப்பதற்காக, தங்களுடைய நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக, குறிப்பாக,
உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ஏகாதிபத்தியத்தின் தலைமையில் சர்வதேச நிதி
மூலதனத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளுக்கு
எதிராக, மக்கள் தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களின் மீது ஏவியுள்ள
தாக்குதல்களுக்கு எதிராக, மற்றும் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் தங்களை
விடுவித்துக் கொள்வதற்காக, மேற்கொண்டுவரும் அனைத்துவிதமான போராட்டங்களுக்கும் சிஐடியு
தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
சோசலிசம் மீதும் மனிதனை மனிதன் சுரண்டுவதிலிருந்து
சமூகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்வதற்குமான தன்னுடைய உறுதிமொழியை
சிஐடியு, மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. அதேபோன்று, சோசலிச நாடுகளில்
உள்ள மக்கள் தங்களுடைய நாட்டில் சோசலிசத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுவரும்
முயற்சிகளுக்கும் சிஐடியு, தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.
அந்நியர் தலையீடு இல்லாமல் தங்களுடைய அரசாங்கங்களை
ஜனநாயகரீதியாகத் தேர்வு செய்திட்ட அனைத்து நாட்டு மக்களின் உரிமைகளை சிஐடியு
பாதுகாக்கிறது. ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் முதலான நாடுகளில் நடைபெற்றுவரும்
யுத்தங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்கா
மற்றும் உலகின் பல நாடுகளில், இடது மற்றும் முற்போக்கு அரசாங்கங்களை
அப்புறப்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் அவற்றின் மேலாதிக்க சூழ்ச்சிகளையும் சிஐடியு
கண்டனம் செய்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை சிஐடியு தன்னுடைய
அனைத்து வல்லமையையும் கொண்டு எதிர்த்துப்போரிடவும் சபதம் ஏற்கிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின்
பிரிக்க முடியாததொரு பகுதி என்பதையும் சிஐடியு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.
தங்கள் தாய்நாட்டிற்காக, பாலஸ்தீனர்கள் தொடர்ந்து நடத்திவரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்குமான ஒருமைப்பாட்டை
சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. பாலஸ்தீனத்தை 1967ஆம்
ஆண்டிலிருந்த எல்லைகளுடன் ஒரு சுதந்திரமான இறையாண்மைமிக்க நாடாகவும் மற்றும் கிழக்கு ஜெருசேலத்தை அதன் தலைநகராகவும்
அங்கீகரிக்க வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.
உழைக்கும் மக்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும்
உற்பத்தி செய்யப்பட்டுள்ள உலக வளத்தில் பாதிக்கும் மேலான அளவினை உலகில் உள்ள 1
சதவீத பணக்காரர்கள், நவீன தாராளமயக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களுக்குள் சுருட்டிக் கொண்டு, சமத்துவ மின்மையை
அதிகரித்துக்கொண்டிருப்பதை, இந்த வளத்தை உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை
அதிகரித்திருப்பதன் மூலமாக, கூட்டுக் களவாடல் முதலாளித்துவத்தின் மூலமாக, வரிகளைச்
செலுத்தாது ஏமாற்றி, நிலங்கள், வனங்கள், சுரங்கங்கள், நீர்நிலைகள் என பொதுச் சொத்துக்களையும் இயற்கை
வளங்களையும், அங்கே வாழ்ந்து வந்த ஏழை
விவசாயிகள், பழங்குடியினர்கள் மற்றும் இதர மக்களையும் புலம்பெயரச் செய்துவிட்டு,
சூறையாடி இருப்பதையும், சிஐடியு ஆழ்ந்த
கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
வலதுசாரி சக்திகள் தலைதூக்கியிருப்பது கண்டு சிஐடியு தன்
திகைப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது. வலதுசாரி சக்திகளால் நவீன தாராளமயக்
கொள்கைகளுக்கு மாற்றத்தை அளித்திட முடியாது. மாறாக அவை, தொழிலாளர் வர்க்கத்தையும்
உழைக்கும் மக்களையும் தேசிய இனங்கள், மதங்கள், பிராந்தியங்கள், சாதிகள், ஆண்-பெண்
வேற்றுமை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் பிளவுபடுத்திடும்
நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. குறிப்பாக, எங்கெல்லாம் சமூக ஜனநாயகவாதிகள்
என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு, நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்ததன்
மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடதுசாரி சக்திகளுக்கும் துரோகம் இழைத்தார்களோ,
அந்த நாடுகளில் எல்லாம் இதனை மிகவும் தெளிவாகக் காண முடிந்தது. சர்வதேச
நிதிமூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் மேம்படுத்தப்பட்டுள்ள வலதுசாரி சக்திகள்
தங்கள் நாடுகளில் உள்ள பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குச்
சேவகம் செய்வதற்காக உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பல்வேறு வழிகளிலும்
சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான அவர்களுடைய
போராட்டங்களை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவர்கள் உழைக்கும் மக்களின்
விரோதிகள் என்று சிஐடியு உரத்து அறிவிக்கிறது.
உலகப் பொருளாதார நெருக்கடி மிகவும்
ஆழமாகியிருக்கக்கூடிய இன்றைய பின்னணியில், முதலாளிகள் தங்களுடைய கொள்ளைலாபங்களைப்
பாதுகாத்துக் கொள்வதற்காக, இன்றைய பொருளாதார நெருக்கடியிலும் அதற்கு எவ்விதமான
பாதிப்பும் ஏற்படாதவாறு தக்க வைத்துக் கொள்வதற்காக, வலதுசாரிகளையும், எதேச்சாதிகார மற்றும்
காட்டுமிராண்டித்தனமான சக்திகளையும் உயர்த்திப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. உலக
சோசலிச முகாம் வலுவாக இல்லாததும் அவர்களுக்கு இதற்கான துணிவை அளித்திருக்கிறது.
இன்றைய முதலாளித்துவ அமைப்பு, அறிவியல் மற்றும்
தொழில்நுட்பத்தில், மக்கள் தங்கள் சுயநலத்திற்காக அல்லாது சமூகத்தின்
பயன்பாட்டிற்காக, உருவாக்கியுள்ள அபரிமிதமான வளர்ச்சியை, மக்களுக்குப்
பயன்படுத்தாமல், முதலாளித்துவ வளர்முக நாடுகளில் ஒருசிலவும் பெரும்
கார்ப்பரேட்டுகளும் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்குப்
பயன்படுத்திக் கொண்டிருப்பதானது அட்டூழியமான செயல் என்று சிஐடியு தெரிவித்துக்
கொள்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை,
சுகாதாரமின்மை, வீட்டுவசதியின்மை மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகிய
அனைத்தையும் போக்கக்கூடிய விதத்தில் அனைத்துத் தேவையான வளங்களும் உள்ள போதிலும்
பெரும்பான்மையான மக்களுக்கு அவற்றை வழங்காதது மட்டுமல்ல அவை மிகவும் மோசமான
முறையில் அதிகரிக்கக்கூடிய நிலை உருவாகியிருப்பதற்கும் முதலாளித்துவ அமைப்பே
பொறுப்பேற்க வேண்டும் என்று சிஐடியு கூறுகிறது.
பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகிக்
கொண்டிருக்கக்கூடிய பின்னணியில், முதலாளித்துவ அமைப்பு முறை, மேலும் கொடூரமானதாக,
மேலும் அடாவடித்தனமாக, மேலும் காட்டுமிராண்டித்தனமாக தன்னுடைய சுரண்டல் குணத்தைக்
கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதைத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில்
கொண்டுசென்று அவர்களுக்கு விழிப்புணர்வினை உருவாக்கிட சிஐடியு சபதம்
ஏற்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையைத்
தூக்கி எறிவதிலும், அனைத்துவிதமான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான
இறுதிப்போராட்டத்திற்குத் தயாராவதிலும் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ள பங்கினை
உணரக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுமட்டத்தை உயர்த்திட, சிஐடியு உறுதியேற்கிறது.
உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை
ஒற்றுமைப்படுத்திட உலக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (WFTU-World Federation of
Trade Unions) மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடுவதற்கும்,
சுரண்டும் தன்மையுடைய முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை
வலுப்படுத்துவதற்கும் உறுதி எடுத்துக்கொள்வதாக சிஐடியு உரத்து அறிவிக்கிறது.
மே தினமான இன்று, சிஐடியு, நம் நாட்டில் உழைக்கும்
மக்களின் மீது மும்முனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை, ஆழ்ந்த
எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறது. அதாவது, பாஜக ஆட்சியாளர்கள், நம் நாட்டின்
தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளில், நவீன தாராளமயத்
தாக்குதல்களைத் தொடர்வது, ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்து மதவெறி மற்றும் சாதியவெறி
சக்திகள் செல்வாக்கு பெற்று அரசாங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும்
கைப்பற்றி மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது மற்றும்
எதேச்சாதிகாரம் அதிகரித்துக்கொண்டிருப்பது, சமூகத்தில் சகிப்பின்மை அதிகரித்துக்கொண்டிருப்பது மற்றும் பகுத்தறிவு
மற்றும் அறிவியல் சிந்தனைகளை வளர்த்திட்ட பகுத்தறிவாளர்களையும்
அறிவியலாளர்களையும், மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்துக்
கூறுபவர்களையும், பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று
முத்திரை குத்தி, தாக்குவது, தூற்றுவது, அச்சுறுத்துவது மற்றும் கொல்வது என்று
மும்முனைகளில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன என்று ஆழமானமுறையில்
தொழிலாளர் வர்க்கத்தை சிஐடியு எச்சரிக்கிறது.
சிஐடியு, நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக அதிகரித்துவரும்
வேலையில்லாத் திண்டாட்டம், வேலைகளின்மை, தொழில்துறையில் ஆழமாகி வரும் மந்தம்,
அதிகரித்துவரும் வறுமை, விவசாய நெருக்கடி, கிராமப்புற அவலநிலை மற்றும் தொடரும்
விவசாயிகள் தற்கொலைகள், மிகவும் அசிங்கமானமுறையில் விரிவாகிவரும் சமத்துவமின்மை ஆகியவற்றை
மிகவும் ஆழமான கவலையுடன் பதிவு செய்கிறது.
பாஜகவினர் தங்களை ‘தேசியவாதிகள்’ என்று
அழைத்துக்கொண்டே, நாட்டின் செல்வங்களான – நிலங்கள், வனங்கள், நீர்நிலைகள்,
சுரங்கங்கள் மற்றும் கேந்திரமான ராணுவத்துறை உட்பட பொதுத்துறை நிறுவனங்களிலும் அந்நிய நேரடி
முதலீட்டை 100 சதவீத அளவிற்குத் திறந்துவிட்டிருப்பதன் மூலமாக, நாட்டின்
நலன்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு நாட்டின்
செல்வங்களை அந்நியருக்குத் தாரைவார்க்க முனைந்திருப்பது மட்டுமல்லாமல், உலக
நாடுகள் வியக்கும் விதத்தில் நாம் இதுகாறும் கடைப்பிடித்து வந்த சுயேச்சையான
அயல்துறைக் கொள்கையையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறக்கூடிய
விதத்தில் மாற்றியமைத்திருக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய
கேலிக்கூத்து, முரண்தகை மற்றும் பாசாங்குத்தனமான நடிப்பு என்று சிஐடியு
சுட்டிக்காட்டுகிறது.
திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் திரிபுராவில்
உள்ள இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஐடியு ஆகியவற்றின் அலுவலகங்களையும்,
ஊழியர்களையும் பாஜக குண்டர்கள் தாக்கியதற்கும், அங்கிருந்த லெனின் சிலையைத்
தகர்த்ததற்கும் சிஐடியு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இத்தாக்குதல்களை உடனடியாக
நிறுத்த வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.‘
இத்தாக்குதல்களை வீரத்துடன் எதிர்த்து வரும் திரிபுரா
தொழிலாளர் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத்
தெரிவித்துக்கொள்கிறது, வீர
வணக்கங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.
இத்தாக்குதல்களிலிருந்து திரிபுரா மக்கள் விரைவில் மீண்டெழுவார்கள் என்ற
நம்பிக்கையை சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கு வங்கத்தில், குறிப்பாக பஞ்சாயத்துத் தேர்தல்கள்
நடைபெறக்கூடிய சமயத்தில், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் இடதுசாரிகள் மற்றும்
சிஐடியு ஊழியர்கள் மீது ஏவப்பட்டுவரும் தொடர் தாக்குதல்களை சிஐடியு கடுமையாகக்
கண்டிக்கிறது. ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் மற்றும் ஜனநாயக இயக்கமும் தெரிவித்த
எதிர்ப்புகள் அனைத்தையும் நசுக்கிவிட்டு, மே தினத்தன்று பஞ்சாயத்துத் தேர்தல்களை
நடத்திட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்ததற்காகவும் சிஐடியு கண்டனம்
செய்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்களில்
போட்டியிடுவதிலிருந்து இடதுசாரிக் கட்சி ஊழியர்களையும், தலைவர்களையும்
தடுப்பதற்காக அவர்களை நேரடியாகத் தாக்குதல் தொடுத்ததையும், அவர்களை வேட்புமனுக்கள்
தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததையும் சிஐடியு கண்டிக்கிறது. இத்தகைய கொடூரமான
தாக்குதல்களைத் துணிந்து எதிர்த்திட்ட மக்களுக்கு சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத்
தெரிவித்துக் கொள்கிறது.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும்
மாநிலங்களில், தலித்துகள் மீதும்,
சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துவருவதற்கு சிஐடியு தன் கோபத்தை
வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆர்எஸ்எஸ்-உம் பாஜக-வும் தூக்கிப்பிடிக்கும் மிகவும்
பிற்போக்கத்தனமான, மனு(அ)தர்மச்
சிந்தனைகள்தான் இவ்வாறு தலித்துகளை, பழங்குடியினரை, பெண்களை, நசுக்குவதற்கும்,
அவர்கள் மீதான தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதற்கும் வழிகோலுகிறது. மன(அ)நீதியைத்
தொடர்ந்து பின்பற்றிடுவோம் என்று கூறும் பாஜக, அவ்வப்போது தலித்துகள் மீது பாசம்
காட்டுவதுபோல் நடிப்பது தேர்தல் ஆதாயத்திற்காகவே தவிர வேறெதற்காகவும் அல்ல என்று
சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு பாஜக தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள்
மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்திடவும், மேலும் நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள்
மீதான தாக்குதல்களை எதிர்த்து முறியடித்திடவும் நாட்டின் பல முனைகளிலும்
தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், மாணவர்கள் முதலானர்களின் போராட்டங்கள்
நாளும் வளர்ர்ந்து வருவதற்கு சிஐடியு தன் வரவேற்பை உரித்தாக்கிக் கொள்கிறது.
மே தினமான இன்று, சிஐடியு, நாட்டில், தொழிலாளர்
வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் மீதும் ஏவப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக
மும்முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்று – அதாவது, நவீன
தாராளமயத்திற்கு எதிரான போராட்டம், மக்களை மதரீதியாகவும் சாதி ரீதியாகவும்
பிளவுபடுத்துவதற்கு எதிரான போராட்டம், எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என
மும்முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்பதை - மீளவும்
வலியுறுத்துகிறது.
இத்தகு சவால்களை வலுவாக எதிர்கொள்ளக்கூடிய விதத்தில்
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் அணிதிரட்டிட உறுதி
எடுத்துக்கொண்டிருப்பதை சிஐடியு பிரகடனம் செய்கிறது.
ஒன்றுபட்ட போராட்டம் என்கிற மேடையில் உழைக்கும்
மக்களின் அனைத்துப்பிரிவு மக்களும் அணிதிரண்டு, மேடையை வலுவானதாகவும்,
விரிவானதாகவும் மாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சிஐடியு மீளவும்
வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.
பெரும்பான்மை மதவெறி, சிறுபான்மை மதவெறி மற்றும்
அடிப்படைவாதம் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பவை என்று சிஐடியு மீளவும் வலியுறுத்திக்
கூறிக்கொள்கிறது. மதவெறி அது எந்த வர்ணத்தின் கீழ் அல்லது கொடியின்கீழ் வந்தாலும்
அது மக்களைப் பிளவுபடுத்திடும், அவர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும், நாளும்
நம்மை வாட்டிவதைத்திடும் உண்மையான பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தாதவாறு அது
கவனத்தை திசைதிருப்பிடும், உண்மையான கயவாளிகளுக்கு எதிராக – அதாவது, நவீன
தாராளமயக் கொள்கைகள் மற்றும் சுரண்டும் அமைப்புமுறையைத் தூக்கிப்பிடிப்பவர்களுக்கு
எதிராக - மேற்கொள்ளப்படும் போராட்டங்களை பலவீனப்படுத்திடும் என்றும் இறுதியாக
மதவெறி சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்திடும் என்றும் சிஐடியு வலியுறுத்திக்
கூறிக்கொள்கிறது.
அனைத்துவிதமான சுரண்டலையும் உக்கிரப்படுத்திவரும் நவீன
தாராளமயக் கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகப்
போராடுவதற்கும், அந்தத் திசைவழியில் முன்னேற உறுதி எடுத்துக்கொள்வதற்கும்,
தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய தேவையை
சிஐடியு அழுத்தம் தந்து, கூறிக்கொள்கிறது. ‘
உழைக்கும் மக்களை அணிதிரட்டிட, நவீன தாராளமயத்திற்கு
எதிராக துல்லியமான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து, கூட்டுத் தொழிற்சங்க இயக்கத்தை
வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளையும், சுயேச்சையான பிரச்சாரங்களையும்
மேற்கொண்டிடவும் சிஐடியு உறுதி எடுத்துக் கொள்கிறது.
இத்தகையதொரு மக்கள் திரள் பங்கேற்கும் போராட்டங்களின்
மூலம்தான் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் புரிந்துகொள்ளக்கூடிய
அளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையை சிஐடியு மீளவும்
வலியுறுத்திக் கூறிக் கொள்கிறது.
சென்ற ஆண்டு 2017 மே தினத்தன்று, சிஐடியு இந்தியத்
தொழிலாளர் வர்க்கத்திற்கு கீழ்க்கண்ட வேண்டுகோள்களை விடுத்திருந்தது:
நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திடுவதற்கான
போராட்டங்களையும், தொழிலாளர் ஆதரவு மற்றும் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை
கொண்டுவருவதற்கான போராட்டங்களையும்
உக்கிரப்படுத்திட வேண்டும் என்றும் அவற்றுக்கான ஒற்றுமையை வலுப்படுத்திட
வேண்டும் என்று கோரியிருந்தது.
ஒற்றுமையைச் சீர்குலைத்திட மதவெறி சக்திகள், சாதி வெறி
சக்திகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை விழிப்புடனிருந்து முறியடித்திட வேண்டும் என்று
கோரியிருந்தது.
தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள்
முதலான உழைக்கும் மக்கள் அனைத்துத்தரப்பினரின் மத்தியிலும் ஒருமைப்பாட்டையும் ஆழமான
பிணைப்பினையும் கொண்டுவர வேண்டும் என்று கோரியிருந்தது.
முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் அதன் அரசியல்
மற்றும் அவற்றை மேம்படுத்திட விரும்பும் சக்திகள் அனைத்தும்தான் தொழிலாளர்
வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் உண்மையான எதிரி என்பதை
அடையாளம் காட்டி, சுரண்டும் அமைப்புமுறையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்குத்
தயாராவீர் என்று அறைகூவல் விடுத்தது. ‘
சிஐடியு, இந்த மே தினத்தன்று, சர்வதேச தொழிலாளர்
வர்க்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு
எதிரான ஒற்றுமைக்கு ஆதரவாக, தன்னுடைய பதாகையை, உயர்த்திப்பிடிக்கிறது. ‘
முதலலாளித்துவம் ஒழிக, ஏகாதிபத்தியம் ஒழிக,
சோசலிசம் நீடூழி வாழ்க.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுவோம்.
--
(தமிழில்: ச.வீரமணி)
No comments:
Post a Comment