Sunday, September 8, 2013

பெரும் கார்ப்பரேட்டுகளே காரணம்!


பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
சமீபத்தில் நாடாளுமன்றத்தில், ரூபாய் மதிப்பு சரிவு சம்பந்தமாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பிரதமர் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார். இந்தியப் பொருளாதாரத்தின் இன்றைய நிலையை 1991 நெருக்கடியுடன் ஒப்பிட முடியாது என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

அப்போது ரூபாயின் மதிப்பு நிலையான விகிதத்தில் இருந்ததாகவும், ஆனால் தற் போது அது நெகிழ்வுத் தன்மையுடனும், சந்தையுடன் பிணைக்கப்பட்டிப்பதாகவும் இந்த உண்மைகளின் அடிப்படையில்தான் தான் இவ்வாறு கூறுவதாகவும் அவர் தெரி வித்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சந்தை தாமாகவே இத்தகைய ஏற்றத்தாழ்வுகளைச் சரிப்படுத்திவிடும் என்பதே அவரது கூற்றின் அர்த்தமாகும். எனவே, ரூபாய் மதிப்பு சரிவடைந்து கொண்டிருப்பது என்பதே இத்தகைய சந்தை சரிப்படுத்தலின் விளைவுதான். ஆகவே, தாராளமயப் பொருளாதாரத்தின் ஒரு காரணியாக இதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமாம்.

அதன் காரணமாகவே அனைத்து இறக்குமதிப் பொருள்களும் விலை அதிகமாக இருக்கிறது, அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்பது போன்றும், தொழில்மயம் எதிர்மறையில் இருப்பதையும், அதன் விளைவாக வேலையின்மை அதிகரித்துக் கொண்டிருப்பதையும் பற்றித் தங்களுக்குக் கவலை யில்லை என்பது போன்றும் அவரது கூற்றுகள் உள்ளன. மேலும், நாட்டின் பொருளாதார அடிப்படை வலுவாக இருப்பதால், இந்தியா இந் நெருக்கடியிலிருந்து மீண்டெழும் என்று பிரதமர் கூறியிருக்கிறார். 1991இல் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (அதாவது மொத்த இறக்குமதியின் மதிப்புக்கும் ஏற்றுமதியின் மதிப்புக்கும் இடையேயுள்ள வித்தியாசம்) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 விழுக்காடாக இருந்தது. அப்போது அதுவே ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று கருதப்பட்டது.
ஆனால் இன்று நடப்புக் கணக்குப் பற்றாக் குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 விழுக்காடாகும். 1991இல் கடன் சேவை சுமைநடப்புக் கணக்கு ரசீதுகளில் சுமார் 21 விழுக்காடு இருந்தது. இன்று அந்த இலக்கம் 35.09 விழுக்காடாகும். இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு 1991இல் ஒருசில வாரங்களுக்கே இறக்குமதியை மேற்கொள்ளக் கூடிய அளவுக்கு மிகவும் குறைந்த அளவினதாகத்தான் இருந்தது. இன்று அதைவிடச் சற்று நல்ல நிலையில் இருக்கிறது என்ற போதிலும், இதனைக் கொண்டும் ஆறு மாதங்களுக்கு மேல் இறக்குமதிக்கு நிதி அளித்திட முடியாது. 1991இல் பணவீக்கம், அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் உயர்வதற்கு இட்டுச் சென்றது. இன்று நிலைமை கிட்டத்தட்ட அதுவேதான். 1991 நிலைமை நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழ் பொருளாதார சீர்திருத்த சகாப்தத்தைக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்டது. அவ்வாறு கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள் தான் இன்றைய மோசமான நிலைமைகளுக்குக் காரணங்களாகும். நவீன தாராளமய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துகையில், நாட்டில் முதலாளித்துவ அரசின் உண்மையான குணத்தின்படி, தன்னுடைய கட்டுப்பாடு எதுவுமில்லாத சலுகைசார்முத லாளித்துவத்தை மேம்படுத்திட அது மேற்கொண்ட அனைத்துவிதமான நடவடிக்கைகளும் வெளிச்சத்திற்குவந்தன. இன்றைய தினம் நடப்பு கணக்குப் பற்றாக்குறை மிக அதிக அளவில் இருப்பதிலிருந்தே இதனைப் புரிந்துகொள்ள முடியும். தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களைத் தூக்கிப் பிடிக்கும் அதிமேதாவிகள், அரசாங்கம் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்காக அதீதமாக இலவசத் திட்டங்களை நடைமுறைப் படுத்துவதுதான், நாட்டின் நிதிப்பற்றாக் குறைக்கும், அதிக அளவிலான சமநிலையின்மைக்கும் காரணம் என்று, நாடும் நாட்டு மக்களும் நம்பவேண்டும் என்பதற்காகக் கதை அளந்து கொண்டிருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படுகையில் அவர்கள் குய்யோ முறையோ என்று கூக்குரலிட்டு தங்கள் கோபத்தை வெளிக்காட்டியதற்கு இதுதான் காரணமாகும்.

உணவுப் பாதுகாப்புச் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டால், அது நாட்டிலுள்ள நிதி சமநிலையின்மையை மேலும் மோசமாக்கிவிடும் என்று இவர்களால் கூறப்படு கிறது. நவீன தாராளமயவாதிகளைப் பொறுத்தவரை, மக்கள் பசி-பஞ்சம்-பட்டினியால் செத்தாலும் கவலையில்லை, அரசாங்கத்தின் முன்னுரிமை என்பது மூலதனத்தின் நலன்களுக்குச் சேவகம் செய்வது தொடர வேண்டும். இத்தகைய புரிதலின் காரணமாகத்தான், மன்மோகன் சிங் அரசாங்கம் உணவுப் பாது காப்புச் சட்டமுன்வடிவை நாடாளுமன்றம் நிறைவேற்றிய அடுத்தநாளே பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கணிசமாக உயர்த்தியதும், அதன்மூலம் ஏழைகளுக்கு அளிக்கப்பட்டு வரும் அற்பசொற்ப மானியங்களும் வெட்டப்படும் என்று சமிக்ஞை அளித்திருப்பதுமாகும்.

அதேசமயத்தில் பணக்காரர்களுக்கு ஊக்கத்தொகைகள்என்ற பெயரில் அளிக்கப்பட்டுவரும் மானியங்கள் தொடரும் என்பது மட்டுமல்ல, தற்போதைய தொழில் உற்பத்தி -1.6 விழுக் காடு வளர்ச்சியாக இருப்பதைச் சுட்டிக் காட்டி, அதைச் சாக்காக வைத்துக்கொண்டு, அதனை உயர்த்தவும் வாய்ப்பு இருக்கிறது.1991 நெருக்கடிக்கும் இப்போதைய நெருக்கடிக்கும் இடையே முக்கியமான வித்தியாசம் உண்டு. 1991ல் நிதி சமநிலையின்மைக்குப் பெரிய அளவில் காரணமாக இருந்தது அரசாங்கக் கணக்கு தான், உதாரணமாக, அப்போது நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் சுமார் 60 விழுக்காட்டிற்கு அரசாங்கக் கடன்தான் காரணமாகும். அப்போது நிதியமைச்சராக இருந்த டாக்டர் மன்மோகன் சிங் இதற்கு முன் மொழிந்த தீர்வு, அரசின் செலவினங்களைக் குறைப்பது என்பதும், மக்கள் மீது அதிக அளவில் சுமைகளை ஏற்றுவது என்பதுமேயாகும். அதே சமயத்தில் நம் நாட்டின் பொருளாதாரத்தை அந்நிய மூலதனத்திற்குத் திறந்து விடுவதையும் அவர் மேற்கொண்டார். ஆனால் இன்றைய நிலைமை முற்றிலும் வித்தியாசமானது. இன்றைய நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நெருக்கடிக்குப் பிரதானமாகக் காரணம் அரசாங்கத்தின் அதீத செலவு அல்ல. (தற்போது அளித்துவரும் மிகக் குறைந்த மானியங்களை மேலும் குறைப்பதற் காக இவ்வாறு கூறிக்கொண்டிருக்கிறார்கள்) மாறாக இப்போதைய நெருக்கடிக்கு இந்திய கார்ப்பரேட்டுகளே, குறிப்பாக பெரும் கார்ப்ப ரேட்டுகளேயாவார்கள். 2013 செப்டம்பர் 2 அன்று பிசினஸ் லைன்நாளேடு தன்னுடைய இணைய தளத்தில் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

அதில், நாட்டில் உள்ள மிகப் பெரிய பத்து கார்ப்பரேட் குழுக்கள்தான் கடந்த ஆறு ஆண்டுகளில் ஆறு மடங்கு அளவிற்கு, வாங்கிய மொத்த கடன்களையும் திருப்பிச் செலுத்தாமல் இருக்கின்றன என்று பதிவு செய்திருக்கின்றன. இவ்வாறு கடன் வலையில் மாட்டிக்கொண்டிருப்பவை இந்தியக் கார்ப்பரேட்டுகள்தான். தன்னுடைய குணத்திற்கேற்ப, இந்தியாவில் உள்ள முதலாளித்துவ அரசு அவர்களைக் காப்பாற்றுவதற்காக அதிக அளவில் அயல்நாடுகளிலிருந்து கடன்களை வாங்குவதற்கு அனுமதித்துக் கொண்டிருக்கிறது.ஆட்சியாளர்களின் சீர்திருத்தக் கொள்கைகள் மூலம் கார்ப்பரேட்டுகள் ஒவ்வொராண்டும் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை கொண்டுவர அனுமதிக்கப்பட்டிருந்தன. சமீபத்தில் அது 750 மில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் ஒரு பக்கத்தில் மக்களிடம், தங்கள் வயிற்றை இறுகக் கட்டிக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திக் கொண்டிருக்கிற அதே சமயத்தில், பாதுகாப்புத்துறை உற்பத்தி, இன்சூரன்ஸ், வங்கி, ஓய்வூதிய நிதியம் போன்று நாட்டின் அனைத்துத் துறைகளிலும் பெரிய அளவிற்கு அந்நிய மூலதனம் பாய்வதற்கு அனுமதி அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு நம் நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நிதி மூலதனச் சந்தையின் நிச்சயமற்ற தன்மைக்கேற்ப மிகவும் மோசமான முறையில் தாக்குதலுக்கு ஆளாகக்கூடிய விதத்தில் ஆட்சியாளர்கள் முடிவுகளை மேற்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அவை நாட்டு மக்களுக்கு மேலும் மிகப்பெரிய அளவில் சொல்லொண்ணா துன்ப துயரங்களை ஏற்படுத்திவிடும்.

ஒளிரும் இந்தியா’, ‘எல்லாம் நன்றாகவே நடக்கிறதுபோன்ற முழக்கங்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி விழுங்க வைப்பதற்கான இனிப்பு தடவப்பட்ட கசப்பு மருந்துகளேயன்றி வேறல்ல என்பது இப்போது தெளிவாகி விட்டது.ஏழைகளுக்கு அளிக்கும் மானியங்களை வெட்டிக் குறைப்பதற்குப் பதிலாக, பணக் காரர்களுக்கு அளித்திடும் மானியங்களை விட்டொழியுங்கள். அவர்களுக்கு அளித்து வந்த வளங்கள் அனைத்தையும் நாட்டிற்கு மிகவும் தேவையான சமூக பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்கக்கூடிய வகையில் பொது முதலீடுகளில் கணிசமான அளவிற்கு செலுத்துங்கள். இது, புதிய வேலை வாய்ப்புகளை மிகப் பெரிய அளவில் உருவாக்கிடும். அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, உள் நாட்டுத் தேவையையும் மிகப் பெரிய அளவில் பெருக்கிடும். இது நம் நாட்டின் பொறியியல் மற்றும் எந்திரவியல் போன்ற உற்பத்தித் துறை மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கும் உந்துசக்தியாகவும் அமைந்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)



No comments: