Tuesday, April 2, 2013

‘சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’:என்நெஞ்சைத் தொட்டுவிட்ட மிகச் சிறந்த புத்தகம்:பிரகாஷ் காரத் பெருமிதம்






புதுதில்லி, ஏப். 2-
தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு (The Making of the Madras Working Class) என்னும் புத்தகம் லெப்ட்வேர்ட் பதிப்பகத்தால் பிரசுரிக்கப்பட்டு அவர்களது அலுவலகமான ‘‘மே 1’’ அரங்கத்தில் மார்ச் 21 அன்று வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் நூலினை வெளியிட்டுப் பேசியதாவது:
‘‘தோழர் திலீப் என்கிற வீரராகவன் எழுதிய ‘‘சென்னைப் பெருநகர  தொழிற்சங்க வரலாறு’’என்னும் புத்தகத்தை வெளியிடுமாறு நான் பணிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் புத்தகம் லெஃட்வேர்ட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. பொதுவாக புத்தக வெளியீட்டாளர்களே புத்தகத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொள்வதில்லை. எனினும் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் என் நெஞ்சை மிகவும் தொட்டுவிட்டதால் நான் இதனை வெளியிட ஒப்புக்கொண்டேன்.
நான் பார்த்த, படித்த புத்தகங்களிலேயே இந்தப் புத்தகம்தான் சென்னை மாநகரத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தைக் குறித்துப் பேசிடும் முதல் புத்தகமாகும். இப்புத்தகத்தில் 1918க்கும்  இரண்டாம் உலகப்போர் துவங்கும் காலம் 1939க்கும் இடையிலான காலகட்டத்தைக் குறித்து எழுதப்பட்டுள்ளது.
தோழர் திலீப் வீரராகவன் சென்னை மாநகரத்தில் தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்பகால கட்டங்கள் குறித்தும், சென்னை மாநகரத்தில் தொழிற்சாலைகளும்  தொழிலாளர்களும் உருவான பின்னணி குறித்தும்  இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார்.
1918இல் மதராஸ் லேபர் யூனியன் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலேயே முதலாவதாகப் பதிவு செய்யப்படட தொழிற்சங்கமாக மதராஸ் லேபர் யூனியன்தான்  கருதப்படுகிறது.  மதராஸ் லேபர் யூனியன் மிகவும் நெருக்கமாக பின்னிஎன்று அழைக்கப்படும் பக்கிங்காம் மற்றும் கர்நாடிக் ஆலையுடன் தொடர்பு கொண்டிருந்திருக்கிறது. சென்னை மாநகரில் இருந்த மிகப்பெரிய டெக்ஸ்டைல் ஆலை இது. இவ்வாலை 1980களில் முற்பகுதியில் மூடப்பட்டது.  1918இலிருந்து பின்னிஆலைதான் சென்னை மாநகரில் தொழிற்சங்க இயக்கத்தின் மையமாக இருந்திருக்கிறது.  பம்பாய் மற்றும் கல்கத்தா மாநகரங்களோடு ஒப்பிடும்போது அங்கேஇருந்த அளவிற்குத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக சென்னையைச் சொல்ல முடியாது. பிரிட்டிஷார், சென்னையை தங்களுடைய அரசியல், நிர்வாகம் மற்றும் வர்த்தக மையமாகத்தான் நீடிக்கவேண்டும் என்று விரும்பியதால், இங்கே தொழிற்சாலைகள் திறக்கப்படுவதை அவர்கள் ஊக்குவிக்கவில்லை. டெக்ஸ்டைல்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், சில இன்ஜினியரிங் தொழில்பிரிவுகள், டிராம், பஸ் போக்குவரத்து ஆகியவைதான் இங்கே இருந்திருக்கின்றன. இவை குறித்து இப்புத்தகத்தில் நன்கு சித்தரிக்கப்பட்டிருப்பதோடு, அங்கே தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்ததையும் வீரராகவன் மிகவும் நன்றாகக் குறிப்பிட்டிருக்கிறார். 
மதராஸ் லேபர் யூனியன் எவரும் எதிர்பார்க்க முடியாத பின்புலத்திலிருந்த வந்துள்ள மக்களால் தொடங்கப்பட்டது. இந்த சங்கத்தைத் துவங்கிய தலைவர்களில் மிகவும் முக்கியமாகக் கருதப்படுபவர் ஒரு மத நிறுவனத்தை நடத்தி வந்தவராவார். அவரது பெயர் ஜி. செல்வபதி செட்டியார். அவர் தன்னுடைய மதநிறுவன வளாகத்திலேயே ஓர் அரிசிக் கடையும் வைத்திருந்தார்.  தொழிலாளர்கள் அவரது கடைக்குச் சென்று அரிசியும், அதற்கு அடுத்த கடையில் எண்ணெய்யும், அதற்கு அடுத்ததாக இருந்த கடையில் துணிமணிகளும் வாங்கிச் செல்வது வழக்கம். இக்கடைகளின் உரிமையாளர்கள் என்ற முறையில் இங்கே கடை வைத்திருந்த இவர்களுக்குத் தொழிலாளர்களின் வாழ்வு குறித்தும், அவர்களின் பிரச்சனைகள் குறித்தும் தெரியும். இவர்கள்தான் மதராஸ் லேபர் யூனியன் தொடங்குவதற்கும் கருவிகளாக இருந்திருக்கின்றனர். உண்மையில் தோழர் வீரராகவன் மேற்படி செல்வதி செட்டியாரை சந்தித்து பேட்டி எடுத்திருக்கிறார். மேற்படி செல்வதி செட்டியார் 1985 வரை வாழ்ந்திருக்கிறார்.
மதராஸ் லேபர் யூனியன் உதயமானதை அடுத்து அது சென்னையைச் சுற்றியுள்ளள தொழிற்சாலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் மத்தியிலும் சங்கங்கள் தொடங்குவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது.
தோழர் வீரராகவன் இந்தப் புத்தகத்தில் பின்னியில் ஆரம்ப காலங்களில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் குறித்து நன்கு விளக்கியிருக்கிறார். மேலும் இப்புத்தகத்தில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக நீடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க ரயில்வே தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்தும் விவரித்திருக்கிறார்.
சென்னையில் அப்போது ரயில்வே கம்பெனி ஒன்று உருவாகி இருக்கிறது. மதராஸ் மற்றும் தெற்கு மராத்தா என்று பெயரிடப்பட்டிருந்த அந்த ரயில்வே கம்பெனியில் இரண்டரை மாதங்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் நடைபெற்றிருக்கிறது.  அந்த சமயத்தில் ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய் வீரஞ்செறிந்த வேலைநிறுத்தம் குறித்து வீரராகவன் மிகவும் அருமையான சித்திரத்தை வழங்கியிருக்கிறார்.
தொழிற்சங்க இயக்கத்தை செல்வபதி மற்றும் சுயாட்சி இயக்கத்தை (Home Rule Movement) சேர்ந்த பல தலைவர்கள் தலைமையேற்று நடத்தி இருக்கின்றனர். சென்னைதான் இந்திய பிரம்மஞான சங்கத்திற்கும்அன்னி பெசண்ட் அம்மையாரின் சுயாட்சி இயக்கத்திற்கும் தலைமையகமாக இருந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். இவர்கள்தான் தொழிலாளர்களின் இயக்கங்களுக்கு ஆரம்பகாலத்தில் தலைமை வகித்திருக்கிறார்கள். மிகவும் ஆர்வத்தை அளிக்கக்கூடிய நபரான பி.பி. வாடியா பிரம்மஞான சங்கத்துடன்தான் நெருக்கமாக இருந்து வந்தார். இவர்தான் மதராஸ் லேபர் யூனியனுக்கும் பின்னிஆலைத் தொழிலாளர்களுக்கும் தலைமை வகித்துள்ளார். இவ்வாறு சங்கத்தின் தலைவர்களாக சீர்திருத்தவாதிகள்தான் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்கள் சுயாட்சி இயக்கத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது பிந்தைய காலங்களில் காங்கிரசைச் சேர்ந்தவர்களாகவோ இருந்திருக்கிறார்கள் என்று வீரராகவன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1933க்குப்பின்னர்தான் இடதுசாரி சக்திகள் முன்னுக்குவருகின்றன. தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் சிங்காரவேலர்  தொழிலாளர்களின் சங்கங்களை அமைக்கிறார்.  தொழிலாளர் வர்க்கத்தின் பல போராட்டங்களுடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். ஆயினும் அவர் அந்த சமயத்தில் தொழிலாளர்களுக்கென்று ஓர் அமைப்பினைக் கட்டத் தவறிவிடுகிறார். அவர் அந்நாட்களில் தமிழ்நாடு மற்றும் சென்னை மாநகரின் தொழிற்சங்க இயக்கத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் பங்கேற்றிருக்கிறார். ஆயினும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும், ‘தாதாஎன்று அன்புடன் அழைக்கப்பட்ட அலீம் ஹைதர் கான் முயற்சியால் முதல் கம்யூனிஸ்ட் குழுவும் உருவானபிறகுதான்  தொழிற்சங்க இயக்கத்தில் இடதுசாரித் தலைமை வெளிப்படத் துவங்கியது.  தோழர் பி.ராமமூர்த்தி மற்றும் பல தலைவர்கள் அதன்பின்னர்தான் தொழிற்சங்க இயக்கத்துடன் அறிமுகமானார்கள்.
வீரராகவன் இவர்களில் பலரைச் சந்தித்து பேட்டி கண்டிருக்கிறார். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தேசிய இயக்கத்திலும் அகில இந்திய அளவில் தொழிற்சங்க இயக்கம், விவசாய இயக்கம் ஆகியவற்றைக் கட்டுவதிலும் முன்னணியில் இருந்திருக்கிறது. ஆயினும் சென்னை மாநகரத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி அத்தகையதொரு நிலையைப் பெற முடியவில்லை. உண்மையில் தோழர் பி.சுந்தரய்யா தன் கம்யூனிஸ்ட் பணியை சென்னையிலிருந்துதான் துவங்கினார். ஆயினும் தொழிற்சங்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பு என்பது துவக்கத்தில் இல்லை. மேலும் சென்னை, தொழிற்சங்க இயக்கத்தின் மையமாகவும் அப்போது மாறவில்லை.
வீரராகவன் அப்போது தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்ட சீர்திருத்தவாத் தலைவர்கள் குறித்து மிகவும் விமர்சனரீதியாக இந்நூலில் எழுதியிருக்கிறார். பல சமயங்களில் பின்னிதொழிற்சாலையில் வேலைபார்த்த தொழிலாளர்கள் சீர்திருத்தவாதத் தலைமையைவிட வேகமாக முன்னேறிச் சென்றிருக்கிறார்கள். தலைவர்களின் விருப்பங்களையெல்லாம் மீறி முன்னேறியிருக்கிறார்கள்.  வாடியோ போன்று தலைமை தாங்கியவர்களின் உணர்வுகளை முழுமையாக மதிக்கக்கூடிய அதே சமயத்தில், தொழிலாளர்களின் வாழ்க்கை மீது அவர்கள் மனப்பூர்வமாகக் கரிசனம் கொண்டிருந்தார்கள் என்பதையும் ஒப்புக்கொள்ளும் வீரராகவன், அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல என்பதையும், புரட்சிகர தொழிற்சங்க இயக்கத்தின் சிந்தனைகளை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்பதையும் மிகச் சரியாகச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அன்றைய சென்னைத் தொழிற்சங்க இயக்கம் குறித்து ஆய்வு செய்துள்ள வீரராகவன் நான்கு விதமான முடிவுகளுக்கு வருகிறார். அவை நான்கும் மிகவும் சரியானவைகள் (valid and correct) ஆகும்.
முதலாவதாக, அன்றைய தினம் காங்கிரஸ் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட தேசிய இயக்கம் குணாம்சத்தில் முதலாளித்துவ (பூர்சுவா) மனப்பான்மையைப் பெற்றிருந்தது. எனவே அதுபிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்திற்குக் கொடுத்த முக்கியத்துவத்தை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்குக் கொடுக்காதது மட்டுமல்ல, அவற்றை மூடி மறைத்திடவும் முயற்சிகளை மேற்கொண்டது. தொழிலாளர்கள் மத்தியில் சோசலிச மற்றும் கம்யூனிச சிந்தனைகள் வளரத் தொடங்கியதைக் கண்டு அது அவர்களை அணிதிரட்டுவதையே குறைத்துக் கொண்டுவிட்டது.
இரண்டாவதாக, இடதுசாரி சக்திகள் தலைமையில் இருந்த இயக்கங்கள் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் கடும் அடக்குமுறையை ஏவி அவற்றை நசுக்குவதில் வெற்றி கண்டன. இது சீர்திருத்தவாதத் தலைவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததோடு, தொழிலாளர்களைத் தங்கள் கீழ் வைத்துக்கொள்வதிலும், அரசியல் நடவடிக்கைகளில்  ஈடுபடாமல் வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளை மட்டும் எழுப்புவதோடு தங்களைச் சுருக்கிக் கொள்வதிலும் நிறைவடைந்தனர்.
மூன்றாவதாக, காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவர்களும் கம்யூனிஸ்ட்டுகளும் தொழிற்சங்க இயக்கத்திற்குள் தாமதமாக வந்தபோதிலும், அரசின் கடும் அடக்குமுறை காரணமாக அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. சீர்திருத்தவாதத் தலைவர்களையும் அவர்களால் புறந்தள்ள முடியவில்லை.
நான்காவதாக, இந்திய சமூகம் பல்வேறு கலாச்சாரங்களையும், பலவீனங்களையும் உள்ளடக்கிய ஒன்று. நிலப்பிரபுத்துவ, சாதிய மற்றும் வகுப்புவாத சிந்தனைகள் மிகவும் மோசமானமுறையில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒரு சமூகமாக இது இருந்ததால், தொழிலாளர்கள் மத்தியில் புரட்சிகர வர்க்க உணர்வு உருவாவதற்கு அவை மாபெரும் தடைக்கற்களாக அமைந்திருந்தன.
இவ்வாறு வீரராகவன் மிகவும் சரியான முறையில் முடிவுக்கு வருகிறார்.
வீரராகவன் தன் கண்பார்வையை இளம் வயதில் இழந்து விடுகிறார். இப்புத்தகத்திற்கான ஆராய்ச்சியை மேற்கொள்ளும்போது அசாத்தியமானமுறையில் தன் நினைவுகளின் அடிப்படையிலேயே இதனை எழுதியிருக்கிறார். இதனை எழுதும் காலத்தில் ஆவணங்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மட்டும் அவர் இதனை எழுதிடவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, வி.பி. சிந்தன் போன்ற அனைவரையும் சந்தித்து, அவர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். தோழர் வி.பி. சிந்தன் என்னை ஆகர்ஷித்ததைப்போலவே, வீரராகவனையும் கணிசமான அளவிற்கு ஆகர்ஷித்திருக்கிறார்.
மாணவராக இருந்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்திருக்கிறார். அப்போது நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில் அனைத்திலும் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். தொழிலாளர்கள் நடத்திடும் வாயில் கூட்டங்கள், வேலை நிறுத்தங்கள் அனைத்திலும் அவரைக் காண முடியும். 
இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு வீரராகவனுக்குத் துணையாக இருந்தவர்களில் தோழர் எஸ்.எஸ். கண்ணன் மிகவும் முக்கியமானவர். காரல் மார்க்ஸ் நூலகம் என்று தனியார் நூலகத்தைத் தன்னந்தனியாக நடத்தி வரும் அவருக்கு வயது 90. அவர் வீரராகவனுக்கு இப்புத்தகத்தை எழுதுவதற்கு படிப்பவராக (scribe-ஆக) இருந்ததுடன், புத்தகங்களை சேகரிப்பதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்தார். இவரது தமிழாக்கத்தில் இப்புத்தகம் ஏற்கனவே தமிழில் வெளிவந்துவிட்டது.
இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் லெப்ட்வேர்ட் மிகவும் பெருமைப்படுகிறது. இதனை மிகவும் பாராட்டுவதுடன், அனைவரும் படிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார். பின்னர் இதனை அவர் வெளியிட  முதுபெரும் அறிஞர் ஜி.பி. தேஷ்பாண்டே அதனைப் பெற்றுக்கொண்டார்.  லெப்ட் வேர்ட் மேலாண்மை ஆசிரியர்  சுதான்வா தேஷ்பாண்டே (மேனேஜிங் எடிட்டர்) நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்தார்.
(தொகுப்பு: ச.வீரமணி)

No comments: