Sunday, October 25, 2009

இந்துத்வா சக்திகளின் வன்முறை வெறியாட்டங்களை முறியடிப்போம்




இந்துத்துவா சக்திகள் மீண்டும் ஒருமுறை தங்களுடைய கோரமான முகத்தினை உயர்த்தியுள்ளன. கோவாவில் மட்கானில் வெடிகுண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தத் தாக்குதலை நடத்தியதாக, சனாதனா சன்ஸ்தா என்னும் அமைப்பானது ஒப்புக் கொண்டிருக்கிறது. மகாராஷ்ட்ராவில் தேர்தலுக்கு முன்னதாக சங்லி மற்றும் கோலாபூர் மாவட்டங்களில் நடைபெற்ற வகுப்பு மோதல்களிலும் இந்த அமைப்பு சம்பந்தப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சங்லி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கிருஷ்ணபிரகாஷ், ‘‘சனாதன சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள், கலவரங்களின்போது இந்துக்களுக்கு ஆயுதங்களை விநியோகித்ததாகவும், வாள்கள், சங்கிலிகள் ஆகியவற்றை ஒரு காரில் சனாதன சன்ஸ்தா அமைப்பினர் எடுத்துச் சென்றுள்ளார்கள் என்றும் எங்களுக்குத் தகவல்கள் வந்துள்ளன’’ என்று கூறியிருக்கிறார் (தி இண்டியன் எக்ஸ்பிரஸ்). உண்மையில், மகாராஷ்ட்ரா, பயங்கரவாத எதிர்ப்புக் குழு (ATS - Anti Terrorism Squad)வும், வீரமரணம் எய்திய அதன் முன்னாள் தலைவர் ஹேமந்த் கர்கரேயும், மகாராஷ்ட்ரா மாநிலம் தானேயில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலை அடுத்து, 2008 ஜூன் மாதத்திலேயே சனாதன சன்ஸ்தா அமைப்பைத் தடை செய்திட வேண்டும் என்று கேட்டிருந்தார். பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் தற்போதைய தலைவரும் கூட, இந்த அமைப்பினைத் தடை செய்திடுமாறு ஒரு முன்மொழிவு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டதென்றும், ஆனால் அதன் தற்போதைய நிலைமை என்ன வென்று தனக்குத் தெரியாதென்றும் கூறியிருக்கிறார்.

சனாதன சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையவர்களாகச் சந்தேகிக்கப்படும் ஆறு பேரை பயங்கரவாத எதிர்ப்புக் குழு கைது செய்திருப்பதன் பின்னணியில் இவ்வாறு பரிந்துரைகள் அனுப்பப் பட்டிருக்கின்றன. 2008 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற மலேகான் வெடிகுண்டு தாக்குதலிலும் இவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் என்று அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் டியோலாலி மற்றும் நாசிக் நகர்களில் சதியாலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். மேலும், மலேகான் வெடிகுண்டு விபத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் தாவாடே, 2003 ஜூனில் சின்கார் கோட்டை அருகே பஜ்ரங்தளத்தினருக்காக ஒரு பயிற்சி முகாமையே நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் இப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சில அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதாக வந்த தகவல்களைச் சுட்டிக்காட்டி அவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தோம்.
‘‘நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்றுள்ள வெடிகுண்டு தாக்குதல்களில் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் வேறு பல அமைப்புகள் சம்பந்தப்பட்டிருப்பதாக, காவல்துறையின் புலனாய்வுகள் குறிப்பிட்டிருக்கின்றன. 2003இல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில்ல பர்பானி, ஜால்னா மற்றும் ஜல்கான் மாவட்டங்களில் நடைபெற்ற தாக்குதல்கள், 2005இல் உத்தரப்பிரதேசத்தில் மாவ் மாவட்டத்தில் நடைபெற்ற தாக்குதல், 2006இல் நாண்டட் தாக்குதல், 2008 ஜனவரியில் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பு, கான்பூரில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல் போன்ற இவை அத்தனையிலும் பஜ்ரங் தளம் அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழான ஏதேனும் ஒரு துணை அமைப்பு ஈடுபட்டிருந்தது ,’’ என்று 2008 அக்டோபர் 13 அன்று நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அதன்பின்னர், 2008 செப்டம்பர் 29 அன்று, பயங்கரவாத எதிர்ப்புக் குழு, ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புள்ள எண்ணற்றவர்களைச் சுற்றிவளைத்து, விசாரணை செய்து, நாசிக், போன்சாலா ராணுவப் பள்ளியைச் சேர்ந்த கமாண்டண்ட் மற்றும் சாத்வி பிரக்யா சிங் தாகூர் உட்பட பலரைக் கைது செய்தது.

இந்துக்களுக்குத் தீவிரவாதப் பயிற்சி அளிப்பதென்பதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ‘‘இந்து நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசியல் பயிற்சியும் ராணுவப் பயிற்சியும் அளிக்கப்பட்டு அனைவரையும் முழு இந்துக்களாக்க வேண்டும்’’ என்பதே சாவர்கர் வைத்த கோஷம். இதனால் உத்வேகம் அடைந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஸ்தாபகர் டாக்டர் ஹெக்டேவார் அவர்களின் குருவான டாக்டர் பி.எஸ். மூஞ்சே, பாசிஸ்ட் சர்வாதிகாரி முசோலினியைச் சந்திப்பதற்காக இத்தாலிக்குப் பயணம் சென்றார். சந்திப்பு 1931 மார்ச் 31 அன்று நடைபெற்றது. அவர் மார்ச் 20 அன்று தன் சொந்த நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ள வாசகங்களிலிருந்து, இத்தாலிய பாசிசம் எங்ஙனம் தன் இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறது என்று மிகவும் வியந்து, பாராட்டி, எழுதியிருக்கிறார். பின்னர் அவர் இந்தியா திரும்பியபின், 1935இல் நாசிக்கில் மத்திய இந்து ராணுவக் கல்விக் கழகம் (Central Hindu Military Education Society) என்னும் அமைப்பினை நிறுவினார். இதுதான் 1937இல் நிறுவப்பட்ட போன்சாலா ராணுவப் பள்ளிக்கு முன்னோடியாகும். கோல்வால்கர், 1939இல், ஹிட்லர் யூதர்களைப் பூண்டோடு துடைத்தழித்திட நாசி பாசிசம் குறித்து குதூகலம் அடைந்து, ‘‘இந்துஸ்தானில் இருக்கிற நமக்கெல்லாம் இது நல்லதொரு பாடம் என்றும், இதனை நன்கு கற்று, ஆதாயம் அடைய வேண்டும்’’ என்றும் கூறியிருக்கிறார். சமீபத்தில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வினை அடுத்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கொடுக்குகளான விசுவ இந்து பரிஷத்தும், பஜ்ரங் தளமும் ‘‘கர சேவகர்களுக்கு’’ப் பயிற்சி அளித்தது குறித்து பெருமைப்பட்டதைப் பார்த்தோம். பாபர் மசூதி இடிக்கப்பட்ட சமயத்தில், உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசின் முதல்வராக இருந்தவர், ‘‘பாபர் மசூதியை, தொழில்ரீதியான ஒப்பந்தக்காரர்களைவிட மிகவும் வேகமாகவும், திறமையாகவும் தகர்த்திட்ட கரசேவகர்களின் செயல் குறித்து மிகவும் பெருமைப்படுவதாக’’, வெளிப்படையாகவே கூறினார்.

இந்தப் பின்னணியில்தான், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் ‘‘இந்து தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் என்கிற சொற்களை உபயோகப்படுத்தக்கூடாது என்று கூறியிருப்பதானது, மிகவும் மர்மமாக இருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்கள் குறித்து, எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் தங்களுடைய மத அடிப்படையில் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவான உண்மை. இந்த உண்மை எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒன்று என்று சொல்லக்கூடாதா? ஆம், சொல்லக்கூடாது என்பதுதான் ஆர்எஸ்எஸ்-இன் நிலைப்பாடாகும். 2008 அக்டோபர் 17 - 19 தேதிகளில் நடைபெற்ற அதனுடைய ‘அகில பாரதீய கார்யகாரிணி மண்டலி பைதக்’ கூட்டத்தில் ‘‘இஸ்லாமிக் பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்குவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றியது. இவ்வாறு இரட்டை நிலை எடுத்ததோடு மட்டுமல்லாது, மகாராஷ்ட்ராவிலும் மற்றும் பல பகுதிகளிலும் காவல்துறையினரும் பயங்கரவாத எதிர்ப்புக் குழுவினரும் மேற்கொண்ட ‘‘வெற்றிகரமான நடவடிக்கைகள்’’ குறித்து வெகுவாகப் பாராட்டியும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அவர்கள் பாராட்டிய அதே பயங்கரவாத எதிர்ப்புக் குழுவானது, இப்போது இந்துத்வா பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுத்திருப்பது குறித்து ஆர்எஸ்எஸ் செய்வதறியாது மிகவும் திகைத்து நிற்கிறது. கோவாவில் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக நடைபெறும் புலனாய்வு விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டத்தின் ஆட்சி தன் கடமையைச் செய்திட வேண்டும்.

இவ்வாறான பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் முழுமையாக புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டு, குற்றம்புரிந்த கயவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இப்போது நடைபெற்றுள்ள நிகழ்ச்சிப் போக்குகள், நாம் இப்பகுதியில் அடிக்கடி கூறிவந்ததைப்போல் இரு விஷயங்களை உறுதிப்படுத்தகின்றன. பயங்கரவாத நடவடிக்கைகள் தேச விரோதத்தன்மை கொண்டவை என்பதால் அவை தொடர்பாக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை, அவற்றை ஏற்றுக் கொள்வதற்குமில்லை. இரண்டாவதாக, அனைத்துவிதமான பயங்கரவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்த்து, வலுப்படுத்திடும் என்பதிலும் எவ்வித ஐயமுமில்லை. இவை தங்களுடைய செயல்பாடுகளினால் நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையுமே அழிக்கின்றன.

பயங்கரவாத நடவடிக்கைகளைத் தங்களுடைய குறுகிய அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவது மிகவும் கேவலமான சித்தாந்த நடைமுறைகளாகும். மதவெறி அல்லது பிராந்திய வெறி மூலம் மக்களை உசுப்பிவிடுவதன் மூலமாகப் பெரிய அளவில் தேர்தலில் ஆதாயம் அடைந்திடலாம் என்று கருதுவது இந்தியாவின் பன்முகப்பட்ட சமூகக் கலாச்சாரத் தன்மையைச் சுக்குநூறாகக் கிழித்து எறிந்துவிடும். நாட்டின் நவீன மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைப் பாதுகாத்து, வலுப்படுத்திட வேண்டுமானால், இத்தகைய பயங்கரவாத அரசியல்கள் முறியடிக்கப்பட வேண்டியது அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: