Sunday, September 29, 2013

மதவெறி, பிரிவினை சக்திகளைத் தனிமைப்படுத்திடுவோம்!


(புதுதில்லியில் செப்டம்பர் 13 அன்று தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் 16 ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணிக் சர்க்கார் பேசியது:)
‘‘நாட்டின் சில பகுதிகளில் வகுப்புவாதக் கலவரங்கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கக் கூடிய தருணத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் கூட்டப்பட்டிக்கிறது. அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மத நல்லிணக்கத்தை மீட்டெடுத்திட இக் கூட்டம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்
.நம்முடைய நாடு, பல மொழிகள், பல கலாச்சாரங்கள்,  பல மதங்கள் எனப் பல்வேறு வேற்றுமைகளைக் கொண்ட ஒரு சமூகமாகும். நமக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டே, பல்வேறு சாதிகள், இனங்கள் மற்றும் மதங்களைச் சார்ந்த மக்கள், சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் ஒருங்கிணைந்தும் வாழ்ந்து வந்திருக் கிறார்கள். சகிப்புத்தன்மை, சமாதான சகவாழ்வு மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவை நம் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் கேந்திர மான அம்சங்களாகும்.
ஆயினும், அவ்வப்போது இதற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய விதத்தில் நிகழ்ச்சிப்போக்குகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அடிப் படைவாத மதவெறி சக்திகள் தங்கள் கோர முகங்களை நாட்டின் சில பகுதிகளில் தூக்கியுள்ளன. பல மதங்களைக் கொண்ட நம்மைப்போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம், எவ்விதமான மிரட்டலுக்கோ, அச்சுறுத்தலுக்கோ ஆளாகாமல் அவர்கள் தங்கள் மதநம்பிக்கைகளைப் பின்பற்றிட அவர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டியது அவசியம். தாங்கள் அவ்வாறு முழுப் பாதுகாப்புடன் இருக்கிறோம் என்று அவர்கள் முழுமனதுடன் உணரக்கூடிய விதத்தில் அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம். அனைத்து மதத்தினரும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சம உரிமைகளைப் பெற்றிருக்கும் அதே சமயத்தில், மதப் பெரும்பான்மையினர், நாட்டின் மதச்சார்பின்மை என்னும் மாண்பைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், மதச் சிறுபான்மையினர் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பொறுப்பினை, பெரும் அளவில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மதம் முழுமையாக ஒரு வரின் தனி விவகாரம். இதற்கு அரசின் ஆக்கமும் ஊக்கமும் தேவையே இல்லை. ஆனால். மதங்களுடன் தங்கள் சொந்த அரசியல் நலன்களை இணைப்பதுதான் மதவெறி வன்முறைக்குப் பிரதானமான மற்றும் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். மத்திய அரசும்,  மாநில அரசுகளும் நாட்டில் மத வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றால் அவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இதற்கு இப்போதுள்ள சட்டங்களே போதுமானது. இச்சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள்தான் நடுநிலையோடு நின்று காலத்தே செயல்பட வேண்டும். மத வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள் தாங்கள் புரிந்த குற்றச் செயல்களிலிருந்து தப்பித்துச் செல்ல அனுமதித்திடக் கூடாது. மத வன்முறை வெறியாட்டங்கள் நடைபெறும் சமயங்களில் இணையதளம் போன்ற புதிய தகவல் தொடர்பு சாத னங்கள் பிரச்சனைகளை சிக்கலாக்கிவிடுகின்றன. ஏனெனில் பிரிவினை சக்திகள் இந்த சமயங்களில் சமூக வலைத் தளங்களின் மூலமாகத் பிற மதத்தினருக்கு எதிராகக் குரோதத்தையும், வெறுப்பையும் பரப்புகின்றனர்.
இவ்வாறு புதிய சாதனங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவது வலுவாகக் கண்காணிக்கப்பட வேண்டும். பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்பு மேலோங்கி இருத்தல்,  இன வன்முறைகள் மற்றும் இடதுசாரி அதிதீவிரவாதம் ஆகியவற்றை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனையாக மட்டும் பார்க்கக் கூடாது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் மேலும் விரிவாகி ஆழமாகி அதிகமாகி இருப்பதும் உணவு, உறைவிடம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு மறுக்கப்படுவதும் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குவதற்கான முக்கியமான காரணிகளாகும். இவை மக்கள் மத்தியில் அந்நியமாதல் மற்றும் ஆற்றாமை உணர்வுகளை அதிகரிக்கின்றன.
இத்தகு சூழ்நிலையில்தான் பிராந்தியங்களுக்கு இடையிலான மற்றும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கு இடையிலான சமச்சீரின்மையை நீக்கிட வேண்டியது அவசியமாகும். சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ள தலித்துகள், பழங்குடியினர்,  நலிவடைந்த பிரிவினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்களைப் பாதுகாத்திட, அவர்களை சமூகத்தில் உயர்த்திட உரிய ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகும்.
நான் இப்போது வடகிழக்கு மாநிலங்களின் பிற்பட்ட நிலைமைகள் குறித்து கூற விரும்புகிறேன். இப்போதும் கூட,  வட கிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலேதான் இருக்கின்றன.
இத்தகைய பின்தங்கிய நிலைமைகளை நீக்க வேண்டுமானால்,  சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துகள், தொலைதகவல் தொடர்புகள்,  பாசன வசதிகள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை வட கிழக்கு மாநிலங்களுக்கு வழங்குவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து திட்டங்களைத் தீட்டி அமல்படுத்திட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மட்டுமே இப்பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிரிவினை சக்திகளைத் தனிமைப்படுத்த முடியும், மக்களிடம் உள்ள அந்நியமாதல் மற்றும் விரக்தி மனநிலையையும் போக்கிட முடியும்.
திரிபுரா கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய் யும் பல்வேறு அமைப்புகளைக் கொண்டிருந்த வரலாற்றைப் பெற்ற மாநிலமாகும். இவர்களைக் கட்டுப்படுத்துவதில் கணிசமான அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறோம். இதனை எவ்வாறு செய்ய முடிந்தது?  இவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுத்த அதே சமயத்தில், பழங்குடியினர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றினோம்.
இதன் காரணமாக பழங்குடியின  இளைஞர்களைத் தீவிரவாத சக்திகளுக்கு இரையாவதிலிருந்து தடுக்க முடிந்தது. ஆயினும்,  இதில் நாங்கள் திருப்தி மனப் பான்மையுடன் இருந்துவிட முடியாது. ஏனெனில் இன்னமும் அவர்கள் வங்கதேசத்தில் முகாம்கள் அமைத்துக் கொண்டு,  ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல் பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களும் அமைதியை விரும்புபவர்கள்தான். ஆயினும், சில சமயங்களில்,  சமூகத்தின் சில பிரிவினர் அடிப்படைவாத மற்றும் பிரிவினை சக்திகளின் இழிவான நோக் கங்களுக்கு எளிதாக இரையாகி விடுகிறார்கள்.
இத்தகைய அடிப்படைவாத சக்திகளிடம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சற்றும் இரக்கம் காட்டக்கூடாது. இந்த சக்திகளுக்கு எதிராக தத்து வார்த்தரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் ஆழமாகவும், திட்டமிட்ட முறையிலும் பிரச்சாரங்களை மேற்கொண்டு,  நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாத்து, மேம்படுத்திட வேண்டும். அப்போதுதான் இத்தகைய பிரிவினை சக்திகள் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு, தனிமைப் படுத்தப்படும்.
(தமிழில்: ச.வீரமணி)



No comments: