Monday, October 22, 2012

இடைவெளி அதிகரித்திருக்கிறது



2012 உலக அளவிலான பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைகள் குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை, கடந்த இருபதாண்டு காலமாக ஆட்சியாளர் கள் கடைப்பிடித்து வந்த நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகள் நாட்டில் இரு வேறு இந்தியர்களை-ஒளிரும் இந்தியர்களையும் பசி-பஞ்சம்-பட்டினியால் அவதிப்படும் இந்தியர்களையும் - உருவாக்கு வதற்கே இட்டுச் சென்றுள்ளது. இதில் மிகவும் கொடூரமான உண்மை என்ன வெனில், வரவிருக்கும் காலங்களில் இவ் விடைவெளி மேலும் கூர்மையான முறையில் விரிவாகும். உலக அளவில் சத்துணவுக்குறைவால் வாடும் மக்களின் எண்ணிக்கை 1990களின் மத்திய காலத்திலிருந்து 2006-08ஆம் ஆண்டுகள் வரை, தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது என்பதை உலக வங்கி ஒப்புக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்திய உலகமயம் தாங்கள் பெறும் லாபத்தின் அளவை அதிக பட்ச அளவிற்குப் பெருக்க வேண்டும் என்கிற துடிப்புதான் இதற்குக் காரணம் என்பது தெள்ளத் தெளிவாகும். மூலதனக் குவியலின் பல்வேறு வடிவங்களும் உலக மக்களில் பெரும்பான்மையானவர்களின் வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியுறக்கூடிய விதத் தில் இட்டுச் சென்றிருக்கின்றன. ஆயினும், உலக வங்கி உலகில் உள்ள பசி - பஞ்சம் - பட்டினிக் கொடுமையை மூன்று முக்கிய சுட்டிக்காட்டும் கருவிகள் மூலம் அளந்திருக்கிறது. அதாவது, குழந்தைகள் எடை குறைவாக இருத்தல், சிசு மரண விகி தம் மற்றும் சத்துணவுக்குறைபாட்டுடன் காணப்படும் மக்கள் ஆகிய மூன்று கருவி களை அளவுகோலாகக் கொண்டு இதனைச் செய்திருக்கிறது. 2012ல் பட்டினிக் கொடுமையால் பரிதவிப்போர் அதிகமாக உள்ள உலக நாடுகள் 79ல் நமது நாடு 65வது இடத்தில் இருக்கிறது.
நம் அண்டை நாடு களான பாகிஸ்தானும், நேபாளமும் கூட நம் மை விட உயர்நிலையில் உள்ளன. குழந்தை கள் போதிய எடையின்றி வாழும் நாடுகளின் எண்ணிக்கை 129 என்றால் அதில் இந்தியா வின் வரிசை 128 ஆகும். இதற்கு அடுத்த படியாக ஒரேயொரு நாடுதான் இருக்கிறது. அதன்பெயர் டிமோர்-லெஸ்டே என்பதாகும். (உலக வரைபடத்தில் கண்டுபிடிக்க முயற் சிக்க) 1996ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது, இந்தியா 22.6 சதவீத மாக இருந்தது. இப்போது 2012ஆம் ஆண் டில் 22.9 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. கடந்த இருப தாண்டுகளில் ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த சீர்திருத்தங்களின் பலன் இதுவே ஆகும். இந்தியாவின் இத்தகைய நிலையை மிகவும் குறைகூறியுள்ள உலக வங்கி, தன்னு டைய அறிக்கையில், ‘‘இந்தியா வலுவான பொரு ளாதார வளர்ச்சி கண்டிருந்தபோதிலும், பட்டினி கிடப்போரை முன்னேற்றுவதில் மிகவும் பிந்தைய நிலையிலேயே இருக்கிறது. 1996க்கும் 2001க்கும் இடையே சிறிய அளவு உயர்வு ஏற்பட்டது. தற்போதைய நிலை 1996 மட்டத்திற்குப் பின்னடைந்துவிட்டது. நாட் டின் மொத்த தேசிய வருமானம் இருமடங்கு அதிகரித்துள்ள போதிலும்கூட, பட்டினிக் கிடப்போர் நிலைமையில் எவ்வித முன்னேற் றமும் இல்லாமல் தேக்க நிலை நீடிக்கிறது.’’உள்நாட்டுப் போரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையும் வங்க தேச மும் கூட இந்தியாவின் நிலையைவிட எழுத் தறிவிலும், மக்கள் அதிக ஆண்டு காலம் உயி ருடன் இருப்பதிலும் மேம்பட்ட நிலை யிலேயே இருக்கின்றன என்றும், இதற்குக் காரணம் அந்நாடுகளின் அரசுத் தலையீடு தான் காரணமே தவிர அங்குள்ள ‘‘சந்தை சக்திகள்’’ அல்ல என்றும் அறிக்கை குறிப் பிட்டிருக்கிறது.ஒரு நாட்டில் மக்கள் ஊட்டச்சத்துக் குறைவுடன் காணப்படுவதற்கு அவர்களுக் குப் போதிய உணவு கிடைக்கவில்லை என் பது மட்டும் காரணம் அல்ல என்று குறிப் பிட்டுள்ள அறிக்கையானது, அவர்களுக்குப் ‘‘போதிய அளவிற்கு சுகாதாரப் பாதுகாப்பு வசதிகள் அல்லது தூய்மையான சுற்றுச் சூழல்’’ இல்லாதிருப்பதும் காரணங்களாகும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ‘
‘இந்தியாவில் உள்ள தாய்மார்களில் 36 விழுக்காட்டினர் எடைகுறைவுடன் காணப்படுகின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் உள்ள தாய்மார்களில் 16 விழுக்காட்டினர்தான் இந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்’’ என்றும் அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் சார்பாக, புள்ளி யியல் துறை அமைச்சகமானது, ஆயிர மாண்டுகள் வளர்ச்சி இலக்குகள் தொடர்பாக, எந்த அளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்டிருக் கிறது என்பது குறித்து, ஒவ்வோராண்டும் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு அறிக்கை தாக் கல் செய்து வருகிறது. அவ்வாறு அனுப்பிய 2011ஆம் ஆண்டிற்கான அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு வாக்கில் ஒவ்வொரு மட்டத் திலும் குறைந்தபட்ச இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. அதில் எதையும் அடைவதற்கு சாத்தியமில்லை என்று அறிக்கை குறிப் பிட்டிருக்கிறது. ஆயிரமாண்டுகள் வளர்ச்சி இலக்குகளின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் குறைந்த எடை யுடன் உள்ள குழந்தைகள் 26 விழுக்காடாக இருக்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால் தற்போது நம் நாட்டில் இது 33 விழுக்காடாக இருக்கிறது. அதேபோன்று குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரமாண்டுகள் வளர்ச்சி இலக்குகளின்படி, ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் இறக்கும் குழந்தைகள் 27ஆக இருக்க வேண்டும் என்பது இலக்கு. ஆனால் தற்போது அது 44ஆக இருக்கிறது. மேலும் நம் நாட்டில் எவ்வித சுகாதார வசதியுமின்றி உள்ள குடும்பங்கள் 43 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் தற்போதுள்ள நிலவரம் குறித்த அறிக்கை ஒப்புக் கொள்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக குறைந்த அளவே பொது சுகாதாரத்திட்டங்களுக்குச் செலவு செய்வ தாலும், சுகாதாரப் பாதுகாப்பைத் தனியாரிடம் தாரைவார்த்திருப்பதும் தான் இந்நிலைமைக் குக் காரணமாகும். உண்மையில் இது மேலும் மோசமாகும். ஆயினும், நிலைமைகள் மோசமாகியிருப் பதற்கு அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் நாள்தோறும் உயர்ந்துவருவதும் ஒரு முக்கிய காரணமாகும்.
இதன் விளை வாக, அதிக எண்ணிக்கையிலான மக்கள் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டு, போதிய அளவிற்கு சத்தான உணவை உட் கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படு கிறார்கள். நாட்டில் மொத்த விலைவாசி குறியீட்டெண் 2012 செப்டம்பரில் 7.8 விழுக் காடு அளவிற்கு உச்சத்தைத் தொட்டிருக் கிறது. நுகர்வோர் உணவுப் பொருள்களை வாங்கும்போது மேலும் அதிகமான விலை கொடுத்தே வாங்க வேண்டியிருக்கும். நகர்ப்புற நுகர்வோர் பணவீக்க விகிதம் கிட்டத்தட்ட 9.7 விழுக்காடு இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது நாட்டின் மொத்த விலைவாசிக் குறியீட்டெண் ணைவிட 2 விழுக்காடு அதிகம். இப்பண வீக்க விகிதம் கணிசமான அளவிற்கு உயர்ந்து, அதன் முழுமையான நேரடித் தாக்கு தலுடன், சமீபத்தில் டீசல் விலைகளை உயர்த்தியதன் மூலம் உயர்ந்துள்ள அத்தியா வசியப் பொருள்களின் விலைகளும் சேர்ந்து, அக்டோபரிலிருந்து அதன் முழுப் பாதிப்பு துவங்கிவிடும் என்று வல்லுநர்கள் மதிப்பிட் டிருக்கிறார்கள். வரவிருக்கும் பண்டிகை நாட் கள், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்க ளுக்கு மிகப்பெரிய அளவில் வேதனை யளிக்கக்கூடியதாகவே இருந்திடும்.நவீன தாராளமய சீர்திருத்தங்களினால் பயனடைந்துள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசிலருக்கு மட்டுமே வரவிருக்கும் பண்டிகை நாட்கள் பிரகாசமானதாக அமைந் திடும். பணக்காரர்கள், உண்மையில் மேலும் பணக்காரர்களாகி இருக்கிறார்கள். அமெரிக்க டாலர் பில்லியனர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கிறது.
அவர்களில் 54 பேர் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு சொத்துக்களை வைத்திருக் கிறார்கள். 2012 மார்ச்சுடன் முடியும் கடந்த மூன்றாண்டுகளுக்கான அறிக்கைகளின்படி நாட்டில் பட்டியலிடப்பட்டுள்ள உச்சநிலை யிலுள்ள 500 கார்ப்பரேட் கம்பெனிகள் தங்கள் ரொக்க இருப்பாக 9.3 லட்சம் கோடி ரூபாய் அல்லது 166 பில்லியன் டாலர்கள் தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் உள்ள பணம் நாட்டின் மின் உற்பத்தித் திறனை இரட்டிப்பாக்கக்கூடிய அளவிற்குப் போதுமானது அல்லது ஒவ்வோராண்டும் நாட்டின் 40 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிற்கு (தற்போது 800 கி.மீ. அளவிற்குத்தான் செய்யப்பட்டு வருகிறது) ஆறு வழி நெடுஞ்சாலைகள் அமைத்திடப் போது மானது. இந்தியாவில் உள்ள கார்ப்பரேட்டுகள் தங்களிடம் உள்ள பணத்தை எதிலும் முத லீடு செய்யாமல் இவ்வாறு முடக்கி வைத் திருப்பது ஏன்? நவீன தாராளமய சீர்திருத்தக் கொள்கையின் கீழ் இருவித இந்தியர்களை உருவாக்கும் ‘மாதிரி’தான் காரணம். நாட்டின் மிகப் பெரும்பான்மையான மக்கள் நாள் தோறும் அதிகரித்துவரும் பொருளாதாரச் சுமைகளின் விளைவாக, தாங்கள் உயிர்வாழ் வதற்குத் தேவையான அடிப்படைத் தேவை களைப் பூர்த்தி செய்தபின், மற்ற பொருள் களை வாங்குவதற்கான வாங்கும் சக்தி கிட்டத்தட்ட இல்லாது ஆக்கப்பட்டிருக் கிறார்கள். இவ்வாறு இவர்கள் சந்தையில் பொருள்களை வாங்கமுடியாத நிலை உருவாகி, உள்நாட்டுத் தேவை சுருங்கிவிட்டதன் காரணமாகத்தான், முதலாளிகள் முதலீடு களைச் செய்வதனை நிறுத்தி வைத்திருக் கிறார்கள். முதலாளிகள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவதற்கான பணம் மக்களிடம் இல்லாத நிலையில், அவர்கள் முதலீட்டை மேலும் செய்திடாமல் தங்கள் கைகளிலே ரொக்க இருப்பாகத்தான் வைத்துக்கொண்டிருப்பார்கள். பின்னர் இவர்கள் இப்பணத்தை ஊக நடவடிக்கை களில் பாயவிடுவார்கள். ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் சொத்துக்களின் விலைகள் உயர்வதற்கும், தங்கத்தின் விலை உயர்வதற் கும் இதுவே காரணங்களாகும்.இந்த நிலைமை மாற்ற முடியாததா? நிச்சயமாக முடியும். ஆனால், ஆட்சியாளர் கள் நவீன தாராளமயக் கொள்கையையே தொடர்ந்து அமல்படுத்தத் துடித்துக்கொண் டிருக்கும் வரையில் இது சாத்தியமில்லை.
ஆட்சியாளர்கள் அடிக்கடி நாட்டின் உயர் வளர்ச்சி விகிதம் குறித்துத் தம்பட்டம் அடித்த போதிலும், சர்வதேச நிதியம் சென்ற வாரம் இந்தியாவின் பொருளாதாரம் குறித்துக் கூறி யிருப்பது கவனிக்கத்தக்கதாகும். இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி முன்பிருந்த தைப்போல 6.2 விழுக்காடு இருக்காது என்றும், மாறாக 2012ல் அதன் வளர்ச்சி 4.9 விழுக்காடு அளவிற்குத்தான் காணப்படும் என்றும் மதிப்பிட்டிருக்கிறது. எனவே எப் படிப் பார்த்தாலும், வரவிருக்கும் காலம் நாட் டின் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் வேதனை அளிக்கக் கூடியதாகவே அமைந்திடும்.ஆட்சியாளர்கள் கடுமையாக முயன்றால் மட்டுமே இந்நிலைமையினை மாற்ற முடியும். முன்னெப்போதும் காணாத அளவிற்கு மெகா ஊழல்களில் ஈடுபட்டு, நாட்டின் செல்வங் களை கொள்ளையடிப்பதை ஆட்சியாளர்கள் கைவிட்டு, அவர்கள் கொள்ளையடித்துள்ள பல லட்சம் கோடி ரூபாயை, நாட்டில் மிகப் பெரிய அளவிலான முதலீடுகளில் செலுத் தினால், நிலைமையில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இத்தகைய மெகா ஊழல்களே இவர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை யின் நேரடி விளைவேயாகும். இக்கொள் கைகள்தான் மிகவும் மோசமான அளவில் சலுகைசார் முதலாளித்துவத்தை அதிகப் படுத்தி இருக்கிறது. இப்போது மற்றொரு எதார்த்த நிலையை யும் பரிசீலிப்போம். பட்ஜெட் ஆவணங்களின் படி, ரத்து செய்யப்பட்ட வரிகள் என்ற முறை யில் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்ட சலு கைகள் 2008-09ல் 4 லட்சத்து 14 ஆயிரத்து 99 கோடி ரூபாயாகும். இது 2009-10ல் 5 லட் சத்து 02 ஆயிரத்து 299 கோடி ரூபாயாக அதி கரித்தது.
2010-11ஆம் ஆண்டில் இது 5 லட் சத்து 11 ஆயிரத்து 630 கோடி ரூபாயாக உயர்ந்தது. இதில், கார்ப்பரேட் நிறுவனங் களுக்கும் உயர் அளவு வருமான வரி செலுத்துவோருக்கும் அளிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள், 2008-09ஆம் ஆண்டில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 471 கோடி ரூபாயாகும், 2009-10ஆம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயி ரத்து 483 கோடி ரூபாயாக இருந்திருக்கின் றன. 2010-11ஆம் ஆண்டில் இது 1 லட்சத்து 38 ஆயிரத்து 921 கோடி ரூபாயாக உயர்ந்தது. கடந்த மூன்றாண்டுகளில் அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்ட வரிவருவாய் என்பது மொத்தத்தில் 14 லட்சத்து 28 ஆயிரத்து 28 கோடி ரூபாயாகும். இதில் கார்ப்பரேட்டு களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாயை அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது.நிதிப் பற்றாக்குறை என்று கூறப்படுகிற 5 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாயுடன் இந்தச் சலுகைகளை ஒப்பிட்டுப்பாருங்கள், பிரதமர் அவர்களே. நியாயமாக வரவேண்டிய இந்த வரிகள் வசூலிக்கப்பட்டிருக்குமானால் நிச்சயமாக நிதிப்பற்றாக்குறை எதுவும் வந்திருக்காது, நம் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதியில் பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்காது. மாறாக, வேலைவாய்ப்புகளும், அதனைத் தொடர்ந்து உள்நாட்டுச் சந்தையும் விரி வடைந்திருக்கும். உள்நாட்டுச் சந்தை அதி கரிப்பதை அடுத்து, தனியார் முதலீடும் அதி கரிக்கும். இவற்றின் காரணமாக, மக்களின் நேரடி வாழ்க்கையில் இவை முன்னேற் றத்தை ஏற்படுத்தி, மக்கள் மத்தியில் தற் போது நிலவிவரும் பசி-பஞ்சம்-பட்டினிக் கொடுமைகளை இல்லாது ஒழித்துவிடும்.நாட்டில் அதிகரித்து வரும் வறுமையை யும், ஊட்டச்சத்துக்குறைவால் மக்கள் வாடு வதையும் மாற்றியமைக்கக்கூடிய அளவிற்கு நம்நாட்டில் வளங்கள் ஏராளமாக இருக்கின் றன. தேவை என்னவெனில், ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராள மயப் பொருளாதாரக் கொள்கைகள் கைவிடப் பட்டு, அந்த இடத்தில், பொது முதலீடு களைக் கணிசமான அளவிற்கு அதிகரிக்கக் கூடிய வகையில் அரசை செயல்பட வைத் திட வேண்டும்.
தமிழில்: ச.வீரமணி

No comments: