Thursday, April 4, 2013

அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம்-ஜனநாயக முறையில் முளையிலேயே கிள்ளி எறிவோம்-அகில இந்திய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி சூளுரை












புதுதில்லி, ஏப்ரல் 4-
மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் காவல்துறையினரால் அடித்தே கொல்லப்பட்டார் என்று சடலக்கூராய்வு சான்றிதழ் முலமாக உறுதி செய்யப்பட்டுவிட்டது.   இக்கொலை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கிறோம். 1975இல் இருந்ததைப்போன்று அரைப்பாசிச அடக்குமுறையை அனுமதியோம். இதனை முளையிலேயே ஜனநாயக முறையில் கிள்ளி எறிவோம் என்று இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தில் காவல்துறையினரின் அனுமதி பெற்று பேரணி நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறையை ஏவினர். இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மேற்கு வங்க மாநிலக் குழு உறுப்பினர்  சுதிப்தே குப்தா கொல்லப்பட்டார். இது விபத்துதான் என்றும் அடித்துக் கொல்லப்படவில்லை என்றும் மாநில அரசுத்தரப்பில் கூறப்பட்டது. இல்லை இது கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக்கூராய்வு சான்றிதழில் உறுதி செய்யப்பட்டது. 
சுதிப்தே குப்தா கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுதும் அனைத்திந்திய எதிர்ப்பு தினம் அனுசரிக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய செயற்குழு சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக தில்லியில் உள்ள வங்கபவன் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் பேரணி/ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தில்லிப் பல்கலைக் கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான  மாணவர்கள் கலந்து கொண்டார்கள். பேரணியில் வந்த மாணவர்களை வங்கபவனுக்குள் செல்ல காவலதுறையினர் அனுமதிக்கவில்லை.  வாயில் கதவை அடைத்து வைத்தனர். ஆயினும் மாணவர்கள் முழக்கமிட்டவாறே வாயில் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று முழக்கமிட்டனர்.
பின்னர் வாயிலில் நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் 1975இல் மேற்கு வங்கத்தில் நடைபெற்றதைப்போன்ற அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர இப்போதைய திரிணாமல் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதனை ஒருபோதும் அனுமதியோம்.  சுதிப்தா குப்தா கொலை செய்யப்படவில்லை, அது விபத்துதான் என்று அரசுத்தரப்பில் சொல்லப்பட்டு வந்தது. இல்லை, இ து கொலைதான் என்பது இன்று வெளியாகியுள்ள சடலக் கூராய்வு சான்றிதழ் (போஸ்ட்மார்ட்டம் சர்ட்டிபிகேட்) மூலம் தெளிவாகிவிட்டது. எனவே நடந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். கொலைக்குக் காரணமானவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். 1975இல் நடந்ததுபோல் அரைப்பாசிச அடக்குமுறையைக் கொண்டுவர மம்தா பானர்ஜி முயற்சிக்கிறார். இதனை ஒருபோதும் அனுமதியோம். ஜனநாயக ரீதியாக இதனை முளையிலேயேக் கிள்ளி எறிவோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
பேரணி/ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேஎன் பாலகோபால், எம்பி ராஜேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யோகேந்திர சர்மா, தில்லி மாநில செயலாளர் புஷ்பிந்தர் கிரேவால் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள்.
---

No comments: