Tuesday, April 23, 2013

சமூகத்தை சீரழிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும்:சீத்தாராம் யெச்சூரி



சட்டம் - ஒழுங்கு அமலாக்கத் துறை மற்றும் நீதித்துறை அதிகரிக்கப்பட வேண்டும்
வர்மா குழு பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்
சமூகத்தை சீரழிக்கும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும்
மாநிலங்களவையில்
சீத்தாராம் யெச்சூரி பேச்சு
புதுதில்லி, ஏப். 23-
வர்மா குழு பரிந்துரைகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அமல்படுத்தப்பட வேண்டும், சட்டம் - ஒழுங்கு அமலாக்கத்துறை மற்றும் நீதித்துறையில் போதிய அளவிற்கு ஊழியர்கள் மற்றும் நீதிபதிகள் நியமிக்கப்படவேண்டும், சமூகத்தைச் சீரழிக்கும் நிலப்பிரபுத்துவ பெண்ணடிமை சமுதாயமும், நவீன தாராளமய சீர்திருத்தங்கள் உருவாக்கியுள்ள நுகர்வுக் கலாச்சாரமும்   இணைந்து புதிதாக உருவாக்கியுள்ள நச்சுக்கலவைக் கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி,எம்.பி. பேசினார்.
நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அட்டூழியங்கள் மற்றும் சமூகக் கொடுமைகள் ஏவப்படுவதனால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து திங்கள் அன்று மாநிலங்களவையில் குறுகிய கால விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
‘‘பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து விவாதம் நடைபெறுகையில், அவையின் இருக்கையில் ஊசியளவு சந்தேகம் கூட எழாத அளவில் உள்ள ஒருவரின் தலைமையில் இவ்விவாதம் நடைபெறுவதற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதை எண்ணுகையில் மிகவும் மன வேதனையாகவும் கோபமாகவும் இருக்கிறது. அதிலும் இப்போது மிகவும் கொடூரமான முறையில் நடைபெற்றிருக்கிற குற்றத்தைப் பார்க்கும்போது, அதனைக் கண்டிப்பதற்கான வார்த்தைகளே இல்லை என்கிற அளவிற்கு மிகவும் மோசமான அளவில் இது நடைபெற்றிருக்கிறது.
‘‘இடிமுழக்கம்போன்ற குரலை எனக்குக் கொடு
தாய் என்றும் சேய் என்றும் பாராது
இத்தகைய நரவேட்டையாடும் மிருகங்களை
வீசியெறியக்கூடிய விதத்தில்
இடிமுழக்கம்போன்ற குரலை எனக்குக் கொடு’’
என்று கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் தனக்கு அளிக்கப்பட்ட வீரத்திருத்தகைப் பட்டத்தைத் திருப்பி அளிக்கையில் கூறிய கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகின்றன.
நடைபெறும் சம்பவங்களைப் பார்த்து நாடே அவமானத்தால்  தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறது. நம்மால் இத்தகைய நரவேட்டையாடும் மிருகங் களிடமிருந்து நம் தாய்மார்களையும், நம் குழந்தைகளையும்  காப்பாற்ற முடியவில்லை. ஐந்து வயதுச் சிறுமிக்கு எதிராக ஏன் இந்த மிருகத்தனமான நடத்தை? சமூகம் இந்த அளவிற்கு எப்படிச் சீரழிந்தது என்று உங்களால் கற்பனைச் செய்ய முடிகிறதா? பொருளாதார வல்லமையைப் பெற வேண்டும் என்று நாம் விவாதித்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில் இவ்வாறு ஏன் நடந்து கொண்டிருக்கிறது?
நாம் நவீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நம்மை நாமே பீற்றிக்கொள்கிறோம். ஆனால், இத்தகைய விதத்தில் மிருகத்தனமான உணர்ச்சிகளையும் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறோம். 
தி கார்டியன் ஏடு, இந்தியாவில் பெண்கள் இருப்பதற்கே இலாயக்கற்ற இடமாக மாறிவிட்டது என்று முத்திரை குத்தி இருக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக்கொள்ளக்கூடிய ஒரு நாட்டில் இது எப்படி நடைபெறலாம்
பெண்களின் உரிமைகளுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும், தாம்சன் ரேட்டார்ஸ் டிரஸ்ட் லா விமன்  என்னும் அமைப்பு மேற்கொண்ட ஆய்வு ஒன்றில்இந்தியாவை, ஆப்கானிஸ்தான், காங்கோ மற்றும் சோமாலியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, இந்நாடுகளில் எல்லாம் பெண்கள் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது.
நாட்டில் என்ன நடக்கிறது? வன்புணர்வு வழக்குகளில் பதிவு செய்யப்படாதவைகள் அதிகம். பதிவு செய்யப்படும் வழக்குகளிலும் நான்கில் மூன்று வழக்குகளில் குற்றமிழைத்த கயவர்கள், 2002க்கும் 2011க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற வழக்குகளில் எவ்விதத் தண்டனையுமின்றி விடுதலையாகி இருக்கிறார்கள்.
2007க்கும் 2011க்கும் இடையிலான தேசிய குற்றப் பதிவுகள் நிலையம் (The National Crime Record Bureau)அளித்துள்ள அதிகாரபூர்வமான புள்ளி விவரங்களின்படி, வன்புணர்வு நிகழ்வுகள் 9.7 விழுக்காடு அதிகரித்திருப்பதாக வெளியாகி இருக்கிறது.
இது காவல்துறை சம்பந்தப்பட்ட பிரச்சனை மட்டுமல்ல, நம் சமூகம் போகும் நிலை குறித்தும் மிகவும் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய ஒன்றாகும்.  
சமூகம் நாளுக்கு நாள் சீர்கேடு அடைந்து கொண்டிருக்கிறது. இது ஏன் என்பதை ஆராய்ந்து, இதனைச் சரி செய்ய என்ன செய்வது என்பது குறித்தும் இந்த அவை ஆராய்ந்து தன் பங்களிப்பினைச் செய்திட வேண்டும்.
இதில் இருவிதமான பிரச்சனைகள் சம்பந்தப் பட்டிருக்கின்றன.
ஒன்று, நம்முடைய ஜனநாயக அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கை அமல்படுத்தும் அமைப்பும் நீதித்துறையும் இயங்கும் விதமாகும். இவை இரண்டுமே மிகவும் பரிதாபமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பது தொடர்கிறது.  போலீசைப் பார்த்தோ, நீதிபதி அல்லது நடுவரைப் பார்த்தோ எவரும் பயப்படுவதில்லை. இவர்களுக்கு எவரும் மரியாதை செலுத்துவதும் இல்லை. இவ்வாறு நிலைமைகள் ஏன் மாறிப்போயின?
ஆட்சியாளர்களால் அமைக்கப்பட்ட சட்ட ஆணையம்  1987இல் ஓர் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் தற்போது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 1.05 நீதிபதிகள் என்று இருப்பதை, ஐந்து ஆண்டுகளுக்குள் ஐந்து நீதிபதிகளாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைத்து அறிக்கை அளித்தது. இன்று அதன் நிலைமை என்ன? இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பின், இன்றும் அதே நிலை. அதாவது ஒரு லட்சம் மக்களுக்கு 1.4 என்ற நிலையில் நீதிபதிகள் இருக்கிறார்கள். எப்படி உங்களால் விரைந்து நீதி வழங்கிட முடியும்? உங்களால் விரைந்து நீதி வழங்கமுடியாத நிலை இருக்கும்போது, சட்ட அமலாக்கம், குற்ற அமலாக்கங்களும் சரிவர ஒழுங்காக இயங்க முடியாது.நீதி வழங்கப்படாவிட்டால், புலனாய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் என்ன பயன்? ஏன் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்? இவ்வாறு நிலைமைகள் நாட்டில் தொடர்கின்றன.
வன்புணர்வு வழக்குகள் என்றில்லைபெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமல்ல, நாட்டில் செயல்படும் ஒட்டு மொத்த சட்ட அமலாக்கத் துறையும், நீதித்துறையும் மிகப் பெரிய அளவில் மேம்படுத்தப்பட்டாக வேண்டும். இவ்வாறு மேம்படுத்தப்படவில்லை என்றால், அதில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது.
இரண்டாவது அம்சம், இன்றைய நவீன ஜனநாயகத்தின் நடைமுறை சம்பந்தப்பட்டதாகும். நாம் நம்மை நவீனமானவர்கள் என்று பீற்றிக்கொள்கிறோம். என்னுடைய கல்லூரி நண்பனும் குறிப்பிடத்தக்க சமூகவியலாளருமான திபங்கர் குப்தாநவீனத்துவம் என்றால் என்ன என்று வரையறுத்திருக்கிறார்.    ‘‘நவீனத்துவம் என்பது அனைவரும் சமம் என்கிற மனோபாவத்தோடு அனைவரையும் மதித்து நடந்திட வேண்டும்’’ என்று அவர் வரையறுத்திருக்கிறார். இது மிகவும் முக்கியமானதும் நாம் அனைவரும் இதனை நன்கு உணர்ந்திட வேண்டும் என்றும் நான் கருதுகிறேன்.
இப்போதுள்ள இன்றைய நவீன சமூகத்தில் உண்மையில்  நாம் அனைவரும் சமமாக இல்லை. ஆயினும், மக்கள் மத்தியில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்பட்ட போதிலும், நவீனத்துவம் என்பது, மக்கள் கண்ணியத்துடன் வாழ,அடிப்படைத் தேவைகளை அளித்திட வேண்டும் என்று கோருகிறது.   நவீன சமூகம் என்றால் சமத்துவ சமூகம் என்பதேயாகும்.
முற்காலத்தில் மன்னர்கள் ஆண்டார்கள், மக்கள் அவரால் ஆளப்படுபவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. ஆனால் ஜனநாயக அமைப்பில் மக்கள் குடியுரிமை - பிரஜா உரிமை - பெற்றவர்கள். இருப்பினும் பழைய மிச்சசொச்சம் இன்றும் தொடர்கிறது. 
தந்தைவழிச் சமுதாய சிந்தனை இன்னமும் நம்முடைய சமூகத்தில் நன்கு ஊடுருவிப் பரவி இருக்கிறது.
நம்மை நாம் நவீனமானவர்கள் என்று சொல்லிக் கொண்டாலும், நவீனமானமுறையில் நடை உடை காலணிகளை அணிந்துகொண்டபோதிலும், நவீன சிந்தனையை இன்னும் நாம் பெறவில்லை.
உங்கள் பெண்குழந்தைக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றால், சொந்த சாதியிலேயே மணமகனைத் தேடுகிறீர்கள். பிறக்கப் போகும் குழந்தை ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமா, அல்லது பெண் குழந்தையாக இருக்க வேண்டுமா என்று கேட்டால், ஆண் குழந்தைதான் வேண்டும் என்கிறீர்கள்.
இதன் பெயர் நவீன சமுதாயம் அல்ல, மாறாக நச்சு சமுதாயம் ஆகும். நச்சு சமுதாயத்தை அகற்றப்பட்டு, நவீன சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்.
செய்தித்தாள்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் மணமக்களைத் தேடும் பக்கங்களைப் பரிசீலித்தீர்கள் என்றால், மணமகனோ அல்லது மணமகளோ வெளிநாடு வாழ் இந்தியராக இருப்பார்கள். அவர்களுக்கு மணமகளோ அல்லது மணமகனோ கோரி இருப்பார்கள். அவர்கள் எதிர்காலத்தில் இந்தியாவில் வாழப்போவதில்லை. ஆயினும் தனக்கு வரப்போகும் மணமகள் அல்லது மணமகன் சொந்த சாதியில் இருக்க வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். இது என்ன? இதுவா நவீன சமுதாயம்?
இன்றையதினம் நாம் ஒரு மிக மோசமான சமுதாயத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் ஆண்டான் - அடிமை சிந்தனையோடு நவீன தாராளமய நுகர்வு கலாச்சாரத்தையும் இணைத்து புதியதொரு கலவையை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நச்சுக் கலாச்சாரம்தான் நம் சமூகத்தில் நிலவிவந்த மாண்புகள் அனைத்தையும் அழித்துக்கொண்டிருக்கின்றன. இத்தகைய  கலவைதான் இன்றைய அனைத்துவிதமான இழி கலாச்சார நடவடிக்கைகளுக்கும் மூலாதாரமாக இருந்து வருகிறது. இத்தகைய பொருளாதார சீர்திருத்தங்கள் புதிய அபிலாசைகளை உருவாக்குகின்றன. அவை அனைத்துவிதமான சமூக இழிகுணங்களையும் உருவாக்குகின்றன.
தொலைக்காட்சி அலைவரிசைகள் நம் பெண்களை எப்படிச் சித்தரிக்கின்றன? பெண்கள் என்றால் போகப் பொருள். அவர்கள் சம மனிதர்கள் அல்ல, மாறாக போகப் பொருள். நிலப்பிரபுத்துவ சமுதாயத்தின் இழிவான சிந்தனைகளை இன்றைய தொலைக்காட்சிகள் மிகவும் சாதுர்யமாக மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவற்றைப் பொடிப்பொடியாக்கிடாமல், இன்றைய நிலைமைகளை உண்மையில் நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
நம்முடைய சட்டம் - ஒழுங்கு அமலாக்கத் துறை (அதாவது காவல்துறை) மற்றும் நீதித்துறை மிகவும் அதிகமான அளவில் மேம்படுத்தப்பட, அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்த அவை வலியுறுத்த வேண்டும்.  இதனைச் செய்கிற அதே சமயத்தில், நிலப்பிரபுத்துவ பெண்ணடிமைச் சிந்தனையும், இன்றைய நவின தாராளமய சீர்திருத்தங்கள் உருவாக்கித் தந்துள்ள நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்து வழங்கியிருக்கும் புதியதொரு நச்சுக் கலவைக் கலாச்சாரத்தை மேலும் வளர விடாது தடுக்கக்கூடிய விதத்தில் நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.
 சென்ற டிசம்பரில் மிகவும் மோசமான விதத்தில் தலைநகரில் கூட்டு வன்புணர்வுக் குற்றம் நடைபெற்றது. அதன்பின்னர் என்ன நிலைமை? தயவுசெய்து பதிவேடுகளைப் பரிசீலனை செய்து பாருங்கள். வன்புணர்வு குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. குறையவில்லை.  நீங்கள் இது தொடர்பாகச் செய்தது என்ன?
சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கிற மிருக உணர்ச்சியை அழித்து ஒழிப்பதற்குப் பதிலாகநம் தொலைக்காட்சிகள் விளம்பரங்கள் மூலமாக அதனை வளர்க்கக்கூடிய விதத்திலேயே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.  இவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
நீங்கள் அமல்படுத்தும் பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம், புதியதொரு மிருகத்தையும் நாட்டில் உருவாக்கிக் கொண்டிருக்குகிறீர்கள். நிலவுடைமை பெண்ணடிமைத்தனமும் நவீன தாராளமய நுகர்வுக் கலாச்சாரமும் இணைந்த ஒரு நச்சுக் கலவை மிருகம் இது. இது மிகவும் ஆபத்தான மிருகமாகும். எனவேதான், இந்த அரசாங்கம், நீதியரசர் வர்மா குழு  அளித்திட்ட பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 
சீரழிந்துகொண்டிருக்கும் இச்சமூகத்தினை மாற்றிட நம்மாலான அனைத்தையும் நாம் செய்திடவேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
(ச. வீரமணி)


No comments: