Showing posts with label Rana Ayub. Show all posts
Showing posts with label Rana Ayub. Show all posts

Sunday, April 29, 2018

ரானா அயூப் குறித்த விஷம பிரச்சாரம் - தில்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்



புதுதில்லி:
குஜராத் கோப்புகள் என்ற நூலை எழுதியதன்மூலம் குஜராத் மாநிலத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் சுமார் ஈராயிரம் முஸ்லீம்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட நிகழ்வுகளைச் செய்திட்ட கயவர்களையே பேட்டி கண்டு வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் வீராங்கனை ரானா அயூப். இதற்காக இவர் சமீபத்தில்அவுட்லுக் சோசியல் மீடியா யூத் ஐகான் ஆப் தி இயர்என்ற விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். இவரைக் குறிவைத்துத் தாக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன் போலி ட்விட்டர் கணக்கு உருவாக்கி, அவர் குழந்தை வன்புணர்வு நபர்களைப் பாதுகாக்கிறார் என்றும், இந்தியாவில் முஸ்லீம்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறியும் போலியாக செய்திகளை ஒரு கயவன் வெளியிட்டுள்ளான். அவரது படத்தை சிதைத்து அசிங்கப்படுத்தி ஆபாச வீடியோக்களையும் சுற்றுக்கு விட்டுள்ளான். அவரை மக்கள் வன்புணர்வுக்கு உள்ளாக்கவேண்டும் என்றும் தூண்டியிருக்கிறான். அவரது முகவரியையும், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்களையும்கூட இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறான்.
பெண் ஊடகவியலாளர்கள்மீது ஆபாசமான முறையில் இத்தகு தாக்குதல்கள் தொடுக்கப்படுவது அதிகரித்து வருவதை தில்லி பத்திரிகையாளர் சங்கம் ஆழ்ந்த கவலையுடன் பார்க்கிறது. இதுதொடர்பாக ரானா அயூப், இணையக் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம்  தாக்கல் செய்துள்ள முறையீட்டின்மீது புலன்விசாரணை மேற்கொண்டு இவ்வாறு செய்திட்ட கயவனை உடனடியாக  அடையாளம் கண்டிட முன்வரவேண்டும்.
ட்விட்டர் நிறுவனமும் தன்னுடைய நிர்வாக எந்திரத்தை இத்தகு மோசமான அம்சங்கள் தங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதைத் தடுத்திடக்கூடிய விதத்தில் உடனடியாக மாற்றியமைத்திட வேண்டும் என்றும் தில்லி பத்திரிகையாளர் சங்கம் ட்விட்டர் நிறுவனத்தைக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு சமூக வலைத்தளங்களை தங்களுடைய சுயநல அரசியல் ஆதாயங்களுக்காக துஷ்பிரயோகம் செய்திடும் கயவர்களை தில்லி பத்திரிகையாளர் சங்கம் கண்டிக்கிறது. தனிநபர்களின் புகழுக்கு இழுக்கை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் இவ்வாறு போசி செய்திகள் பரப்பி, அவர்கள்மீது வன்முறையைத் தூண்ட வேண்டும் என்று பதிவுசெய்யப்படுவது அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.   போலி செய்திகள், ஊடகங்களின் நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்குகின்றன, அதன் பங்கினையும் தரமற்றதாக்குகின்றன. இத்தகு போலி செய்திகளை வெளியிடும்  ட்விட்டர், முகநூல், மற்றும் இதேபோன்ற இதர  மேடைகள் கண்டறியப்பட்டு களை எடுக்கப்பட வேண்டும். இந்நிறுவனங்களும் இவ்வாறு ஆபாசமான பதிவேற்றங்களுக்குப் பொறுப்பேற்று, இவ்வாறு ஆபாச செய்திகளையும், வன்முறையைத் தூண்டும் விதத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் தடுத்திட வேண்டும். இவ்வாறு தில்லி பத்திரிகையாளர் சங்கம் கோரியுள்ளது.