Monday, September 23, 2013

மதவெறித் தீயை விசிறிவிடாதே!




உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றுள்ள மதவெறிக் கலவரங்கள் எண்ணற்ற அப்பாவி உயிர்களைப் பலி கொண்டிருக்கின்றன. எண்ணற்றோரை எதுவும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளி இருக்கின்றன.

ஆயிரக் கணக்கானோரை அகதிகள் முகாமில் தங்க வைத்திருக்கின்றன. இவை அனைத்தும் வரவிருக்கும் 2014 பொதுத் தேர்தல்களுக்குப் பின் பிரதமராக, தற்போதைய குஜராத் முதல்வர் மோடி முடிசூடுவார் என்று பாஜகவினரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்றிருக்கிறது. ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்திற்கு, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான தங்களுடைய உத்தி மதவெறித் தீயை விசிறிவிடுவதுதான் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருந்தால், விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கால் ஆணவத்துடன் கூறிய பேச்சைக் கேட்டிருந்தார்களானால் அந்த சந்தேகம் நிச்சயம் நீங்கி விடும். ‘2002-இல் குஜராத்தில் சிறுபான்மையினருக்குப் பாடம் கற்பிக்கப்பட்டதுபோல, மீண்டும் ஒருமுறை மேற்கு உ.பி.யில் பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது’’ என்று அசோக் சிங்கால் பேசியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
முசாபர் நகரில் நடைபெற்ற ஜாட் இனத்தினரின் கட்டைப் பஞ்சாயத்துக்களில் இந்துப் பெண்களை மயக்கி இழுக்கும் முஸ்லிம் இளைஞர்களிடமிருந்து, ‘‘நம் மகள்களையும் மருமகள்களையும் காப்பாற்றிட’’ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடப்பட்டிருக்கின்றன. இப்போதெல்லாம் ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்திற்கு ஜென்டில்மேன்வாஜ்பாய் போன்ற முகமூடிகள் எல்லாம் தேவைப்பட வில்லை. ஏனெனில் பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பீகார் முதல்வரும் அவரது கட்சியான ஐக்கிய ஜனதாதளம் போன்ற முக்கியமான கட்சிகள் எல்லாம் ஏற்கனவே வெளியேறிவிட்டன. இதன் மூலம் பாஜகவின் தலைமையிலான கூட்டணியில் நிலவிய முரண்பாடு மீண்டும் ஒரு முறை முன்னுக்கு வந்திருக்கிறது. அதாவது பாஜகவின் தலைமையிலான கூட்டணி வலுவாக இருக்க வேண்டுமானால் அது தன்னுடைய சொந்த மதவெறி நிகழ்ச்சிநிரலை ஓரங்கட்டி வைத்திட வேண்டும். ஆனால் ஆர்எஸ்எஸ் கட்டளையிடும் அரக்கத்தனமான மதவெறி நிகழ்ச்சிநிரலைக் கடைப்பிடிக்கவில்லை எனில் பாஜக தன் அரசியல் தளத்தைத் தக்க வைத்துக்கொண்டு விரிவுபடுத்திட முடியாது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆர்எஸ்எஸ் முன்னிலைப் படுத்திய வெறித்தனமான சகிப்புத்தன்மையற்ற பாசிசத் தன்மைவாய்ந்த இந்து ராஷ்ட்ரம்முறியடிக்கப்பட்டது என்பதை மீண்டும் நினைவுகூர வேண்டியது இப்போதைய தேவையாகும். சுதந்திர இந்தியா ஓரு நவீன மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசாக நிறுவப்பட்டது. ஆயினும், ஆர்எஸ்எஸ் இயக்கமானது நவீன இந்தியக் குடியரசை தாங்கள் விரும்பும் இந்து ராஷ்ட்ரமாகமாற்றுவதற்கான முயற்சிகளைக் கைவிடவில்லை. அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் குறிக்கோள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஒப்புயர்வற்ற குருவான கோல்வால்கரால் வரையறுக்கப்பட்டிருப்பதுபோல ‘‘அந்நிய இனங்கள் (இந்துக்கள் அல்லாதவர்கள் என்று படிக்க) இந்துக் கலாச்சாரத்தையும் மொழியையும் தழுவ வேண்டும். இந்து மதத்தைத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு அதனை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இந்து இனத்தையும் கலாச்சாரத்தையும் போற்றிப்புகழ்வதைத் தவிர - அதாவது இந்து தேசம் என்பதைத் தவிர - வேறு சிந்தனையை அனுமதித்திடக் கூடாது. தங்களுடைய தனித்துவத்தைக் கை விட்டு இந்து இனத்தில் சங்கமித்திட வேண்டும். இல்லையேல் நாட்டில் இரண்டாம் பிரஜையாக இந்துக்களுக்கு அடிபணிந்து தங்கிக் கொள்ளலாம். எந்த உரிமையும் சலுகையும் கோரக் கூடாது.

ஏன் குடியுரிமையைக் கூட கோரக்கூடாது’’ என்பதாகும். பாஜக-வின் சார்பில் வருங்காலப் பிரதமர் என்று முடிசூட்டப்பட்ட மோடி இதுதொடர்பாக நடைபெற்ற பேரணி/பொதுக்கூட்டத்தில், ‘வீர்யம்மிகுந்த குஜராத்தைப் போல வீர்யம் மிகுந்த இந்தியாவை உருவாக்குவதே என் லட்சியம் என்று பிரகடனம் செய்திருக்கிறார். இதன் பொருள் என்ன? 2002இல் குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைப்போல, இந்தியா பூராவும் செய்ய வேண்டும் என்பதேயாகும். இதுவே அவர்கள் சொல்லும் வீர்யத்தின்உண்மைப் பொருளாகும். குஜராத் மோடியின் தலைமையில் மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. உண்மையில் மனித வள வளர்ச்சி அட்டவணையில், குறிப்பாக பெண் குழந்தைகளைப் பொறுத்தவரையில், குஜராத் தேசிய சராசரியைவிட கீழே இருப்பதை இவர்கள் மறைத்தே இவ்வாறு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். குஜராத் மாடல் இந்தியா பூராவும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று நாடு கேட்டுக் கொண்டிருக்கிறதாம். . உலகப் பொருளாதார நெருக்கடி மிகவும் உக்கிரமாய் இருக்கக்கூடிய இன்றைய கால கட்டத்திலும் கார்ப்பரேட் உலகம் தங்கள் கொள்ளை லாப வேட்டையைத் தொடரவே விரும்புகிறது. இதற்கு அவர்களுக்குத் தங்கள் நலன்களுக்கு சேவகம் செய்வதற்கு, தங்கள் கொள்ளை லாபம் தொடர வசதி செய்து கொடுப்பதற்கு, ‘தீர்மானகரமானநடவடிக்கைகளை மேற்கொண்டிடக்கூடிய விதத்தில் ஒரு வலுவானதலைவர் தேவைப்படுகிறார். ஒப்புயர்வற்ற வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் தன்னுடைய தீவிரவாதத்தின் காலம் என்னும் நூலில் குறிப்பிட்டிருப்பதைப்போல, ‘‘பெரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, தங்கள் சொத்தைப் பறிமுதல் செய்யாத எந்தவிதமான ஆட்சியாளர்களுடனும் சமாதானமாகப் போய்விடும். ஆயினும் மற்ற ஆட்சிகளைவிட பாசிசம் தங்களுக்குக் கூடுதலான அனுகூலங்களை அளித்திடும் என்றே பெரும் நிறுவனங்கள் கருதிடும்.’’  இவ்வாறு கூறுகையில் அவர் பல்வேறு அனுகூலங்களைப் பட்டியலிட்டிருக்கிறார்.

அவற்றில் முக்கியமானவை: தொழிற்சங்கங்களை இல்லாமல் ஒழித்துக் கட்டுவது, இடதுசாரி இயக்கங்களை பலவீனமடையச் செய்து அல்லது தோற்கடித்து, பாசிசத்தின் கீழ் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துவது. நம் நாட்டில் பொருளாதார மந்தம் சரியாவதற்கான அடையாளங்கள் எதுவும் கண்ணுக்குத் தெரியாத நிலையில், உலக அளவிலும் பொருளாதாரம் தடுமாற்றத்துடன் தத்தளித்துக்கொண்டிருப்பது தொடரும் நிலையில், இந்திய கார்ப்பரேட்டுகளுக்கு, தங்கள் கொள்ளை லாப வேட்கையைத் தொடர்வதற்கு ஹிட்லரைப் போன்று ஒரு பாசிஸ்ட் மீட்பாளர்தேவைப்படுகிறார். எப்படி உலக அளவில் இயங்கும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் குறிப்பாக அமெரிக்க கார்ப்பரேட் ஜாம்பவான்கள், பாசிசம் வளர்வதற்கு முக்கியமான பங்கினை வகித்தன என்பதற்கு வரலாற்றில் ஏராளமான சாட்சியங்கள் உண்டு. இன்றைய தினம் நம் நாட்டில் உள்ள நிலைமை என்பது ஜெர்மனியில் பாசிசம் உருவானபோது இருந்த நிலைமை போன்றதல்ல என்பதை அனைவரும் குறித்துக் கொள்ள வேண்டும். ஆயினும், நம் நாட்டில் உள்ள பிற் போக்குப் பிரிவினர் அரசு அதிகாரத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பாசிச நடைமுறைகளைப் பயன்படுத்த முயற்சிக்கின்றனர் என்பதையும் நாம் காணத் தவறக் கூடாது.

ஜார்ஜி டிமிட்ரோவ் தன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஐக்கிய முன்னணி என்னும் நூலில் ஜெர்மனியில் பாசிசம் உருவானதையும் அதன் இயற்கை குணத்தையும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்திருக்கிறார். அவர் கூறுகிறார்: ‘‘பாசிசம், தீவிரமான ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்காகச் செயல்படுகிறது. ஆயினும் அது நாட்டில் இழிவாக நடத்தப்படும் மக்களின் துயர்துடைக்க வந்த வீராதிவீரன் என்று மக்கள் மத்தியில் அது தன்னைக் காட்டிக் கொள்கிறது.’’ அவர் மேலும் கூறு கிறார் : ‘‘பாசிசம் மக்களை மிகவும் ஊழல் மிகுந்த, மிகவும் விஷக்கிருமி பேர் வழிகளின் தயவில் தள்ளிவிடுகிறது. ஆயினும் மக்களிடம் அது நேர்மையான மற்றும் ஊழலற்ற அரசாங்கம் அமைப்போம்என்ற வாக்குறுதியையும் அளிக்கிறது. மக்கள் மத்தியில் நிலவும் விரக்தியின் தன்மைகளுக்கேற்ப, மக்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் விதத்தில் பாசிசம் தன் கொள்கைகளையும் உருவாக்கிக் கொள்கிறது.’’ ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தற்போதைய பிரச்சாரம், டிமிட்ரோவின் கூற்றுடன் நன்கு பொருந்துகிறது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை மேலும் தீவிரமாகக் கொண்டுசெல்வோம் என்று வெளிப்படை யாகவே அது கூறுவதன் காரணமாக, சர்வ தேச நிதி மூலதனத்தின் ஒப்புதலை அது முழு மையாகப் பெற்றுவிட்டது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு (பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது பாஜக இதனை நியாயப்படுத்தியது) போன்ற சில சீர்திருத்தங்களுக்கு எதிர்ப் பினைத் தெரிவித்தபோதிலும், அந்நிய நேரடி முதலீட்டுக்கு பல்வேறு துறைகளில் வாய்ப்பு வாசல்களைத் திறந்துவிடுவதை இது ஏற்கனவே நியாயப்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு இது சர்வதேச நிதி மூலதனத்தின் நலன்களுக்கே சேவகம் செய்கிற அதேசமயத்தில், இந்துத்துவாவின் அடிப்படை நிகழ்ச்சி நிரலான, ‘‘அழுகிக் கிடக்கிற தேசிய (இந்து என்று படிக்க) உணர்வுகளைச் சரிசெய்கிறோம்’’ என்ற பெயரில் மதவெறித் தீயை விசிறிவிடும் வேலையையும் தொடர்ந்து செய்துகொண்டி ருக்கிறது. இவ்வாறு ஆர்எஸ்எஸ் / பாஜகவின் நடவடிக்கைகள் அனைத்தும், பாசிச நடை முறையுடன் எந்த அளவுக்கு ஒத்துப்போகிறது என்று பாருங்கள். வரலாற்றில் தற்செயலாகவே பல நிகழ்வுகள் ஒத்துப்போவதன் மூலமாக வரலாறு தன் சொந்த வழிகளின் மூலமாக செய்திகளை பறைசாற்றுகிறது. 1933 பிப்ரவரி 27 அன்று ஜெர்மனியின் நாடாளுமன்றமான ரெய்ச்ஸ்டாக்கிற்கு தீ வைக்கப்பட்டது. 2002 பிப்ரவரி 27 அன்று சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டி கோத்ராவில் தீயில் வெடித்துச் சிதறியது. முன்னதாகக் கூறப்பட்ட நிகழ்வை ஹிட்லர் தன்னுடைய கேடுகெட்ட கம்யூனிச எதிர்ப்பு ஒடுக்குமுறைக்குப் பயன்படுத்திக் கொண்டான், ஜனநாயக உரிமைகளை ரத்து செய்தான். நடைமுறையிலிருந்த ஜெர்மனியின் (வெய்மர்) அரசியலமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்தான்.

நாஜி பாசிசத்தினைக் கெட்டிப்படுத்தினான். ஜெர்மன் நாடாளுமன்றத்திற்குத் தீ வைக்கப்பட்ட செயலானது பாசிஸ்ட் படையினரின் வேலைதான் என்பது பின்னர் தெரிய வந்தது. 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்தி படுகொலை செய் யப்பட்டார். ஆனால் அதே தேதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு, 1933இல் அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டான். இப்போது பாஜகவின் சார்பில் பிரதமருக்கான நபராக தூக்கி நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி சமீபத்தில் தேசம் தழுவிய பிரச்சாரம் ஒன்றினை அறிவித்திருக்கிறார். அதன்படி ‘‘இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் பட்டேலின் நினைவிற்குப் புத்துயிரூட்டக் கூடிய விதத்தில், அவருக்குச் சிலை வைக்க இருக்கிறோம்’’ என்றும், ‘‘அந்த சிலை நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவியின் சிலையின் உயரத்தைவிட இரு மடங்கு உயரமாக இருக்கும்’’ என்றும் இந்த சிலை ஒற்றுமை சிலைஎன அழைக்கப்படும் என்றும் இதனைக் கட்டுவதற்கு விவசாயிகளிடமிருந்து இந்தத் தேசம் தழுவிய பிரச்சாரத்தின்போது இரும்பு சேகரிக்கப் படும் என்றும் மோடி அறிவித்திருக்கிறார். மேலும், இந்தச் சிலை ‘‘இந்தியாவின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அதன் வளமான கலாச்சாரப் பாரம்பரியப் பெருமை களுடன் சித்தரிக்கக்கூடிய விதத்தில்’’ அமைந்திடும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இவர்கள் இப்போது கடைப்பிடிக்க முன்வந்திருக்கும் உத்தியானது, அயோத்தியில் தாவாவில் இருந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்காக செங்கற்கள் சேகரிக்கிறோம் என்று சொல்லி மதவெறித் தீயைப் பரவச் செய்து, வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டு, அவற் றின் காரணமாக சிறுபான்மை முஸ்லிம் மக்கள் பலர் பலியானதும், அதனைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான முதல் அரசாங்கம் அமையவும் காரணாக இருந்த அதே உத்தியை ஒத்திருக்கிறது அல்லவா? இந்தசமயத்தில் நாம் இன்னொன்றையும் நினைவுகூர்தல் நல்லது. இதே வல்லபாய் பட்டேல்தான் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார். 1948 பிப்ரவரி 4 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்து அறிவிக்கப்பட்ட அரசு செய்திக் குறிப்பில், ‘‘சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக் குரிய மற்றும் ஊறுவிளைவிக்கக்கூடிய நடவடிக்கைகள் முழுவீச்சுடன் தொடர்கின்றன, சங் பரிவாரத்தின் வன்முறைக் கலாச்சாரம் பல உயிர்களைப் பலிகொண்டுவிட்டது. இதற்குப் பலியான மிகவும் சமீபத்திய, மிகவும் விலை மதிக்கமுடியாத உயிர் காந்திஜியினுடையதாகும்.’’ என்று கூறப் பட்டுள்ளது. அத்தகைய சர்தார் பட்டேலையே இப்போது இவர்கள் தவறாகப் பயன்படுத்த முன் வந்திருப்பது என்பது ‘‘இந்து தேசம்’’ என்கிற இவர்களது குறிக்கோளுக்குத் தகுந்த மாதிரி இந்திய வரலாற்றையே மாற்றி எழுதவேண்டும் என்பதன் ஒரு பகுதியேயாகும்.

நவீன இந்திய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசினை தங்களுடைய குறிக்கோளான ‘‘இந்து ராஷ்ட்ரமாக’’ மாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் -இன் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒற்றுமைச் சிலையை சுதந்திர தேவியின் சிலையுடன் ஒப்பிடும்போதே சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவால் வியட் நாம் மீது போர் தொடுக்கப்பட்டிருந்த சமயத்தில், மிகவும் புகழ்பெற்றிருந்த ஒரு கிண்டலான தமாஷை நினைவுக்குக் கொண்டு வருகிறது. அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவியின் சிலையானது, பிரான்ஸ் அரசாங்கத்தால், தங்களுடைய நாட்டில் நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்என்னும் உயர்நோக்கங்களின் அடையாளமாக நன்கொடையாய் வழங்கப்பட்டது. பிரெஞ்சு நாட்டிலிருந்து சென்றிருந்த சுற்றுலாப் பயணிகளில் ஒருவர் இந்த சிலையைப் பார்த்தபோது
‘‘பிரான்சைப்போல, அமெரிக்காவும், இவ்வாறு சிலைகளை அமைப்பதன் மூலம் நாட்டிற்காக இறந்தவர்களை மதிப்பதாக எனக்குத் தெரியவில்லை.’’ என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மதவெறித் தீயை விசிறிவிடத் தொடங்கியிருப்பது, ‘ஒற்றுமை சிலையைச் சுற்றி, தங்களுடைய பாசிஸ்ட் கொள்கைகளைப் பின்னிப்பிணைத் திருப்பது, ‘இந்து ராஷ்ட்ரம்என்னும் தங்கள் குறிக்கோளை வெற்றி பெறச் செய்வதற்காக முழுமூச்சுடன் இறங்கியிருப்பது ஆகிய அனைத்தும் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள உயர்நோக்கங்களுக்கு சாவுமணி அடிப்பதற்கான சமிக்ஞைகளேயாகும்.
இவ்வாறு இவர்களது நடவடிக்கைகள் காரணமாக, நாட்டில் இதுகாறும் நிலவி வந்த வளமான சமூக-கலாச்சார-மத வேற்றுமைப் பண்புகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடுமே ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்காகப் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்கிற நாம் இதனை ஒருபோதும் அனு மதிக்க முடியாது.

(தமிழில்: ச.வீரமணி)


No comments: