Monday, April 30, 2018

தொழிலாளர் இயக்கம்




தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்,
எழும், வடுபடும், மறுபடியும் எழும்.
அதன் குரல்வளை இறுக்கப்படும்!
உணர்வற்றுப் போகும்வரை
தொண்டை அடைக்கப்படும்!
நீதிமன்றம்
கேள்விக் கணைகளைத் தொடுக்கும்.
குண்டர்களால் தாக்கப்படும்!
ஊடகங்களால் வசைபாடப்படும்!
பொதுமக்களின் புருவ நெரிப்பும்கூட
போர் தொடுக்கம்!
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்!
ஓடுகாலிகளால்
மறுப்புரைகள் கூறப்படும்!
சூதாடிகளால் பலிகொடுக்கப்படும்!
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால்
பீடிக்கப்படும்!
கோழைகளால் நடுவீதியில் விடப்படும்!
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!
அட்டைகளால் உறிஞ்சப்படும்!
தலைவர்களால் கூட,
விற்றுவிடப்படும்!
ஓ. …………………
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்‘
இதுவரை கண்டிராத
உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டாளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்.
கிழக்கில் சூரியோதயம்
எப்படி சர்வநிச்சயமோ
அதேபோன்று –
இதன் வெற்றி
சர்வ நிச்சயமே!
(1904-ஆம் ஆண்டு “தி மெட்டல் வொர்க்கர்” பத்திரிகையில் சுரங்கத்தொழிலாளி ஈகிள்ஸ் வீடெப்ஸ் என்பவரால் எழுதப்பட்ட கவிதை. தோழர் தே. இலட்சுமணன் தமிழாக்கம் செய்தது. இன்றைய காலத்திற்கும் இக்கவிதைத் தேவைப்படுவதாகத் தோன்றுவதால், இன்றைய மே நாளில் மீளவும் இதனைப் பதிவேற்றம் செய்கிறேன்

ஒன்றுபட்டுப் போராட,
ஒற்றுமையுடன் போராட,
மே நாளில் சபதம் ஏற்போம்
தோழர்களே!
தோழமையுடன்
ச.வீரமணி.



ஓர் அகில இந்திய வெகுஜனத்தளத்துடன், ஒரு வலுவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாக…



( தலையங்கம்)
2015 டிசம்பரில்  ஸ்தாபனம் மீதான கொல்கத்தா பிளீனத்தால் அளிக்கப்பட்ட குறிக்கோளான,  ஓர் அகில இந்திய வெகுஜனத் தளத்துடன் ஒரு வலுவான கட்சியாக, கட்சியை எப்படிக் கட்டி எழுப்புவது என்பதை ஹைதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 22ஆவது மாநாடு விவாதித்தது. அகில இந்திய மாநாட்டில் முன்வைக்கப்பட்ட அரசியல்-ஸ்தாபன அறிக்கையும் பிளீனத்தால் உருவாக்கி  அளிக்கப்பட்டிருந்த ஸ்தாபனக் கடமைகள் அமலாக்கத்தினை மறுஆய்வுக்கு உட்படுத்தியது.
கட்சி மற்றும் வெகுஜன ஸ்தாபனங்களால் மேற்கொள்ளப்படும் வர்க்க மற்றும் வெகுஜனப் போராட்டங்களை முடுக்கிவிடுவதன் மூலமாக மட்டுமே கட்சி மற்றும் வெகுஜன அடித்தளங்களை விரிவாக்கிட முடியும் என்று பிளீனம் சுட்டிக்காட்டி இருந்தது. இந்தத் திசைவழியில் ஆழமான முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயி சங்கங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு, இயக்கங்களை விரிவாக்கி முன்னெடுத்துச்சென்றதுடன், மாநிலங்கள் அளவிலும் தொடர்ந்து பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடைபெற்றிருக்கின்றன. தெலங்கானாவில் 154 நாட்கள் நடைபெற்ற மகாஜன பாதயாத்திரை, மகாராஷ்ட்ரா மற்றும் ராஜஸ்தான் விவசாயப் போராட்டங்கள், கொல்கத்தாவில் போலீஸ் அடக்குமுறையைக் கண்டித்து தலைமைச்செயலகம் நோக்கி நடைபெற்ற வீரஞ்செறிந்த பேரணி, ஆந்திரப் பிரதேசத்தில் வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்தல் மற்றும் மக்களைப் புலம்பெயரச் செய்த நடவடிக்கைகளுக்கு எதிராக நடைபெற்ற எண்ணற்றப் போராட்டங்கள், கேரளாவில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய மோடி அரசின் நடவடிக்கைக்க எதிராக நடைபெற்ற வெகுஜனப் போராட்டம் ஆகியவைகள் இவற்றில் குறிப்பிடத் தக்கவைகளாகும்.
எனினும், வெகுஜன நிலைப்பாட்டைப் பின்பற்றுவதற்கான அழைப்பு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் நடைமுறை வேலைமுறையை மாற்றியமைத்தல் மற்றும் மக்களுடன் உயிரோட்டமுள்ள தொடர்புகளை நிறுவிக்கொள்ளுதல் போன்றவை இன்னமும் முழுமையாக அமல்படுத்தப்படாத நிலையும், அவற்றை மேலும் ஆழமான முறையில் பின்பற்றிட வேண்டிய தேவையும்  தொடர்கின்றன.
ஒரு புரட்சிகர கட்சி ஸ்தாபனத்தைக் கட்டி எழுப்புவதில் கட்சி உறுப்பினரின் தரம்தான் மிகவும் முக்கியமான காரணியாகும். தேவைப்படும் அரசியல்-தத்துவார்த்த சிந்தனை மட்டத்துடன் ஊக்கத்துடன் செயல்படும் கட்சி உறுப்பினர்களால் மட்டுமே,  அர்ப்பணிப்புடனும், ஒழுங்கு கட்டுப்பாட்டுடனும் செயல்படக்கூடிய கட்சி உறுப்பினர்களால் மட்டுமே,  இவ்வாறானதோர் கம்யூனிஸ்ட் கட்சியை ஒரு வலுவான வெகுஜனத் தளத்துடன் கட்டியெழுப்பிடும் பொறுப்பினை நிறைவேற்றிட முடியும்.
இது தொடர்பாக, கட்சிப் பிளீனம், ஒவ்வொரு கட்சி உறுப்பினரும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமானால், கட்சி உறுப்பினர்களுக்கென்று வகுத்துள்ள ஐந்து அம்ச அடிப்படை விதிகளையும் அமல்படுத்திட வேண்டும் என்று பணித்திருந்தது. பல மாநிலங்களில் இதனை அமல்படுத்துவது இன்னமும் முழுமையாக நிறைவேறாத நிலையில், சில மாநிலக் குழுக்கள் கட்சி உறுப்பினர்களின் தரத்தை உயர்த்திட மிகவும்  ஆழமான முறையில் முயற்சிகளை மேற்கொண்டன. இவ்வாறு அடிப்படை விதிகளைக் கறாராக அமல்படுத்த முயன்றதன் காரணமாக பல மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படுவதற்கும் இட்டுச்  சென்றிருக்கிறது.  
2017ஆம் ஆண்டு கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்ற சமயத்தில் 10,58,750 ஆக இருந்த உறுப்பினர் எண்ணிக்கை, 2017இல் 10,12,315ஆகக் குறைந்துள்ளது. எனினும், குறைந்தபட்சம் அரசியல்-ஸ்தாபனப் பொறுப்புக்களை நிறைவேற்றுபவர்களை மட்டுமே கட்சி உறுப்பினர்களாக நீட்டித்திட வேண்டும் என்பதே முக்கியமாகையால், இவ்வாறு உறுப்பினர் எண்ணிக்கையில் சற்றே வீழ்ச்சி ஏற்பட்டிருப்பது மிகவும் கவலைப்பட வேண்டிய ஒன்று அல்ல.  இவ்வாறு கட்சி உறுப்பினர்களைத் தரப்படுத்துவதற்காக மேற்கொண்ட முயற்சிகள், கட்சியை விரிவாக்குவதற்குத் தேவையான அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைகளை  முன்னெடுத்துச்செல்லக்கூடிய வல்லமையைக் கட்சி ஸ்தாபனத்திற்குத் தந்திடும்.
கட்சி உறுப்பினர்களின் வயது  வித்தியாசம் ஏற்ற இறக்கத்துடன் இல்லாது அனைத்து வயதினரும் இருக்கக்கூடிய கட்சியாக முன்னேற்ற வேண்டும் என்பதற்காக கட்சிக்குள் இளம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று பிளீனம் கட்டளையிட்டிருந்தது. இதனை நிறைவேற்றக்கூடிய விதத்தில் அனைத்து மாநிலக்குழுக்களும் அடுத்த மூன்றாண்டுகளில் 31 வயதுக்குக் கீழானவர்களில் 20 சதவீதத்தினரைச் சேர்த்திட வேண்டும் என்று குறியீடும் நிர்ணயிக்கப்பட்டது. சில மாநிலங்கள் இந்தத் திசைவழியில் முன்னேற்றம்  அடைந்திருக்கின்றன.  அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கேரளத்தில், 31 வயதுக்குக் கீழானவர்களின் உறுப்பினர் எண்ணிக்கை 23.45 சதவீதமாகும். அதாவது 1,08,699 பேர் 31 வயதுக்குக் கீழானவர்கள். சில மாநிலங்கள் தங்கள் மாநிலக்குழு உறுப்பினர்களின் வயது  45 வயதுக்கும் குறைவானவர்கள் 10 முதல் 15 சதவீதம் வரை இருக்கக்கூடிய அளவிற்கு முன்னேறியிருக்கின்றன.
அதேபோன்று, கட்சியில் பெண் உறுப்பினர்கள் சேர்ப்பிலும் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. சில மாநிலங்கள் இதில் பின்னடைந்துள்ள போதிலும், ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் கூட பல மாநிலங்களில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2015இல் பிளீனம் நடைபெற்ற சமயத்தில் 2015இல் பெண் உறுப்பினர் எண்ணிக்கை 15.28 சதவீதமாக இருந்ததுடன் ஒப்பிடுகையில், தற்போது 2017இல்  ஒட்டுமொத்த சராசரி 16.63 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.  குறிப்பிட்ட காலவரையறை நிர்ணயித்து, பெண் உறுப்பினர் சேர்க்கையை 25 சதவீதமாக உயர்த்திட வேண்டும் என்று கட்சியின் அகில இந்திய மாநாடு மீளவும் வற்புறுத்தி இருக்கிறது.
கட்சி உறுப்பினர்களின் வர்க்க சேர்மானத்திலும்கூட, அதாவது தொழிலாளர் வர்க்கம், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் போன்ற அடிப்படை வர்க்கங்களின் சேர்மானத்திலும்கூட,  பொதுவான முன்னேற்றம் காணப்படுகிறது. தலித்துகள், பழங்குடியினர் மற்றும் முஸ்லீம் சிறுபான்மையினர் உறுப்பினர் சேர்ப்பில், தலித்துகள் மற்றும் பழங்குடியினர்  கட்சி உறுப்பினர்களானதில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கக்கூடிய அதே சமயத்தில், முஸ்லீம் சிறுபான்மையினரை இன்னமும் பதிவு செய்யவேண்டிய நிலை நீடிக்கிறது.
கட்சி ஸ்தாபனத்தின் மிக முக்கியமான பகுதி என்பது, ஊழியர்கள் கொள்கை, ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து, மேம்படுத்தி அவர்களைப் பயன்படுத்திக்கொள்வதாகும். கட்சி ஸ்தாபனத்தின் அச்சாணியாக இருப்பது முழுநேர ஊழியர்களேயாகும். சில மாநிலங்களில் முன்னணி ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச அளவிற்காவது ஊதியம் வழங்கிடக் கூடிய விதத்தில் முன்னணி ஊழியர் கொள்கையை வகுத்திட சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்றபோதிலும், பல மாநிலங்களில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதோடு மட்டுமல்லாமல் மிகப்பெரிய அளவிற்குத் துண்டு விழுந்திருக்கிறது. நாட்டில் பல இடங்களில் ஆர்எஸ்எஸ்/பாஜக பூதாகரமாக விரிவாகிக்கொண்டிருக்கக்கூடிய  சூழ்நிலையில், கட்சியின் வலுவான தளங்கள்கூட தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய சூழ்நிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தக்கூடிய விதத்தில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட ஒரு முன்னணி ஊழியர் கொள்கையை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டியது  கட்சிக்கு மிகவும் அவசியமானதாக மாறியிருக்கிறது. இது தொடர்பாக ஒரு திசைவழியை அரசியல்-ஸ்தாபன அறிக்கை அளித்திருக்கிறது.
ஸ்தாபன அறிக்கை, கட்சிக் கல்வி திட்டமிட்டமுறையில் பல மாநிலங்களில் நன்கு விரிவடைந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறது. இருந்த போதிலும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடமும் கட்சியின் அடிப்படைக் கல்வியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்கிற குறிக்கோள் இன்னமும் முழுமையாக நிறைவேற்றப்படா நிலை நீடிக்கிறது. கட்சியின் சார்பில் ஆறு நாளேடுகளும் எண்ணற்ற வார, மாத சஞ்சிகைகளும் பல மொழிகளில் வந்து கொண்டிருக்கின்றன. அரசியல்-தத்துவார்த்தப் பணிகளை வலுப்படுத்தக்கூடிய விதத்தில் சமூக வலைத்தளத்தில் பெரிய அளவிற்கான தலையீட்டிற்காகவும், இணையதள செய்தி நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கும் திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன.
 அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசியல்-ஸ்தாபன அறிக்கை, கட்சி ஸ்தாபனத்தை மேலும் மெருகூட்டுவதற்கும், ஸ்தாபனம் மீதான கொல்கத்தா பிளீனம்  உருவாக்கி அளித்திட்ட கடமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கும், ஓர் உந்துதலைக் கொடுத்திடும். அப்போதுதான், வெகுஜனத்தளத்துடன் (mass line) செயல்படக்கூடிய ஒரு புரட்சிக் கட்சியைக் கட்டி எழுப்பிட முடியும்.
(ஏப்ரல் 25, 2018)
(தமிழில்: ச.வீரமணி)



Sunday, April 29, 2018

ரானா அயூப் குறித்த விஷம பிரச்சாரம் - தில்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்



புதுதில்லி:
குஜராத் கோப்புகள் என்ற நூலை எழுதியதன்மூலம் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் சுமார் ஈராயிரம் முஸ்லீம்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளைச் செய்திட்ட கயவர்களையே பேட்டி கண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் வீராங்கனை ரானா அயூப். இதற்காக இவர் சமீபத்தில்அவுட்லுக் சோசியல் மீடியா யூத் ஐகான் ஆப் தி இயர்என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவரைக் குறிவைத்துத் தாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி, அவர் குழந்தை வன்புணர்வு நபர்களைப் பாதுகாக்கிறார் என்றும், இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறியும் போலியாக செய்திகளை ஒரு கயவன் வெளியிட்டுள்ளான். அவரது படத்தை சிதைத்து அசிங்கப்படுத்தி ஆபாச வீடியோக்களையும் சுற்றுக்கு விட்டுள்ளான். அவரை மக்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கவேண்டும் என்றும் தூண்டியிருக்கிறான். அவரது முகவரியையும், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும்கூட இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறான்.
பெண் ஊடகவியலாளர்கள்மீது ஆபாசமான முறையில் இத்தகு தாக்குதல்கள் தொடுக்கப்படுவது அதிகரித்து வருவதை தில்லி பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த கவலையுடன் பார்க்கிறது. இதுதொடர்பாக ரானா அயூப், இணையக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம்  தாக்கல் செய்துள்ள முறையீட்டின்மீது புலன்விசாரணை மேற்கொண்டு இவ்வாறு செய்திட்ட கயவனை உடனடியாக  அடையாளம் கண்டிட முன்வரவேண்டும்.
ட்விட்டர் நிறுவனமும் தன்னுடைய நிர்வாக எந்திரத்தை இத்தகு மோசமான அம்சங்கள் தங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதைத் தடுத்திடக்கூடிய விதத்தில் உடனடியாக மாற்றியமைத்திட வேண்டும் என்றும் தில்லி பத்திரிகையாளர் சங்கம் ட்விட்டர் நிறுவனத்தைக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு சமூக வலைத்தளங்களை தங்களுடைய சுயநல அரசியல் ஆதாயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்திடும் கயவர்களை தில்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டிக்கிறது. தனிநபர்களின் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இவ்வாறு போசி செய்திகள் பரப்பி, அவர்கள்மீது வன்முறையைத் தூண்ட வேண்டும் என்று பதிவுசெய்யப்படுவது அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.   போலி செய்திகள், ஊடகங்களின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகின்றன, அதன் பங்கினையும் தரமற்றதாக்குகின்றன. இத்தகு போலி செய்திகளை வெளியிடும்  ட்விட்டர், முகநூல், மற்றும் இதேபோன்ற இதர  மேடைகள் கண்டறியப்பட்டு களை எடுக்கப்பட வேண்டும். இந்நிறுவனங்களும் இவ்வாறு ஆபாசமான பதிவேற்றங்களுக்குப் பொறுப்பேற்று, இவ்வாறு ஆபாச செய்திகளையும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் தடுத்திட வேண்டும். இவ்வாறு தில்லி பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது.


Saturday, April 28, 2018

மே தின சபதம் ஏற்போம்



(இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு)-வின் மே தின அறிக்கை)
இந்தியத் தொழிற்சங்க மையம் (சிஐடியு), சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒருமைப்பாட்டு தினம், மே தினமான இன்று, உலகம் முழுதும் தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும், சேவைத்துறைகளிலும், சுரங்கங்களிலும், வனங்களிலும், நீர்நிலைகளிலும் பாடுபடும் பாட்டாளிகள் அனைவருக்கும், வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மிகவும் கடினமாகப் போராடி வென்ற தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தங்களுடைய நிலைமைகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்காக, குறிப்பாக, உலகப் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, ஏகாதிபத்தியத்தின் தலைமையில் சர்வதேச நிதி மூலதனத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் நவீன தாராளமய முதலாளித்துவக் கொள்கைகளுக்கு எதிராக, மக்கள் தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களின் மீது ஏவியுள்ள தாக்குதல்களுக்கு எதிராக, மற்றும் அனைத்துவிதமான சுரண்டல்களிலிருந்தும் தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, மேற்கொண்டுவரும் அனைத்துவிதமான போராட்டங்களுக்கும் சிஐடியு தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
சோசலிசம் மீதும் மனிதனை மனிதன் சுரண்டுவதிலிருந்து சமூகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்வதற்குமான தன்னுடைய உறுதிமொழியை சிஐடியு, மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. அதேபோன்று, சோசலிச நாடுகளில் உள்ள மக்கள் தங்களுடைய நாட்டில் சோசலிசத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் சிஐடியு, தன்னுடைய ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது.
அந்நியர் தலையீடு இல்லாமல் தங்களுடைய அரசாங்கங்களை ஜனநாயகரீதியாகத் தேர்வு செய்திட்ட அனைத்து நாட்டு மக்களின் உரிமைகளை சிஐடியு பாதுகாக்கிறது. ஆப்கானிஸ்தான், சிரியா, ஏமன் முதலான நாடுகளில் நடைபெற்றுவரும் யுத்தங்கள் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் மற்றும் இலத்தீன் அமெரிக்கா மற்றும் உலகின் பல நாடுகளில், இடது மற்றும் முற்போக்கு அரசாங்கங்களை அப்புறப்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் அவற்றின் மேலாதிக்க சூழ்ச்சிகளையும் சிஐடியு கண்டனம் செய்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை சிஐடியு தன்னுடைய அனைத்து வல்லமையையும் கொண்டு எதிர்த்துப்போரிடவும் சபதம் ஏற்கிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் என்பது சுரண்டலுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தின் பிரிக்க முடியாததொரு பகுதி என்பதையும் சிஐடியு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறது.
தங்கள் தாய்நாட்டிற்காக,  பாலஸ்தீனர்கள் தொடர்ந்து நடத்திவரும்  வீரஞ்செறிந்த போராட்டத்திற்குமான ஒருமைப்பாட்டை சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. பாலஸ்தீனத்தை 1967ஆம் ஆண்டிலிருந்த எல்லைகளுடன் ஒரு சுதந்திரமான இறையாண்மைமிக்க நாடாகவும்  மற்றும் கிழக்கு ஜெருசேலத்தை அதன் தலைநகராகவும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.
உழைக்கும் மக்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ள உலக வளத்தில் பாதிக்கும் மேலான அளவினை உலகில் உள்ள 1 சதவீத பணக்காரர்கள், நவீன தாராளமயக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களுக்குள்  சுருட்டிக் கொண்டு, சமத்துவ மின்மையை அதிகரித்துக்கொண்டிருப்பதை, இந்த வளத்தை உழைக்கும் மக்களின் மீதான சுரண்டலை அதிகரித்திருப்பதன் மூலமாக, கூட்டுக் களவாடல் முதலாளித்துவத்தின் மூலமாக, வரிகளைச் செலுத்தாது ஏமாற்றி, நிலங்கள், வனங்கள், சுரங்கங்கள், நீர்நிலைகள் என  பொதுச் சொத்துக்களையும் இயற்கை வளங்களையும்,  அங்கே வாழ்ந்து வந்த ஏழை விவசாயிகள், பழங்குடியினர்கள் மற்றும் இதர மக்களையும் புலம்பெயரச் செய்துவிட்டு, சூறையாடி இருப்பதையும், சிஐடியு  ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது.
வலதுசாரி சக்திகள் தலைதூக்கியிருப்பது கண்டு சிஐடியு தன் திகைப்பை வெளிப்படுத்திக் கொள்கிறது. வலதுசாரி சக்திகளால் நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு மாற்றத்தை அளித்திட முடியாது. மாறாக அவை, தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் தேசிய இனங்கள், மதங்கள், பிராந்தியங்கள், சாதிகள், ஆண்-பெண் வேற்றுமை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் பிளவுபடுத்திடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன. குறிப்பாக, எங்கெல்லாம் சமூக ஜனநாயகவாதிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொண்டு, நவீன தாராளமயக் கொள்கைகளை ஆதரித்ததன் மூலம் தொழிலாளி வர்க்கத்திற்கும் இடதுசாரி சக்திகளுக்கும் துரோகம் இழைத்தார்களோ, அந்த நாடுகளில் எல்லாம் இதனை மிகவும் தெளிவாகக் காண முடிந்தது. சர்வதேச நிதிமூலதனம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் மேம்படுத்தப்பட்டுள்ள வலதுசாரி சக்திகள் தங்கள் நாடுகளில் உள்ள பெரும் கார்ப்பரேட்டுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்குச் சேவகம் செய்வதற்காக உழைக்கும் மக்களின் ஒற்றுமையைப் பல்வேறு வழிகளிலும் சீர்குலைத்துக் கொண்டிருக்கின்றன. நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான அவர்களுடைய போராட்டங்களை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவர்கள் உழைக்கும் மக்களின் விரோதிகள் என்று சிஐடியு உரத்து அறிவிக்கிறது. 
உலகப் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாகியிருக்கக்கூடிய இன்றைய பின்னணியில், முதலாளிகள் தங்களுடைய கொள்ளைலாபங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இன்றைய பொருளாதார நெருக்கடியிலும் அதற்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு தக்க வைத்துக் கொள்வதற்காக,  வலதுசாரிகளையும், எதேச்சாதிகார மற்றும் காட்டுமிராண்டித்தனமான சக்திகளையும் உயர்த்திப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. உலக சோசலிச முகாம் வலுவாக இல்லாததும் அவர்களுக்கு இதற்கான துணிவை அளித்திருக்கிறது.
இன்றைய முதலாளித்துவ அமைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், மக்கள் தங்கள் சுயநலத்திற்காக அல்லாது சமூகத்தின் பயன்பாட்டிற்காக, உருவாக்கியுள்ள அபரிமிதமான வளர்ச்சியை, மக்களுக்குப் பயன்படுத்தாமல், முதலாளித்துவ வளர்முக நாடுகளில் ஒருசிலவும் பெரும் கார்ப்பரேட்டுகளும் மற்றும் வர்த்தக நிறுவனங்களும் தங்களை வளப்படுத்திக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதானது அட்டூழியமான செயல் என்று சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.
வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, எழுத்தறிவின்மை, சுகாதாரமின்மை, வீட்டுவசதியின்மை மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாமை ஆகிய அனைத்தையும் போக்கக்கூடிய விதத்தில் அனைத்துத் தேவையான வளங்களும் உள்ள போதிலும் பெரும்பான்மையான மக்களுக்கு அவற்றை வழங்காதது மட்டுமல்ல அவை மிகவும் மோசமான முறையில் அதிகரிக்கக்கூடிய நிலை உருவாகியிருப்பதற்கும் முதலாளித்துவ அமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்று சிஐடியு கூறுகிறது.
பொருளாதார நெருக்கடி மேலும் மோசமாகிக் கொண்டிருக்கக்கூடிய பின்னணியில், முதலாளித்துவ அமைப்பு முறை, மேலும் கொடூரமானதாக, மேலும் அடாவடித்தனமாக, மேலும் காட்டுமிராண்டித்தனமாக தன்னுடைய சுரண்டல் குணத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதைத் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் கொண்டுசென்று அவர்களுக்கு விழிப்புணர்வினை உருவாக்கிட சிஐடியு சபதம் ஏற்கிறது.  முதலாளித்துவ அமைப்புமுறையைத் தூக்கி எறிவதிலும், அனைத்துவிதமான சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான இறுதிப்போராட்டத்திற்குத் தயாராவதிலும் தொழிலாளர் வர்க்கத்திற்குள்ள பங்கினை உணரக்கூடிய விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் உணர்வுமட்டத்தை உயர்த்திட, சிஐடியு உறுதியேற்கிறது.
உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தை ஒற்றுமைப்படுத்திட உலக தொழிற்சங்கங்களின் சம்மேளனம் (WFTU-World Federation of Trade Unions) மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்திடுவதற்கும், சுரண்டும் தன்மையுடைய முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்துவதற்கும் உறுதி எடுத்துக்கொள்வதாக சிஐடியு உரத்து அறிவிக்கிறது.
மே தினமான இன்று, சிஐடியு, நம் நாட்டில் உழைக்கும் மக்களின் மீது மும்முனைகளில் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதை, ஆழ்ந்த எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறது. அதாவது, பாஜக ஆட்சியாளர்கள், நம் நாட்டின் தொழிலாளிகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளில், நவீன தாராளமயத் தாக்குதல்களைத் தொடர்வது, ஆர்எஸ்எஸ்-உடன் இணைந்து மதவெறி மற்றும் சாதியவெறி சக்திகள் செல்வாக்கு பெற்று அரசாங்கம் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளையும் கைப்பற்றி மக்களைப் பிளவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது மற்றும் எதேச்சாதிகாரம் அதிகரித்துக்கொண்டிருப்பது, சமூகத்தில் சகிப்பின்மை  அதிகரித்துக்கொண்டிருப்பது மற்றும் பகுத்தறிவு மற்றும் அறிவியல் சிந்தனைகளை வளர்த்திட்ட பகுத்தறிவாளர்களையும் அறிவியலாளர்களையும், மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களையும், பாஜகவின் கொள்கைகளை எதிர்ப்பவர்களையும் ‘தேச விரோதிகள்’ என்று முத்திரை குத்தி, தாக்குவது, தூற்றுவது, அச்சுறுத்துவது மற்றும் கொல்வது என்று மும்முனைகளில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன என்று ஆழமானமுறையில் தொழிலாளர் வர்க்கத்தை சிஐடியு எச்சரிக்கிறது.
சிஐடியு, நவீன தாராளமயக் கொள்கைகளின் விளைவாக அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், வேலைகளின்மை, தொழில்துறையில் ஆழமாகி வரும் மந்தம், அதிகரித்துவரும் வறுமை, விவசாய நெருக்கடி, கிராமப்புற அவலநிலை மற்றும் தொடரும் விவசாயிகள் தற்கொலைகள், மிகவும் அசிங்கமானமுறையில் விரிவாகிவரும் சமத்துவமின்மை ஆகியவற்றை மிகவும் ஆழமான கவலையுடன் பதிவு செய்கிறது.
பாஜகவினர் தங்களை ‘தேசியவாதிகள்’ என்று அழைத்துக்கொண்டே, நாட்டின் செல்வங்களான – நிலங்கள், வனங்கள், நீர்நிலைகள், சுரங்கங்கள் மற்றும் கேந்திரமான ராணுவத்துறை உட்பட  பொதுத்துறை நிறுவனங்களிலும் அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீத அளவிற்குத் திறந்துவிட்டிருப்பதன் மூலமாக, நாட்டின் நலன்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இவ்வாறு நாட்டின் செல்வங்களை அந்நியருக்குத் தாரைவார்க்க முனைந்திருப்பது மட்டுமல்லாமல், உலக நாடுகள் வியக்கும் விதத்தில் நாம் இதுகாறும் கடைப்பிடித்து வந்த சுயேச்சையான அயல்துறைக் கொள்கையையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய பங்காளியாக மாறக்கூடிய விதத்தில் மாற்றியமைத்திருக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய கேலிக்கூத்து, முரண்தகை மற்றும் பாசாங்குத்தனமான நடிப்பு என்று சிஐடியு சுட்டிக்காட்டுகிறது.
திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் திரிபுராவில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் மற்றும் சிஐடியு ஆகியவற்றின் அலுவலகங்களையும், ஊழியர்களையும் பாஜக குண்டர்கள் தாக்கியதற்கும், அங்கிருந்த லெனின் சிலையைத் தகர்த்ததற்கும் சிஐடியு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இத்தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சிஐடியு கோருகிறது.‘
இத்தாக்குதல்களை வீரத்துடன் எதிர்த்து வரும் திரிபுரா தொழிலாளர் வர்க்கத்திற்கும், மக்களுக்கும் சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக்கொள்கிறது,  வீர வணக்கங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறது.  இத்தாக்குதல்களிலிருந்து திரிபுரா மக்கள் விரைவில் மீண்டெழுவார்கள் என்ற நம்பிக்கையை சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.
மேற்கு வங்கத்தில், குறிப்பாக பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெறக்கூடிய சமயத்தில், திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் இடதுசாரிகள் மற்றும் சிஐடியு ஊழியர்கள் மீது ஏவப்பட்டுவரும் தொடர் தாக்குதல்களை சிஐடியு கடுமையாகக் கண்டிக்கிறது. ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமும் மற்றும் ஜனநாயக இயக்கமும் தெரிவித்த எதிர்ப்புகள் அனைத்தையும் நசுக்கிவிட்டு, மே தினத்தன்று பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்திட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் முடிவெடுத்ததற்காகவும் சிஐடியு கண்டனம் செய்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்துத் தேர்தல்களில் போட்டியிடுவதிலிருந்து இடதுசாரிக் கட்சி ஊழியர்களையும், தலைவர்களையும் தடுப்பதற்காக அவர்களை நேரடியாகத் தாக்குதல் தொடுத்ததையும், அவர்களை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யவிடாமல் தடுத்ததையும் சிஐடியு கண்டிக்கிறது. இத்தகைய கொடூரமான தாக்குதல்களைத் துணிந்து எதிர்த்திட்ட மக்களுக்கு சிஐடியு தன் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில்,  தலித்துகள் மீதும், சிறுபான்மையினர் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துவருவதற்கு சிஐடியு தன் கோபத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆர்எஸ்எஸ்-உம் பாஜக-வும் தூக்கிப்பிடிக்கும் மிகவும் பிற்போக்கத்தனமான,  மனு(அ)தர்மச் சிந்தனைகள்தான் இவ்வாறு தலித்துகளை, பழங்குடியினரை, பெண்களை, நசுக்குவதற்கும், அவர்கள் மீதான தாக்குதல்களை ஊக்கப்படுத்துவதற்கும் வழிகோலுகிறது. மன(அ)நீதியைத் தொடர்ந்து பின்பற்றிடுவோம் என்று கூறும் பாஜக, அவ்வப்போது தலித்துகள் மீது பாசம் காட்டுவதுபோல் நடிப்பது தேர்தல் ஆதாயத்திற்காகவே தவிர வேறெதற்காகவும் அல்ல என்று சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு பாஜக தங்களுடைய வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்கள் மீது தொடுத்துள்ள தாக்குதல்களை எதிர்த்திடவும், மேலும் நாட்டின்  அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்து முறியடித்திடவும் நாட்டின் பல முனைகளிலும் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்துகள், மாணவர்கள் முதலானர்களின் போராட்டங்கள் நாளும் வளர்ர்ந்து வருவதற்கு சிஐடியு தன் வரவேற்பை உரித்தாக்கிக் கொள்கிறது.
மே தினமான இன்று, சிஐடியு, நாட்டில், தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் மீதும் ஏவப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக மும்முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்று – அதாவது, நவீன தாராளமயத்திற்கு எதிரான போராட்டம், மக்களை மதரீதியாகவும் சாதி ரீதியாகவும் பிளவுபடுத்துவதற்கு எதிரான போராட்டம், எதேச்சாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என மும்முனைகளில் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்பதை - மீளவும் வலியுறுத்துகிறது.
இத்தகு சவால்களை வலுவாக எதிர்கொள்ளக்கூடிய விதத்தில் நாட்டிலுள்ள ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்தையும் அணிதிரட்டிட உறுதி எடுத்துக்கொண்டிருப்பதை சிஐடியு பிரகடனம் செய்கிறது. 
ஒன்றுபட்ட போராட்டம் என்கிற மேடையில் உழைக்கும் மக்களின் அனைத்துப்பிரிவு மக்களும் அணிதிரண்டு, மேடையை வலுவானதாகவும், விரிவானதாகவும் மாற்ற உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.
பெரும்பான்மை மதவெறி, சிறுபான்மை மதவெறி மற்றும் அடிப்படைவாதம் ஒன்றையொன்று ஊட்டி வளர்ப்பவை என்று சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது. மதவெறி அது எந்த வர்ணத்தின் கீழ் அல்லது கொடியின்கீழ் வந்தாலும் அது மக்களைப் பிளவுபடுத்திடும், அவர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும், நாளும் நம்மை வாட்டிவதைத்திடும் உண்மையான பிரச்சனைகளின் மீது கவனம் செலுத்தாதவாறு அது கவனத்தை திசைதிருப்பிடும், உண்மையான கயவாளிகளுக்கு எதிராக – அதாவது, நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் சுரண்டும் அமைப்புமுறையைத் தூக்கிப்பிடிப்பவர்களுக்கு எதிராக - மேற்கொள்ளப்படும் போராட்டங்களை பலவீனப்படுத்திடும் என்றும் இறுதியாக மதவெறி சுரண்டும் வர்க்கங்களுக்கே சேவை செய்திடும் என்றும் சிஐடியு வலியுறுத்திக் கூறிக்கொள்கிறது.
அனைத்துவிதமான சுரண்டலையும் உக்கிரப்படுத்திவரும் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராகப் போராடுவதற்கும், அந்தத் திசைவழியில் முன்னேற உறுதி எடுத்துக்கொள்வதற்கும், தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டிய தேவையை சிஐடியு அழுத்தம் தந்து, கூறிக்கொள்கிறது. ‘
உழைக்கும் மக்களை அணிதிரட்டிட, நவீன தாராளமயத்திற்கு எதிராக துல்லியமான மாற்றுக் கொள்கைகளை முன்வைத்து,  கூட்டுத் தொழிற்சங்க இயக்கத்தை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளையும், சுயேச்சையான பிரச்சாரங்களையும் மேற்கொண்டிடவும் சிஐடியு உறுதி எடுத்துக் கொள்கிறது.
இத்தகையதொரு மக்கள் திரள் பங்கேற்கும் போராட்டங்களின் மூலம்தான் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவாக வர்க்க சக்திகளின் சேர்மானத்தில் புரிந்துகொள்ளக்கூடிய அளவிற்கு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கையை சிஐடியு மீளவும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறது.  
சென்ற ஆண்டு 2017 மே தினத்தன்று, சிஐடியு இந்தியத் தொழிலாளர் வர்க்கத்திற்கு கீழ்க்கண்ட வேண்டுகோள்களை விடுத்திருந்தது:
நவீன தாராளமயக் கொள்கைகளை முறியடித்திடுவதற்கான போராட்டங்களையும், தொழிலாளர் ஆதரவு மற்றும் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை கொண்டுவருவதற்கான போராட்டங்களையும்  உக்கிரப்படுத்திட வேண்டும் என்றும் அவற்றுக்கான ஒற்றுமையை வலுப்படுத்திட வேண்டும் என்று கோரியிருந்தது.
ஒற்றுமையைச் சீர்குலைத்திட மதவெறி சக்திகள், சாதி வெறி சக்திகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை விழிப்புடனிருந்து முறியடித்திட வேண்டும் என்று கோரியிருந்தது.
தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள் முதலான உழைக்கும் மக்கள் அனைத்துத்தரப்பினரின் மத்தியிலும் ஒருமைப்பாட்டையும் ஆழமான பிணைப்பினையும் கொண்டுவர வேண்டும் என்று கோரியிருந்தது.
முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் அதன் அரசியல் மற்றும் அவற்றை மேம்படுத்திட விரும்பும் சக்திகள் அனைத்தும்தான் தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கும் உண்மையான எதிரி என்பதை அடையாளம் காட்டி, சுரண்டும் அமைப்புமுறையை மாற்றியமைப்பதற்கான போராட்டத்திற்குத் தயாராவீர் என்று அறைகூவல் விடுத்தது.  
சிஐடியு, இந்த மே தினத்தன்று, சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒருமைப்பாடு மற்றும் அனைத்துவிதமான சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான ஒற்றுமைக்கு ஆதரவாக, தன்னுடைய பதாகையை, உயர்த்திப்பிடிக்கிறது.   
முதலலாளித்துவம் ஒழிக, ஏகாதிபத்தியம் ஒழிக,
சோசலிசம் நீடூழி வாழ்க.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுபடுவோம்.

--
(தமிழில்: ச.வீரமணி)


Thursday, April 26, 2018

ஊட்டச்சத்து உணவுக்கு உங்கள் தேர்வு என்ன?



ஊட்டச்சத்து உணவுக்கு உங்கள் தேர்வு என்ன?
என்.நாராயணன்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் திங்கள் கிழமையன்று வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பக்கத்தில், நாட்டு மக்கள் நலமுடன் வாழ என்னென்ன சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால், அதில் நாட்டு மக்களில் பெரும்பாலோர் ஊட்டச்சத்துக்குறைவால் அவதிப்படுவது குறித்தோ, அதற்கு முட்டை மற்றும் இறைச்சி போன்ற உணவுப் பொருள்கள் அவசியம் என்பது குறித்தோ அது எதுவும் கூறவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.
அமைச்சகம் இது தொடர்பாக இரு பெண் சித்திரங்களை பகிர்ந்திருக்கிறது. அதில்  குண்டாக உள்ள ஒரு பெண்ணின் உடலுக்குள் ஆரோக்கியமற்ற உணவுப்பொருள்களான சிப்ஸ், குளிர்பானங்கள், இறைச்சி, முட்டைகள், வறுவல் உணவுப் பொருள்கள் போன்றவை இருப்பது போலவும்,  அடுத்ததாக ஒல்லியாக உள்ள ஒரு பெண்ணின் உடலுக்குள் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் இருப்பதுபோலவும் காட்டப்பட்டிருந்தன.  மத்திய சுகாதார அமைச்சகம் சைவ உணவை மேம்படுத்த முனைகிறது என்றும், இறைச்சியை ஓர் ஆரோக்கியமற்ற உணவு என்று கூறுகிறது என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வருவதற்க முன்னரேயே,  இவ்வாறுப் பதிவேற்றம் செய்யப்பட்ட ட்விட்டர் பின்னர் என்ன காரணத்தாலோ நீக்கிவிட்டது.

மத்திய சுகாதார அமைச்சகம், தெரிந்தோ அல்லது தெரியாமலோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் மூலம், ஒரு செய்தியை மக்கள் மத்தியில் பரப்பியிருக்கிறது. அதாவது, சைவ உணவு உடல்நலத்திற்கு உகந்தது என்றும், இறைச்சி மற்றும் முட்டைகள் அப்படி அல்ல என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.
இவ்வாறான மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்தில் காணப்படும் பிரச்சனை என்ன? உண்மையில் மனித உடலின் வளர்ச்சிக்கும் அதனைச் சரிசெய்வதற்கும் புரதச் சத்துக்கள் மிக மிக அவசியமாகும். புரதச்சத்து இன்மையால் ஊட்டச்சத்துக் குறைவாக உள்ளவர்கள்தான் நம் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக அதிகமாக இருக்கிறார்கள். மனித உடலின் வளர்ச்சிக்கு புரதச் சத்து அத்தியாவசியத்தேவை என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை கூறுகிறது. குறிப்பாக சிறுவர்கள் குறைந்த எடையுடன் காணப்படுவதற்கும், புரதச்சத்தின்மையே முக்கிய காரணமாகும். சமீபத்தில் வெளியிடப்பட்ட குடும்ப சுகாதார ஆய்வறிக்கையானது, நம் நாட்டில் 36 சதவீதக் குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப்படுகின்றனர் என்றும், 21 சதவீதத்தினர் தங்கள் வயதுக்குத் தேவையான எடையும், 38 சதவீதத்தினர் தங்கள் வயதுக்குத் தேவையான உயரமும் இன்றி காணப்படுகின்றார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. புரதச்சத்தின்மை இயல்பான உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், ஒருவரின் இயல்புவாழ்க்கையை நிரந்தரமாக முடக்கிவிடக்கூடிய நிலைக்கும் இட்டுச்சென்றுவிடும்.   
நம் நாட்டில் புரதச்சத்தின்மை என்பது பெரியவர்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது. 2015ஆம்ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நுகர்வோர் ஆய்வு, நம் நாட்டில் உணவு உண்போரில் பத்தில் ஒன்பது பேர் புரதச்சத்து இல்லாத உணவையே உட்கொள்ளுகிறார்கள் என்று கண்டிருக்கிறது. நாட்டில் உள்ள கர்ப்பிணிப்பெண்கள் இவ்வாறு புரதச்சத்தின்மையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அவர்களின் உடல்நலத்தை மட்டுமல்ல, அவர்களின் கருவில் வளரும் குழந்தையின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது.
புரதச்சத்து நிறைந்தவையாகக் கருதப்படும் உணவுப் பொருள்களில், பருப்பு வகைகள், அவரை வகைகள், பால், முட்டைகள், இறைச்சி மற்றும் மீன் முக்கியமானவைகளாகும். ஹைதராபாத், தேசிய ஊட்டச்சத்து நிலையம் (National Institute of Nutrition) வெளியிட்டுள்ள உட்கொள்ளும் உணவு தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகள், விலங்குப் புரதங்கள் மிகவும் தரமானவை என்றும் ஏனெனில் அவை அனைத்து அத்தியாவசியமான அமினோ அமிலங்களையும் (all the essential amino acids) மிகச் சரியான விகிதக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன என்றும் அதே சமயத்தில் தாவரங்களில் அல்லது காய்கறிகளில் காணப்படும் புரதச்சத்துக்கள் அந்த அளவிற்குத் தரமானவை கிடையாது என்றும், அவற்றில் அத்தியாவசிய அமினோ  அமிலங்கள் போதுமான அளவிற்குக் கிடையாது என்றும் கூறியிருக்கிறது.
இவ்வாறு சொல்வதன்மூலம் ஒருவருக்கு சைவ உணவு உட்கொள்ளுவதால் தேவையான அளவிற்கு புரதச்சத்துக்கள் கிடைக்காது என்று பொருள் அல்ல. மாறாக சைவ உணவு உட்கொள்பவர்கள் தங்களுக்குத் தேவையான புரதத்தைப் பெற வேண்டுமானால் அதற்கு ஏற்றவிதத்தில் தானியங்கள் (cereals) , சோளம் போன்ற தினைவகைத் தானியங்கள் (millets), மற்றும் பருப்பு வகைகள் (pulses) உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குத் தேவையான அளவிற்கு அமினோ அமிலம் கிடைத்திடும்.
உண்மையில், முட்டைகள் மிகச்சிறந்த புரத உணவுப்பொருளாகும். மிக உயர்ந்த அளவிற்கு புரதச்சத்து கிடைக்கிறது.  
எந்தெந்த உணவுப் பொருள்களில் புரதத்தின் உயிரியலுக்குரிய மதிப்பு எந்த அளவிற்குக் காணப்படுகிறது என்று கீழே தரப்பட்டிருக்கிறது.
உணவு
உயிரியலுக்குரிய மதிப்பு (biological value)
முட்டை
93.7
பால்
84.5
மீன்
76
மாட்டிறைச்சி
74.3
சோயாபீன்ஸ்
72.8
அரிசி (தீட்டப்பட்டது)
64
கோதுமை (முழுமையாக)
64
பருப்பு, மக்காச்சோளம்
60
பீன்ஸ் (உலர்ந்தது)
59
ஆதாரம்: உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO)
நம் நாட்டில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வழி கிடைத்துவந்த புரதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்நிலையில், புரதச்சத்தின்மை நாட்டு மக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, இது தொடர்பாக, 2017ஆம் ஆண்டு தேசிய ஊட்டச்சத்து நிலையம் (National Institute of Nutrition) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை, கடந்த இருபது ஆண்டுகளில், அதாவது 1993க்கும் 2013க்கம் இடையில்,  பீன்ஸ் உணவுப்பொருளில் இருந்த புரதத்தின் அளவு 60 சதவீதம் குறைந்துவிட்டது என்றும், பருப்புப் பொருள்களில் 10 சதவீதம் குறைந்துவிட்டது என்றும், ஆட்டிறைச்சியில் 5 சதவீதம் குறைந்துவிட்டது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு குறைந்திருப்பதற்கு தொடர் வேளாண் நடவடிக்கைகள், புவி வெப்பமயமாதல் மற்றும் மண்வளம் குறைந்திருத்தல் போன்றவை காரணங்களாக இருக்கக்கூடும் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இவ்வாறு நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களுக்கு புரதச்சத்து குறைவு காரணமாக ஊட்டச்சத்து குறைந்திருப்பதே இன்றைய எதார்த்த நிலையாகும். இந்த லட்சணத்தில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய முட்டைகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை ஆரோக்கியமற்றவை என்று முத்திரை குத்தியிருப்பது மிக மோசமான ஒன்று என்பதில் சந்தேகமில்லை.
(நன்றி: ஸ்குரோல்.இன்)
(தமிழில்: ச.வீரமணி)