Friday, November 30, 2012

முற்றிலும் தவறான வாதம்


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட் டத்தொடர் முதல் நான்கு நாட்கள் முற்றிலுமாக சீர்குலைக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட பின்னர், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசாங்கம் ஒரு சிறுபான்மை அரசாங்க நிலைக்குச் சுருங்கிவிட்டது. எனவே அது, சில்லரை வர்த் தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் கொண்டுவந்துள்ள தீர்மானம் வாக் கெடுப்புக்கு விடப்படும் சமயத்தில் அரசு தனக்கு ஆதரவாகப் பெரும்பான்மையைப் பெற வேண்டும் என்பதற்காக கால அவகாசத் தைப் பெறும் பொருட்டு, இவ்வாறு சீர்குலைவு வேலைகளை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. சென்ற திங்களன்று நடைபெற்ற அனைத் துக் கட்சிக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் கட் சியும், சமாஜ்வாதிக் கட்சியும் தங்கள் மனதில் உள்ள ஆசைகளை வெளிப்படுத்திய பின்னர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாங்கள் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு குழுவாக(B-team) செயல்படுவோம் என்றும், வாக் கெடுப்புடன் கூடிய விவாதத்தை வலியுறுத்த மாட்டோம் என்றும் தங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய பின்னர், காங்கிரஸ் கட்சி செவ்வாயன்று ஐ.மு.கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணிக் கட்சிகளின் கூட் டத்தைக் கூட்டியது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக இடது சாரிகள் மற்றும் மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் விடுத்திருந்த தேசிய அளவிலான கடைய டைப்புப் போராட்ட அறைகூவலை ஆதரித்த திராவிட முன்னேற்றக் கழகம், ‘‘ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்திற்கு எதிராக வாக்க ளிக்க மாட்டோம் என்றும், அவ்வாறு செய்தால் அது வகுப்புவாத பாஜகவிற்கு பயனளிக் கலாம்’’ என்றும் கூறி தற்போது தலைகீழாய்க் கவிழ்ந்துவிட்டது. அடல் பிகாரி வாஜ்பாயின் தலைமையிலான பாஜகவின் அமைச்சர வையில் முழுமையாக இருந்த ஒரு கட்சியிட மிருந்து இவ்வாறு விசித்திரமான முறையில் விளக்கம் வந்திருக்கிறது. திரைமறைவில் எது நடந்திருந்த போதிலும், திமுகவின் முடிவின் மூலம் சிறுபான்மை ஐ.மு.கூட்டணி-2 அர சாங்கம் மீண்டும் ஒருமுறை ஒரு பெரும்பான் மையை எப்படியோ சமாளித்துப் பெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்திலிருந்து வெளியே வந்தபின், பிரதமர் தங்களுடைய அரசாங்கம் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு எதிராக எந்த வகையான தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும், அதனைத் தோற்கடிக்க பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது என்று மிகவும் பெருமையாகப் பீற்றிக்கொண்டிருக் கிறார். ஆயினும், நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் வரை, இது தொடர்பாக எந்த அறிவிப்பும் இதுவரை வரவில்லை. (வெள்ளிக்கிழமையன்று உள்ள நிலவரப்படி மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு மக்களவை சபாநாயகர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.) அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர்கள் ‘‘அரசாங்கத்தின் விருப்பு வெறுப்புக்குக் கீழ் வரும் நிர்வாக முடிவுகளின் (executive decision) மீது நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை’’ என்கிற வாதத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய முன்னுதாரணம் 2001 மார்ச் 1 அன்று மக்களவையில் ஏற் கனவே இருந்திருக்கிறது, பால்கோ எனப் படும் பாரத் அலுமினியம் கம்பெனியின் பங்கு களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட அரசு மேற்கொண்ட நிர்வாக முடிவுகளுக்கு எதிராக விவாதம் நடைபெற்று, வாக்கெடுப்பும் நடந்தது.
பல்துறை சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திடும் முடிவு ஒரு நிர்வாக முடிவு என்று கூறப்படுவதானது முற்றிலும் தவறான ஒன்றாகும். இத்துறையில் அந்நிய நேரடி முதலீடு என்பது 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண் மைச் சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமின்றி தடைசெய்யப்பட்டுள்ள ஒன்றாகும். அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடிய விதத்தில் எவ்விதமான முடிவினை மேற் கொள்வதாக இருந்தாலும், 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட் டத்தின் விதிமுறைகளில் திருத்தம் செய்தாக வேண்டும். அதனை இந்திய ரிசர்வ் வங்கி செய்திருக்கிறது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கை எதுவும் அளிக்காது. இவ் வாறு திருத்தம் செய்தமைக்கு எதிராக, இவ் வாறு திருத்தம் செய்தது தொடர்பாக உரிய சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அரசாங்கத்திற்கு எதிராகக் குற்றம் சாட் டப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மீது, 2012 அக்டோபர் 15 அன்று உச்சநீதிமன்றம் ‘‘இதன்மீது உரிய சட்ட நடைமுறைகள் பின் பற்றப்படவில்லை’’ என்று அரசுக்குச் சுட்டிக் காட்டியபோது, அரசுத்தரப்பில் ஆஜரான அட் டார்னி ஜெனரல் ‘‘இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தேவையான திருத்தத்தை இரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்ட விதிமுறை களில் செய்திடும்’’என்கிற உறுதிமொழியை உச்சநீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கிறார். அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி, பல்பொருள் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முத லீட்டை அனுமதிப்பதற்கு வகை செய்யக் கூடிய விதத்தில் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள் செய்துள்ளது. இது, 2012 அக்டோபர் 30 அரசிதழிலும் பிரசுரிக்கப் பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டு அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 48ஆவது பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கியால் இச்சட்டத்தின் விதிமுறைகளில் எவ்விதமான திருத்தம் கொண்டுவரப்பட்டாலும் அது ‘‘எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக’’ (“as early as possible”) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். மேலும், அவ்வாறு தாக்கல் செய் யப்பட்டபின், இந்திய ரிசர்வ் வங்கியின் திருத் தத்தின் மீது இரு அவைகளில் எந்த அவையி லிருந்தாவது எந்த உறுப்பினராவது திருத்தம் கொண்டுவர முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கி யின் திருத்தம், சட்டப்படி செல்லாது என்று கூட திருத்தம் கொண்டுவர முடியும். அத் தகைய திருத்தத்தை உறுப்பினர் 30 நாட் களுக்குள் கொண்டுவர வேண்டும். அவ்வாறு உறுப்பினர் திருத்தம்கொண்டுவரம் பட்சத்தில் அது அவையின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும். இதுவும் வாக்கெடுப்பின் மூலம் மட்டும்தான் நடத்தப்பட வேண்டும்.எனவே, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது என்கிற முடிவு ஏற்கனவே உள்ள சட்டங்களின் கீழான ஒரு நிர்வாக முடிவு (executive decision) அல்ல, மாறாக அவ்வாறு அரசு முடிவு எடுக்க வேண் டுமானால், அதற்கு ஏற்கனவே இருந்துவரும் சட்டத்தில் திருத்தம் செய்தாக வேண்டும். நம் நாட்டின் அரசியலமைப்புச் சட்டத் தின்கீழ், இவ்வாறு சட்டத்தின் கீழ் திருத்தங் களை நிர்வாகமோ (அதாவது அரசாங்கமோ) அல்லது நீதித்துறையோ செய்துவிட முடியாது. சட்டங்களை உருவாக்குவதற்கு, அல்லது ஏற் கனவே இருந்துவரும் சட்டங்களில் திருத் தங்களைக் கொண்டுவருவதற்கு, அதிகாரம் படைத்த ஒரே அமைப்பு நாடாளுமன்றம் மட் டும்தான். இவ்வாறு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற் கான முடிவை நாடாளுமன்றம் மட்டுமே எடுத் திட முடியும். எனவே இவ்வாறு நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் இதில் அரசாங்கம் முடிவு எடுக்க முடியாது என்று ஆணித்தர மாக அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் உள்ள இத்தகைய நடை முறையை புறக்கணித்திட, அழித்திட, அல்லது பயனற்றதாக்கிட அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் வெற்றிபெற அனு மதித்திட முடியாது. உச்சநீதிமன்றத்தின் நிர்ப் பந்தத்தின் காரணமாகத்தான் அரசாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத் தின் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர முன்வந்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள மனுதாரர், அரசாங்கம், அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத் தின் 48ஆவது பிரிவின்படி நாடாளுமன்றத் தின் இரு அவைகளிலும் இவ்வாறு தான் செய் துள்ள திருத்தங்களை தாக்கல் செய்யாது இருந்துவிடலாம் என்கிற தன் ஐயுறவுகளை (apprehensions) உச்சநீதிமன்றத்தில் வெளிப் படுத்தியபோது, உச்சநீதிமன்றம் தற்போது நடைபெற்றுவரும் குளிர்காலக் கூட்டத் தொடர் முடியும் வரை பொறுத்திருங்கள் என்று அறிவுறுத்தியிருக்கிறது. ஒருவேளை அர சாங்கம் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தின் 48ஆவது பிரிவின் ஷரத்துக் களைப் பின்பற்றாது இருந்துவிடுமானால், பின்னர் மனுதாரர் அதுதொடர்பாக உச்சநீதி மன்றத்தை மீண்டும் அணுகமுடியும் என்று உச்சநீதிமன்றம் மனுதாரருக்குக் கூறியிருக் கிறது. நாட்டில் அமலில் உள்ள சட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படவில்லை எனில், பின் உச்சநீதிமன்றமானது நிச்சயமாக இதில் தலையிடும் என்பது தெளிவாகி இருக்கிறது.இவ்வாறு, இந்தப் பிரச்சனை தொடர்பாக ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம், நாடாளுமன் றத்தில் வாக்கெடுப்பினைத் தவிர்த்திட எவ் வித வழியும் கிடையாது. ஆயினும், காங்கிரஸ் கட்சியானது கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இப்போதும் எப்படியாவது பெரும் பான்மையைப் பெற்றிட அனைத்துவிதமான வழிகளிலும் இறங்கியிருக்கிறது.
1993இல் சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த போது, அதனைத் தோற்கடிக்க இத் தகைய இழி வகைகளில் அது இறங்கியது. ஜார்கண்ட் கையூட்டு வழக்கில் அது வெட்ட வெளிச்சமாகியது. 2008இல் இந்திய-அமெ ரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு வெளியி லிருந்து அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டபோது, அவர்கள் மிகவும் வெட்கங் கெட்ட முறையில் குதிரை பேரம் நடத்தி வாக் குகளைப் பெற்று வென்றார்கள். வாக்கு களுக்குப் பணம்அளித்த ஊழல் மூலம் அது வெட்டவெளிச்சமாகியது. அதேபோன்று தற்போதும் நாடாளுமன்றத்தில் பெரும்பான் மையைப் பெறுவதற்காக இவர்கள் மேற் கொள்ளும் பேரங்கள் நாட்டின் முன் அம் பலமாவதற்கு அதிகக் காலம் பிடிக்காது.எப்படிப் பார்த்தாலும், நாட்டின் நலன், அதன் பொருளாதாரம் மற்றும் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றிட, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடை அனுமதிப்பது தொடர்பாக வாக் கெடுப்புடன் கோரிய விவாதத்தை நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரும், வாக்கெடுப்பு வரும்போது சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு எதிராக வாக்களித்திடும்.
தமிழில்: ச.வீரமணி


Saturday, November 24, 2012


அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற மதிப்பூதியம் பெறும் ஊழியர்கள்
குறைந்தபட்ச ஊதியம் கோரி 'மகாமுற்றுகை'ப் போராட்டம்
புதுதில்லி, நவ. 23-
மதிப்பூதியம் என்றும் ஊக்கத்தொகை என்றும் கூறி கோடிக்கணக்கான ஊழியர்களை ஏமாற்றிச் சுரண்டி வரும் மத்திய அரசு, தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நவம்பர் 26 - 27 தேதிகளில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறார்கள். இப்போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். 
இது தொடர்பாக புதுதில்லியில் உள்ள சிஐடியு அலுவலகமான பிடிஆர் பவனில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், கூறியதாவது:::








Friday, November 23, 2012

அங்கன்வாடி ஊழியர்கள் போன்ற மதிப்பூதியம் பெறும் ஊழியர்கள் - குறைந்தபட்ச ஊதியம் கோரி ‘மகாமுற்றுகை’ப் போராட்டம்




புதுதில்லி, நவ. 23-
மதிப்பூதியம் என்றும் ஊக்கத்தொகை என்றும் கூறி கோடிக்கணக்கான ஊழியர்களை ஏமாற்றிச் சுரண்டி வரும் மத்திய அரசு, தங்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி வரும்  நவம்பர்.26 - 27 தேதிகளில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்துகிறார்கள். இப்போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொள்கிறார்கள். 
இது தொடர்பாக புதுதில்லியில் உள்ள சிஐடியு அலுவலகமான பிடிஆர் பவனில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிஐடியு அகில இந்தியத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சென் மற்றும் செயலாளர் ஹேமலதா கூறியதாவது:
’’நாட்டில் போலியோ என்கிற கொடும் நோய் இன்றைய தினம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இதற்கு முக்கிய காரணம் நாட்டில் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் போன்று கீழ்மட்டத்தில் வேலை செய்யும் ஊழியர்களாகும். அங்கன்வாடி ஊழியர்கள் என்றும், ஆஷா ஊழியர்கள் என்றும், அனைவருக்கும் கல்வி போன்று பல்வேறு திட்டங்களிலும் படித்த இளைஞர்களையும், இளம்பெண்களையும் வேலைக்கு அமர்த்தி மத்திய அரசு வேலை வாங்கி வருகிறது. ஆனால், அவர்களை ஊழியர்கள் என்று அங்கீகரிக்காமல், அவர்கள் அனைவருக்கும் ‘சமூக ஆர்வலர்கள்’, ‘சமூக செயல்வீரர்கள்’, ‘நண்பர்கள்’, ‘விருந்தினர்கள்’, ‘யசோதாக்கள்’, ‘மமதாக்கள்’ என்று பெயரிட்டு அவர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் கூட அளிக்காமல் மதிப்பூதியம்,  தொகுப்பூதியம் என்ற பெயர்களில் அற்பத் தொகையை அளித்து வருகிறது. 
நாட்டில் போலியோ ஒழிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர்கள் அங்கன்வாடி ஊழியர்களாவர். அதேபோன்று கிராமப்புறங்களில் கர்ப்பிணிப் பெண்கள் இறப்பு விகிதம் அநேகமாக இல்லாமல் ஒழிக்கப்பட்டிருப்பதற்கும் தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆஷா என்ற பெண் ஊழியர்களாவர். ஆனால் இவர்களுக்கு நிரந்தர ஊதியம் எதுவும் கிடையாது. மாறாக ஒரு பெண் கருவுற்றபின் அவர்து கர்ப்ப காலமான பத்து மாதங்களுக்கும் அவரை முறையாகக் கவனித்து, உதவி செய்து, பிரசவ காலத்தில் மருத்துவமனையில் சேர்க்கும் வரை உதவி செய்தால், ஓர் ‘ஆஷா’ ஊழியருக்கு 350 ரூபாய் (இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது) என்று வழங்கப்படுகிறது. இவ்வாறு சமூகத்தில் ஆணி வேராக இருக்கக்கூடிய கிராமங்களில் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் இவர்களுக்கு அரசாங்கம் வண்ண வண்ணப் பெயர்களிட்டு அழைத்தபோதிலும், தொழிலாளர் என்ற அந்த°தை மட்டும் அளிக்க மறுத்து வருகிறது. 
இதனை நாட்டிற்குத் தெரிவிக்கும் வண்ணம் நாடாளுமன்ற வீதியில் வரும் நவம்பர்  26-27 தேதிகளில் இப்பெண் ஊழியர்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். 
வரும் அனைவரையும் ஊழியர்கள் என்று அங்கீகரித்து, மதிப்பூதியம், ஊக்கத்தொகை போன்று கூறி ஏமாற்றாமல் அனைவரும்  மத்தியத் தொழிற்சங்கங்கள் கோரியுள்ளவாறு மாதம் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறையாது குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும், ஓய்வூதியம், பணிக்கொடை, வருங்கால வைப்பு நிதி, சுகாதாரக் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு போன்ற சமூகப் பாதுகாப்புப் பயன்கள் அளிக்கப்பட வேண்டும், அனைவரையும் முறைப்படுத்த வேண்டும் என்று கோரி இவர்கள் முற்றுகைப்போராட்டத்தை நடத்துகிறார்கள். 
இவ்வாறு ஏ.கே.பத்மநாபன், தபன்சென், ஹேமலதா ஆகியோர் கூறினார்கள்.
(ந.நி.)

Wednesday, November 21, 2012

காவல்துறையினரின் நடவடிக்கை கண்டனத்திற்குரியது




அரசியலமைப்புச் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள பேச்சுரிமையின் அடிப்படையில் தங்கள் கருத்துக்களை முகநூலில் வெளிப்படுத்தியமைக்காக இரு இளம்பெண்களை மகாராஷ்ட்ரா காவல்துறையினர் கைது செய்திருக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கு ஒரேயொரு விதத்தில்தான் பரிகாரம் காண முடியும்.
 எதிர்காலத்திற்கு எடுத்துக் காட்டாக இருக்கக்கூடிய விதத்தில் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சட்டத்தின் முழு சக்தியும் அவர்கள் மீது பிரயோகிக்கப்பட வேண்டும், சட்டவிரோதக் கைது , தவறாகத் தடுத்துநிறுத்தி  வைத்தல் (wrongful restraint) மற்றும் தவறாக அடைத்து வைத்தல் ( wrongful confinement) ஆகிய குற்றங்களுக்கான அதிகபட்சத் தண்டனைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்துவோர் மீது இரக்கமின்றி நடப்பவர்கள் கடும் விளைவுகளுக்கு ஆளாவார்கள் என்கிற செய்தி  பரவலாகச் சென்றடையும்.  பால் தாக்கரேயின் மரணத்தை அடுத்து கடையடைப்பு செய்தது தொடர்பாக முகநூலில் ஒரு பெண் தன் கருத்தை வெளியிட்டமைக்காகவும், அதனை அவரது நண்பர் சரி என்று ஆதரித்தமைக்காகவும், அவற்றை ஆட்சேபகரமானது என்று கூறி தானே, பால்காரில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்ட குண்டர்களுக்குக் காவல்துறையினர் அடிபணிந்து போயிருப்பது அதைவிட மோசமான ஒன்றாகும். காவல்துறையினர் ஒரு சுதந்திர நாட்டில் அனுமதிக்கப்படக்கூடாத விதத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தையும், இகழார்ந்த (infamous) தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவையும் (இப்பிரிவு அவமதிப்பு உண்டாக்கக்கூடிய செய்திகள் தொடர்பானது) இணைத்துக்கொண்டு தான்தோன்றித்தனமான கைதுகளில் ஈடுபடத்தயாராயிருப்பதும் அவர்களது தணிக்கைக்குரிய நடவடிக்கைகளை மூடிமறைக்க முயல்வதும்தான்   இந்நிகழ்விலிருந்து தெரிய வருசிறது. இதேபோன்று முன்பொருமுறையும் நடைபெற்றிருக்கிறது.
சமூக வலைத்தளங்கள் அதிகரித்து வருவது  சராசரிப் பிரஜைகளுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்திட ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இது அதிகாரத்தில் உள்ள பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது.  ஊடகத்தின் வீச்சு தங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு விரிவானதாக இருக்கிறது. எனவே இவ்வாறு செய்திகளைப் பரப்புவோரில் ஒரு சிலரை காவல்துறையினரைப் பயன்படுத்தி கணக்குத் தீர்த்துக் கொள்ள முன்வந்திருக்கிறார்கள். எனவேதான் அதிகாரத்தை ஆணவத்துடன் துஷ்பிரயோகம் செய்து இவ்வாறு கைது செய்வது தொடர்கிறது.  இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குறிப்பிடத்தக்க அளவிற்குத் தண்டனை ஏதுமில்லை. ஒரு கைது செய்யப்படும் பட்சத்தில் அது எப்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கு உச்சநீதிமன்றம் மிகத் தெளிவாக வழிகாட்டும் நெறிமுறைகளை அளித்திருக்கிறது.  அவை முகநூல் பெண்கள்விஷயத்திலும் மற்றும் பல வழக்குகளிலும் அப்பட்டமாக மீறப்பட்டிருக்கின்றன.  நீதிமன்றம் ஜோகிந்தர் குமார் (எதிர்) உத்தரப்பிரதேச மாநில அரசு என்னும் வழக்கில் சுட்டிக்காட்டியிருப்பதைப்போலசட்டரீதியாக இருந்தாலும் கூட ஒரு காவல்துறை அதிகாரி மிகவும் எளிதாக ஒருவரைக் கைது செய்திடக் கூடாது. காவல்துறை அதிகாரி அதனை நியாயப்படுத்தக்கூடிய விதத்தில் அது அமைந்திருக்க வேண்டும். இளம்பெண்களைக் கைது செய்துள்ள பால்கார் காவல்துறையினர் இந்த விஷயத்தில் சட்டத்தின் கண்களின் முன் மிகவும் நிர்வாணப்படுத்தப்பட்டு நிற்கின்றனர். அவர்கள் செய்த செயலை அவர்களால் நியாயப்படுத்தவே முடியாது, முதல்நோக்கிலேயே கண்டனத்திற்கு ரியவர்களாவார்கள்.  இந்தியா போன்றதொரு நாட்டில், பேச்சு சுதந்திரத்திற்கான வாய்ப்புகள் சுருங்கி வருவது மிகவும் கவலையளிக்கிறது. இதற்கு எதிராக இப்போது உறுதியாக செயல்பட்டாக வேண்டும்.  அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள பேச்சு சுதந்திரத்தை செல்லுபடியற்றதாக மாற்ற வகை செய்யும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66-ஏ பிரிவு நீக்கப்பட வேண்டும். அத்துடன், மகாராஷ்ட்ரா அரசு சிவசேனை மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் வன்முறை வெறியாட்டங்களைக் கட்டுப்படுத்திடவும் முன்வர வேண்டும்.
(நன்றி: தி இந்து நாளிதழ், 21-11-12 தலையங்கம்)
தமிழில்: ச.வீரமணி

Thursday, November 15, 2012

தோழர் பி. சுந்தரய்யா: லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் ஊட்டியவர்: ஹர்கிசன் சிங் சுர்ஜித்







(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, தோழர் பி. சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டை 2012 மே 1இலிருந்து ஓராண்டு காலத்திற்கு அனுசரிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தோழர் பி.சுந்தரய்யா குறித்து தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் எழுதிய கட்டுரை இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)
தோழர் சுந்தரய்யா இப்போது நம்முடன் இல்லை. தோழர் சுந்தரய்யா குறித்து நினைவுகளை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளினரும் என்றென்றும் நினைவில் வைத்துப் பூஜித்து வருகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகவும், ஏகாதிபத்திய வாதிகள், காலனியாதிக்கவாதிகள், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியவர்கள் எப்போதுமே அவரை மறக்க மாட்டார்கள்.
தொழிலாளர் வர்க்கத்திற்காகவும், சமூகப் புரட்சிக்காகவும் பல ஆண்டுகள் போராடி வருகிற எண்ணற்ற தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்கள். இடுக்கண் வருங்காலங்களில் தங்களுடைய புரட்சிகரத் தன்மையை அவர்கள் நன்கு மெய்ப்பித்தும் இருக்கிறார்கள். இத்தகைய தோழர்கள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் பெருமிதம் கொள்கிறது. ஆயினும் தோழர் சுந்தரய்யா இவர்கள் அனைவரையும் விட மேலானவர்.  அவர் சாமானிய மக்களின் மனிதர். மார்க்சிசம் - லெனினிசத்தின் அடிப்படையில் புரட்சியாளருக்குத் தேவையான அனைத்து ஸ்தாபனத்திறமைகளும் அவரிடம் உண்டு. தேச விடுதலைக்காக, சோசலிசத்திற்காகவும் இறுதியில் கம்யூனிச லட்சியத்தை அடைவதற்காகவும் போராடுவதற்கு நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு அல்ல, ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு உத்வேகத்தை அளித்தவர் தோழர் சுந்தரய்யா. அவரது இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய பல்வேறு கட்சித் தலைவர்களும் தோழர் சுந்தரய்யாவிற்கு இரங்கல் தெரிவிக்கையில், ‘‘தான் என்ன போதனை செய்தாரோ அதுபோலவே வாழ்ந்த ஒரு தலைவர் என்பதன் காரணமாக ஆந்திர மக்கள் மிகவும் பெருமையுடன் போற்றத்தக்க தலைவராக அவர் திகழ்கிறார்’’ என்று குறிப்பிட்டார்கள்.  அவர் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்திலிருந்து வந்தவர். தன் அரசியல் வாழ்க்கையை இளம்பருவத் திலேயே தொடங்கிவிட்டார். தனக்கு 17 வயது இருக்கும்போதே, கல்லூரிக்குச் செல்வதைக் கைவிட்டுவிட்டு, தேசிய விடுதலை இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார், 1930இல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றார். மிக விரைவில் மார்க்சிச-லெனினிசத்தை நோக்கி வந்துவிட்டார். அமிர் ஹைதர் கானுடன் தொடர்பு ஏற்பட்டபின்னர், அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தோழர் சுந்தரய்யாவின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் உறுதியின் காரணமாக, மீரட் சதி வழக்கிலிருந்து தோழர்கள் விடுதலையான பின் அமைக்கப்பட்ட கட்சியின் முதல் மத்தியக் குழுவிலேயே அ வர் எடுத்துக் கொள்ளப்பட்டார். அநேகமாக அதன்பின் உடனடியாகவே அவர் தென் மாநிலங்களில் கட்சியைக் கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தோழர் சுந்தரய்யாவின் செல்வாக்கினால் கவரப்பட்டுத்தான் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களான மறைந்த தோழர்கள் ஏ.கே. கோபாலன் மற்றும்சிபிஎம் பொதுச் செயலாளர் இ.எம்.எஸ். போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். சமூகத்தில் நிலப்பிரபுத்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் புரையோடிப்போயிருந்த சமூகத்தில் வாழ்ந்த அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள். அந்தக்காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படையாகச் செயல்பட முடியாத நிலை இருந்தது. எனவே அவர்கள் கட்சியின் செய்தியை மிகவும் கமுக்கமாகவே எடுத்துச் சென்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் தோழர் சுந்தரய்யா அபரிமிதமான அனுபவம் பெற்றிருந்தார்.
இளம் காங்கிரஸ்காரர்கள் 1930-32இல் ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பின் காந்திஜியின் கொள்கைகளில் விரக்தி அடைந்திருந்தனர். எனவே அவர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை அமைத்திடத் தீர்மானித்தார்கள். ஆந்திராவில் அக்கட்சியைக் கட்டியவர்களில் சுந்தரய்யாவும் ஒருவர். விஞ்ஞான பூர்வமான சோசலிசம் என்னும் பாதையைப் பின்பற்றுவதா என்பதில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்தபோது, சுந்தரய்யாவின் தலைமையில் இருந்த ஆந்திரப் பிரிவு, விஞ்ஞான பூர்வமான சோசலிசப் பாதையைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் அதனை கம்யூனிஸ்ட் கட்சியாகவும் மாற்றி அமைத்தது.
சோசலிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரி காங்கிரசார் விவசாயிகளுக்கு என்று ஒரு தனி அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார்கள். அதன் காரணமாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை அமைத்தார்கள். இதற்கான நிறுவன உறுப்பினர்களில் சுந்தரய்யாவும் ஒருவர். அவர் இதன் இணைச் செயலாளராக சில காலம் பணியாற்றினார். மார்க்சிசப் புரிதலுடன் அவர் விவசாயிகள் மத்தியில் பணியாற்றினார்.   விவசாயப் புரட்சியில் விவசாயத் தொழிலாளர்களின் புரட்சிகரப் பங்கு குறித்து அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அவர்களையும் அணிதிரட்டத் தொடங்கினார். விவசாயத் தொழிலாளர் களுக்காகத் தனி அமைப்பை உருவாக்கியதில் நாட்டிலேயே முதல் நபர் சுந்தரய்யாதான்.    இவ்வாறு இவர் தொழிலாளர் வர்க்கத்தையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டபோதிலும், அவர் காங்கிரசுக்குள் இருந்துகொண்டு அதன் நடவடிக்கைகளிலும் கொஞ்சமும் பின்வாங்காது செயல்பட்டுக் கொண்டிருந்தார். சிறிது காலம் அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஓர் உறுப்பினராகவும் இருந்தார்.
1939இல் இரண்டாம் உலகப்போர் துவங்கியபின், அரசாங்கம் தலைவர்கள் பலரைக் கைது செய்யத் துவங்கியது. சுந்தரய்யா, அரசாங்கம் கைது செய்வதிலிருந்து நழுவி, கட்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். ஆயினும் அடுத்த இரண்டரை ஆண்டுகளில், பாசிச அபாயத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டிய கடுமையான பணியை அவர் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது. பாசிஸ்ட் ஜெர்மனியும், ஜப்பானும் பிரான்சையும் மற்றும் பல நாடுகளையும் கைப்பற்றின. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் நிலைகொண்டிருந்த ஆங்கிலோ-அமெரிக்க ராணுவம் பல இடங்களில் பின்வாங்க வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் கட்சியின் ஆந்திரா பிரிவு தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிப்பதில் மாபெரும் பங்கினை ஆற்றியது.
பாசிசத்திற்கு எதிராக மாபெரும் வெற்றியை உலகம் ஈட்டியது. ஒரு நாட்டிற்குள் மட்டும் அடைபட்டிருந்த சோசலிசம் ஓர் இயக்கமாக மாறி ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடுத்தது. இந்தப் பின்னணியில்தான்  உலகப் போருக்குப்பின் மக்கள் மத்தியில் எழுந்த எழுச்சிக்குத் தலைமை அளித்திட வேண்டிய பொறுப்பை கம்யூனிஸ்ட் கட்சி தன் தோள்களில் சுமந்துகொள்ள வேண்டி இருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான், தோழர் சுந்தரய்யா, தோழர்கள் பசவபுன்னையா மற்றும் ராஜேஸ்வர் ராவ் ஆகியோருடன் இணைந்து நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் அவர்களுக்குப் பாதுகாவலனாக இருந்த ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகவும் தெலங்கான விவசாயிகள் போராட்டத்திற்குக் கட்சியின் சார்பில் தலைமை தாங்கி வழிநடத்தினார். தெலங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் இந்திய விவசாயிகள் போராட்ட வரலாற்றில் ஒளிமிகுந்த அத்தியாயம் ஆகும். வீரஞ்செறிந்த இத்தெலங்கானாப் போராட்டத்தில் முன்னணியில் நின்று தோழர் சுந்தரய்யா போராடினார்.
நான்கிலிருந்து ஐந்தாண்டுகள் வரை நடைபெற்ற தெலங்கானா ஆயுதப் போராட்டத்தின்போது, தோழர் சுந்தரய்யா அப்போராட்டத்தின் தலைமைப் பொறுப்பில் மட்டும் இருந்துவிடவில்லை, போராடிய கொரில்லா வீரர்களின் மத்தியில் அவர் இருந்தார், அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும் பகிர்ந்து கொண்டார். தெலங்கானாவைச் சேர்ந்த வீரஞ்செறிந்த மக்கள் நிஜாமின் ராணுவம் மற்றும் ரஜாக்கர்களை மட்டுமல்ல, சொல்லொண்ணாக் கொடுமைகள் புரிந்த இந்திய அரசாங்கத்தின் ராணுவத்தினரையும் எதிர்க்க வேண்டி இருந்தது.
போராட்டத்தை மேலும் தொடர முடியாது என்ற நிலை உருவானது. நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் மிகவும் குறைந்த சேதாரங்களுடன் எப்படிப் பின்வாங்குவது? அதனை எப்படிச் கெய்வதுஇத்தகு இடர்ப்பாடான சூழ்நிலையில் தோழர்கள் சுந்தரய்யாவும், பசவபுன்னையாவும் தங்கள் திறமைகளை மெய்ப்பித்தார்கள். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா குழுக்களைக் கலந்தாலோசிக்காமல் எடுத்திடும் பேச்சுக்கே இடமில்லை. உண்மையில் இது ஓர் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டமாகும்.  எனவே அக்குழுக்களுடன் அவர்கள் பேசினார்கள். 1951இன் இறுதியில் அவ்வாறு நடைபெற்ற கூட்டங்களில் ஒருசிலவற்றில் நானும் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். தோழர்கள் அனைவரையும் ஒரே வரிசையில் கொண்டுவரக்கூடிய விதத்தில் தோழர் சுந்தரய்யா  இரு நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவாதங்கள் மேற்கொண்டார். கொரில்லா வீரர்கள் தோழர் சுந்தரய்யா மீது வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை இப்பிரச்சினையில் ஒரு தீர்வு காண்பதற்குப் பெரிதும் வழிவகுத்தது.
பின்னர் போராட்டக் காட்சிகள்  நாடாளுமன்றத்திற்கு மாறின. தெலங்கானா போராட்டத்தில் விவசாயிகள் பெற்றிருந்த சாதனைகளைப் பாதுகாத்திட நாடாளுமன்றத்தைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. ஆந்திராவில் 18 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி மிக உயரத்தில் பறந்தது, நாடாளுமன்றத்தில் முதல் எதிர்க்கட்சியாக மாறியது.
கட்சி, சட்டரீதியான நடவடிக்கைகளுக்குத் தன்னை மாற்றிக் கொண்டது, கட்சியின் புதிய மத்திய அலுவலகம் தில்லியில் திறக்கப்பட்டது, நாடாளுமன்றக் கட்சியின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கேயும் சுந்தரய்யா தன்னுடைய ஸ்தாபனத் திறமைகளைச் செலுத்தினார். மற்ற பல பொறுப்புகளுடன் நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் குழுக்களின் தலைவராகவும் செயல்பட்டார். 1955இல் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்யும் வரை இப்பொறுப்பை அவர் மிகவும் திறமையுடனும், அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றினார்.
சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா பிராந்தியம் தனியே பிரிந்து, 1954இல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டபோது,. கம்யூனிஸ்ட் க.ட்சி காங்கிரசுக்கு ஒரு சவாலாக எழுந்தது. கட்சியும் காங்கிரஸ் கட்சியின் பதாகையின் கீழ் அணிதிரண்டிருந்த பல்வேறுவிதமான முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. காங்கிரசின் ஏழு ஆண்டு கால ஆட்சிக்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராகவும் மக்கள் எழுச்சியால் மலர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் எப்படி செயல்பட்டது என்பது  என்றென்றும் நினைவுகூரத்தக்கதாகும். இந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் சக்திகள் இரண்டாகப் பிளவுண்டன. கட்சிக்கு சில இடங்கள் கிடைத்தன, ஆனால் 34 விழுக்காடு வாக்காளர்கள் இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தார்கள். அது 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்று சுமார் 100 தொகுதிகளைக் கைப்பற்றியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது. கட்சியில் ஒரு பிரிவு, தேர்தல் தோல்வியைப் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரசுடன் கூடிக்குலாவும் வர்க்க சமரசக் கொள்கையை நியாயப்படுத்தினர். தோழர்கள் சுந்தரய்யா, எம். பசவபுன்னையா, எம்.
ஹனுமந்தராவ், என். பிரசாதராவ், நான், மற்றும் சிலர் 1957 ஜூனில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் வர்க்கக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் இப்போக்கை எங்களால் முடிந்த அளவிற்குப் பலம் கொண்ட மட்டும் கடுமையாக எதிர்த்தோம்.  மாற்று ஆவணம் ஒன்றையும் உருவாக்கினோம். அது கட்சிக்குள் எட்டு மாத காலம் விவாதிக்கப்பட்டது.
இப்போராட்டம் 1964இல் கட்சியின் பிளவிற்கு இட்டுச் சென்றது. கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்தை மீட்டெடுத்திட நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை. கட்சியை மீண்டும் உருவாக்க வேண்டிய நிலை இருந்தது. 1964 அக்டோபர் - நவம்பரில் கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டை நடத்தினோம். அதில் கட்சியின் புதிய திட்டத்தை நிறைவேற்றினோம்.  அப்போது நாம் எடுத்த நடவடிக்கைகள் மிகச் சரியான திசைவழியில்தான் என்பது கடந்த 21 ஆண்டு கால கட்சியின்  வரலாறு  மெய்ப்பித்துள்ளது. இக்கால கட்டத்தில் தோழர் சுந்தரய்யா மிகவும் முக்கிய பாத்திரம் வகித்தார். 1974வரை - அதாவது, அவர் தன்னுடைய பணிகளை ஆந்திராவிற்குத் திருப்பிவிட வேண்டும் என்று தீர்மானித்தவரை - அவர் கட்சியின் பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். அந்த சமயம் கட்சிக்கு மிகவும் கடினமான காலமாகும்.
நம் கட்சியின் அகில இந்திய மாநாடு முடிந்தவுடனேயே அரசாங்கம் நம் மீது அடக்குமுறையை ஏவியது. நம்மில் பலரை 18 மாதங்கள் சிறையில் அடைத்தது.  கட்சி திருத்தல்வாதத்திற்கு எதிராக முன்னதாகப் போராடி வந்த அதே சமயத்தில்,  1967க்குப் பின், இடது அதிதீவிரவாதத்திற்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது. கட்சி 1968இல் மீண்டும் பிளவுண்டது. ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நக்சலைட் குழுக்களில் இணைந்தார்கள். மார்க்சிசம் - லெனினிசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நம் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்திடத் தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்தது, வலதுசாரி மற்றும் இடதுசாரிப் போக்குகளைத் தோற்கடித்துஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு வெற்றிகளை ஈட்டியது.
இக்கால கட்டத்தில்தான் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்ட்டுகள் தலைமையிலான அரசாங்கங்கள் அமைந்தன. இந்த அரசாங்கங்கள் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் உற்சாகம் மூட்டி, உத்வேகம் கொள்ளச் செய்தன. இக்கால கட்டத்தில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் அரைப் பாசிச அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. கேரளாவிலும், திரிபுராவிலும் கூட காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான  அடக்குமுறை கட்சிக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டது.
1963இலிருந்தே தோழர் சுந்தரய்யாவின் உடல் நலிவடையத் தொடங்கியது. அவர் வயிற்றுப்புண் நோயால் மிகவும் அவதிப்பட்டார்.  அவரை சிகிச்சைக்காக சோவியத் யூனியன் அனுப்பி அவரை நாம் காப்பாற்றி இருக்க முடியும்.   வயிற்றின் ஒரு பகுதியை நீக்கிவிட்டு, அடுத்து 20 ஆண்டு காலம் அவர் தன் பணியைத் தொடரச் செய்திருக்க முடியும். ஆயினும் ஓய்வு என்றால் என்ன என்றே தெரியாத போராளி அவர்.  அது அரசியல், பொருளாதாரம் அல்லது ஸ்தாபனப் பிரச்சனை என்று எதுவாக இருந்தாலும் அவற்றை ஆழமாக ஆய்வு செய்யும் அறிவுபடைத்தவர். 1981இல் அவரது உடல்நலம் மீண்டும் மோசமானது. அவ்வாறு உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவர் சென்னையிலிருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஜீவமரணப் போராட்டம் நடத்தினார். தன்னுடைய மனவுறுதியின் காரணமாக அவர் மீண்டெழுந்தார். ஒரு மாதம் கழித்து மீண்டும் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போதைக்கப்போது அவர் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தோம்.  அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் வரவிருக்கும் ஆண்டில் தன்னுடைய வேலைத் திட்டங்கள் என்ன என்பது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் சேஷா ரெட்டியிடம் சொல்லியிருக்கிறார். அவர் டயாலிசிஸுக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது, ரத்தம் நிறைய வெளியேறிவிட்டது. அவரால் வலியைப் பொறுக்க முடியாமல் ஞாயிறு அன்று அதிகாலை 6.10 மணிக்கு இயற்கை எய்தினார். அவர் இறக்கும்போது, அவர் மனைவி லீலா சுந்தரய்யா அவர் உடன் இருந்தார்.
அவர் மரணம் குறித்துக் கேள்விப்பட்டதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைப் பார்க்கத் திரண்டனர். கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கட்சி வித்தியாசமின்றி அவரைப் பார்ப்பதற்காகத் திரண்டனர். சென்னையிலிருந்து விஜயவாடா வரை வழியெங்கும் மக்கள் வெள்ளம். விஜயவாடாவில் அவருக்கு அஞ்சலி செலுத்திட லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதிலிருந்து தோழர் சுந்தரய்யா ஆந்திரா மற்றும் நாடு முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசிய இயக்கத் தையே பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதற்கு சாட்சியமாக அமைந்தது.
தோழர் சுந்தரய்யாவுடன் நான் 40 ஆண்டு காலம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். 1938-39களில் நான் ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ அவரை சந்தித்திருந்த போதிலும், 1945இல்தான் அவரை நான் முதன் முறையாக பம்பாயில் சந்தித்தேன். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரது எளிமை, அவர் என்னிடம் பேசிய விதம் மற்றும் விவாதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதிலிருந்து நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். அந்நாட்களில் அவர் என்னை மிகவும் ஆட்கொண்டு விட்டார்  என்பதில் சந்தேக மில்லை.   தத்துவார்த்த பிரச்சனைகளிலும் அரசியல் பிரச்சனைகளிலும் நாங்கள் ஒத்த கருத்துக்களையே கொண்டிருந்தோம். தெலங்கானா விவசாயப் போராட்டம் என்னை மிகவும் கிளர்ச்சியடையச் செய்திருந்தது. நானும் பஞ்சாப்பிலிருந்த எண்ணற்ற தோழர்களும் ஆந்திரா தோழர்களின் நிலையை ஆதரித்தோம். 1953இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நான் அரசியல் தலைமைக்குழுவில் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போது நான் அவ்வாறு நான் அரசியல் தலைமைக்குழுவிற்கு வருவது, பஞ்சாப் இயக்கத்தின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று வாதிட முயற்சித்தேன். அப்போது அவர், ‘‘இந்தியப் புரட்சியிலிருந்து பஞ்சாப் புரட்சியைத் தனியே பிரித்திட முடியாது’’ என்றும், ‘‘இந்தியப் புரட்சி வெற்றியடையாமல், பஞ்சாப் புரட்சி வெற்றி அடையாது’’ என்றும் கூறினார். அதன்பின்னர் நான் மேலும் அவருடன் நெருக்கமானேன். 1955க்குப் பின், நான், சுந்தரய்யா, பசவபுன்னையா ஆகியோருக்கிடையே ஒரு பிரச்சனையில் கூட வேறுபாடு ஏற்பட்டது கிடையாது.
கட்சி பிளவுபட்டபின்னரும் நாங்கள் ஒருங்கிணைந்திருந்தோம். பல சமயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்திடும். மிகவும் காட்டமாக வாதங்கள் புரிந்திருக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் எங்களுடைய புரட்சிகரத் தளையைப் பாதித்திட வில்லை. உண்மையில், இதே அம்சம்தான் எங்கள் அரசியல் தலைமைக்குழு நடவடிக்கைகளிலும் முழுமையாகப் பிரதிபலித்தது.
கம்யூனிச இயக்கத்திற்குள்ளே பல தோழர்கள், தோழர் சுந்தரய்யாவின் குணங்களைப் பெற்றிருக்க வில்லை. கம்யூனிசத்தில் அவருக்கிருந்த நம்பிக்கை, தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மீது அவருக்கிருந்த நம்பிக்கை, முன்னணி ஊழியர்களிடம் அவர் காட்டிய அளவிடற்கரிய அன்புஓர் உண்மையான புரட்சியாளராக அவரது வாழ்க்கை முறை - இவை அனைத்தும் சமூகப் புரட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தேவைப்படும் குணங்களாகும். அவர் கட்சியில் சேர்ந்தபின் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு மாற்றி விட்டார். அவர் இறக்கும்போது, அவரிடம் ஒரேயொரு சொத்து மட்டுமே இருந்தது. அது கட்சிதான். அவர் முதலாளித்துவ சுகபோக வாழ்க்கைக்கு இரையாகவே இல்லை. 1937இல் இருந்த அதே சுந்தரய்யாதான் இன்றளவும் இருந்தார். அவர் மக்களை நேசித்தார். மக்கள் மத்தியில் இருப்பது அவருக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்பதுதான் அவரது சித்தாந்தம். அவர் எதார்த்த நிலைமைகளுக்கு மார்க்சிசம் - லெனினிசத்தைப் பொருத்தினார். அவர் தன்னுடைய 55 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் சந்தித்த ஒவ்வொருவரையும்- அவரால் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி அல்லது கம்யூனிஸ்ட் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி -  வென்றெடுக்க அவரால் முடிந்தது. ஒவ்வொருவரும் அவரை ஓர் உறுதியான மார்க்சிஸ்ட்டாக, ஒரு விடுதலைப் போராளியாக, சுரண்டப்படும் மக்களின் சார்பில் அர்ப்பணிப்புடன் தன்னலமற்றுப் போராடிய கட்சி ஊழியராக என்றென்றும் நினைவுகூர்வார்கள். அவர் இன்று நம்முடன் இல்லை. ஆயினும் அவர் விட்டுச்சென்ற பணிகள், அவர் தியாக வாழ்க்கை  என்றென்றும் நமக்கு உணர்வூட்டி, நம்மை முன்கொண்டு செல்லும்.
(தமிழில்: ச.வீரமணி)

Monday, November 12, 2012

ஒரு திருமணமும் ஓர் இறுதிச்சடங்கும்





சாதி அடிப்படையில் பல் வேறு கூறுகளாகப் பிளவுபட்டுப் போயுள்ள இந்தியாவில், ஒரு திருமணம் என்பது வயது வந்த சுயேச்சையான இரு நபர்களுக்கு இடையிலான உறவை உறுதிப் படுத்திக் கொள்ளும் எளிதான ஒன்றாக எப்போதுமே இருந்த தில்லை. அதற்குப் பதிலாக, அது, திருமணம் செய்து கொள்கிற இரண்டு குடும்பத்தினரை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சமூகத்தின ரையும் அதில் சம்பந்தப்படுத்தும் விஷயமாகவும் அமைந்துவிடு கிறது. எனவே, பெற்றோரின் சம் மதமின்றி நடைபெறும் சாதி களுக்கு இடையிலான கலப்புத் திருமணம் என்பது, கிராமப்புற இந்தியாவில் வன்முறையைத் தூண்டுவதற்கு வலுவானதோர் காரணியாக அமைந்துவிடுகிறது. ஏணிப்படிகள் போன்று அமைந் துள்ள சாதிய சமூக அமைப்பில் மேல்படியில் இருக்கும் சாதியைச் சேர்ந்தவருடன் கீழ்ப்படியில் இருக்கும் சாதியைச் சேர்ந்தவர் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில், குறிப்பாக அதில் ஒரு சாதி தலித்தாக இருந்துவிடும் சம யத்தில், அத்தகைய திருமணங் களை மேல்சாதியினர் சமூக அவ மரியாதையாகவே கருதுகின்றனர்.
தமிழ்நாட்டில், தருமபுரி மாவட் டத்தில், மூன்று தலித் குடியிருப்பு கள் மீது புதனன்று நடைபெற்றுள்ள தாக்குதலும், அதன் தொடர்ச்சியாக 268 வீடுகள் தீக்கிரையாக்கப்பட் டிருப்பதும், எந்த அளவுக்கு சாதி அடையாளங்கள் பெரும் அள விலான வகையில் வன்முறையைத் தூண்டிவிடுகின்றன என்பதை எடுத்துக்காட்டும் மற்றொரு அதிர்ச் சியளிக்கும் சம்பவமாக விளங்குகிறது.இந்தத் தலித் குடியிருப்பைச் சேர்ந்த ஒருவரை, ஏணிப்படி போன்ற சாதி அடுக்கில் அதைவிட ஒரு படி மேலேயுள்ள சாதியைச் சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டதை அடுத்து, அந்தப் பெண்ணின் தந்தை தற்கொலை செய்துகொண்டதை அடுத்தே இந்தத் தீ வைப்புச் சம்பவம் நடந் திருக்கிறது. ஒரு தலித் இளை ஞரைத் திருமணம் செய்வது என் கிற தம் மகளின் முடிவை ஏற்றுக் கொள்ள மனம் இடமளிக்காத நிலையில் அவர் தம் உயிரை மாய்த் துக்கொள்வது என்று தீர்மானித் திருக்கிறார். மணப் பெண்ணின் குடும்பத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக ஏணிப்படி வரிசையில் அவர்கள் படி மேலே இருந்துவிட் டால், வெவ்வேறு சாதிகளுக்கு இடையிலான இத்தகைய கலப்புத் திருமணத்தால் சமூகத்தில் உண் டாகும் அவப்பெயர் மிக மோசமான தாகவே இருக்கிறது. ‘‘குடும்ப கவுரவத்தை’’க்காக்கும் பெரும் பொறுப்பு கொண்டவர்களாக பெண் கள் விளங்குகின்றனர். குடும்பத் தின் மீது ஆண் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் சமூக அந்தஸ்து போன்ற நிலப்பிரபுத்துவக் கருத்துக் களின் மறு பெயராகவே இந்தக் ‘‘குடும்ப கவுரவம்’’ அமைகிறது. உண்மையில், இதுபோன்ற கருத் துக்கள் தொடர்ந்து நீடிப்பது என்பது, இந்தச் சமூக பிரிவுகளிலுள்ள பெண்களுக்கு இரண்டாம்பட்ச மான அந்தஸ்தே அளிக்கப்படு கிறது என்பதற்கான ஓர் அடையாள அறிகுறியேயாகும். இங்கே நமக்கு மிகவும் சங் கடத்தை அளிக்கக்கூடிய விஷயம் என்னவெனில், தமிழகத்தின் கிரா மப்புறங்களில் திருமணங்களின் விளைவாகவோ, மதரீதியிலான சடங்குகளின் காரணமாகவோ அல்லது பொது வளங்களைப் பயன் படுத்துவதன் காரணமாகவோ சாதி மோதல்கள் ஏற்படுவது அடிக்கடி நடைபெறும் சம்பவங்களாக இருந்த போதிலும், மோதல்கள் நடை பெறும் அத்தகைய சம்பவங்களின் போது காவல்துறையினர் நட வடிக்கை என்பது நத்தை வேகத் திலேயே அமைந்துள்ளன.
வன் முறைச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்புதான், புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதி, காவல் துறை யினரை அணுகி, மணமகளின் வீட்டார் தங்களைத் தாக்கக்கூடும் எனத் தாங்கள் அஞ்சுவதாகவும், எனவே தங்களுக்கு உரிய பாது காப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஆனால் காவல் துறையினர் அவர்களுக்கு வாயள வில் வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர, அவர்களைப் பாதுகாப்ப தற்காக உரிய தடுப்பு நடவடிக்கை கள் எதையும் எடுத்ததாகத் தெரிய வில்லை. அதுமட்டுமல்ல, கிராமத் தில் இயங்குவதாகக் கூறிக் கொண்டு கிராம நீதிமன்றம் ஒன்று, திருமணம் செய்து கொண்ட தலித் கணவனிடம் அவனது மனை வியை மீண்டும் அவரது பெற்றோர் வீட்டிற்கேத் திருப்பி அனுப்பி விடும்படி கட்டளையிட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பெண் தன் கண வரை விட்டுச் செல்ல முடியாது என்று மறுத்துவிட்டார். இந்தச் சமயத்திலாவது காவல்துறையினர் இனிமேலாவது தொந்தரவுகள் வரக்கூடும் என்பதை ஊகித் தறிந்து விழித்துக் கொண்டிருந் திருக்க வேண்டும். தலித் சமூகத் தினர் மீது தாக்குதலுக்குக் காரண மாக இருந்த சம்பவமான, பெண் ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டபோதுகூட, பதற்றம் ஏற்படும் என்பதை ஊகித்து, வன் முறைச் சம்பவங்களைத் தடுத்திட, காவல்துறையினர் போதுமான காலஅவகாசம் இருந்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. தலித் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பக்கத் துக் கிராமங்களில் அடைக்கலம் ஆகியிருந்ததால்தான், வன்முறைச் சம்பவம் நடைபெற்றபோது உயிரி ழப்பு ஏதும் நிகழவில்லை. சமூகத் தில் காலங்காலமாக நிலவிவரும் பிற்போக்குச் சிந்தனைகளையும், சாதி வெறியையும், சாதி ஏற்றத்தாழ் வுகளையும் ஒரேநாளில் துடைத் தெறிந்துவிட முடியாதுதான். ஆயி னும், சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் நடைபெற்றுவந்த நிகழ்வுகளை அறிந்தபின், சாதி வெறியர்களால் பதற்ற நிலைமை உருவாகும் என்பதை எதிர்பார்த்து, தடுப்பு நடவடிக்கைகளை நிச்சய மாக எடுத்திருக்க முடியும்.
நன்றி: தி இந்துநாளேடு தலையங்கம், 10.11.12

Sunday, November 11, 2012

நாட்டை தவறான பாதைக்கு இழுப்பது காங்கிரஸ்தான்!



ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தின் பிரதான அங்கமாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, கடந்த ஞாயிறன்று தில்லியில் மெகா பேரணி என்று சொல்லிக்கொண்டு ஒரு பேர ணியை நடத்தியுள்ளது. ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் ஆதரித்தே இப்பேரணி நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. பேரணியில் பேசிய காங்கிரஸ் தலைவரும் ஐ.மு.கூட்டணி தலைவருமான சோனியா காந்தி, காங்கிரசின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் உட்பட அனைவருமே ஊழல் பிரச்சனைகள் குறித்தும், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரித்தும், குறிப்பாக சில்லரை வர்த்தகத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கு வக்காலத்து வாங்கியும் உரையாற்றினர்.

இத்தகைய கொள்கைகளின் விளைவாக நாட்டில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் சுமைகள் அதிகரிக்கப்பட்டிருக்கிறதே என்பது குறித்து கிஞ்சிற்றும் மன உளைச்சல் அடையவில்லை என்பதையே அவர்களின் உரைகள் காட்டுகின்றன.ஊழலைப் பொறுத்தவரை, ஐ.மு.கூட்டணியின் தலைவர், ‘‘எங்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் எதிர்த்துப் போராடுவோம்’’ என்றும், ‘‘எவரேனும் குற்றம் இழைத்தவர்கள் என்று மெய்ப்பிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக் கை எடுக்காமல் இருக்கமாட்டோம்’’ என்றும் கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாள ரும், ஊழலுக்கு எதிராகவே தாங்களும் பணி யாற்றிக் கொண்டிருப்பதாக உரிமை கொண் டாடினார். ‘‘ஊழலை எதிர்ப்பதற்கான முறை யில் மாற்றம் கொண்டுவர வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது,’’ என்று கூட பலத்த இடி யோசைக்கிடையே அவர் முழக்கமிட்டுள்ளார். ‘‘கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த முறையை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பிரச்ச னை இந்த அமைப்பு முறையின் மீதுதான் இருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும்’’ என்று கூறினார். ஆயினும், அந்த மாற்றங்கள் என்ன என்பது குறித்தும், இவற்றை யார் கொண்டுவருவது என்பது குறித்தும் மக்கள் அவர்களுக்குள்ளாக ஊகித் துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டனர். சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தின் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது, லோக்பால் சட்டம் நிறைவேறாததற்காக எதிர்க்கட்சிகள் மீது குறைகூறியுள்ள அவர், ‘‘நாங்கள் அதனை நிறைவேற்றுவோம், சற்றே பொறுத்திருந்து கவனியுங்கள்’’ என்றும் கூறியிருக்கிறார். சென்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது, மாநிலங்களவையில் லோக்பால் சட்ட முன்வடிவின் மீதான விவாதத்தை நள்ளிரவு வரை நீட்டிக்க வைத்து, அது நிறைவேறாத வகையில் நாச வேலை செய்தது, காங்கிரஸ் கட்சிதான் என்பதை அன்றைய தினம் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்த நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.

வரவிருக் கும் கூட்டத் தொடரின்போதும் முக்கியமான திருத்தங்களுடன் அச்சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப் படுமா என்பது குறித்து மீண்டும் ஒருமுறை மக்கள் ஊகத்திற்கு விடப்பட்டிருக்கிறது.‘‘அமைப்பை மாற்றுதல்’’ குறித்து அதிக அளவில் பீற்றிக்கொண்டிருப்பது தொடர்பாகச் சொல்வதென்றால், தற்போதைய நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இருந்து வரும் தற்போதையக் கட்டமைப்பைக் கொண்டுவந்திருப்பதில் பிர தானமான பொறுப்பு காங்கிரஸ் கட்சியையே சாரும் என்பது அடிக்கோடிட்டுக் கொள்ளப் பட வேண்டியது அவசியமாகும். இதன் மூல மாக மெகா ஊழல்களுக்கு வாய்ப்பு வாசல் களை அகலத் திறந்து வைத்தது காங்கிரஸ் கட்சிதான். இத்தகைய நவீன தாராளமயக் கொள்கைதான் மிக மோசமான அளவிற்கு சலுகைசார் முதலாளித்துவத்தின் புற்றீசல் போன்ற வளர்ச்சிக்குக் காரண மாகும். அதன் விளைவாக, ஏற்கனவே பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளை யடிக்கப்பட்டுவிட்டது. தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்டும் வரு கின்றது. ஆயினும் பேரணியில் பேசிய மூன்று பிரதான தலைவர்களுமே, இந்த அமைப்பை மாற்றுவது குறித்துப் பேசாமல், அதற்கு நேர் முரணாக இவ்வாறு கொள்ளையடிப்பதற்கு வழிசெய்து தந்துள்ள நவீன தாராளமயக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கித்தான் பேசியிருக்கிறார்கள். இக்கொள்கைதான் சரி என்றும், சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், இந்தியா வளர முடியாது என்றும் பேசியிருக் கிறார்கள்.பிரதமர், தன்னுடைய உரையின்போது, பொருளாதார சீர்திருத்தங்களுக்கு அதிக வக்காலத்து வாங்கியுள்ளார். ‘‘எந்தவொரு நாடும் தன்முன் உள்ள மாபெரும் சவால்களை பொருளாதார வளர்ச்சியின்றி எதிர்கொண்டிட முடியாது,’’ என்று கூறியுள்ள பிரதமர், ‘‘அந் நிய மூலதனத்திற்கு நம் பொருளாதார வாச லைத் திறந்துவிடுவது இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை அளித்திடும்’’ என்றும் அளந்திருக்கிறார். தாங்கள் பின்பற் றும் கொள்கையால் நாட்டில் பெரும்திரளான மக்கள் அவதிக்குள்ளாகி யிருப்பதை நியாயப் படுத்திப் பேசியுள்ள அவர், ‘‘நாட்டின் எதிர் காலத்திற்குப் பயன் அளிக்கும் எனில், எளிய வழியை விட்டு கடினமான வழியில்தான் செல்ல வேண்டும்’’ என்றும் பேசியுள்ளார்.
இதேபாணியில், பெட்ரோலியப் பொருட் களின் விலைகளை உயர்த்தி யிருப்பதையும் நியாயப்படுத்தி இருக்கிறார். ‘‘அரசாங்கத்தின் மானியத் தொகை அதிகரித்துக் கொண்டிருப் பதால், இவற்றின் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கிறது,’’ என்று கூறியிருக்கிறார். அவ்வாறு செய்யாவிட்டால், ‘‘அதிகரித்து வரும் நிதிப் பற்றாக்குறையானது இறுதியில் நாட்டுமக்களுக்கு ஊறுவிளைவித்துவிடும்’’ என்று கூறியிருக்கிறார். ‘‘இறுதியில் நாம் அனைவரும் இறந்துவிடுவோம்’’ என்று பொருளாதாரவாதி ஜான் மேனார்ட் கீன்ஸ் ஒருசமயம் கூறிய புகழ்பெற்ற வாசகங்களை பொருளாதாரவாதி என்ற முறையில் பிரதம ரும் அறிந்திருக்க வேண்டும். ஏழை மக்களுக்கு அளிக்கும் மானியங்கள் தான் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கக் காரண மா? வரிச் சலுகைகள் என்ற பெயரில் பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் மற்றும் உயர் வருமானவரி அளிப்பவர்களுக்கும் அளித் துள்ள மானியங்கள் சென்ற ஆண்டு பட்ஜெட் ஆவணங்களின் அடிப்படையில் 5லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாயாகும். ஆனால் நிதிப் பற்றாக்குறை 5 லட்சத்து 22 ஆயிரம் கோடி ரூபாய்தான். நிதிப் பற்றாக்குறைக்கு, ஆட்சி யாளர்கள் பணக்காரர்களுக்கு அளித்துள்ள வரிச்சலுகைகள்தான் காரணமாகும். இவ்வாறு பணக்காரர்களுக்கு வரிச்சலுகை கள் அளித்துவிட்டு, இதனைச் சரிசெய்வதற் காக, ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறீர்களே! இதனை ஏற்க முடியாது, திருவாளர் பிரதமர் அவர்களே! இவ்வாறு திருவாளர் பிரதமர் கூறியதன் மூலம், இவர்கள் கடைப்பிடிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கை என்பது ஏழை மற்றும் சாமானிய மக்களைப் போய்ச் சேரும் என்பதோ, நாட்டிலுள்ள அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைக் கும் என்பதோ நிச்சயமாகக் கிடையாது என் பது வெட்டவெளிச்சமாகி விட்டது.சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் முடிவிற்கு பிரதமர் வலுவாக வக்காலத்து வாங்குகிறார். இவ்வாறு அனுமதிப்பது குறிப்பாக விவசாயி களின் மேம்பாட்டிற்காகவே என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்.

சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்கான எதிர்ப்பு என்பது, அது தொடர்பாக 2004-05ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்ட அந்தக் கணமே தொடங்கி விட்டது. இதற்கு இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரி வித்ததாலும், ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கக் காலத்தில் இடதுசாரிகளின் ஆதரவு அதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்ததாலும், இம்முடிவு குறித்து எதுவும் செய்யமுடியாமல் அப்போது அதனை அலமாரியில் வைத்துவிட் டனர்.இம்முடிவை எதிர்த்து, இடதுசாரிக் கட்சி கள் அப்போது அமைக்கப்பட்டிருந்த ஐ.மு. கூட்டணி - இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கி ணைப்புக் குழுவில் அக்டோபர் 25 அன்று ஒரு குறிப் பினை அளித்தது. அந்தக் குறிப்பில், மேலோட் டமான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 விழுக்காடு அளவிற்கு சில்லரை வர்த்தகத் துறை பங்களிப்பினைச் செய்கிறது என்றும், இத்துறையானது நாலு கோடிக்கும் அதிக மானவர்களுக்கு வேலை அளித்து வருகிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம். 1998ஆம் ஆண்டு நான்காவது பொருளாதார கணக் கெடுப்பின்படி, சில்லரை வர்த்தகத்துறை மூலம் விவ சாயம் அல்லாத வர்த்தகத்தில் மொத்த அள வில் 42.5 விழுக்காடு அளவிற்கு கிராமப்புறங் களிலும், 50.5 விழுக்காடு அளவிற்கு நகர்ப் புறங்களிலும் வேலை அளிப்பதாகத் தெரிவித் திருந்தது. ஒட்டுமொத்த அளவில் பார்த்தோ மானால், கிராமப்புறங்களில் 38.2 விழுக்காடு அளவிலும், நகர்ப்புறங்களில் 46.4 விழுக்காடு அளவிலும் சில்லரை வர்த்தகத்துறை வேலை அளித்து வந்தது.

எனவே. நாட்டு மக்களில் பல கோடிப் பேர், தங்கள் வாழ்வாதாரங் களுக்காக சில்லரை வர்த்தகத்துறையையே சார்ந்துள்ளனர். இவற்றைப் பற்றியெல்லாம் எவ்விதக் கவலையும் படாமல், சில்லரை வர்த் தகத்தில் பன்னாட்டு ஜாம்பவான்களை அனு மதித்தோமானால், அது நாட்டு மக்களில் பல கோடிப் பேரை வறுமையில் தள்ளி, கடும் துன் பத்திற்கு உள்ளாக்கிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.சூப்பர்மார்க்கெட் ஜாம்பவான்கள் நாட்டிற் குள் நுழைவது என்பது, சந்தைக்கு வரும் பொருள்களின் விலைகளில் வீழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும், வேலைவாய்ப்பை அதிகரித்திடும் என்றும் பல்வேறு ஆய்வுகள் காட்டுவதாக ஒரு சரடு விடப்படுகிறது. உண்மையில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் குழு ஒன்று, 2004 பிப்ரவரியில் ஓர் அறிக்கை வெளி யிட்டிருந்தது. அந்த அறிக்கையானது தன்னு டைய முடிவுரையில், ‘‘வால்மார்ட் வெற்றி என்பதன் பொருள் தொழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சம்பளம் மற்றும் பயன்கள் இறங்குமுகத்தில் இருக்கும் என்ப தும், தொழிலாளர்களின் அடிப்படை உரிமை கள் அரக்கத்தனமாக மீறப்படும் என்பதும், நாடு முழுவதும் உள்ள அனைத்துத்தரப்பு மக் களின் வாழ்வாதாரங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்பதும் ஆகும். ஒரு வர்த்தக நிறுவனத்தின் வெற்றி, தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பங்களின் வயிற்றில் அடித்து வரக்கூடாது. இத்தகைய குறுகிய லாபமீட்டும் உத்திகள், இறுதியாக நாட்டின் பொருளா தாரத்தையே அரித்துவீழ்த்திவிடும்.’’ என்று குறிப்பிட்டிருந்தது. சூப்பர்மார்க்கெட்டுகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் உணவுப் பொருள்களின் விலைகள் குறைந்திடும் என்று கூறப்படுவதிலும் உண்மை எதுவும் இல்லை என்பதையே பல்வேறு ஆய்வுகள் காட்டுகின்றன. மெக்சிகோ, நிகரகுவா, அர்ஜென்டினா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கென்யா, மடகாஸ்கர் போன்ற ஆப்பிரிக்க நாடுகளிலும், வியட்நாம், தாய் லாந்து ஆகிய நாடுகளிலும் அந்நிய நேரடி முத லீடுகளின் அனுமதியுடன் திறக்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் காட்டுவது என்ன? சாதாரணமாகப் பாரம்பரியமாக இருந்துவரும் அங்காடிகளில் விற்கப்படும் உணவுப் பொருள்கள் மற்றும் காய்கறிகளின் விலைகளைவிட சூப்பர் மார்க்கெட்டுகளில் விலைகள் பல மடங்கு அதிகம் என்பதேயாகும்.

சூப்பர் மார்க்கெட் ஜாம்பவான்கள் கடைகளைத் திறந்தால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதை வியட்நாம் அனுபவம் பொய்யாக்கிவிட்டது. தெருவில் வியாபாரம் செய்பவர் 18 பேருக்கு வேலை அளிக்கக்கூடிய அதே சமயத்தில், பாரம்பரியமாக சில்லரை வியா பாரம் செய்கிறவர் 10 பேருக்கும், கடை வைத்து நடத்துகிறவர் 8 பேருக்கும் வேலை தரக்கூடிய அதே சமயத்தில், ஒரு சூப்பர்மார்க்கெட் நிறு வனம் அவ்வேலைகளை 4 பேரை மட்டும் வைத்துக் கொண்டு, அதே அளவு பொருட் களை விற்றுவிடுகிறது. இந்த அனுபவம் என்பது கிட்டத்தட்ட உலகளாவியதாகும். அதேபோன்று பொருளை உற்பத்தி செய் திடும் விவசாயிகளுக்கு சூப்பர்மார்க்கெட் ஜாம் பவான்கள் நல்ல விலை கொடுப்பார்கள் என் பதும் கட்டுக்கதையேயாகும். ஐ.மு.கூட்டணி-1 அரசாங்கத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒரு குறிப்பு அளிக்கப் பட்டிருந்தது. அதில், ஆப்பிரிக்க நாடுகள் பல வற்றின் அனுபவங்கள் சுட்டிக் காட்டப்பட்டி ருந்தன. சந்தையில் விற்கப்படும் ஒருவிதமான பால் சாக்லேட் பாரின் விலையில் வெறும் 3.9 விழுக் காடு அளவிற்குத்தான் அதன் மூலப் பொரு ளை உற்பத்தி செய்யும் கோகோ விவசாயி பெறுகிறான். ஆனால் 34 விழுக்காடு லாபம் கூடுதலாக வைத்து அந்த சாக்லேட் பார் விற்கப்படுகிறது. இதேபோன்று பனானா நாட் டைச் சேர்ந்த விவசாயி, பொருள் விற்கப்படும் விலையில் 5 விழுக்காடு அளவிற்குத்தான் தரப்படுகிறார். ஆனால் சில்லரை வர்த்தகருக் குக் கிடைக்கும் கூடுதல் லாபம் 34 விழுக் காடாகும். அதேபோன்று ஒரு ஜீன்ஸ் பேண்ட் தைத்துத் தரும் தொழிலாளிக்கு அது விற்கப் படும் இறுதி விலையில் 12 விழுக்காடு தொகை கிடைக்கிற அதே சமயத்தில், அத னை விற்கும் கடைக்காரருக்கு 54 விழுக்காடு லாபம் கிடைக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி மிகவும் ஆழமாகியுள்ள இன்றைய சூழலில், சர்வதேச நிதி மூலதனம் தங்கள் லாப வேட்டைக்குப் புதிய வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறது. இந்திய சில்லரைச் சந்தை மிகவும் லாபகர மான விருப்பத்தேர்வாக இருக்கும் என்று அது கருதுகிறது. இவ்வாறு இவர்களது முடிவு நம் நாட்டின் பொருளாதாரத்தைக் காவு கொடுத்து, நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து சர்வதேச மூலதனத்திற்கு கொள்ளை லாபம் ஈட்டுவதற் கே அனுமதித்திடும் என்பதில் ஐயமில்லை.எதார்த்த நிலைமைகள் இவ்வாறிருக்கக் கூடிய சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கமும் இவற்றைச் சரியானமுறையில் அங்கீகரிக்க மறுப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டு மக்களைத் திசை திருப்பக்கூடிய விதத்தில் தவறான தகவல் களைத் தந்து கொண்டிருக் கின்றன.

அவ் வாறு அவர்கள் தவறான தகவல்களைத் தருவ தோடு மட்டுமல்லாமல், மக்களை எதிர்க் கட்சிகள்தான் தவறாக இழுத்துச்செல்வ தாகக் கூறி நம்மீதே குறைகூறுகிறார்கள். ‘‘சிலர் மக்களைத் தவறான பாதையில் இழுத்துச்செல்ல முயற்சித்துக் கொண்டிருக் கிறார்கள்’’ என்று பிரதமர் கூறியிருக்கிறார். மேலே நாம் கூறியுள்ள உண்மைகளைச் சுட்டிக்காட்டி, ‘‘நீங்களும் காங்கிரஸ் கட்சியும் தான் நாட்டையும், நாட்டு மக்களையும் தவ றான பாதையில் இழுத்துச் செல்கிறீர்கள்’’ என்று மக்கள் பிரதமரிடம் கூறிட வேண்டியது அவசியமாகும்.நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களின் வயிற்றில் அடிப்பதன் மூலமாகவும், நாட்டின் வளங்களையும் சந்தைகளையும் மேலும் அகலமாகத் திறந்து விட்டு, சர்வதேச நிதி மூலதனத்திற்கும், இந்தியப் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும், நாட்டைக் கொள்ளையடித்துச் செல்லவும், அதிக லாபமீட்டவும் வழிவகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் என்பதே மிகவும் எளிதாகத் தெரியும் உண்மையாகும். 

நாடும் நாட்டு மக்களும் நலம்பெற வேண்டுமானால், ஆட்சியாளர்களின் இத்தகைய கொள்கைத் திசைவழிமுற்றிலுமாக மாற்றியமைக்கப்பட வேண்டியது அவசியமாகும். காங்கிரஸ் கட்சியின் பேரணியில் அதன் தலைவர்கள் ஆற்றிய உரைகள், இவர்களின் பொருளாதார சீர்திருத்தக் கொள்கைகளுக்கு எதிராக வலுவான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்கிற மக்களின் தீர்மானகரமான முடிவை இரட்டிப்பாக்கியுள்ளன.

(தமிழில்: ச. வீரமணி)