Thursday, October 29, 2009

ராஜ்தானி எக்ஸ்பிரஸ் நிறுத்தி வைக்கப்பட்ட சம்பவம்:விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்



மாவோயிஸ்ட்டுகள், புவனேஸ்வர் - புதுதில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை, பான்ஸ்டாலா ரயில் நிலையம் அருகில் ஜாக்ரம் - கரக்பூர் பிரிவில், ஐந்து மணி நேரத்திற்கும் அதிகமாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின் கூட்டு நடவடிக்கைகள் காரணமாக, பயணிகள் எவருக்கும் பாதிப்புகள் இல்லை, ரயிலும் விடுவிக்கப்பட்டுவிட்டது. ரயிலில் இது தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்களின்படி, சமீபத்தில் காவல்துறை யினரால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்டுகள் பின்னணியில் இருந்து இயக்கி வரும் ‘போலீஸ் அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள் நடவடிக்கைக் குழு’வின் தலைவர் சத்ரகார் மஹாதோவை விடுவித்திடக் கோரி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக உய்த்துணர முடிகிறது. (மேற்படி வாசகங்களை, மிகச் சாமானிய பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் எவரும் எழுத வில்லை என்பதும், நன்கு படித்த ஒருவர் தான் அதனை எழுதி யிருக்க முடியும் என்பதும் அது எழுதப்பட்ட தன்மையிலிருந்து அறிய முடிகிறது.)

ஒட்டுமொத்த இந்நிகழ்வானது பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளது. ராஜதானி அல்லது சதாப்தி ரயில்கள் சுமார் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் என்பதும், ரயில் பாதையில் ஏதேனும் தடைகள் இருந்தாலும் கூட, அவசரமாக பிரேக் செய்தால், அந்தத் தடைகள் தூக்கி எறியப்பட்டுவிடும் என்பதும், ரயிலுக்கும் சேதத்தை ஏற்படுத்திவிடும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். ஆயினும் இந்த நிகழ்வின்போது, ரயில் மிகவும் அமைதியான முறையில் நிறுத்தப்பட்டிருக்கிறது.

சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட வுடனேயே மத்திய ரயில்வே அமைச்சர் அளித்திட்ட பதில் மிகவும் வேடிக்கையான - விசித்திரமான ஒன்று. வழக்கம்போல் இந்த சம்பவமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களால் தன் செல்வாக்கைக் குலைத்திடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்று கூறினார். ஆயினும், நிறுத்தப்பட்ட ரயிலில் நிறுத்தப்பட்டவர்களால் எழுதப்பட்ட வாசகங்கள், இதனைச் செய்தது மாவோயிஸ்ட்டுகள் என்பதை வெளிப்படுத்தியபோது, அவர்களுடன் தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராயிருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான இடத்தை அவர்கள் அறிவிக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்களில் ஒருவரான சிசீர் அதிகாரி என்பவர், இத்தகைய தாக்குதல் நடைபெறப்போகிறது என்று தனக்கு முன்னமேயே தெரியும் என்று ஊடகங்களிடம் பீற்றிக்கொண்டிருக்கிறார். நிச்சயமாக, தன் அமைச்சரவை சகா ஒருவருக்கு இதுபோன்ற சம்பவம் குறித்து முன்னமேயே தெரிந்திருப்பது தொடர்பாக, பிரதமர் விசாரணை செய்ய வேண்டியது அவசியமாகும்.

திரிணாமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகளுக்கு உடந்தையாக இருந்து வருவது தொடர்பாக எண்ணற்ற விவரங்களை இப்பகுதியில் நாம் ஏற்கனவே அளித்திருக்கிறோம். சத்ரகார் மஹாதோ என்பவர் ‘காவல்துறை அட்டூழியங்களுக்கு எதிரான மக்கள்குழு’ என்று அழைக்கப்படுகின்ற அமைப்புக்குத் தலைவராவதற்கு முன்பு அப்பகுதி திரிணாமுல் தலைவராக இருந்திருக்கிறார். அதேபோன்று ஊடகங்கள் மூலம் விளம்பரம் தேடிக்கொள்ள ஆர்வம் காட்டும் மாவோயிஸ்ட்டுகளின் தலைவராகத் தன்னைத் தானே கூறிக்கொள்ளும் கிஷன்ஜி என்பவரும் தாங்கள் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக மமதா பானர்ஜியைப் பார்க்கவே விரும்புகிறோம் என்று இதற்குமுன் ஒருதடவை பிரகடனம் செய்திருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், ஏற்கனவே தாங்கள் நந்திகிராமில் திரிணாமுல் காங்கிரசாருக்கு உதவியதற்கும், இப்போது நாங்கள் லால்காரில் உதவிக் கொண்டிருப் பதற்கும், அவர்களிடம் இருந்து நாங்கள் இப்போது கைமாறு எதிர்பார்க்கிறோம் என்று கேட்டிருக்கிறார். இவற்றிலிருந்து திரிணாமுல் காங்கிரசார் அளித்திடும் அன்பாதரவு மற்றும் பாதுகாப்பின் பின்னணியில்தான் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது தெளிவாகும்.

இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையிலான அரசியல் உடன்பாட்டினால் தான், ரயிலை நிறுத்தி சேதப்படுத்திய மாவோயிஸ்ட்டுகளைக் கண்டித்திட திரிணாமுல் காங்கிரஸ் முன்வரவில்லை. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் இடையிலான உடன்பாட்டினால்தான் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு எதிராக மத்திய பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவதை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு மாவோயிஸ்ட்டு வன்முறை பெரும் சவாலாக இருக்கிறது என்று அடிக்கடி கூறும் பிரதமரின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சி, இவ்வாறு அதே மாவோயிஸ்ட்டுகளுக்கு அவர்களின் அனைத்து வன்முறை நடவடிக்கைகளுக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருவதுதான். இவ்வாறு ஐமுகூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்குள் முரண்பாடுகள் இருந்தபோதிலும், எவ்விதமான லஜ்ஜை யுமின்றி அவை தொடர்ந்து ஒரே கூட்டணியில் இருப்பதுதான் நாட்டின் துர்ப்பாக்கிய நிலையாகும். இது தொடர்பாக பிரதமர் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டவராவார்.
அதே சமயத்தில், ரயில்வே ஊழியர்கள் மத்தியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அசௌகரியமான நிலையும், பாதுகாப்பின்மையும் அதிகரித்து வருகின்றன. புருலியாவில் உள்ள ரயில்வே ஊழியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர், ரயில்வே நிலையங்களில், ரயில் பாதைகளில் மற்றும் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் ரயில்வே ஊழியர்களுக்கு, மாவோயிஸ்ட்டுகளின் தாக்குதல்களிலிருந்துத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள போதுமான பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் மிகுந்த அச்சத்துடனேயே பணியாற்ற வேண்டி யிருக்கிறது என்று கூறியிருக்கிறார். திரிணாமுல் காங்கிரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே உள்ள உறவின் காரணமாக திரிணாமல் காங்கிரசின் தலைவர் ரயில்வே அமைச்சராக இருக்கும் வரை நிலைமைகளில் மாற்றம் ஏதும் வர வாய்ப்பில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்.

எனவே நடைபெற்றுள்ள நிகழ்வுகள் குறித்து ஓர் ஆழமான விசாரணை மேற்கொள்ளப்படுதல் அவசியமாகும். நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிக முக்கியமான கருவியாக விளங்கும் இந்தியன் ரயில்வேயின் பாதுகாப்பினை இவ்வாறு மாவோயிஸ்ட்டுகளுக்கு அனைத்துவிதமான வகைககளிலும் ஆதரவினையும் பாதுகாப்பினையும் அளித்து வரும் அரசியல் சந்தர்ப்பவாதத்தின் காரணமாக கடும் ஆபத்திற்குள்ளாக்கலாமா? மேலும், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் மாவோயிஸ்ட்டு களை அனுமதிக்கலாமா? நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பாக எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்று பிரதமரும் ஐமுகூ-2 அரசாங்கமும் நாட்டு மக்களுக்கு உறுதி அளித்திட வேண்டும். ராஜதானி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டு, அதன் ஓட்டுநர்கள் கடத்தப்பட்ட நிகழ்வுகள் குறித்தும், நாட்டின் நலன்களுக்கு எதிராகவும், அப்பாவி மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும் ஈடுபட்ட அனைவருக்கு எதிராகவும் முழுமையாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: