Sunday, November 4, 2012

ஊடக சுதந்தரத்தின் மீதான தாக்குதல்




மத்திய நிதி அமைச்சரின் மகன் ‘‘வாத்ராவை விட அதிகமாகவே சொத்து சேர்த்திருக்கிறார்’’ என்று டிவிட்டரில் எழுதியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பது பேச்சு சுதந்திரத்தைத் தடை செய்வதற்கான வாய்ப்பான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்ப சட்டம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மீண்டும் நினைவுறுத்தும் சம்பவமாக மாறியுள்ளது. இதில் குறிப்பாக அதிர்ச்சி தரத்தக்க விஷயம் என்னவெனில், கார்த்தி சிதம்பரத்திடமிருந்து மின்னஞ்சல் மூலமாக வந்த புகாரை வைத்தே ஒரு போலீஸ் படை ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா’’ அமைப்பின் செயல்வீரரைப் படுக்கையிலிருந்து கிட்டத்தட்ட இழுத்துக்கொண்டு வந்து அவரைக் கைது செய்திருக்கிறது என்பதுதான். மின்னியல் வடிவத்தில் விமர்சனரீதியான கருத்துக்கள் பரவுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66(ஏ) பிரிவின்கீழ தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில், இந்த மேலாதிக்க நடவடிக்கை சமீபத்திய ஒன்றாகும். இது அப்பட்டமான தணிக்கை என்பதைத் தவிர வேறு அல்ல. இதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டியதும் எதிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.
2008ஆம் ஆண்டில் சட்டத் திருத்தம் ஒன்றின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பிரிவானது, அரசியலமைப்புச் சட்ட ரீதியாக சரியானதுதான் என்று உறுதிப்படுத்த இயலாத ஒன்றேயாகும். அது மிக மோசமாக உருவாக்கப்பட்ட சட்டத் திருத்தம் என்பதுமட்டுமின்றி நிச்சயமாக மேலோட்டமான ஒன்று என்பதோடு அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(அ) பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள பல ஆண்டுகளாகச் சிறப்பாகச் செயல்பட்டு வரும் பேச்சு சுதந்திரத்தை அடியோடு அழிக்கும் தன்மை வாய்ந்ததுமாகும். மேலும், பெருமளவிற்குத் தாக்கும் நோக்கம் கொண்ட, அச்சுறுத்தும் தன்மை கொண்ட, அசூயை அல்லது சங்கடத்தை உருவாக்கக்கூடிய தன்மை கொண்டது என்ற அடிப்படையில் தகவல் பரிமாற்றத்தை ஒரு குற்றமாக மாற்றுவது என்பது எதேச்சாதிகாரமான அமலாக்க வழிமுறையைக் கட்டவிழ்த்து விடும். கடந்த சில மாதங்களாக இதைத்தான் இந்த நாடு பார்த்துக்கொண்டு வருகிறது. பேச்சு சுதந்திரத்தைப் பொறுத்தவரையில், இந்தியா ஒரு பாரம்பர்யத்தைக் கொண்டதாகும். அடிப்படை உரிமைகள் குறித்து சட்டரீதியான விளக்கங்கள், அனைத்து வகையான ஊடகங்களுக்கும் சமமாகப் பொருந்துவதாக இருக்க வேண்டும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் பற்றிய பல குற்றச்சாட்டுக்களை அச்சிலோ அல்லது ஒளி-ஒலிபரப்பின் மூலமாகவோ, கொண்டு வருவதற்காகப் பத்திரிகை யாளர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க இயலாது.  அதைப் போலவே ஊழலுக்கு எதிரான இந்தியாஅமைப்பின் செயல்வீரர் ஈடுபட்டதாக கார்த்தி சிதம்பரம் சாட்டுகிற அவதூறு என்பது அடிப்படையில் உரிமையியல் (சிவில்) சமாச்சாரமாகும். மேலும் இந்த விஷயத்தில் செய்ய வேண்டியது என்னவென்பதுபற்றிய சட்டமும் தெளிவாகவே உள்ளது. அதாவது இது தொடர்பாக அறிவிப்பு அனுப்பப்பட்டு, அதற்குப் பதிலளிப்பதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதன்பின்பு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதே அடிப்படை செயல்முறையாகும். மிக வேகமாக வளர்ந்துகொண்டு வரும் இணையதள ஊடகத்தை வேறுவகையாகக் கையாளவேண்டும் என்பதான எந்தவொரு வாதமும் மறுதலிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். செல்வாக்கு மிக்கவர்களின் மீதான விமர்சனரீதியான விஷயங்களைப் பதிப்பித்ததாகவோ அல்லது மின்னியல் வடிவில் சுற்றுக்கு விட்டதாகவோ மும்பையில் கேலிச்சித்திரக் கலைஞர் அசீம் திரிவேதி, மேற்கு வங்கத்தில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மற்றும் அவரது அண்டைவீட்டுக்காரர் கைது செய்யப்பட்டதையொட்டி மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான கோபம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மறுபரிசீலனை செய்ய  மத்திய அரசைத் தூண்டவில்லை என்பது துரதிர்ஷ்டவசமாகும். மேற்கு வங்கத்தில் இரண்டு பேரைத் துன்புறுத்தியதற்கு, போலீசே காரணம் என்று மேற்கு வங்க மனித உரிமைகள் கமிஷன் சுட்டிக்காட்டி அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட பின்னரும் கூட, மத்திய அரசின் மெத்தனம் நீடிக்கிறது. இதனால், பாதிக்கப்படும் பலரின் நன்மை கருதியும், பேச்சு சுதந்திரத்திற்கு எதிராக விருப்பமான ஒரு கருவியாக அது மாறியுள்ள நிலையிலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம் முழுவதுமே மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளது.
(நன்றி: தி இந்து நாளிதழ், 2.11.12 தலையங்கம். தி இந்து போட்காஸ்ட்டில் தமிழாக்கம் செய்து ஒலிவடிவில் வீ.பா. கணேசன் வழங்கியதை, வரிவடிவமாக்கியது: ச.வீரமணி)



No comments: