Saturday, October 31, 2009
ப.சிதம்பரம் பாசாங்கு செய்ய வேண்டாம்: பிரகாஷ் காரத்
புதுடில்லி, அக். 31-
தன்னுடைய அமைச்சரவை சகாவின் முரண்பாடான நிலைப்பாட்டைச் சரிசெய்ய முயலவேண்டுமேயொழிய, மார்க்சிஸ்ட் கட்சியின் மீது பழிசுமத்தி பாசாங்கு செய்திட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரகாஷ்காரத் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நக்சலைட்/மாவோயிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றைக் கண்டுகொள்ளாது ஒதுக்கியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. மாவோயிஸ்ட்டுகள் எப்போதுமே மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு எதிராகத்தான் இருந்து வந்திருக்கிறார்களேயொழிய, மார்க்சிஸ்ட்டுகளுடன் எந்தக் காலத்திலும் இணைந்து போராடியது இல்லை. அவர்கள் 1960களின் பிற்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தபின், மேற்கு வங்கத்தில் செயல்பட்ட இடது அதிதீவிரவாதிகள் மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் ஊழியர்களையுமே குறிவைத்துத் தாக்கி வந்தார்கள். இவர்களின் தாக்குதலில் 1970களின் முற்பகுதியில் நூற்றுக்கணக்கான ஊழியர்ளையும் ஆதரவாளர்களையும் மார்க்சிஸ்ட் கட்சி இழந்துள்ளது.
பூர்ஷ்வா காங்கிரசை எதிர்த்திடும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர், மாவோயிஸ்ட்டுகளுடன் இணைந்து போராடினார்கள் என்று ப. சிதம்பரம் கூறியிருப்பதும் வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐமுகூ அரசாங்கமானது சுமார் நான்காண்டு காலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் முட்டுக் கொடுக்கப்பட்டு ஆட்சியில் நீடித்து வந்தது என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
மாவோயிஸ்ட்டுகள் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினரின் அணுகுமுறை தொடர்பாக ப.சிதம்பரம் கூறியுள்ளவை, தவறானவைகளாகும். பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட அரக்கத்தனமான சட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தே வந்திருக்கிறது. இத்தகைய சட்டங்கள், பயங்கரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில், நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக, ஏவப்பட்டிருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் தத்துவார்த்தரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்கள் என்பதும், அவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது அவற்றை உறுதியான நிர்வாக நடவடிக்கைகளின் மூலமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதுமே மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது. மாவோயிஸ்ட்டுகளை எந்தக் காலத்திலும் லஸ்கர்-இ-தொய்பா அல்லது ஜைசி-இ-முகமது இயக்கங்களுடன் இணைத்துப் பார்க்கக் கூடாது. மாவோயிஸ்ட்டுகள் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று உள்துறை அமைச்சர் கூறியிருப்பதிலிருந்தே இவ்வித்தியாசத்தை அவர் அங்கீகரிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆயினும், அவரது அமைச்சரவை சகா ஒருவர், அவரது அமைச்சகத்திற்கும், அரசாங்கத்திற்கும் எதிரான விரும்பத்தகாததொரு நிலைப்பாட்டை மேற் கொண்டிருக்கிறார் என்பது உள்துறை அமைச்சர் நன்கு அறிவார். லால்காரில் மத்திய பாதுகாப்புப் படையினரும் மாநிலப் பாதுகாப்புப் படையினரும் மாவோயிஸ்ட்டு களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளைத் துவக்கிய சமயத்திலிருந்தே, மத்திய ரயில்வே அமைச்சர் அந்நடவடிக்கைக்கு எதிராகத் தன் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், மத்திய பாதுகாப்புப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரி வந்தார். மேலும் அவர், மாவோயிஸ்ட்டுகளின் பின்னணியில் இயங்கிடும் ஓர் அமைப்புக்கு ஆதரவினை அளித்து வருகிறார். அவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு அமைச்சர், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுவது தொடர்பாக தனக்கு முன்னமேயே தெரியும் என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
தங்களுடைய அமைச்சரவைக்குள்ளேயே திகழும் இத்தகைய வெளிப்படையான முரண்பாட்டைச் சரிசெய்திட ப.சிதம்பரம் முன்வரவேண்டுமே யொழிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக சம்பந்தம் இல்லாத வகையில் போலித்தனமானவற்றைக் கூறாதிருத்தல் நன்று.’’
இவ்வாறு பிரகாஷ்காரத் கூறியுள்ளார்.
----
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment