Wednesday, October 2, 2013

மதச்சார்பின்மையைப் பாதுகாத்திடுக!



தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் 16ஆவது கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர் நகரில் மிகவும் கொடூரமான முறையில் முஸ்லிம் மக்கள் மீது வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்று, அங்கே பதற்றநிலைமை இன்னமும் தொடரக்கூடிய பின்னணியில் இக்கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பாக இக்கூட்டத்தில், ‘‘மதநல்லிணக்கத்தைக் குலைக்கக் கூடிய விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன்முறை, அது எந்த வடிவத்தில் இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டோர் மீது சட்டம் உறுதியான முறையிலும் காலதாமதம் எதுவுமின்றி உடனடியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அனைத்து சமூகத்தினரிடையேயும் நல்லிணக்க உறவுகளைப் பேணவும், நிலை நிறுத்திக்கொள்ளவும், வலுப்படுத்திடவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும்,  நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் சமமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும்’’  தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இக்கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட குறிப்பு தனியே தரப்பட்டிருக்கிறது. முசாபர்நகரில் முஸ்லிம் மக்கள் மீது வன் முறை வெறியாட்டங்கள் நடைபெற்றுள்ள பின்னணியில், சடங்கு போன்று நிறைவேற்றப்பட்டுள்ள இத்தகைய தீர்மானங்கள் மூலம் எந்தப் பொருளும் இல்லை என்று கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும், குறிப்பாக மதச்சார் பற்றக் கட்சிப் பிரதிநிதிகள், தங்கள் ஆதங்கத் தை வெளிப்படுத்தினார்கள். கூட்டத்தில் பேசிய அனைவருமே அரசாங்கத்தால் உறுதிமொழி அளிக்கப்பட்டபடி தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் ஒவ்வோராண்டும் நடைபெறுவதில்லை (இதற்கு முன்னர் நடைபெற்றக் கூட்டம் இரு ஆண்டுகளுக்கு முன்பு 2011இல்தான் நடைபெற்றது) என்றும், அவற்றுக்குப் பதிலாக, கலவரங்கள் நடை பெற்ற பின்னர்தான் இவ்வாறு கூட்டங்கள் கூட்டப்படுகின்றன என்றும் குறை கூறி னார்கள். குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையாகக் கூட்டங்கள் நடத்தப்படாவிட்டால்,  நிலைமையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர முடியாது. இப்போது நடைபெறுவதுபோன்று கலவரங்கள் நடைபெற்ற பின்னர் கூட்டங்களை நடத்துவது என்பது சடலக் கூராய்வு செய்வது போன்றதுதான். அரசாங்கத்தின் தரப்பில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து எதுவும் கூறாமல், இப்போதும் வழக்கமாக அளிக்கப்படுவதுபோன்றே உறுதிமொழிகள் அள்ளிவீசப்பட்டிருக் கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்த சமயத்தில் ஒருதடவை கூட தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தைக் கூட்டவில்லை என்பதை இங்கே நினைவு கூர்வது அவசியமாகும். வாஜ்பாயின் ஆறாண்டு காலஆட்சியின்போது தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் எப்போதாவது நடத்தப்பட்டதா என்பதையே நினைவுகூர முடியாத அளவிற்கு நினைவாற்றல் மங்கி இருக்கிறது. 2002இல் குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனப்படுகொலைகள் நடைபெற்ற பின்னரும் கூட தேசிய ஒருமைப் பாட்டுக் கவுன்சில் கூட்டம் நடைபெறவே இல்லை.தேசிய ஒருமைப்பாட்டின்மீது இத்தகையதோர் அணுகுமுறையைப் பிரதிபலிப்பதன் காரணமாகத்தான் இப்போதும்கூட நாட்டின் எதிர்காலப் பிரதமராகச் சித்தரிக்கப்படும் குஜராத் முதல்வர் மிகவும் வேலைபளுவால் திணறிக்கொண்டிருப்பதைப்போலக் காட்டிக்கொண்டு இப்போது நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. பாஜக-வின் தலைவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.
பாஜக தலைமையிலான மாநில அரசாங்க முதலமைச்சர்களில் மத்தியப் பிரதேச முதல்வர் மட்டும் விதிவிலக்காக இருந்து இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். மேற்குவங்கம், தமிழ்நாடு, ஒடிசா போன்ற மாநிலத்தின் முதல்வர்கள் தங்கள் சார்பாக தங்கள் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களில் ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பி வைத்திருந்தார்கள்.நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கும் பாஜக-வின் தலைவர், விவாதத்தில் பங்கேற்று இக்கூட்டத்தில் பேசும்போது மதவெறி சக்திகள் எப்போதும் எழுப்பும் பழைய பல்லவியையே மீண்டும் எழுப்பினார். மதச்சார்பின்மை (secularism) என்பதற்கு இந்தி மொழியில் அரசுத் தரப்பில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தர்ம நிர்பெக்சதா (dharma nirpeksatha) என்னும் சொற்றொடரை, பந்த் நிர்பெக்சதா (bundh nirpeksatha) என்று மாற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். முன்னதன் பொருள், மதங்களுக்கு இடையே எவ்விதப் பாகுபாடும் இருக் கக்கூடாது என்பதாகும் அல்லது அரசு எந்த மதத்தையும் தழுவிடாது இருக்கும் அதே சமயத்தில், அனைத்து மதங்களையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பதாகும். ஏனெனில் அரசு நாட்டின் பிரஜைகளாக இருக்கும் பல்வேறு சமூகத்தினரிடையே எவ்விதப் பாகுபாடும் காட்டக்கூடாது. இவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பதற்கு அவர்கள் வெளிப்படையாக காரணம் எதுவும் கூறாவிட்டாலும், அதன்பின்னே ஒளிந்திருக்கும் பொருள் என்னவெனில், நாட்டில் இந்துமதம் ஒன்று தான் மதம் என்ற அடிப்படையில் தகுதி பெற்றிருக்கிறது என்பதும், மற்ற மதங்கள் அனைத்தும் அதற்குக் கீழ்ப்பட்டதாகவே கருதப்பட வேண்டும் என்பதுமேயாகும். ‘‘இந்து ராஷ்ட்ரம்’’  என்றால் என்ன? என்று கோல்வால்கர் கூறியவற்றை இவர்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றபோதிலும், அவர் இது தொடர்பாக கூறிய பாசிசத்தனமான வாதங்களையே இவர்கள் வேறு வார்த்தைகளில் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மதம் மற்ற மதங்களையெல்லாம் விட உயர்ந்தது என்று உரிமை கொண்டாடுவதன் மூலம் சமூகத்தில் மதரீதியாக உயர்வு தாழ்வுஏற்படுத்துவதற்கான அடித்தளங்களைப் போட முயற்சித்துக்கெண்டிருக்கிறார்கள். தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜன நாயக இந்தியக் குடியரசைத் தங்களின் லட்சியமான வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிசத்தன்மை கொண்ட இந்து ராஷ்ட்ரமாகமாற்ற வேண்டும் என்பதற்காகவே ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் மதவெறிப் பிரச் சாரங்களைக் கூர்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இதே தொனியில்தான், மத்தியப்பிரதேச முதலமைச்சரும் சிறுபான்மையினரைத் ‘‘திருப்திப்படுத்தும்’’ வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பதாகப் பேசினார். கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பெரும் பாலானவர்கள், முஸ்லிம் சிறுபான்மையினர் நிலை தொடர்பாக நீதியரசர் சச்சார் குழு அளித்துள்ள பரிந்துரைகளையும்,  சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு சம்பந்தமாக ரங்கனாத் மிஷ்ரா ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளையும் போதிய அளவிற்கு அவசர உணர்வுடன் அமல்படுத்த வேண்டும் என்று பேசிய அதே சமயத்தில், பாஜகவினரோ இவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சிறுபான்மையினரைத் ‘‘திருப்திப்படுத்தும்’’ செயல் என்று கிண்ட லடித்தார்கள்.மதச்சிறுபான்மையினர் சார்பாக பேசிய பிரதிநிதிகள், 2014 பொதுத்தேர்தல் நெருங்கு வதையொட்டி நாடு முழுதும் சிறுபான்மையினருக்கு எதிராகப் பதற்ற நிலைமைகள் அதிகரிக்கப்பட்டுவருவது குறித்து மிகவும் கவலையுடன் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். உண்மையில் குறிப்பிடத்தக்க சட்ட நிபுணரான ஃபலி நரிமண் (Fali Nariman), “இந்தியா ஒரு மதச்சார்புள்ள நாடாக மாறு வதற்கான பாதையில் சென்றுகொண்டிருக்கிறதா?’’ என்ற கேள்வியை ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தின் முன் வைத்தார். உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து வந்திருந்த புகழ்பெற்ற தலைவர்களும், அம் மாநில முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களில் மதவெறியைக் கிளப்பி விடுவதற்கான வேலைகளை மதவெறிக் கூட்டத்தினர் ஏற்கனவே தொடங்கிவிட்டனர் என்று பேசி னார்கள். அரசாங்கமும், அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் சமூக சக்திகளும் ஒருசேர அணிதிரண்டு நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயகப் பன்முகத்தன்மை கொண்ட சமூகக் கட்டமைப்பினைப் பாதுகாக்கவில்லையென்றால்,  நவீன இந்தியாவின் எதிர்காலமே இட ரக்குள்ளாகிவிடும் என்று எச்சரித்தார்கள்.
கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் எவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாதது முனைப்பாகத் தெரிந்தது. இவ்வாறு இவர்கள் செய்ததன் மூலம்,  நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நாட்டிலுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகப் பன்முகத்தன்மை கொண்ட சமூகக் கட்டமைப்பு துண்டு துண்டாக சிதறுண்டு போனாலும் தங்களுக்குக் கவலையில்லை, தங்கள் சிந்தனை மற்றும் செயல்கள் எல்லாம் கொள்ளை லாபம் ஈட்டுவது ஒன்று தான் என்று மீளவும் அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். இப்பகுதியில் சென்றவாரம் நாம் குறிப்பிட்டதைப்போல, அவர்களின் புதிய கண்டுபிடிப்பான, அவர்களது மீட்பர்’ (‘messiah’) இக்கூட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதே உசிதம் என்று கருத வைத்திருப்பார் போலிருக்கிறது.
ஜெர்மனியில் பாசிசம் தலைதூக்கிய சமயத்தில் ஹிட்லருக்கு அங்கிருந்த முதலாளிகள் முழுமையாக ஆதரவு அளித்ததை இது நினைவுபடுத்துகிறது, இல்லையா? குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியிருப்பதன் மூலம், ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரம் வரவிருக்கும் 2014 பொதுத்தேர்தலின்போது மதவெறித் தீயை விசிறிவிடவும் அதன்மூலமாக அரசியல் ஆதாயம் அடைந்திடவும், அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. இவ்வாறு நாட்டின் சமூகக் கட்டுக்கோப்பையும், மதச்சார்பற்ற ஜனநாயக அரசியல் ஒழுங்கையும் சீர்குலைத்து, மக்களின் மத உணர்வுகளைத் தங்கள் குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக, மிகவும் வெறுக்கத்தக்க முறையில் துஷ்பிரயோகம் செய்திட அனுமதித்திட முடியாது. இந்தியாவின் வளமான பன்முகத் தன்மைகொண்ட சமூகக் கட்டமைப்பினையும், ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் நன்கு பேணிப் பாதுகாத்திட, அதன் அடிப்படையில், நம் மக்களுக்காகச் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்குவதற்கான போராட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி)




No comments: