புதுதில்லி,
சந்தர்ப்பவாதக் கட்சி என்ற முறையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின்
தலைவரான மம்தா பானர்ஜி, பாஜக-வுடனும் கூட்டணி அமைத்துக்கொண்டிருக்கிறார். காங்கிரசுடனும்
கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்
கட்சிகளை எதிர்ப்பதல் மட்டும்தான் எப்போதும்மாறாத நிலை எடுத்திருக்கிறார் என்று பிரகாஷ்
காரத் கூறினார்.
தி ஆசியன் ஏஜ் நாளேடு,
ஞாயிறு (14.04.13) அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தைப்
பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு:
கேள்வி: சமீபத்தில்
மேற்கு வங்கத்தில் அரசியல் வன்முறை
வெடித்தது குறித்து
என்ன சொல்கிறீர்கள்?
பிரகாஷ் காரத்: 2009 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலிருந்தே மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் எதிராகத் தொடர்ந்து வன்முறை கட்டவிழ்த்து
விடப்பட்டு வந்திருக்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் வலுவாக இருந்து வரும் இடதுசாரித்
தளத்தை நசுக்குவதற்கான முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக்
கட்சிகளின் ஊழியர்கள் மீதும் ஆதரவாளர்கள் மீதும் நடைபெற்றுவரும் தாக்குதல்களுக்கு திரிணாமுல்
காங்கிரசே பொறுப்பாகும். இத்தாக்குதல்கள்
2011 மே சட்டமன்றத் தேர்தல்களுக்குப்பின் உக்கிரமடைந்தன. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் 96 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். திட்டக் கமிஷன் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு, இடது முன்னணியின்
அலுவலகங்கள் மற்றும் தலைவர்கள் மீது மீண்டும் வெறியாட்டத்தை ஏவிடப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கேள்வி: திட்டக்
கமிஷனுக்கு வெளியே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மீதும், மாநில நிதி அமைச்சர்
அமித் மித்ரா மீதும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால்
நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
நீங்கள் அதனைக் கண்டிக்கிறீர்களா? இது நல்லதொரு முன்னுதாரணம் என்று நீங்கள்
நினைக்கிறீர்களா?
பிரகாஷ்காரத்: முதல்வருக்கு
எதிராக எந்தவிதத் தாக்குதலும் இல்லை. இந்திய
மாணவர் சங்கத் தலைவர் சுதிப்தே குப்தா போலீஸ் காவலில் அடைந்த மரணம் சம்பந்தமாக
மாநில அரசின் அணுகுமுறைக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக, ஆர்ப்பாட்டத்தின்போது, மித்ரா தொடர்புடைய நிகழ்வு நடந்துள்ளது. அதனை நாங்கள்
கண்டித்திருக்கிறோம். இதற்கு முன்பும் பல சமயங்களில், இத்தகைய நிகழ்வுகள் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்
மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தையும்
நாங்கள் எப்போதும் ஏற்றதில்லை என்பதோடு கண்டித்தும் வந்திருக்கிறோம்.
கேள்வி: மேற்கு வங்கத்தில்
கொல்லப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்தவர்கள் என்று
மமதா பானர்ஜி கூறியிருக்கிறாரே?
பிரகாஷ் காரத்: அபாண்டமான
முறையில் இவ்வாறு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவது அவரது வழக்கம்தான். இப்போதுகூட, அவரைக்
கொல்ல ஓர் முயற்சி நடந்ததாகக் கூறியிருக்கிறார். மொத்தத்தில் இவற்றிற்கு எந்த அடிப்படையும்
கிடையாது.
கேள்வி: மேற்கு வங்க
அரசு, இந்திய மாணவர் சங்கத் தலைவர் சுதிப்தே குப்தா கொலை வழக்கைக் கையாண்டு கொண்டிருக்கும்
விதம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
பிரகாஷ் காரத்: போலீஸ்
காவலில் 23 வயது இளைஞர் ஒருவர் இறந்திருக்கிறார். இது ஓர் அற்ப விஷயம் என்று மம்தா
பானர்ஜி அறிவிக்கிறார். மேற்கு வங்க அரசு இந்நிகழ்வு குறித்து நீதித்துறை விசாரணைக்கு
ஏன் கட்டளையிடக்கூடாது? மரணம் கொல்லப்பட்டதால் நடைபெற்றதா அல்லது விபத்தால் நடந்ததா
என்கிற உண்மை வெளிவரட்டுமே.
கேள்வி: மேற்கு வங்கம்
அரசியல் வன்முறை வரலாற்றைப் பெற்றிருக்கிறது. இடதுசாரிகள் அங்கே முப்பதாண்டு காலம்
ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். வன்முறையை முன்னின்று நடத்தினார்கள் என்றும், மாநிலத்தில்
அரசியல் வன்முறைக் கலாச்சாரத்தை உருவாக்கியதற்கு அவர்களே பொறுப்பு என்றும் ஒரு கருத்து
நிலவுகிறதே!
பிரகாஷ்காரத்: இடதுசாரிகளுக்கு
எதிராக அடிக்கடிக்கூறப்படும் புளித்துப்போன குற்றச்சாட்டே இது. 1950களிலும் 1960களிலும் கம்யூனிஸ்ட்டுகளையும்,
இடதுசாரி இயக்கங்களையும் நசுக்கிட வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எதிராக ஆளும் வர்க்கங்களாலும்
நிலப்பிரபுக்களாலும் அரசு எந்திரத்தாலும் அரசியல்
வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இடது முன்னணி ஆட்சியிலிருந்த சமயத்தில்
கூட தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகவும் விவசாய இயக்கங்களுக்கு எதிராகவும் வன்முறை
ஏவப்பட்டது, இத்தகைய வன்முறை வெறியாட்டங்கள்
இடது முன்னணி ஆட்சி அமைப்பதற்கு முன்பும், அது ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும்
தொடர்கிறது என்பதே உண்மையாகும். திரிணாமுல் காங்கிரஸ் பிற்போக்கு சக்திகளைப் பிரநிதிநிதித்துவப்படுத்தும்
ஒரு கட்சி. எனவேதான் அது ஜனநாயக உரிமைகளை நசுக்கிட முயற்சிக்கிறது.
கேள்வி: மேற்கு வங்கத்தில்
பஞ்சாயத்துத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மமதா பானர்ஜிக்கும், மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கும்
இடையே முட்டுக்கட்டை நிலை நீடிப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? தேர்தல்களைத் திரிணாமுல்
காங்கிரஸ் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என்று நீங்கள் கருதுகிறீர்களா?
பிரகாஷ்காரத்: பஞ்சாயத்துத் தேர்தல்கள் காலத்தே நடத்தப்பட வேண்டும்
என்றே நாங்கள் விரும்புகிறோம். மாநில அரசாங்கம்தான் பஞ்சாயத்துத் தேர்தல்கள் எப்படி
நடத்தப்பட வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்திட்ட பரிந்துரைகளை வேண்டும்
என்றே உதாசீனம் செய்துள்ளது. தேர்தல்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைபெற்று அதில்
எதிர்க்கட்சிகள் பங்கேற்கக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு திரிணாமுல் காங்கிரஸ் ஆணவத்துடன்
அதிகாரம் செலுத்த விரும்புகிறது. அதனால்தான் மாநிலத் தேர்தல் ஆணையம் அளித்திட்ட விவேகமான
பரிந்துரைகளை எதிர்த்துக்கொண்டிருக்கிறது.
கேள்வி: மமதா பானர்ஜி
மீண்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
பிரகாஷ் காரத்: ஒரு
சந்தர்ப்பவாதக் கட்சி என்ற முறையில், திரிணாமுல்
காங்கிரஸ் எவருடன் வேண்டுமானாலும் போகும். திரிணாமுல் காங்கிரஸ் பாஜக தலைமையிலான கூட்டணியில்
அங்கம் வகித்திருக்கிறது என்பதையும், அதில் மமதா பானர்ஜி அமைச்சராக இருந்தார் என்பதையும்
மறந்துவிடக் கூடாது. மமதா பானர்ஜி, பாஜக கூட்டணியிலும், காங்கிரஸ் கூட்டணியிலும் மாறி
மாறி இருந்திருக்கிறார். அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளுக்கு
எதிரான நிலை எடுப்பதில் மட்டும்தான் மாறாதிருந்திருக்கிறார்.
கேள்வி: உங்கள் கட்சி,
ஐமுகூட்டணியில் அங்கம் வகிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பிரகாஷ் காரத்: காங்கிரசையும்,
பாஜகவையும் சேர்த்தேர எதிர்த்திட வேண்டும் என்று எங்கள் கட்சி ஏற்கனவே தீர்மானித்துவிட்டது.
இடதுசாரிகள் என்ற முறையில் நாங்கள் அனைவரும் இதில் ஒருமித்து நிலை எடுப்போம். நாங்கள், மத்தியில் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற
அரசாங்கம் அமைய வேண்டும் என்றே விரும்புகிறோம்.
கேள்வி: மூன்றாவது
அணி அமைத்திட இந்தத் தடவை இடதுசாரிகள் ஏன் தலைமைப் பாத்திரத்தை எடுக்க வில்லை?
பிரகாஷ் காரத்: மாற்றுக்
கொள்கைகளின் அடிப்படையில் ஒரு மாற்றை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நாங்கள்
முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறோம். இதனை, மாற்றுக் கொள்கைகள் மீது நம்பிக்கை கொண்டுள்ள
கட்சிகள் கூட்டாக இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே கொண்டுவர
முடியும். மூன்றாவது அணி என்பது பொதுவாக தேர்தல் கூட்டணியுடனேயே சம்பந்தப்படுத்தப்படுகிறது. பொதுத்தேர்தல்களைப் பொறுத்தவரை எங்கள் கட்சி மற்ற
இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து நின்று போட்டியிடும். மாநில அளவில் சில மாநிலக் கட்சிகளுடன் ஒருவிதமான புரிந்துணர்வுக்கு வரலாம்.
கேள்வி: நரேந்தர
மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருப்பதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பிரகாஷ் காரத்: பாஜக
நரேந்திர மோடியை பிரதமருக்கான வேட்பாளர் என்று முன்னிறுத்தத் தீர்மானித்திருக்கிறது
என்றால், அது தன்னுடைய அரக்கத்தனமான இந்துத்வா நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தத் துணிந்துவிட்டது
என்கிற தெளிவான செய்தியாகும். நாட்டிலுள்ள
பெரும் வர்த்தகநிறுவனங்கள் மோடிக்கு ஆதரவாக அணிதிரண்டுகொண்டிருக்கின்றன. இத்தகைய இந்துத்வா
மற்றும் பெரும் வர்த்தகநிறுவனங்களின் ஆதரவு என்பது ஒருவிதமான பாசிசத்தின் (incipient fascism) வடிவமேயாகும். வளர்ச்சியில் குஜராத்
மாதிரி என்பது அதுதான், அதாவது, முஸ்லீம்கள் இரண்டாம் தர பிரஜைகளாக அடித்து கீழிறக்கப்படுவார்கள்.
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment