Thursday, April 5, 2018

நாடாளுமன்ற நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்ப்பட்டு வருகின்றன


 தலையங்கம்
இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு, மோடி அரசாங்கத்தால் எந்த அளவிற்கு நாடாளுமன்றத்தின் நெறிமுறைகளும் விதிமுறைகளும் படிப்படியாகத் தகர்ப்பட்டுவருகின்றன என்பதற்கு மிகச்சரியான உதாரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்தக் கூட்டத்தொடரின் அமர்வு மார்ச் 5ஆம் தேதியன்று தொடங்கியதிலிருந்தே, நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலுமே நாள்தோறும் இடையூறுகளும், குறுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்குப் பிரதான காரணம், ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரசும், தெலுங்கு தேசமும் மேற்கொண்டுவந்த கிளர்ச்சிகளாகும். இவை இரண்டுமே ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவத்திருந்த உறுதிமொழிக்குக் கட்டுப்பட்டு அதன் கூட்டாளிகளாக இருந்த கட்சிகளாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற இதர பிரச்சனைகளுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளர்ந்தெழுந்திருந்தார்கள்.
அரசாங்கம், முட்டுக்கட்டையைப் போக்குவதற்கும், நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்துவதற்கும் உரிய முறையில், உருப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்குப் பதிலாக. நடைபெற்ற அமளியைப் பயன்படுத்திக்கொண்டு, தனக்குச் சாதகமான நிதிச் சட்டமுன்வடிவையும் (Finance Bill), நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவையும் (Appropriation Bill)  மட்டும் எவ்விதமான விவாதங்களும் இன்றி நிறைவேற்றிக் கொண்டுவிட்டது. இவ்வாறு, சுமார் 89.25 லட்சம் கோடி ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவுகளை நிறைவேற்றுவதற்கான, மக்களவையின் உயிர்நாடியாக விளங்கும் நடவடிக்கைகள், எவ்விதமான நுண்ணாய்வோ, விவாதமோ, ஏற்பளிப்போ இன்றி நாடாளுமன்றத்தை முழுமையாக ஓரங்கட்டிவிட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளன. இதேபோன்று அடுத்து ஒருசில நிமிடங்களிலேயே நிதிச்சட்டமுன்வடிவுக்கும், நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவுக்கும் 21 திருத்தங்களும் அமளியின் மத்தியில் வாய்மொழி வாக்குகள் மூலமாகவே நிறைவேற்றப் பட்டுக்கொண்டுவிட்டன.
2004க்குப் பின்னர், ஒரு நிதிச்சட்டமுடிவு என்பது அநேகமாக விவாதமே எதுவுமின்றி குறுகிய காலத்தில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட் அமர்வு என்பது இதுதான். இதற்கான முழுப் பொறுப்பும் மோடி அரசாங்கத்தையே சாரும்.
இதேபோன்றே, மிகவும் ஆட்சேபகரமான முறையில், அரசாங்கமானது, நிதித் சட்டமுன்வடிவில்,  அந்நியப் பங்களிப்புகள் முறைப்படுத்தல் சட்டமுன்வடிவு (FCRA - Foreign Contribution Regulation Act)க்கான திருத்தத்தையும் அறிமுகப்படுத்தி,  நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. அந்நியப் பங்களிப்புகள் முறைப்படுத்தல் சட்டத்தின் ஒழுங்குமுறைகள் திருத்தப்பட்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும். 2016ஆம் ஆண்டின் நிதிச் சட்டமுன்வடிவில், 2010ஆம் ஆண்டு அந்நியப் பங்களிப்புகள் முறைப்படுத்தல் சட்டமானது, அந்நிய நிறுவனம் என்பதற்கான வரைமுறையில் மாற்றம் கொண்டுவருவதற்காகத் திருத்தப்பட்டது. பிரிட்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் வேதாந்தா குழுமத்திடமிருந்து அந்நியப் பங்களிப்புகளை ஏற்றுக்கொண்டதற்காக, குற்றவாளிகள் என்று முடிவு செய்து, பாஜகவையும், காங்கிரஸ் கட்சியையும் தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலான தண்டனைகளிலிருந்து, தப்பித்துக் கொள்வதற்காகவே இவ்வாறு அந்நியப் பங்களிப்பு முறைப்படுத்தல் சட்டம் திருத்தப்பட்டது.
எனினும், முன்பு செய்யப்பட்டிருந்த திருத்தம் 2010க்கு முன்பு பெறப்பட்ட நன்கொடைகளுக்குப் பொருந்தாது. எனவே, இரண்டாவது திருத்தம், 1976இலிருந்து முன்தேதியிட்டு அமல்படுத்தக்கூடிய விதத்தில் 2018ஆம் ஆண்டு நிதித் சட்டமுன்வடிவில் கொண்டுவரப்பட்டது.
இந்தத் திருத்தமும் நிதிச் சட்டமுன்வடிவுடன் பிணைத்துக் கட்டப்பட்டதன் காரணமாக, மீண்டும் ஒருமுறை, மாநிலங்களவையில் நுண்ணாய்விற்கோ, ஏற்பளிப்புக்கோ கொண்டுவரப்படாமல் தவிர்க்கப்படுவது அரசாங்கத்தால் உத்தரவாதப்படுத்தப்பட்டது.   நாடாளுமன்றத்தின் நெறிமுறைகளையும், விதிமுறைகளையும் இவ்வாறு மிகவும் இழிவான முறையில் தலையிட்டுக் கெடுப்பது என்பது பாஜக ஆட்சியின் முத்திரைச்சின்னமாகவே மாறியிருக்கிறது.
நடப்புக் கூட்டத்தொடரில்  தெலுங்கு தேசம் கட்சி, தேஜகூட்டணியிலிருந்து விலகியதுடன், அமைச்சரவையில் அங்கம் வகித்த தன்னுடைய இரு அமைச்சர்களையும் திரும்பப் பெற்றதற்குப்பின்னர், இந்த அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தீர்மானித்துள்ள நிலையில்,   மற்றொரு கேலிக்கூத்தான நிகழ்ச்சிப்போக்கும் அரங்கேறியிருக்கிறது. தெலுங்கு தேசக் கட்சியின் நடவடிக்கை காரணமாக, அது,  இந்த அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 50க்கும் மேற்பட்டோர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக எழுந்துநின்ற போதிலும், மக்களவை சபாநாயகர் அதனை ஏற்பதற்கு மறுத்து வருகிறார். இதற்கு அவர்கூறும் சால்ஜாப்பு அவை ஒழுங்காகே நடைபெறவில்லையாம்.
அதன்பின்னர், மக்களவை தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்தும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்படாமல் மிகவும் வஞ்சகமான முறையில் முடக்கப்பட்டிருக்கிறது. அஇஅதிமுக உறுப்பினர்களும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியைச் சேர்ந்த உறுப்பினர்களும் மக்களவை சபாநாயகரின் இருக்கையைச் சுற்றி நின்றுகொண்டு, கிளர்ச்சியில் ஈடுபட்டதைச் சாக்குப்போக்காகக் கூறி மக்களவையில் வேறெந்த நிகழ்ச்சிநிரலையும் எடுத்துக்கொள்ளாமல் அவை ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டு வரப்படுகிறது.
மார்ச் 27 செவ்வாய்க்கிழமையன்று, இத்தகு இழிநடவடிக்கையை தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி விலக்கிக்கொண்டுவிட்டது. எனினும் இத்தகைய இழிசெயலை அஇஅதிமுக தொடர்கிறது. இந்த சமயத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில கட்சிகளும் நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் முன்மொழிந்துள்ளன. எனினும், மக்களவை சபாநாயகர் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறார். இந்தத் தலையங்கம் (மார்ச் 28) அன்று எழுதப்படும்வரை, நிலைமையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மக்களவையில், நிதிச்சட்டமுன்வடிவு, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமுன்வடிவு ஆகியவை நிறைவேற்றப்பட்ட சமயத்தில் கடும் அமளியான சூழ்நிலை நிலவிய அளவிற்கு, இப்போது அவையில் அமளி நடைபெறவில்லை என்றபோதிலும்கூட, நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்திற்காக எடுத்துக்கொள்ளப்படவில்லை.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைத் தவிர்ப்பதற்கு, ஒரு சாக்காக, தன்னுடைய ஏவலர்களாக மாறியிருக்கும் அஇஅதிமுகவை பாஜக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் தெள்ளத்தெளிவான ஒன்றேயாகும். எவ்விதமான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் தோற்கடிக்கக்கூடிய அளவிற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கை இருக்கிறது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனாலும், தேஜக அணிகளின் மத்தியில் வாக்குகள் மிகவும் சரிந்துவிட்டதை அது தெளிவாகக் காட்டிவிடும். தெலுங்குதேசம் வெளியேறியுள்ள சூழ்நிலையில், சிவ சேனையும் மிகவும் கசப்புடன் கொதித்துப்போயிருக்கிறது. முன்பு நடுநிலை வகித்த பிஜூ ஜனதா தளமும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியும்கூட தற்போது தங்கள் நிலையை மாற்றிக்கொண்டிருக்கின்றன.
பாஜகவின் சூழ்ச்சிகள் மற்றும் இழிநடவடிக்கைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், நம் நாட்டின் ஜனநாயக நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தின் மீதான நம்பகத்தன்மைகளுமேயாகும்.
(மார்ச் 28)
தமிழில்: ச. வீரமணி          





No comments: