Wednesday, November 21, 2012

காவல்துறையினரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது




அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள பேச்சுரிமையின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களை முகநூலில் வெளிப்படுத்தியமைக்காக இரு இளம்பெண்களை மகாராஷ்ட்ரா காவல்துறையினர் கைது செய்திருக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஒரேயொரு விதத்தில்தான் பரிகாரம் காண முடியும்.
 எதிர்காலத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கக்கூடிய விதத்தில் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டத்தின் முழு சக்தியும் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட வேண்டும், சட்டவிரோதக் கைது , தவறாகத் தடுத்துநிறுத்தி  வைத்தல் (wrongful restraint) மற்றும் தவறாக அடைத்து வைத்தல் ( wrongful confinement) ஆகிய குற்றங்களுக்கான அதிகபட்சத் தண்டனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்துவோர் மீது இரக்கமின்றி நடப்பவர்கள் கடும் விளைவுகளுக்கு ஆளாவார்கள் என்கிற செய்தி  பரவலாகச் சென்றடையும்.  பால் தாக்கரேயின் மரணத்தை அடுத்து கடையடைப்பு செய்தது தொடர்பாக முகநூலில் ஒரு பெண் தன் கருத்தை வெளியிட்டமைக்காகவும், அதனை அவரது நண்பர் சரி என்று ஆதரித்தமைக்காகவும், அவற்றை ஆட்சேபகரமானது என்று கூறி தானே, பால்காரில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட குண்டர்களுக்குக் காவல்துறையினர் அடிபணிந்து போயிருப்பது அதைவிட மோசமான ஒன்றாகும். காவல்துறையினர் ஒரு சுதந்திர நாட்டில் அனுமதிக்கப்படக்கூடாத விதத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தையும், இகழார்ந்த (infamous) தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவையும் (இப்பிரிவு அவமதிப்பு உண்டாக்கக்கூடிய செய்திகள் தொடர்பானது) இணைத்துக்கொண்டு தான்தோன்றித்தனமான கைதுகளில் ஈடுபடத்தயாராயிருப்பதும் அவர்களது தணிக்கைக்குரிய நடவடிக்கைகளை மூடிமறைக்க முயல்வதும்தான்   இந்நிகழ்விலிருந்து தெரிய வருசிறது. இதேபோன்று முன்பொருமுறையும் நடைபெற்றிருக்கிறது.
சமூக வலைத்தளங்கள் அதிகரித்து வருவது  சராசரிப் பிரஜைகளுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திட ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இது அதிகாரத்தில் உள்ள பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.  ஊடகத்தின் வீச்சு தங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விரிவானதாக இருக்கிறது. எனவே இவ்வாறு செய்திகளைப் பரப்புவோரில் ஒரு சிலரை காவல்துறையினரைப் பயன்படுத்தி கணக்குத் தீர்த்துக் கொள்ள முன்வந்திருக்கிறார்கள். எனவேதான் அதிகாரத்தை ஆணவத்துடன் துஷ்பிரயோகம் செய்து இவ்வாறு கைது செய்வது தொடர்கிறது.  இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குறிப்பிடத்தக்க அளவிற்குத் தண்டனை ஏதுமில்லை. ஒரு கைது செய்யப்படும் பட்சத்தில் அது எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக வழிகாட்டும் நெறிமுறைகளை அளித்திருக்கிறது.  அவை முகநூல் பெண்கள்விஷயத்திலும் மற்றும் பல வழக்குகளிலும் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன.  நீதிமன்றம் ஜோகிந்தர் குமார் (எதிர்) உத்தரப்பிரதேச மாநில அரசு என்னும் வழக்கில் சுட்டிக்காட்டியிருப்பதைப்போலசட்டரீதியாக இருந்தாலும் கூட ஒரு காவல்துறை அதிகாரி மிகவும் எளிதாக ஒருவரைக் கைது செய்திடக் கூடாது. காவல்துறை அதிகாரி அதனை நியாயப்படுத்தக்கூடிய விதத்தில் அது அமைந்திருக்க வேண்டும். இளம்பெண்களைக் கைது செய்துள்ள பால்கார் காவல்துறையினர் இந்த விஷயத்தில் சட்டத்தின் கண்களின் முன் மிகவும் நிர்வாணப்படுத்தப்பட்டு நிற்கின்றனர். அவர்கள் செய்த செயலை அவர்களால் நியாயப்படுத்தவே முடியாது, முதல்நோக்கிலேயே கண்டனத்திற்கு ரியவர்களாவார்கள்.  இந்தியா போன்றதொரு நாட்டில், பேச்சு சுதந்திரத்திற்கான வாய்ப்புகள் சுருங்கி வருவது மிகவும் கவலையளிக்கிறது. இதற்கு எதிராக இப்போது உறுதியாக செயல்பட்டாக வேண்டும்.  அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள பேச்சு சுதந்திரத்தை செல்லுபடியற்றதாக மாற்ற வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு நீக்கப்பட வேண்டும். அத்துடன், மகாராஷ்ட்ரா அரசு சிவசேனை மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டுப்படுத்திடவும் முன்வர வேண்டும்.
(நன்றி: தி இந்து நாளிதழ், 21-11-12 தலையங்கம்)
தமிழில்: ச.வீரமணி

No comments: