Sunday, April 7, 2013

பொது முதலீடே சரியான கொள்கையாகும்



பிரதமர், இந்தியத் தொழில் அதிபர்கள் மாநாட்டிலும் ஆண்டுப் பேரவைக் கூட்டத்திலும் உரையாற்றினார். அப்போது அவர், ‘எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறதுஎன்பது போன்ற கருத்தை முன்வைத்ததுடன், ‘‘நாம் 8 விழுக்காடு வளர்ச்சியை மீண்டும் பெற முடியும் என்றே கருதுகிறேன்’’ என்றும் கூறியிருக்கிறார். மேலும் அவர், ‘‘சுதந்திரத்திற்குப் பிந்தைய, நாட்டின் பொரு ளாதார வரலாற்றில் ஒரு தீர்மானகரமான கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக் கிறோம்,’’ என்றும் ‘‘இந்திய முதலாளிகள் நாம் அமல்படுத்தும் கொள்கையில் நம்பிக்கை வைத்திட வேண்டும்’’ என்றும் ‘‘தேவையற்ற முறையில் எதிர்மறை எண்ணங்கள் என்னும் சேற்றில் சிக்கிக்கொள்ளாமல் தங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்றும் அறிவுரை பகர்ந் திருக்கிறார். பிரதமரின் உரையைக் கேட்கும்போது, ‘‘ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டால், பிச்சைக்காரர்களும் குதிரை சவாரி செய்வார்கள்’’ என்கிற 16ஆம் நூற்றாண்டின் நர்சரிப் பள்ளிப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. பிரதமர் மேலும், ‘‘அரசு விரைந்து செயல்படவில்லை எனில், ஏற்கனவே மந்தமாகிப்போயுள்ள நம் வளர்ச்சி, 5 விழுக்காடு அளவிற்கே ஆண்டு முழு வதும் நிலைத்து நின்றுவிடும் என்று இன்று கருத்தொற்றுமை ஏற்பட்டிருக் கிறது’’ என்றும், ‘‘எனவே அரசு மிகவும் வேகமாகவும் தீர்மானகரமாகவும் செயல் படவேண்டியது அவசியம்’’ என்றும் பேசியிருக்கிறார்.உள்ளீடான வளர்ச்சிகுறித்து உதட்டளவில் சேவை செய்திடும் இத்தகைய நடவடிக்கை பிரதமரின் உள்ளக்கிடக்கையின்படி நிதி திரட்டலை ஒருமுனைப் படுத்த வேண்டும் மற்றும் நாட்டில் சிறந்த முறையில் முதலீட்டுக்கான சூழலை உரு வாக்க வேண்டும் என்பதுதான். இன்றுள்ள உலக நிலைமையில் இது மிகவும் அவசியம் என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.
நிதி ஒருமுகப்படுத்தலைப் பொறுத்த வரை பிரதமர் மேற்கொண்டுள்ள நடவ டிக்கை என்பது மக்களுக்கு அளித்து வந்த மானியங்களை, குறிப்பாக எரி பொருள் மானியங்களைக் குறைத்தது தான். பெட்ரோல் விலை மீதிருந்த கட்டுப் பாடுகள் இப்போது முழுமையாக நீக்கப் பட்டுவிட்டன. அடுத்த சில மாதங்களில் டீசல் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப் பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார். சமையல் எரிவாயுக்கான மானியத்திற்கு உச்சவரம்பு கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆதார் மேடையின் மீதான நேரடி ரொக்கப் பட்டுவாடா திட்டம் மக்களுக்கு அளித்து வரும் மானியங்களை மேலும் குறைத்திட இருக்கிறது. இவ்வாறெல்லாம் இவர் கூறுகிற அதே சமயத்தில், நாட்டில் உள்ள கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர்களுக்கும் பல லட்சம் கோடி ரூபாய்கள் வரிச் சலுகைகள் அளித்திருப்பது பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். சென்ற ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் வசூலிக்கப்படாமல் ரத்து செய் யப்பட்டிருக்கிறது. இத்தொகை ஒட்டு மொத்த நிதிப்பற்றாக்குறையை விட அதிகமாகும். பணக்காரர்களுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் என்பவை வளர்ச்சிக்கான ஊக்கத்தொகை’ (`incentives’) என்று இவர்களால் வர்ணிக்கப்படும் அதே சமயத்தில், ‘மானியங்கள்என்ற பெயரில் ஏழைகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளோ இவர்களது அகராதியின்படி பொருளாதாரத்தின் மீதான சுமைக ளாகும். ஆட்சியாளர்களின் இத்தகைய கொள்கை வரவிருக்கும் காலங்களிலும் தொடரவிருக்கின்றது. இதன் பொருள் நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்டிட, மக் கள் மீது சுமைகள் மேலும் மேலும் ஏற்றப்படும் என்பதேயாகும். பொதுத்துறையை நம்முடைய பொரு ளாதாரத்தின் உயர்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நேருவின் தொலைநோக்குப்பார்வையிலிருந்து தற் போதைய பிரதமர் தன் தலையைத் திருப்பிக்கொண்டு உள்ளார். ‘‘அரசாங்கம் வளர்ச்சியின் பிரதான உந்து சக்தி அல்ல. மாறாக, தனியார் துறை தலைமையிலான பொருளாதாரமே வளர்ச்சியின் பிரதான உந்து சக்தியாகும். நான் மீண்டும் வலி யுறுத்திச் சொல்கிறேன், நாம் ஒரு தனியார் துறை தலைமையிலான பொருளாதாரத்தையே நடத்திக் கொண்டிருக்கிறோம். 75 விழுக்காடு முதலீடு தனியார் துறையிலிருந்துதான் வருகிறது. எனவே வளர்ச் சியை முன்னெடுத்துச் செல்பவர், உண்மையில் தனியார் முதலீடுதான்.’’  என்று பிரதமர் தனியார்துறையை வானளாவப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். உள்நாட்டு முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிகாரவர்க்கத்தின் தடை களைக் களைந்திட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டிய லிட்ட பிரதமர், தற்போது அந்நிய முதலீட்டைக் கவர்வதற்கான நடவடிக்கைகளையும் மிகவும் வேகமாகச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ‘‘அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் என்பதற்கான தெளிவான சமிக்ஞைகளை நாம் கொடுத்திருக்கிறோம்’’ என்று பிரதமர் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, விமானப் போக்குவரத்து மற்றும் பல் துறைகளில் அந்நிய முதலீட்டாளர்களுக்குக் கதவைத் திறந்துவிட்டிருப்பதைத் தெரிவித்த அதே சமயத்தில் பிரதமர், ‘‘வரவிருக்கும் மாதங்களில் மேலும் அதிகமான அளவில் செய்ய முடியுமா என்பது குறித்து அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையை மறு ஆய்வு செய்துகொண் டிருக்கிறோம்,’’ என்றும் அறிவித்துள்ளார். வெளிப்படையாய்ச் சொல்லவில்லை என்றாலும் நடைமுறையில் அடுத்த சுற்று புதிய தலைமுறை சீர்திருத்தங்களை அறிவித்துள்ள அவர், ‘‘இதர சீர்திருத்த நட வடிக்கைகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இவை தொடர்பாக, நிதித்துறை தொடர்பாக சட்டம் இயற்றும் சீர்திருத்தங்கள் குழு அளித்துள்ள எண்ணற்ற பரிந்துரைகள் மிகவும் கவனமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன,’’ என்றும் அறிவித்துள்ளார். வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னாலிருந்த கொள்கைக் கோட்பாட்டை மறுதலிக்கும் வண்ணம் இந்தியாவின் சேமிப்புகளை அந்நிய வங்கிகள் கபளீகரம் செய்யக்கூடிய விதத்தில், தனியார் அந்நிய வங்கிகளை அனுமதிக்க வகை செய்யும் விதத்தில், வங்கிச் சேவைகளில் கொண்டு வரப்பட்டுள்ள சமீபத்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை பிரதமர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 2008இல் உலகப் பொருளாதார மந்தம் இந்தியாவில் முழுமையான அழிவினை ஏற்படுத்துவதிலிருந்து எந்த நட வடிக்கைகள் இந்தியாவைப் பாதுகாத்தனவோ, அந்த நடவடிக்கைகள் அனைத் தையும் கைவிட இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார். இது உலக நிதி ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப இந்தியாவிற்கும் மிக அதிக அளவில் ஊறுவிளைவித்திடும்.‘‘பிரச்சனையைச் சரியான முறையில் ஆய்வு செய்வதன் அடிப்படையில் ஒரு சரியான கொள்கை வகுக்கப்பட வேண்டும்’’ என்று பிரதமர் விசித்திரமான முறையில் கூறியிருக்கிறார். பொருளாதார மந்த நிலைதான் இங்கே பிரச்சனையே. ஆனால், சரியான கொள்கை என்பது தவறான ஆய்வின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கிறது. பிரதமர், ‘‘பொருளா தாரத்தின் வளர்ச்சி விகிதம் முதலீட்டு விகிதத்துடன் வலுவானவிதத்தில் ஒத்துப்போக வேண்டும்,’’ என்று கூறியிருக்கிறார். அவர் மேலும், ‘‘2011-12ஆம் ஆண்டில் பொது மற்றும் தனியார் முதலீடு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இவ்வாறு முதலீட்டில் ஏற்பட்டிருக்கிற வீழ்ச்சி மாற்றிய மைக்கப்பட வேண்டும்.’’ பிரதமர் மேலும், ‘‘சீர்திருத்தங்களை ஒன்றன்பின்ஒன்றாக தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் இதனைச் சரிசெய்திட வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். இதன் பொருள் ஆரம்பத்தில் பிரதமர் கூறியிருப்பதைப்போன்று அந்நிய மற்றும் உள்நாட்டு மூலதனத்திற்கு அபரிமிதமான ஊக்கத்தொகைகள் (மானியங்கள் என்று படிக்கவும்) அளிப்பது என்பதாகும். நாம் ஆட்சியாளர்களிடம் வைக்கும் முக்கியமான கேள்வி, முதலீடுகள் வீழ்ச்சியடைந்ததற்கான அடிப்படைக் கார ணம் என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாகவே தாங்கள் முதலாளிகளுக்கு அபரி மிதமான சலுகைகள்தான் அளித்து வந்திருக்கிறீர்கள். அப்படியிருந்தும் மொத்தத்தில் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந் திருக்கிறதே, காரணம் என்ன? பொருளாதாரத்தில் மக்களின் வாங்கும் சக்தி இல்லாமல் போனதே இதற்குக் காரணமாகும். இதுவே எதார்த்த உண்மையாகும். பொருளாதாரத்தில் வாங்கும் சக்தி இல்லையென்றால் முதலீடுகள் மட்டுமே வளர்ச்சியை உற்பத்தி செய்துவிடாது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் விற்கப்பட வேண்டும். அப்போதுதான் லாபமும் கிடைக்கும், வளர்ச்சியும் ஏற்படும். இதற்கு, மக்களிடம் வாங்கும் சக்தி இருந்தாக வேண்டும். உலகப் பொருளாதார மந்தமும் அதனைத் தொடர்ந்து உலக வர்த்தகத்தில் கூர்மையான அளவிற்கு வீழ்ச்சியும் ஏற்பட்டதால், உள்நாட்டு முதலீட்டால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வெளிநாட்டில் விற்க முடிய வில்லை. நாட்டிற்குள்ளும் மக்களுக்கு அளித்து வந்த மானியங்கள் வெட்டிக் குறைக்கப்பட்டதாலும், எரிபொருள்கள் மீதான விலைகளை நிர்வாகரீதியாக கடுமையாக உயர்த்தி இருப்பதாலும், பண வீக்க விகிதம் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்து கொண்டிருப்பதாலும், நாட்டு மக்களில் பெரும்பான்மையோரின் வாங்கும் சக்தி கடுமையாகக் கசக்கிப் பிழியப்பட்டு விட்டது. இவ்வாறு, உலக அளவிலும் உள் நாட்டு அளவிலும் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளதானது சரிசெய்யப்பட வேண்டுமானால், அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தின் மந்த நிலைமையும் மாற்றியமைக்கப்பட வேண்டுமானால், நாட்டு மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக் கப்பட்டாக வேண்டும். இது எப்படி சாத்தியமாக முடியும்? ஐ.மு.கூட்டணி அரசாங்கமானது முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்கும் அளித்து வரும் அபரிமிதமான வரிச்சலுகைகள் நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக அவை வசூலிக்கப்பட்டு, மிகப்பெரிய அளவில் பொது முதலீடுகளில் செலுத்தப்பட வேண்டும்.
இவை நமக்கு மிகவும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட் டுவதற்கும் குறிப்பிடத்தக்க அளவிற்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற் கும் இட்டுச் செல்லும். இவற்றின் விளைவாக விரிவடையும் உள்நாட்டுத் தேவை, கூடுதலான முதலீடுகளுக்கான தூண்டு விசையாக அமைந்து இந்தியாவை ஒரு வலுவான, நிலையான வளர்ச்சிப் பாதையில் வைத்திடும். பிரதமர் முதலாளிகளுக்கு உணர்ச்சியூட்டக்கூடிய விதத்தில் பேசியிருப்பதில் இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும் மயங்கிடக்கூடாது. அவர்கள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் நலன்களுக்காக மட்டுமல்ல, தங்கள் சொந்த நலன்களுக்காகவும் வேண்டியாவது, பொது முதலீடுகளை அதிகப்படுத்துமாறும் தங்களுக்கு அபரிமிதமான சலுகைகள் அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். திருவாளர் பிரதமர் அவர்களே, இதுவே, ‘‘பிரச்சனையின் சரியான ஆய்வின் மீது’’ அமைந்த ‘‘சரியான கொள்கை’’யாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
(தமிழில்: ச.வீரமணி)


No comments: