Saturday, October 24, 2009
மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பது விதிவிலக்கான ஒன்றுதான் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பேட்டி
புதுதில்லி, அக். 24-
மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கையை ஏற்று, 26 பழங்குடியினப் பெண்கள் சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பது விதிவிலக்கான ஒன்றுதான் என்றும், மாவோயிஸ்ட்டு களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்றும் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ள வந்துள்ள கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா சனிக்கிழமையன்ற மதியம் வங்க பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
‘‘நேற்றையதினம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்தித்தேன். மேற்கு வங்க மாநிலத்திலும், மற்றும் நாடு தழுவிய அளவிலும் இருந்து வரும் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சனை தொடர்பாக மிக விரிவான அளவில் விவாதங்களை நடத்தினோம். மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் கிரிமினல் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பையும் அனைத்துவிதமான உதவிகளையும் நல்கும் என்று அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து ஒருசிலவற்றைத் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு சில பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜார்கண்ட் மாநில எல்லைப் பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் இயங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அவர்களின் நடவடிக்கைளை மேற்கு வங்கத்தில் முற்றிலுமாக ஒழித்திட நாங்கள் முயற்சித்துக் கொண்டு வருகிறோம். இந்த நடவடிக்கைகளில் சமீபத்தில் சில பிரச்சனைகளை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
மூன்றுமாதங்களுக்கு முன்பு மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்தவர்களும், மாநிலக் காவல்துறையினரும் சேர்ந்து மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டுக் கொண்டிருந்த பகுதிகளில் சோதனைகள் மேற்கொண்டு, அவர்களின் செயல்பாட்டை வெகுவாகக் குறைத்துவிட்டோம். அவர்களின் முக்கிய தலைவர்கள் மற்றும் முன்னணி ஊழியர்களைக் கைது செய்திருக்கிறோம்.
துரதிர்ஷ்டவசமாக, ஒரு சில தினங்களுக்கு முன் கேந்திரமான பகுதியில் இல்லாத ஒரு காவல்நிலையத்திற்குள் புகுந்து மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த இரு காவல்துறையினரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, நிலையத்திற்குப் பொறுப்பு வகித்த காவல் அதிகாரியைக் கடத்திச் சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களையும் கொள்ளையடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் பக்கத்திலிருந்த வங்கி ஒன்றிலிருந்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட காவல்துறை அதிகாரியை ஒப்படைத்திட, சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வரும் பழங்குடியினப் பெண்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை மாவோயிஸ்ட்டுகள் முன்வைத்தனர். மாவோயிஸ்ட்டுகளின் நிபந்தனைகள் கடுமையானவைகளாக இருந்திருந்தால் நம்மால் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.
மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கேடயங்களாகப் பயன்படுத்தி வந்த அப்பாவி பழங்குடியினப் பெண்களை விடுதலை செய்யுமாறு கோரியிருக்கிறார்கள். சில கிளர்ச்சிப் போராட்டங்களில் பங்கேற்றதற்காகத்தான் அப்பெண்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். எனவே காவல்துறை அதிகாரியை மாவோயிஸ்ட்டுகள் விடுவிப்பதற்கு அவர்கள் கோரிய இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம். பழங்குடியினப் பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பழங்குடியினப் பெண்கள் மீதான வழக்குகள் எதுவும் ரத்து செய்யப்படவில்லை. அவர்கள் பிணையில்தான் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது விதிவிலக்கான ஒன்றுதான். மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். மாவோயிஸ்ட்டுகளை மேற்கு வங்க மாநிலத்திலிருந்தும், நாட்டிலிருந்துமே ஒழித்திடும்வரை இந்த நடவடிக்கைகள் தொடரும். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகவும் உறுதியாக இருக்கிறது.
மாவோயிஸ்ட்டுகளைப் பற்றி எவ்விதமான மாயையையும் எங்களுக்குக் கிடையாது. அவர்கள் தனிநபர் கொலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஆயுதங்களைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள், வங்கிகளைக் கூட கொள்ளையடிக்கிறார்கள். இவ்வாறு அனைத்துவிதமான கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே எவ்வித மாயையும் இன்றி இவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும்.
மாவோயிஸ்ட்டுகள் மேற்கு வங்க மாநிலத்திலிருந்தும், நாட்டிலிருந்தும் ஒழிக்கப்படும் வரை எங்கள் நடவடிக்கைகள் தொடரும். இதற்கு மத்திய அரசும் முழு அளவில் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்திருக்கிறது.
இவ்வாறு புத்ததேவ் பட்டாச்சார்யா கூறினார்.
காவல்துறை அதிகாரியின் விடுதலைக்காக, மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கையை ஏற்றிருப்பதானது, மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மத்தியில் மனச்சோர்வை அளித்திருப்பதாகக்கூறப்படுகிறதே என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, மனிதாபிமான அடிப்படையில் இது நடைபெற்றிருக்கிறதென்றும், கட்சிஊழியர்கள் முழுமையாக இதனைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் புத்ததேவ் கூறினார்.
இவ்வாறு கைதிகள் பரிமாற்றம் மாவோயிஸ்ட்டுகளுக்கு தைரியத்தை அளித்திடாதா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, சரியான கேள்வி என்று ஒப்புக்கொண்ட புத்ததேவ், இதுதொடர்பாக நாங்கள் ஆழமாக விவாதித்தோம் என்றும், இதுபோன்று முன்னெப்போதும் நடந்திராத ஒன்றுதான் என்றும், இத்தகைய நிலைமை எதிர்காலத்தில் ஏற்படாதவாறு மிகவும் எச்சரிக்கையாக இருப்போம் என்றும் கூறினார்.
மாவோயிஸ்ட்டுகளிடம் அரசு சரணடைந்து விட்டதாக எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, ‘இல்லை’, ‘நிச்சயமாக இல்லை’ என்று கூறிய புத்ததேவ், மாவோயிஸ்ட்டுகள் அறைகூவலுக்கிணங்க நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்ற பழங்குடியினப் பெண்களைத்தான் இப்போது விடுவித்திருப்பதாகவும், இவர்களும் பிணையில்தான் விடுவிக்கப் பட்டிருக்கிறார்களேயொழிய இவர்கள் மீதான வழக்குகள் விலக்கிக் கொள்ளப் படவில்லை, அவர்கள் மீதான வழக்கு விசாரணை தொடரும் என்றும் எனவே இதனை எப்படி சரணாகதி என்று கூறமுடியும் என்றும் புத்ததேவ் கூறினார்.
‘சரணாகதி’ இல்லை என்றால் ‘அரசு சற்றே இறங்கி வந்திருக்கிறது’ என்று எடுத்துக்கொள்ளலாமா என்று ஒரு செய்தியாளர் வினா தொடுத்தபோது, அதனையும் மறுத்திட்ட புத்ததேவ், பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கும் அனைவரும் கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்ட 26 பழங்குடிப் பெண்கள் என்றும், இந்தப் பெண்களில் எவர் ஒருவருக்கும் நக்சலைட் தொடர்பு இருந்ததாகப் பதிவேடு (ரிகார்ட்) எதுவும் கிடையாது என்றும், இவர்கள் எந்தவிதக் கொடூரமான குற்றத்தையும் புரிந்து சிறையில் அடைக்கப்படவில்லை என்றும், சாதாரண குற்றங்களின்கீழ்தான் இவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டிருந்தார்கள் என்றும், எனவே இவர்கள் இப்போது பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் புத்ததேவ் தெளிவாக்கினார்.
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜார்கண்ட் மாநில அரசும், மேற்கு வங்க மாநில அரசும் இணைந்து செயல்படுத்திடுமா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, இது தொடர்பாக நானும் மத்திய உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பதாகவும், ஆனால் ஜார்கண்டில் தேர்தல் நடைபெறவிருப்பதால் இப்போதைக்கு அது மிகவும் சிரமம் என்றும் புத்ததேவ் கூறினார்.
லால்காரில் தற்போதைய நிலைமை என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, கடைத்தெருக்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள் முதலானவை நம் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள்தான் இன்னமும் பிரச்சனை இருப்பதாகவும் புத்ததேவ் கூறினார்.
...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment