Showing posts with label surjith. Show all posts
Showing posts with label surjith. Show all posts

Thursday, November 15, 2012

தோழர் பி. சுந்தரய்யா: லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் ஊட்டியவர்: ஹர்கிசன் சிங் சுர்ஜித்







(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அகில இந்திய மாநாடு, தோழர் பி. சுந்தரய்யா பிறந்தநாள் நூற்றாண்டை 2012 மே 1இலிருந்து ஓராண்டு காலத்திற்கு அனுசரிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, தோழர் பி.சுந்தரய்யா குறித்து தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித் எழுதிய கட்டுரை இங்கே மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)
தோழர் சுந்தரய்யா இப்போது நம்முடன் இல்லை. தோழர் சுந்தரய்யா குறித்து நினைவுகளை கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, தொழிலாளர் வர்க்கம், கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் திரளினரும் என்றென்றும் நினைவில் வைத்துப் பூஜித்து வருகிறார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காகவும், ஏகாதிபத்திய வாதிகள், காலனியாதிக்கவாதிகள், நவீன காலனியாதிக்கம் ஆகியவற்றிற்கு எதிராகப் போராடியவர்கள் எப்போதுமே அவரை மறக்க மாட்டார்கள்.
தொழிலாளர் வர்க்கத்திற்காகவும், சமூகப் புரட்சிக்காகவும் பல ஆண்டுகள் போராடி வருகிற எண்ணற்ற தலைவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார்கள். இடுக்கண் வருங்காலங்களில் தங்களுடைய புரட்சிகரத் தன்மையை அவர்கள் நன்கு மெய்ப்பித்தும் இருக்கிறார்கள். இத்தகைய தோழர்கள் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் பெருமிதம் கொள்கிறது. ஆயினும் தோழர் சுந்தரய்யா இவர்கள் அனைவரையும் விட மேலானவர்.  அவர் சாமானிய மக்களின் மனிதர். மார்க்சிசம் - லெனினிசத்தின் அடிப்படையில் புரட்சியாளருக்குத் தேவையான அனைத்து ஸ்தாபனத்திறமைகளும் அவரிடம் உண்டு. தேச விடுதலைக்காக, சோசலிசத்திற்காகவும் இறுதியில் கம்யூனிச லட்சியத்தை அடைவதற்காகவும் போராடுவதற்கு நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு அல்ல, ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு உத்வேகத்தை அளித்தவர் தோழர் சுந்தரய்யா. அவரது இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய பல்வேறு கட்சித் தலைவர்களும் தோழர் சுந்தரய்யாவிற்கு இரங்கல் தெரிவிக்கையில், ‘‘தான் என்ன போதனை செய்தாரோ அதுபோலவே வாழ்ந்த ஒரு தலைவர் என்பதன் காரணமாக ஆந்திர மக்கள் மிகவும் பெருமையுடன் போற்றத்தக்க தலைவராக அவர் திகழ்கிறார்’’ என்று குறிப்பிட்டார்கள்.  அவர் ஒரு நிலப்பிரபுத்துவ குடும்பத்திலிருந்து வந்தவர். தன் அரசியல் வாழ்க்கையை இளம்பருவத் திலேயே தொடங்கிவிட்டார். தனக்கு 17 வயது இருக்கும்போதே, கல்லூரிக்குச் செல்வதைக் கைவிட்டுவிட்டு, தேசிய விடுதலை இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார், 1930இல் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் பங்கேற்றார். மிக விரைவில் மார்க்சிச-லெனினிசத்தை நோக்கி வந்துவிட்டார். அமிர் ஹைதர் கானுடன் தொடர்பு ஏற்பட்டபின்னர், அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். தோழர் சுந்தரய்யாவின் அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் உறுதியின் காரணமாக, மீரட் சதி வழக்கிலிருந்து தோழர்கள் விடுதலையான பின் அமைக்கப்பட்ட கட்சியின் முதல் மத்தியக் குழுவிலேயே அ வர் எடுத்துக் கொள்ளப்பட்டார். அநேகமாக அதன்பின் உடனடியாகவே அவர் தென் மாநிலங்களில் கட்சியைக் கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தோழர் சுந்தரய்யாவின் செல்வாக்கினால் கவரப்பட்டுத்தான் மாபெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களான மறைந்த தோழர்கள் ஏ.கே. கோபாலன் மற்றும்சிபிஎம் பொதுச் செயலாளர் இ.எம்.எஸ். போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள். சமூகத்தில் நிலப்பிரபுத்துவ மற்றும் அரை நிலப்பிரபுத்துவ உறவுகள் புரையோடிப்போயிருந்த சமூகத்தில் வாழ்ந்த அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார்கள். அந்தக்காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படையாகச் செயல்பட முடியாத நிலை இருந்தது. எனவே அவர்கள் கட்சியின் செய்தியை மிகவும் கமுக்கமாகவே எடுத்துச் சென்றார்கள். இத்தகைய நடவடிக்கைகளில் தோழர் சுந்தரய்யா அபரிமிதமான அனுபவம் பெற்றிருந்தார்.
இளம் காங்கிரஸ்காரர்கள் 1930-32இல் ஒத்துழையாமை இயக்கத்திற்குப் பின் காந்திஜியின் கொள்கைகளில் விரக்தி அடைந்திருந்தனர். எனவே அவர்கள் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை அமைத்திடத் தீர்மானித்தார்கள். ஆந்திராவில் அக்கட்சியைக் கட்டியவர்களில் சுந்தரய்யாவும் ஒருவர். விஞ்ஞான பூர்வமான சோசலிசம் என்னும் பாதையைப் பின்பற்றுவதா என்பதில் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் கருத்துவேறுபாடுகள் எழுந்தபோது, சுந்தரய்யாவின் தலைமையில் இருந்த ஆந்திரப் பிரிவு, விஞ்ஞான பூர்வமான சோசலிசப் பாதையைத் தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் அதனை கம்யூனிஸ்ட் கட்சியாகவும் மாற்றி அமைத்தது.
சோசலிஸ்ட்டுகள், கம்யூனிஸ்ட்டுகள், இடதுசாரி காங்கிரசார் விவசாயிகளுக்கு என்று ஒரு தனி அமைப்பு தேவை என்பதை உணர்ந்தார்கள். அதன் காரணமாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தை அமைத்தார்கள். இதற்கான நிறுவன உறுப்பினர்களில் சுந்தரய்யாவும் ஒருவர். அவர் இதன் இணைச் செயலாளராக சில காலம் பணியாற்றினார். மார்க்சிசப் புரிதலுடன் அவர் விவசாயிகள் மத்தியில் பணியாற்றினார்.   விவசாயப் புரட்சியில் விவசாயத் தொழிலாளர்களின் புரட்சிகரப் பங்கு குறித்து அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அவர்களையும் அணிதிரட்டத் தொடங்கினார். விவசாயத் தொழிலாளர் களுக்காகத் தனி அமைப்பை உருவாக்கியதில் நாட்டிலேயே முதல் நபர் சுந்தரய்யாதான்.    இவ்வாறு இவர் தொழிலாளர் வர்க்கத்தையும், விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டபோதிலும், அவர் காங்கிரசுக்குள் இருந்துகொண்டு அதன் நடவடிக்கைகளிலும் கொஞ்சமும் பின்வாங்காது செயல்பட்டுக் கொண்டிருந்தார். சிறிது காலம் அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் ஓர் உறுப்பினராகவும் இருந்தார்.
1939இல் இரண்டாம் உலகப்போர் துவங்கியபின், அரசாங்கம் தலைவர்கள் பலரைக் கைது செய்யத் துவங்கியது. சுந்தரய்யா, அரசாங்கம் கைது செய்வதிலிருந்து நழுவி, கட்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். ஆயினும் அடுத்த இரண்டரை ஆண்டுகளில், பாசிச அபாயத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டிய கடுமையான பணியை அவர் எடுத்துக்கொள்ள வேண்டி இருந்தது. பாசிஸ்ட் ஜெர்மனியும், ஜப்பானும் பிரான்சையும் மற்றும் பல நாடுகளையும் கைப்பற்றின. ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் நிலைகொண்டிருந்த ஆங்கிலோ-அமெரிக்க ராணுவம் பல இடங்களில் பின்வாங்க வேண்டியிருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் கட்சியின் ஆந்திரா பிரிவு தொழிலாளர் வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடிப்பதில் மாபெரும் பங்கினை ஆற்றியது.
பாசிசத்திற்கு எதிராக மாபெரும் வெற்றியை உலகம் ஈட்டியது. ஒரு நாட்டிற்குள் மட்டும் அடைபட்டிருந்த சோசலிசம் ஓர் இயக்கமாக மாறி ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடுத்தது. இந்தப் பின்னணியில்தான்  உலகப் போருக்குப்பின் மக்கள் மத்தியில் எழுந்த எழுச்சிக்குத் தலைமை அளித்திட வேண்டிய பொறுப்பை கம்யூனிஸ்ட் கட்சி தன் தோள்களில் சுமந்துகொள்ள வேண்டி இருந்தது.
இந்தச் சூழ்நிலையில்தான், தோழர் சுந்தரய்யா, தோழர்கள் பசவபுன்னையா மற்றும் ராஜேஸ்வர் ராவ் ஆகியோருடன் இணைந்து நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் அவர்களுக்குப் பாதுகாவலனாக இருந்த ஹைதராபாத் நிஜாமுக்கு எதிராகவும் தெலங்கான விவசாயிகள் போராட்டத்திற்குக் கட்சியின் சார்பில் தலைமை தாங்கி வழிநடத்தினார். தெலங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் இந்திய விவசாயிகள் போராட்ட வரலாற்றில் ஒளிமிகுந்த அத்தியாயம் ஆகும். வீரஞ்செறிந்த இத்தெலங்கானாப் போராட்டத்தில் முன்னணியில் நின்று தோழர் சுந்தரய்யா போராடினார்.
நான்கிலிருந்து ஐந்தாண்டுகள் வரை நடைபெற்ற தெலங்கானா ஆயுதப் போராட்டத்தின்போது, தோழர் சுந்தரய்யா அப்போராட்டத்தின் தலைமைப் பொறுப்பில் மட்டும் இருந்துவிடவில்லை, போராடிய கொரில்லா வீரர்களின் மத்தியில் அவர் இருந்தார், அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும் பகிர்ந்து கொண்டார். தெலங்கானாவைச் சேர்ந்த வீரஞ்செறிந்த மக்கள் நிஜாமின் ராணுவம் மற்றும் ரஜாக்கர்களை மட்டுமல்ல, சொல்லொண்ணாக் கொடுமைகள் புரிந்த இந்திய அரசாங்கத்தின் ராணுவத்தினரையும் எதிர்க்க வேண்டி இருந்தது.
போராட்டத்தை மேலும் தொடர முடியாது என்ற நிலை உருவானது. நூற்றுக்கணக்கான தோழர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் மிகவும் குறைந்த சேதாரங்களுடன் எப்படிப் பின்வாங்குவது? அதனை எப்படிச் கெய்வதுஇத்தகு இடர்ப்பாடான சூழ்நிலையில் தோழர்கள் சுந்தரய்யாவும், பசவபுன்னையாவும் தங்கள் திறமைகளை மெய்ப்பித்தார்கள். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் களத்தில் போராடிக் கொண்டிருக்கும் கொரில்லா குழுக்களைக் கலந்தாலோசிக்காமல் எடுத்திடும் பேச்சுக்கே இடமில்லை. உண்மையில் இது ஓர் அரசியல் மற்றும் தத்துவார்த்தப் போராட்டமாகும்.  எனவே அக்குழுக்களுடன் அவர்கள் பேசினார்கள். 1951இன் இறுதியில் அவ்வாறு நடைபெற்ற கூட்டங்களில் ஒருசிலவற்றில் நானும் கலந்து கொண்டிருந்திருக்கிறேன். தோழர்கள் அனைவரையும் ஒரே வரிசையில் கொண்டுவரக்கூடிய விதத்தில் தோழர் சுந்தரய்யா  இரு நாட்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவாதங்கள் மேற்கொண்டார். கொரில்லா வீரர்கள் தோழர் சுந்தரய்யா மீது வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை இப்பிரச்சினையில் ஒரு தீர்வு காண்பதற்குப் பெரிதும் வழிவகுத்தது.
பின்னர் போராட்டக் காட்சிகள்  நாடாளுமன்றத்திற்கு மாறின. தெலங்கானா போராட்டத்தில் விவசாயிகள் பெற்றிருந்த சாதனைகளைப் பாதுகாத்திட நாடாளுமன்றத்தைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டி இருந்தது. ஆந்திராவில் 18 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி மிக உயரத்தில் பறந்தது, நாடாளுமன்றத்தில் முதல் எதிர்க்கட்சியாக மாறியது.
கட்சி, சட்டரீதியான நடவடிக்கைகளுக்குத் தன்னை மாற்றிக் கொண்டது, கட்சியின் புதிய மத்திய அலுவலகம் தில்லியில் திறக்கப்பட்டது, நாடாளுமன்றக் கட்சியின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இங்கேயும் சுந்தரய்யா தன்னுடைய ஸ்தாபனத் திறமைகளைச் செலுத்தினார். மற்ற பல பொறுப்புகளுடன் நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் குழுக்களின் தலைவராகவும் செயல்பட்டார். 1955இல் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்யும் வரை இப்பொறுப்பை அவர் மிகவும் திறமையுடனும், அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றினார்.
சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா பிராந்தியம் தனியே பிரிந்து, 1954இல் தனி மாநிலமாக அமைக்கப்பட்டபோது,. கம்யூனிஸ்ட் க.ட்சி காங்கிரசுக்கு ஒரு சவாலாக எழுந்தது. கட்சியும் காங்கிரஸ் கட்சியின் பதாகையின் கீழ் அணிதிரண்டிருந்த பல்வேறுவிதமான முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ சக்திகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. காங்கிரசின் ஏழு ஆண்டு கால ஆட்சிக்கு எதிராகவும், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு எதிராகவும் மக்கள் எழுச்சியால் மலர்ந்த கம்யூனிஸ்ட் கட்சித் எப்படி செயல்பட்டது என்பது  என்றென்றும் நினைவுகூரத்தக்கதாகும். இந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் சக்திகள் இரண்டாகப் பிளவுண்டன. கட்சிக்கு சில இடங்கள் கிடைத்தன, ஆனால் 34 விழுக்காடு வாக்காளர்கள் இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களித்தார்கள். அது 47 விழுக்காடு வாக்குகளைப் பெற்று சுமார் 100 தொகுதிகளைக் கைப்பற்றியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்பட்டது. கட்சியில் ஒரு பிரிவு, தேர்தல் தோல்வியைப் பயன்படுத்திக் கொண்டு, காங்கிரசுடன் கூடிக்குலாவும் வர்க்க சமரசக் கொள்கையை நியாயப்படுத்தினர். தோழர்கள் சுந்தரய்யா, எம். பசவபுன்னையா, எம்.
ஹனுமந்தராவ், என். பிரசாதராவ், நான், மற்றும் சிலர் 1957 ஜூனில் நடைபெற்ற மத்தியக் குழுக் கூட்டத்தில் வர்க்கக் கொள்கைகளை நீர்த்துப்போகச் செய்யும் இப்போக்கை எங்களால் முடிந்த அளவிற்குப் பலம் கொண்ட மட்டும் கடுமையாக எதிர்த்தோம்.  மாற்று ஆவணம் ஒன்றையும் உருவாக்கினோம். அது கட்சிக்குள் எட்டு மாத காலம் விவாதிக்கப்பட்டது.
இப்போராட்டம் 1964இல் கட்சியின் பிளவிற்கு இட்டுச் சென்றது. கட்சிக்குள் ஜனநாயக மத்தியத்துவத்தை மீட்டெடுத்திட நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற வில்லை. கட்சியை மீண்டும் உருவாக்க வேண்டிய நிலை இருந்தது. 1964 அக்டோபர் - நவம்பரில் கட்சியின் ஏழாவது அகில இந்திய மாநாட்டை நடத்தினோம். அதில் கட்சியின் புதிய திட்டத்தை நிறைவேற்றினோம்.  அப்போது நாம் எடுத்த நடவடிக்கைகள் மிகச் சரியான திசைவழியில்தான் என்பது கடந்த 21 ஆண்டு கால கட்சியின்  வரலாறு  மெய்ப்பித்துள்ளது. இக்கால கட்டத்தில் தோழர் சுந்தரய்யா மிகவும் முக்கிய பாத்திரம் வகித்தார். 1974வரை - அதாவது, அவர் தன்னுடைய பணிகளை ஆந்திராவிற்குத் திருப்பிவிட வேண்டும் என்று தீர்மானித்தவரை - அவர் கட்சியின் பொதுச் செயலாளராகத் தொடர்ந்தார். அந்த சமயம் கட்சிக்கு மிகவும் கடினமான காலமாகும்.
நம் கட்சியின் அகில இந்திய மாநாடு முடிந்தவுடனேயே அரசாங்கம் நம் மீது அடக்குமுறையை ஏவியது. நம்மில் பலரை 18 மாதங்கள் சிறையில் அடைத்தது.  கட்சி திருத்தல்வாதத்திற்கு எதிராக முன்னதாகப் போராடி வந்த அதே சமயத்தில்,  1967க்குப் பின், இடது அதிதீவிரவாதத்திற்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது. கட்சி 1968இல் மீண்டும் பிளவுண்டது. ஆந்திரா உட்பட சில மாநிலங்களில் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நக்சலைட் குழுக்களில் இணைந்தார்கள். மார்க்சிசம் - லெனினிசத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் நம் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாத்திடத் தன் நடவடிக்கைகளைத் தொடர்ந்தது, வலதுசாரி மற்றும் இடதுசாரிப் போக்குகளைத் தோற்கடித்துஒன்றன்பின் ஒன்றாக பல்வேறு வெற்றிகளை ஈட்டியது.
இக்கால கட்டத்தில்தான் கேரளாவிலும் மேற்கு வங்கத்திலும் மார்க்சிஸ்ட்டுகள் தலைமையிலான அரசாங்கங்கள் அமைந்தன. இந்த அரசாங்கங்கள் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராகப் போராடி வந்த கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் உற்சாகம் மூட்டி, உத்வேகம் கொள்ளச் செய்தன. இக்கால கட்டத்தில் மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் அரைப் பாசிச அடக்குமுறையை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. கேரளாவிலும், திரிபுராவிலும் கூட காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான  அடக்குமுறை கட்சிக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டது.
1963இலிருந்தே தோழர் சுந்தரய்யாவின் உடல் நலிவடையத் தொடங்கியது. அவர் வயிற்றுப்புண் நோயால் மிகவும் அவதிப்பட்டார்.  அவரை சிகிச்சைக்காக சோவியத் யூனியன் அனுப்பி அவரை நாம் காப்பாற்றி இருக்க முடியும்.   வயிற்றின் ஒரு பகுதியை நீக்கிவிட்டு, அடுத்து 20 ஆண்டு காலம் அவர் தன் பணியைத் தொடரச் செய்திருக்க முடியும். ஆயினும் ஓய்வு என்றால் என்ன என்றே தெரியாத போராளி அவர்.  அது அரசியல், பொருளாதாரம் அல்லது ஸ்தாபனப் பிரச்சனை என்று எதுவாக இருந்தாலும் அவற்றை ஆழமாக ஆய்வு செய்யும் அறிவுபடைத்தவர். 1981இல் அவரது உடல்நலம் மீண்டும் மோசமானது. அவ்வாறு உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவர் சென்னையிலிருந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஜீவமரணப் போராட்டம் நடத்தினார். தன்னுடைய மனவுறுதியின் காரணமாக அவர் மீண்டெழுந்தார். ஒரு மாதம் கழித்து மீண்டும் மோசமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போதைக்கப்போது அவர் உடல்நலம் குறித்து விசாரித்து வந்தோம்.  அவர் இறப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு அவர் வரவிருக்கும் ஆண்டில் தன்னுடைய வேலைத் திட்டங்கள் என்ன என்பது குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் சேஷா ரெட்டியிடம் சொல்லியிருக்கிறார். அவர் டயாலிசிஸுக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது, ரத்தம் நிறைய வெளியேறிவிட்டது. அவரால் வலியைப் பொறுக்க முடியாமல் ஞாயிறு அன்று அதிகாலை 6.10 மணிக்கு இயற்கை எய்தினார். அவர் இறக்கும்போது, அவர் மனைவி லீலா சுந்தரய்யா அவர் உடன் இருந்தார்.
அவர் மரணம் குறித்துக் கேள்விப்பட்டதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைப் பார்க்கத் திரண்டனர். கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கட்சி வித்தியாசமின்றி அவரைப் பார்ப்பதற்காகத் திரண்டனர். சென்னையிலிருந்து விஜயவாடா வரை வழியெங்கும் மக்கள் வெள்ளம். விஜயவாடாவில் அவருக்கு அஞ்சலி செலுத்திட லட்சக்கணக்கான மக்கள் கூடினார்கள். இதிலிருந்து தோழர் சுந்தரய்யா ஆந்திரா மற்றும் நாடு முழுவதுமிருந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசிய இயக்கத் தையே பிரதிநிதித்துவப்படுத்தினார் என்பதற்கு சாட்சியமாக அமைந்தது.
தோழர் சுந்தரய்யாவுடன் நான் 40 ஆண்டு காலம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். 1938-39களில் நான் ஒரு தடவையோ அல்லது இரு தடவையோ அவரை சந்தித்திருந்த போதிலும், 1945இல்தான் அவரை நான் முதன் முறையாக பம்பாயில் சந்தித்தேன். அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரது எளிமை, அவர் என்னிடம் பேசிய விதம் மற்றும் விவாதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதிலிருந்து நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். அந்நாட்களில் அவர் என்னை மிகவும் ஆட்கொண்டு விட்டார்  என்பதில் சந்தேக மில்லை.   தத்துவார்த்த பிரச்சனைகளிலும் அரசியல் பிரச்சனைகளிலும் நாங்கள் ஒத்த கருத்துக்களையே கொண்டிருந்தோம். தெலங்கானா விவசாயப் போராட்டம் என்னை மிகவும் கிளர்ச்சியடையச் செய்திருந்தது. நானும் பஞ்சாப்பிலிருந்த எண்ணற்ற தோழர்களும் ஆந்திரா தோழர்களின் நிலையை ஆதரித்தோம். 1953இல் மதுரையில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நான் அரசியல் தலைமைக்குழுவில் இணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போது நான் அவ்வாறு நான் அரசியல் தலைமைக்குழுவிற்கு வருவது, பஞ்சாப் இயக்கத்தின் நலன்களுக்கு ஊறு விளைவிக்கும் என்று வாதிட முயற்சித்தேன். அப்போது அவர், ‘‘இந்தியப் புரட்சியிலிருந்து பஞ்சாப் புரட்சியைத் தனியே பிரித்திட முடியாது’’ என்றும், ‘‘இந்தியப் புரட்சி வெற்றியடையாமல், பஞ்சாப் புரட்சி வெற்றி அடையாது’’ என்றும் கூறினார். அதன்பின்னர் நான் மேலும் அவருடன் நெருக்கமானேன். 1955க்குப் பின், நான், சுந்தரய்யா, பசவபுன்னையா ஆகியோருக்கிடையே ஒரு பிரச்சனையில் கூட வேறுபாடு ஏற்பட்டது கிடையாது.
கட்சி பிளவுபட்டபின்னரும் நாங்கள் ஒருங்கிணைந்திருந்தோம். பல சமயங்களில் எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் முளைத்திடும். மிகவும் காட்டமாக வாதங்கள் புரிந்திருக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் எங்களுடைய புரட்சிகரத் தளையைப் பாதித்திட வில்லை. உண்மையில், இதே அம்சம்தான் எங்கள் அரசியல் தலைமைக்குழு நடவடிக்கைகளிலும் முழுமையாகப் பிரதிபலித்தது.
கம்யூனிச இயக்கத்திற்குள்ளே பல தோழர்கள், தோழர் சுந்தரய்யாவின் குணங்களைப் பெற்றிருக்க வில்லை. கம்யூனிசத்தில் அவருக்கிருந்த நம்பிக்கை, தொழிலாளர் வர்க்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை மீது அவருக்கிருந்த நம்பிக்கை, முன்னணி ஊழியர்களிடம் அவர் காட்டிய அளவிடற்கரிய அன்புஓர் உண்மையான புரட்சியாளராக அவரது வாழ்க்கை முறை - இவை அனைத்தும் சமூகப் புரட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தேவைப்படும் குணங்களாகும். அவர் கட்சியில் சேர்ந்தபின் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் கட்சிக்கு மாற்றி விட்டார். அவர் இறக்கும்போது, அவரிடம் ஒரேயொரு சொத்து மட்டுமே இருந்தது. அது கட்சிதான். அவர் முதலாளித்துவ சுகபோக வாழ்க்கைக்கு இரையாகவே இல்லை. 1937இல் இருந்த அதே சுந்தரய்யாதான் இன்றளவும் இருந்தார். அவர் மக்களை நேசித்தார். மக்கள் மத்தியில் இருப்பது அவருக்கு மிகுந்த திருப்தியை அளித்தது. மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்பதுதான் அவரது சித்தாந்தம். அவர் எதார்த்த நிலைமைகளுக்கு மார்க்சிசம் - லெனினிசத்தைப் பொருத்தினார். அவர் தன்னுடைய 55 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் சந்தித்த ஒவ்வொருவரையும்- அவரால் கம்யூனிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி அல்லது கம்யூனிஸ்ட் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி -  வென்றெடுக்க அவரால் முடிந்தது. ஒவ்வொருவரும் அவரை ஓர் உறுதியான மார்க்சிஸ்ட்டாக, ஒரு விடுதலைப் போராளியாக, சுரண்டப்படும் மக்களின் சார்பில் அர்ப்பணிப்புடன் தன்னலமற்றுப் போராடிய கட்சி ஊழியராக என்றென்றும் நினைவுகூர்வார்கள். அவர் இன்று நம்முடன் இல்லை. ஆயினும் அவர் விட்டுச்சென்ற பணிகள், அவர் தியாக வாழ்க்கை  என்றென்றும் நமக்கு உணர்வூட்டி, நம்மை முன்கொண்டு செல்லும்.
(தமிழில்: ச.வீரமணி)

Wednesday, October 15, 2008

மன்மோகன்சிங்கிற்கு ஜோதிபாசு கடிதம்

புதுடில்லி, அக்.14-என்று பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் ஜோதிபாசு கடிதம் எழுதியுள்ளார்.

தலைநகர் டில்லியில் திங்கள் அன்று தேசிய ஒருமைப்பாடு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்குமாறு, பிரதமர், ஜோதிபாசுவுக்குக் கடிதம் எழுதியிருந்தார். கூட்டத்தில் கலந்துகொள்ள இயலாமையை விளக்கியும், நிகழ்ச்சிநிரல் தொடர்பாக சில பரிந்துரைகளை விளக்கியும் ஜோதிபாசு, பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம் வருமாறு:

‘‘தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்குமாறு கோரி அதனுடைய நிகழ்ச்சிநிரலையும் அனுப்பியிருந்தீர்கள். என் உடல் மிகவும் நலிவுற்றிருப்பதன் காரணமாக என்னால் நேரடியாகக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். ஆயினும் நிகழ்ச்சிநிரலில் கண்டுள்ள விவரங்கள் குறித்து ஒருசில பரிந்துரைகளை கூட்டத்தில் விவாதிப்பதற்கா இத்துடன் அனுப்பி இருக்கிறேன்.தேசிய ஒருமைப்பாடு குறித்து துல்லியமான பரிந்துரைகள் பலவற்றை எங்கள் கட்சியின் சார்பில் ஆட்சியில் இருந்து அத்துணை அரசாங்கத்திற்கும் அவ்வப்போது அனுப்பி வந்திருக்கிறோம். ஆயினும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசின் சார்பில் எவ்வித கொள்கைத் திட்டமும் இதுவரை வகுக்கப்படவில்லை. தேசிய ஒருமைப்பாடு ஒரு வலுவான யதார்த்தமானதாக மாற வேண்டுமானால் அரசு தற்போது கடைப்பிடித்து வரும் கொள்கை நிலைப்பாடுகளில் அடிப்படை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு அரசியல் உறுதி அவசியம். அரசியலமைப்புச் சட்டத்தின் ஆணிவேரே, அரசின் கொள்கைத் திட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் என்று அழைக்கப்படும் பிரதான விதிகள்தான். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்க்கைக்குரிய போதுமான வாழ்வாதாரம், வேலை செய்ய உரிமை, செல்வம் ஒரு பக்கத்தில் குவியா வண்ணம் உள்ள பொருளாதார முறை, கல்வி உரிமை, அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி, தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஊதியம், ஆண் - பெண் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் அனைத்தும் இந்த பிரதான விதிகளில் உள்ளடங்கி இருக்கின்றன. ஆனால் இந்த விதிகளில் எதுவுமே அமல்படுத்தப்பட முடியவில்லை. நாட்டில் ஆட்சியாளர்கள் இன்னமும் சமூகப் பொருளாதார முறைகளில் செல்வந்தர்களைச் சார்ந்தே செயல்படுவதே இதற்குக் காரணமாகும். அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன்பின் ஆட்சி புரியத் தொடங்கி 58 ஆண்டுகள் கழிந்த பின்பும், சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.நாட்டின் பொருளாதார அமைப்பில் மேற்கூறிய காரணிகளினால், நாடு சுதந்திரத்திற்குப்பின் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் பதட்ட நிலைமை ஏற்பட்டுள்ளது மட்டுமல்லாமல், இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவித்திருக்கிறது. இந்தியா தொழில் மேல்கட்டுமானத்துடன் கூடிய ஒரு விவசாய நாடாகும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை நாம் பெற்ற பின்னர், 1950களின் மத்தியில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த போதிலும், அடுத்தடுத்து வந்த காங்கிர° மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைமைகளிலான மத்திய அரசாங்கங்கள் நிலச்சீர்திருத்தங்களைச் செய்திட மறுத்து விட்டன. கிராமப்புரங்களில் ஏழை - பணக்காரன் ஏற்றத்தாழ்வு வளர்ந்துகொண்டே இருக்கிறது. கிராமப்புர விவசாய மக்கள் கடும் துன்பத்திற்காளாவது தொடர்கிறது. கிராமப்புர மக்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதம் செய்யும் மத்தியச் சட்டம் ஒன்று இதுவரை நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது.தாராமயக் கொள்கையும், ஏகாதிபத்திய ஆதரவு உலகமயக் கொள்கையும் நாட்டின் பொருளாதாரத்தை பன்னாட்டு நிதிநிறுவனங்கள் சூறையாடிட வழிவகுத்துத் தந்திருக்கிறது. அதிகார வர்க்கம், கல்வி முறை, ஊடகம், கலாச்சாரம் அனைத்திலும் இப்போது அந்நிய மூலதனம் தங்குதடையின்றி, புகுந்து கொண்டிருக்கின்றன. இதனால் பிராந்திய அளவிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்திருக்கின்றன என்றும், நாட்டு ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கின்றன என்றும் கூறினால் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. நிலச்சீர்திருத்தம் மூலம் நிலங்களைக் கையகப்படுத்தி, அவற்றை மக்களுக்கு மறுவிநியோகம் செய்யாதது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் திட்டமிட்டு உருவாக்காதது ஆகியவற்றை சாதிக் குழுக்கள் பயன்படுத்திக் கொண்டு, மக்களை சாதிய ரீதியாக பிளவுபடுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. அரசியல், சமூக, பொருளாதார சமத்துவமில்லையென்றால், மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள சாதியினர் அதிலும் குறிப்பாக தலித்துகள் மிக எளிதாக இத்தகைய சாதிய சக்திகளுக்கு இரையாகிவிடுவார்கள், இரையாகியும் இருக்கிறார்கள்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூகப் பின்தங்கிய நிலைமைகளை வகுப்புவாதம் பயன்படுத்திக்கொண்டு வேருன்றிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியம். இட ஒதுக்கீடு அவசியம்தான் என்றாலும், குறிப்பாக பொருளாதார வல்லமையைத் தராத நிலையில், இத்தகைய இட ஒதுக்கீடு மட்டும் பிரச்சனைகளைத் தடுத்துவிடாது. பொருளாதாரக் கட்டமைப்பில் அடித்தட்டில் உள்ளவர்கள், சமூகக் கட்டமைப்பிலும் அடித்தட்டில் உள்ளார்கள் என்பதை மறுக்க முடியாது.நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைத் திணித்தல், விவசாயத்தில் அரசு முதலீட்டை இல்லாமல் ஒழித்தல், விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்தல் - இவை அனைத்தும் ஒடுக்கப்பட்டமக்களை சொல்லொணாத் துயரத்திற்குள்ளாக்கி யுள்ளன. இக்காரணிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாநில ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தி, பல்வேறு ஒடுக்கப்பட்ட சாதியினரின் அடையாளங்களையும் மேலும் மோசமாக்கி இருக்கிறது.மத்திய - மாநில உறவுகளை மாற்றி அமைத்திட நாங்கள் மிக விரிவான அளவில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தோம். அதன்விளைவாக, திருமதி இந்திராகாந்தி அவர்களால் சர்க்காரியா ஆணையம் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் முழுமையாக திருப்தி அளிக்கக்கூடியவை அல்ல என்றாலும், ஒருசில நிதி உறவுகள் தொடர்பாக அதன் கருத்துக்கள் இன்னமும் அமல்படுத்தப்பட வில்லை.மத்திய - மாநில உறவுகள் ஓர் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. சில மாநிலங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வதும் சில மாநிலங்களைக் கண்டுகொள்ளாதிருப்பதும் தொடர்கிறது. மத்திய அரசின் இத்தகைய நிலைபாட்டினை நாட்டைச் சீர்குலைக்க முயலும் சக்திகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

சிறுபான்மை இனத்தவரின் நிலைமைகள் குறித்து ஆய்வு செய்த ஆணையங்களின் அறிக்கைகள் பலவும் தூதி அடைந்து கிடக்கின்றன. நாட்டைப் பீடித்துள்ள மதவெறி அச்சுறுத்தலை அரசியல் உறுதி மற்றும் நிர்வாகத் திறமை மற்றும் மதச்சார்பற்ற மாண்பினை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் போராடி முறியடித்திட வேண்டும். குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக, மதவெறி சக்திகளுடன் சமரசம் மேற்கொள்ளும் போக்கு பரவலாக இருக்கிறது. பெரும்பான்மை வகுப்புவாதம் தன்னுடைய செயல்பாடுகளின் காரணமாக சிறுபான்மை வகுப்புவாதம் வளரத் துணை செய்கிறது. இதனால் நிலைமைகள் மேலும் மேலும் மோசமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்திட, இப்போது எழுந்துள்ள பலவீனங்களைப் போக்கிட, பல்வேறு பரிந்துரைகளை நாங்கள் அளித்திருக்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட, தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம். பணபலம் - புஜ பலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 1994இல் அமைக்கப்பட்ட ஒன்பது பேர்கள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்பமை அம்சமாக மதச்சார்பின்மை வரையறுக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திலும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இதற்கெதிராக உள்ள மத்தி மாநில உறவுகளின் திசைவழி மாற்றி அமைக்கப்பட வேண்டும்.நிலச்சீர்திருத்தங்கள், உயர்ந்த அளவிலான ஊதியங்கள், விவசாயம், பொருளாதாரம் மற்றும் நிதித்துறைகளில் அரசின் தலையீடுகள் அதிகரித்தல், வேலைவாய்ப்பு பெருகுதல், பொதுத்துகைளைப் பாதுகாத்தல், ஏகாதிபத்திய ஆதரவு தாராளமயக் கொள்கைகளைக் கைவிடுதல், பெண் சமத்துவம், தலித்துகள் - பழங்குடியினர் சமூக விடுதலை, இறுதியாக சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர் உரிமைகள் பாதுகாக்கப்படுதல் - இவை அனைத்தும் உள்ளடங்கியதாக நம்முடைய அரசியல் கண்ணோட்டத்தின் உந்துவிசை, இருந்திட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு குறித்த முக்கிய மூலக்கூறு, அமெரிக்க ஆதரவு அயல்துறைக் கொள்கையிலிருந்து விலகி இருத்தலாகும். இவை அனைத்தையும் நிறைவேற்ற, மத்திய அரசாங்கம் அரசியல் உறுதியைக் கடைப்பிடித்து, செயலில் இறங்கிட வேண்டும். இல்லாவிடில் நாடு பெரும் ஆபத்திற்குள்ளாகும்.

இவ்வாறு ஜோதிபாசு அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.