Saturday, May 30, 2009

பெரும் போராட்டங்களுக்குத் தயாராவோம்



க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத் தின் இரண்டாவது தவணையாக, 2009 மே 28 வியாழன் அன்று எஞ்சிய கேபினட் அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி பதினைந்து நாட்களாகிவிட்டன. இப்போதுதான் அவர்களால் முழுமையாக அமைச்சரவையையே அமைக்க முடிந்திருக்கிறது. 2004இல் இவ்வாறு அமைச்சரவை அமைத்திட வெறும் பத்துநாட்கள்தான் ஆயின. மேலும் உறுதிமொழி எடுத்த அடுத்த சில மணி நேரத்திற்குள் அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. சென்ற வாரம் பிரதமருடன் உறுதிமொழி எடுத்துக்கொண்ட 19 அமைச்சர்களில் 13 பேருக்கு இன்னமும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியைத் தீர்மானிப்பதிலேயே இவ்வாறு நிச்சயமற்ற தன்மைகள் இருக்குமாயின், பின் நாள்தோறும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமையிலிருந்து விடுபட மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் அரசிடமிருந்து கிடைத்திடுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை.

டாக்டர் மன்மோகன்சிங் மீண்டும் ஒருமுறை பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும்போது, ‘‘மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன்’’ இவ்வெற்றி கிடைத் திருக்கிறது என்று கூறினார். மக்களின் ஆதரவு, ‘‘உள்ளீடான வளர்ச்சி’’ (inclusive growth), ‘‘சீரான வளர்ச்சி’’ மற்றும் ‘‘ஒரு மதச்சார்பற்ற பன்முக இந்தியா’’விற்கான ஒன்று என்று அவர் விவரித்திருக்கிறார். இவை அனைத்தையும் எய்திட வேண்டுமானால், இதற்கான கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்தியாக வேண்டும். உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக, இந்தியாவில் ‘‘ஒளிர்கின்ற’’ இந்தியனுக்கும், ‘‘உழல்கின்ற’’ இந்தியனுக்கும் இடையிலான இடைவெளி மேலும் ஆழமாகியுள்ளது. ஆயினும், ஐமுகூ அரசாங்கமானது இப்போதும் இதை மறுக்கும் நிலையிலேயே உள்ளது. 2009ஆ ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான கேந்திர பொருளாதார அடிப்படைகள் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பரிசீலிக்கும்போது, இந்தியாவின் தொழில் உற்பத்தியின் அளவு, சென்ற ஆண்டு இதே மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், -2.3 சதவீத வளர்ச்சியாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
உற்பத்தித் துறை (Manufacturing Sector) நாட்டின் தொழில் உற்பத்தி அட்டவணையில் சுமார் 80 சதவீதம் வேலைவாய்ப்பை அளித்திடும் ஒரு துறையாகும். இதன் வளர்ச்சி விகிதம் மிக மோசமான அளவில் -3.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத்தின் எதிர்மறைத் தாக்கத்தின் காரணமாக, சர்வதேச வர்த்தகம் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி, தொடர்ந்து ஏழாவது மாதமாக சுமார் 33 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இறக்குமதிகள், குறிப்பாக கட்டமைப்பு வசதிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பினைச் செய்திடும் மூலதனப் பொருள்களின் இறக்குமதிகள், 35 சதவீதம் சுருங்கிவிட்டன.

இவை அனைத்தின் பொருள் என்ன? இப்போது இருந்து வரும் வேலைவாய்ப்புகளும் வீழ்ச்சியுறும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கும் வழியில்லை என்பதேயாகும். இதன் காரணமாக, ‘‘ஒளிர்கின்ற’’ இந்தியனுக்கும் வேலையில்லாது, வேதனையில் ‘‘உழல்கின்ற’’ இந்தியனுக்கும் இடையில் உள்ள இடைவெளி மேலும் ஆழமாகும் என்பதும், மேலும் பல லட்சக் கணக்கான மக்கள் கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட இருக்கிறார்கள் என்பதுமேயாகும். மக்களை இத்தகைய பேரபாயத்திலிருந்து காத்து, அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளித்திட வேண்டுமானால் அதற்கு ஒரேவழி, பொது முதலீட்டை அதிகரித்து, அதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் உள்நாட்டுத் தேவைகளை அதிகரித்து, வளர்ச்சியை ஊக்குவிப்பதேயாகும்.

ஆனால் இதனைச் செய்வதற்குப் பதிலாக, புதிதாக நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜி, நவீன தாராளமயப் பொருளாதாரம் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களை, எவ்விதக் கடிவாளமுமின்றிக் கட்டவிழ்த்துவிட வேண்டுமென்று, இந்தியக் கார்பரேட் நிறுவனங்கள் கோரியிருக்கின்றன. ஐமுகூ அரசாங்கத்திற்குத் தற்சமயம் இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்பதால் குதூகலம் அடைந்துள்ள அவைகள், பொதுத்துறை நிறுவனங்களைப் பெருமளவில் தனியாரிடம் தாரை வார்த்திட அரசு முன்வர வேண்டுமென்றே கோரி வருகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக, ஓய்வூதிய நிதியத்தைத் தனியாரிடம் தாரைவார்த்தல், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிக அளவில் அனுமதித்தல், இந்தியத் தனியார் வங்கிகளை அந்நிய வங்கிகள் கபளீகரம் செய்திட அனுமதித்தல் போன்ற இடதுசாரிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்த அனைத்து நடவடிக்கை களையும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தொடர வேண்டும் என்று அவை கேட்டுள்ளன. இந்திய ரூபாயை முழுமையாக மாற்றத்தக்க தன்மையில் (full convertibility) உயர்த்திட வேண்டு மென்கிற குரலும் விரைவில் வரும் என்று கூறத் தேவையில்லை.

உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாகத்தான் உலக அளவில் மிகவும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த பல நிறுவனங்கள் தகர்ந்து தரைமட்டமாகியுள்ளன என்கிற எதார்த்த உண்மையை நம் நாட்டில் உள்ள கார்பரேட் முதலாளிகளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாதுதான். அதேபோன்று, ஐமுகூ அரசாங்கத்தின் வெற்றிக்கு, மேற்படி பொருளாதார நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிடாது தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், மக்கள் ஆதரவுக் கொள்கைளை அமல்படுத்த வைத்திட்ட இடதுசாரிக் கட்சிகள்தான் காரணம் என்பதையும் அவ்வளவு எளிதாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உலக ஜாம்பவான்களாகத் திகழ்ந்த ‘ஐவர் கும்பல்’ திவாலாகிப் போன அனுபவத்திலிருந்து இந்திய கார்பரேட் முதலாளிகள் படிப்பினை ஏதும் பெற்றதாகத் தெரியவில்லை. அமெரிக்கஅதிபர் ஒபாமா மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளைப் பேச முன்வந்திருக்கும் நிலையில்கூட, இவர்களால் தங்கள் பழைய நிலையை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
இந்திய அரசாங்கத்தின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது ஜூன் 4 அன்று குடியரசுத் தலைவர் உரையின்போது தெரிய வரலாம் என்பது உண்மைதான். நிதி அமைச்சர் அவர்கள், ஜூலை இறுதிக்குள் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப் பட்டுவிடும் என்று அறிவித் திருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டின் காலவரையறை ஜூலை 31க்குள் முடிவடைவதால், அதற்குள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி முழு பட்ஜெட் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிடில், மீண்டும் ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அது அவ்வளவு விவேகமானதாக இருக்காது.
நாம் இப்பகுதியில் சென்ற வாரம் குறிப்பிட்டதைப்போல, ஐமுகூ அரசாங்கம் எந்த ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தையும் நாட்டின்முன் சமர்ப்பித்திடவில்லை. அவ்வாறு ஒரு திட்டம் இல்லாத நிலையில், பொருளாதார அம்சங்களில் மட்டுமல்ல சமூகப் பாதுகாப்பு தொடர்பாகவும், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்துத் தெரிந்து கொள்ள நாம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவர்கள் மேற்கொள்ள விருக்கும் கொள்கைகள் எப்படி இருந்தபோதிலும், மக்களுக்குத் தேவையான நிவாரணம் ஏற்பட வேண்டுமானாலும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் காணப்பட வேண்டு மானாலும், விடாப்பிடியான மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் ஏற்படுத்திடும் நிர்ப்பந்தங்கள் வாயிலாகவே அவற்றைக் கொண்டுவர முடியும். சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைக் காப்பதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இத்தகைய போராட்டங்கள் அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

Thursday, May 28, 2009

இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை - நேர்மையான தீர்வை நோக்கி நகரட்டும் தீவு நாடு : -கி. வரதராசன்




இலங்கையில் ராணுவத்திற்கும் எல்டிடிஇ-யினருக்கும் இடையே கடந்த 33 ஆண்டுகளாக நடை பெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்து விட்டது. இந்த ராணுவ மோதலில் எல்டிடிஇ தரப்பில் உயர்மட்டத் தலைவர்கள் உள்ளிட்டு பெரும் உயிர்ச்சேதத்தை எதிர் கொள்ள நேரிட்டுள்ளது; இலங்கை ராணு வத்திற்கும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட் டுள்ளது. பல லட்சக் கணக்கான அப்பா வித் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண் ணிலேயே அகதிகளாக மாறி, சொல் லொண்ணா துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சிங்களப் பேரினவாதம்

இலங்கையின் கடந்த கால வர லாற்றை உற்று நோக்குபவர் யாருக்கும், இந்த மோதலுக்கான விதைகள் சில நூற் றாண்டுகளுக்கு முன்பேயே விதைக் கப்பட்டிருப்பதை அறிய முடியும். இந்தியா வைப் போலவே இலங்கையும் வெள்ளை யர் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், இந் தியாவில் கடைப்பிடித்தது போன்றே அங் கேயும் வெள்ளையர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடித்தனர் . மேற்கத் தியக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றவுடன், அரசு உத்தியோகங்களுக்கான மோதல்க ளும் அங்கு சிங்களவர்கள்- தமிழர்களி டையே எழுந்ததைக் காண முடியும். அதே போல ‘‘இன ஆராய்ச்சி’’ என்ற பெயரில் சிங்களவர்களை ஆரியர்கள் - முன்னேறி யவர்கள் என்றும், தமிழர்களைப் பின்தங்கி யவர்கள் - திராவிடர்கள் என்றும் பிரித்துக் காட்ட முயன்றதையும் காண முடியும். அங்கு இது மேற்கத்திய வரலாற்று வல்லு நர்களால் சிங்கள மக்களின் பெருமை யைப் பேசுவது என்ற பெயரில் அழுத்த மாகச் செய்யப்பட்டது.

விடுதலை பெற்ற இலங்கையில் ஆட்சிக்கு வந்தவர்கள், பிரிட்டிஷார் ஏற் படுத்திவிட்டுச் சென்ற ஏற்றத்தாழ்வான பாகுபாட்டைச் சரி செய்ய எவ்வித நட வடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, தங்களுடைய சொந்த வர்க்க நலன்க ளையும், தங்கள் வாக்கு வங்கியையும் பாதுகாக்க அவை மேற்கொண்ட நடவடிக் கைகள், சிங்களம் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் வேற்றுமையை வளர்த்தன.

இன்றைய தினம் இலங்கையில், உள்ள மக்கள் தொகையில் 75 சதவிகிதத் தினர் சிங்கள மொழி பேசுபவர்கள். 69 சதவிகிதத்தினர் புத்தமதத்தைப் பின்பற் றுபவர்கள். இந்தப் பின்னணியில் ஆளும் கட்சியினர் தங்கள் மக்களை என்றென் றும் பிரித்து வைத்துக் குளிர் காய்ந்திட, சிங்கள மொழியையும், புத்த மதத்தையும் பயன்படுத்திக் கொண்டனர்.

இத்தகைய ஏறுமாறான வளர்ச்சிப் போக்கில், தமிழ் மக்கள் வாழும் பகுதிக ளில் எண்ணற்றப் போராட்டங்கள் வெடித் தன. 1956, 1958, 1978, 1981 மற்றும் 1983 களில் நடைபெற்ற இத்தகைய போராட் டங்கள் அனைத்தும் அக்காலங்களில் ஆட்சியிலிருந்தவர்களால் கடுமையான முறையில் நசுக்கப்பட்டன. இவற்றில் மிகவும் மோசமான நிகழ்வு, 1983 ஜூலை யில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாகும்.

இந்த இனப்படுகொலையில், ஈடுபட் டக் கயவர்களில் ஒருவர் கூட இன்று வரை, சட்டத்தின் முன்கொண்டு வரப் பட்டு தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடாகும்.

இலங்கையில் தமிழ் மற்றும் சிங்களம் இரண்டுமே ஆட்சி மொழிகளாக இருந் தன. அரசாங்கமும் மதச்சார்பற்ற அரசாக இருந்து வந்தது. ஆனால் 1972-ம் ஆண் டைய அரசியல் சட்டத்திருத்தம் சிங்க ளத்தை இலங்கையின் ஆட்சிமொழியாக வும், புத்த மதத்தை நாட்டின் பிரதான மதமாகவும் பிர கடனம் செய்தது.

தமிழ் மக்கள் எதிர்ப்பு

ஆட்சியாளர்களின் இத்தகைய வெறித் தனமான நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி (கூருடுகு-கூயஅடைள ருnவைநன டுiநெசயவiடிn குசடிவே) உருவானது. கம்யூனிச இயக்கங் களிலும் மற்றும் ஈழத்தில் சாதி ஒடுக்கு முறைக்கு எதிராக உருவாகியிருந்த இயக் கங்களிலும் இயங்கிவந்த நூற்றுக் கணக்கான இளைஞர்கள் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராட முன்வந் தனர். ‘‘சோசலிசத் தமிழ் ஈழம்’’ அமைப் பதே தங்கள் குறிக்கோள் என்று கூறினர். ஆனால் நாளடைவில் இதில் ஈடுபட்ட இளைஞர்கள் பல்வேறு சிறுசிறு குழுக்க ளாகச் சிதறுண்டனர்.

தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, செல்வநாயகம் அவர்களால் அமைக்கப் பட்டது. இது பின்னர் எல்டிடிஇ, பிளாட், இபிஆர்எல்எப், ஈரோஸ், இபிடிபி, டெலோ என்று எண்ணற்றப் பிரிவுகளாக மாறிப் போயின. மேலும் அவை அனைத்தும் ஆயுதப் போராட்டப் பாதையைத் தேர்ந்தெ டுத்தன. இவற்றில் எல்டிடிஇ தவிர மற்ற அனைத்து இயக்கங்களும் ஒரு கட்டத் திற்குப் பிறகு, பிரிவினைக் கோரிக்கை யைக் கைவிட்டு, தமிழர்கள் வாழும் பகு திக்குக் கூடுதல் அதிகாரங்களுடன் புதிய அமைப்புச் சட்டம் உருவாக வேண்டும் என்று நிலை எடுத்தன.

எல்டிடிஇ-ஐப் பொறுத்தவரை இவர் கள் அனைவரும் துரோகிகள் என்றும், அர சின் ஏஜெண்டுகள் என்றும் குற்றம் சாட் டியது மட்டுமின்றி, இந்த இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களை, ஊழியர்களை ஆயுதத் தாக்குதல்கள் மூலம் கொன்ற ழிக்க முற்பட்டது.

பல்வேறு குழுக்களைச் சேர்ந்த உமா மகேசுவரன், பத்மநாபா, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், சட்டமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து முதலான தலைவர்கள் எல்டிடிஇ-யினரால் கொல்லப்பட்டவர் களில் ஒருசிலர். சரியாகச் சொல்வதென் றால், சிங்கள இன வெறியர்களால் கொல் லப்பட்டவர்களைவிட, எல்டிடிஇ-யினரால் கொல்லப்பட்ட தமிழர் தலைவர் களே அதிகம். இவர்களின் சர்வசாதார ணமான கொலை பாதக நடவடிக்கைகள், நம் நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மிகக் கொடுமையான முறையில் படுகொலை செய்யும் எல்லைக்கே சென்றன.

எல்டிடிஇ : துயர முடிவு

இலங்கையை ஆண்ட ஜெயவர்த் தனே அரசாங்கம், சிங்கள வெறியுடன் ஆட்சியை நடத்தியது. தமிழர்களின் உரி மைகளையும் தமிழ் மொழியையும் புறக் கணித்தது. தமிழர் அமைப்புகளை ஆயுதப்போராட்டத்தை நோக்கி நகர்த்தி யமைக்கு ஜெயவர்த்தனே அரசின் நடவ டிக்கைகளே அடிப்படைக் காரணங்க ளாகும். அதே சமயத்தில், தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, இத்தகைய அர்த்தமற்ற யுத்தத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிட எல்டிடிஇ-யினரும் தயாராக இல்லை. எல்டிடிஇ-யினரின் ஒரே குறிக்கோள் தங்கள் தலைமையின் கீழ் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என் பதே. இத்தகைய போக்கானது அங்கு வாழ்ந்து வந்த தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கவில்லை. மாறாக, சொல்லொண்ணா துன்பதுயரங்களையே கொண்டு வந்துள் ளது.

எல்டிடிஇ தலைவர் பிரபாகரன், ஆயு தப் போராட்டத்தின் மூலம் தனி ஈழத்தை அமைக்கப் பலமுறை அறிவித்திருக் கிறார். இதற்கான போராட்டம் கடந்த 33 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. ஆனால், கடைசியாக, இலங்கை அரசாங் கம் எல்டிடிஇ-யினரின் கட்டுப்பாட்டி லிருந்த அனைத்துப் பகுதிகளையும் கைப் பற்றியிருக்கிறது. இவ்வாறு அங்கு நடை பெற்று வந்த யுத்தம், பல லட்சக்கணக் கான மக்களைக் காவு கொடுத்தபின், பல லட்சக்கணக்கான மக்களைத் தங்கள் சொந்த மண்ணிலேயே வீடற்றவர்களாக, அகதிகளாக, அடையாளமற்றவர்களாக ஆக்கியபின் துயரந்தோய்ந்த ஒரு முடி வுக்கு வந்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்க ளர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த மோதலுக்கு ஓர் அரசியல் தீர்வு காண என்ன செய்ய வேண்டும் என்பதே இப்போதைய பிரதான கேள்வி யாகும்.

இலங்கை வரலாற்றில், 1960-ல் ஏற் பட்ட சாஸ்திரி - சிரிமாவோ பண்டார நாயகா ஒப்பந்தம், 1987இல் ஏற்பட்ட ராஜீவ்காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் உள்ளிட்ட எண்ணற்ற முக்கிய ஒப்பந்தங் கள் ஏற்பட்டுள்ளன. இவ்வொப்பந்தங்கள் அனைத்திலுமே, தமிழர்களின் உரிமை கள் தொடர்பாகவும், தமிழர் வாழும் பகு திகளில் தமிழர்களுக்கு அரசியல் அதி காரம் வழங்குவது தொடர்பாகவும் எண் ணற்ற நல்ல சரத்துகள் இடம் பெற்றன.

ஆனால், அவை பெருமளவுக்கு அமல் படுத்தப்படவில்லை. இலங்கையில் ஆட்சியிலிருந்த - இருக்கும், முதலாளித் துவ - நிலப்பிரபுத்துவ அரசியல் கட்சிகள் தமிழர்களுக்கும் - சிங்களர்களுக்கும் இடையே உள்ள பிரச்சனைகள் எவ்விதத் தீர்வும் காணப்படாமல், இனத் துவேஷம் தொடர்வதே தங்கள் அரசியல் எதிர்காலத் திற்குப் பாதுகாப்பு என்று கருதின. இந் திய அரசாங்கமும் இலங்கைப் பிரச்ச னைக்குத் தீர்வு காண்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தேவகுண சேகரா இலங்கைப் பிரச்சனை பற்றி கூறிய கருத்துக்கள் கவ னிக்கத்தக்கவை.

‘‘இடதுசாரிகளைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்படவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஒரு தேசி யப் பிரச்சனை. ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சி இதற்குத் தீர்வு காண முடியாது என்பதுதான் வரலாறு நமக்கு அளித் துள்ள படிப்பினையாகும். கம்யூனிஸ்ட்டு களாகிய நாங்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண இலங்கையின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். கூட்டு முயற்சி எடுக்க வேண் டும் என்று கோருகிறோம்.’’

இவை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யின் கருத்துக்கள் மட்டுமல்ல; இலங்கை வாழ் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களில் ஜனநாயக உள்ளம் கொண்ட அனைவரின் சிந்தனையுமாகும்.

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளை, குறைபாடுகளை ஆட்சியாளர்கள் செவி மடுக்கத் தவறியதன் விளைவாகவே எல்டிடிஇ உருவானது என்பதை இலங்கை ஆட்சியாளர்கள் மறந்துவிடு வது மாபெரும் முட்டாள்தனமாகும்.

சிங்களவர்களுக்கு இணையாக தமிழர்களுக்கும் அனைத்து உரிமைக ளும் நீட்டிப்பதை உத்தரவாதப்படுத்த இலங்கைஅரசு உடனடியாக நடவடிக் கைகள் மேற்கொள்ள வேண்டும்.

(1)இலங்கைப் பிரச்சனைக்கு அர சியல் தீர்வு காணப்படுவதற்கான நடவ டிக்கைகளை மேற்கொள்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

(2)யுத்தத்தில் துயருற்று வேதனைக் குள்ளாகியிருக்கும் மக்களுக்கு ஐ.நா. ஸ்தாபனம் மற்றும் செஞ்சிலுவைச் சங் கம் மூலமாக உணவு மற்றும் மருந்துப் பொருள்களை அளிக்க இலங்கை அரசு உடனடி நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

(3)சொந்த மண்ணிலேயே வீடற்ற வர்களாக மாறியிருக்கும் மக்களுக்கு இப்போது அளித்துள்ள வசதிகள் மிக மிகக் குறைவானவை. இவர்களுக்கு நிவாரணம் அளிப்பதோடு அவர்களை விரைவாக அவர்கள் சொந்த ஊரி லேயே வீடுகள் கட்டித் தந்து, புனர மைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.

(4) தற்போது வீடுகளை இழந்து, அகதிகள் போல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நீண்ட காலத்திற்கு அவ்வாறே வைத்திருக்க, அரசு கருதியிருப்பதுபோல் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. மேலும், புதிதாகக் குடியமர்த்தப்படும் சமயத் தில் அங்கே சிங்களவர்களைக் குடிய மர்த்திடவும் அரசு முடிவு செய்தி ருப்ப தாக தகவல்கள் வந்து கொண் டிருக் கின்றன. புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் விரைவாக அவர்களது பழைய இடங்க ளில் குடியமர்த்தப்படுவதே இத்தகைய செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

(5) தமிழ் மக்களிடமிருந்து அந்நியப் பட் டுள்ள நிலைமையை மாற்றித் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற இலங்கை அரசு முயல வேண்டும்.

(6) தமிழர் பகுதிகளில் உள்ள கெடுபிடி நடவடிக்கைகள் தளர்த்தப்பட வேண் டும். விசாரணையின்றி சிறையி ல டைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர் கள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

(7) வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ள நிலையில், அங்கு வாழும் மக்களுக்கு சிறப்புப் பொருளாதாரத் திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்.

(8) இலங்கையின் ஆட்சிமொழியாக சிங் களம் இருந்தது. பின்னர் தமிழும் இலங்கையின் ஆட்சிமொழி என்று சட் டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஆயி னும் இது இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. நாடு முழுவதும் இரு மொழிகளும் ஆட்சி மொழிகள் என்பது உணர்வுபூர்வமாக வும் உண்மையாகவும் கடைப்பிடிக் கப்பட வேண்டும். அரசாங்க வேலைக ளில் போதிய அளவில் தமிழர் கள் அமர்த்தப்பட வேண்டும்.

(9)இனியும் காலத்தை வீணடிக் காமல் நியாயமான மற்றும் நேர்மையான முறை யில் அதிகாரப் பரவலாக்கும் திட் டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.

(10) இலங்கையில் இயல்பு வாழ்க்கைத் திரும்பிட சர்வதேச சமூகம், குறிப்பாக இந்தியா, முக்கிய பங்காற்றிட வேண்டும்.

Friday, May 22, 2009

கட்சி பெற்றிடும் படிப்பினைகள், கட்சியை மேலும் உருக்குபோன்று உறுதிப்படுத்திடும். -பிரகாஷ் காரத்




நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள், மீண்டும் ஒருமுறை, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க, வழிவகுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி 205 இடங்களில் வென்றிருக்கிறது. அது தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 262 இடங்களைப் பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியானது முன்பிருந்ததைவிட 61 இடங்களைக் கூடுதலாகப் பெற்று தன்னுடைய வலுவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஐமுகூட்டணியில் அங்கம் வகித்த தன்னுடைய முன்னாள் சகாக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியானது இம்முறை மிகவும் சவுகரியமான முறையில் ஆட்சியை அமைத்திட விருக்கிறது. பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் தீர்மானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு இரண்டாவது முறை அவர்கள் ஆட்சிக்கு வரமுடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜக 116 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது அவர்கள் பெற்றிருந்த எண்ணிக்கையைவிட 22 குறைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி 159 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது முன்பு பெற்றிருந்ததைவிட 18 குறைவாகும். காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் மொத்தத்தில் 78 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன.


தேர்தல் முடிவின் பொருள்

தேர்தல் முடிவின் பொருள் என்ன? இதனை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்? முதலாவதாக நாம் குறித்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை என்னவெனில், நாட்டின் சில பகுதிகளில் காங்கிரஸ் ஆதரவு மனோபாவம் இருந்தது என்பது உண்மை என்றபோதிலும், ஒட்டுமொத்த அளவில் நாடு முழுமையும் அவ்வாறிருந்ததாகக் கூறுவதற்கில்லை என்பதேயாகும். வாக்கு சதவீத அடிப்படையில் பார்த்தோமானால், காங்கிரஸ் கட்சியானது 2004இல் பெற்றதைவிட வெறும் 2 சதவீத வாக்குகளே கூடுதலாகப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தினால் தரப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், காங்கிரஸ் கட்சியானது 28.55 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2004இல் அதற்கு 26.53 சதவீதம் கிடைத்திருந்தது. காங்கிரசுக்கு கேரளம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது. பஞ்சாப், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் தன் நிலையினை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போன்ற அதன் கூட்டணிக் கட்சிகளும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஒரிசா, ஜார்கண்ட், அஸ்ஸாம், குஜராத், சட்டீஸ்கார், கர்நாடகா போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் தன்னுடைய தளத்தை இழந்துள்ள நிலையுடன் ஒட்டுமொத்தமாகப் பரிசீலனை செய்து பார்க்கையில், காங்கிரஸ் கட்சி சார்பாக அனைத்திந்திய அளவில் பெரிய அலை வீசியதாகக் கூறுவதற்கில்லை. இம்மாநிலங்களில் எல்லாம் காங்கிரசின் வாக்கு சதவீதம் மற்றும் இடங்கள், 2004இல் இருந்ததைவிடக் குறைந்திருக்கின்றன. ஆந்திராவில் அதன் இடங்கள் அதிகரித்திருந்தபோதிலும், அதன் வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது.
மற்றொரு முக்கிய அம்சம் என்னவெனில், காங்கிரஸ் 2 சதவீதம் வாக்கு சதவீதத்தை அதிகரித்துள்ள அதேசமயத்தில், பாஜகு சுமார் 3 சதவீத அளவிற்கு வாக்கு சதவீதத்தை இழந்துள்ளது. பாஜகவின் இழப்பு, காங்கிரசுக்கு ஆதாயமாக அமைந்திருக்கிறது. ஆயினும் ஒட்டமொத்த அளவில் இரு கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதமும் அவை 2004இல் பெற்ற அளவிலேயே அநேகமாக இருக்கின்றன. 2004இல் இரு கட்சிகளும் சேர்ந்தே 48.69 சதவீத அளவிற்குத்தான் வாக்குகளைப் பெற்றிருந்தன. உண்மையில் 2009இல் இது 47.35 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. 2004இல் காங்கிரசும் பாஜகவும் பெற்ற இடங்களை விடக் கூடுதலாக இப்போது பெற்றிருந்தபோதிலும், அவை பெற்ற வாக்குகளின் சதவீதம் இவ்வாறு குறைந்திருக்கிறது. அதே சமயத்தில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகள் பெற்று வந்த வாக்கு, 50 சதவீதத்திற்கும் அதிகமான நிலை என்பது தொடர்கிறது.

பாஜக நிராகரிக்கப்பட்டிருக்கிறது

தேர்தல் முடிவின் மூலமாக இரண்டாவது நாம் குறித்துக்கொள்ள வேண்டிய பிரச்சனை என்பது, பாஜக மற்றும் அதன் அரசியல் மேடை தோல்வியடைந்திருப்பதாகும். தங்களால்தான் நல்லதோர் அரசாங்கத்தை அமைத்திட முடியும் என்றும், தங்களால்தான் நாட்டைப் பாதுகாத்திட முடியும் என்றும் பாஜக கூறிவந்ததை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். பாஜக தன்னுடை தேர்தல் பிரச்சாரத்தின்போது பயங்கரவாதம் உட்பட அனைத்துப் பிரச்சனைகளையும் மதவெறி அடிப்படையில் பார்த்ததை மக்கள் பார்த்தார்கள். வருண் காந்தியின் விஷத்தைக் கக்கிய மதவெறிப் பேச்சுக்களும் இந்தியாவின் எதிர்காலத் தலைவராக நரேந்திர மோடியை சித்தரித்ததையும் மக்கள் பார்த்தார்கள். உயர்ந்துவரும் விலைவாசி, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விவசாய நெருக்கடி ஆகிய எதனையும் பாஜக முன்னிலைப்படுத்தத் தவறிவிட்டது. இவை காரணமாக பாஜக மக்களால் மிகவும் ஆழமான முறையில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. தேஜகூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளம் மட்டுமே பீகாரில் நன்கு வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பாஜக காரணம் அல்ல. மாறாக, நிதிஷ் குமார் அரசாங்கத்தின் மீது மக்களுக்கிருக்கும் நல்லெண்ணமும், நிதிஷ்குமார் பாஜகவின் மதவெறி மேடையிலிருந்து தன்னை வெகுவாக விலக்கிக்கொண்டிருப்பதும் காரணங்களாகும்.

பாஜக-வானது ஒரிசா மாநிலத்திலும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு இரு மாதங்களுக்கு முன்புதான் பாஜக-விடமிருந்து பிஜூஜனதா தளம் தன்னைக் கத்தரித்துக் கொண்டது. ஆனால் நடைபற்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சியானது மொத்தம் உள்ள 145 இடங்களில் 103 இடங்களைப் பெற்று மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 2004இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, பிஜூஜனதா தளம் - பாஜக கூட்டணியானது 93 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இவ்வாறு, பிஜூஜனதா தளமானது, தன்னை பாஜகவிடமிருந்து கத்தரித்துக் கொண்டபின் தன் நிலையினை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் வெற்றிக்கான காரணங்கள்

தேர்தல் முடிவின் மூலம் புரிந்துகொள்ள வேண்டிய மூன்றாவது அம்சம் என்னவெனில், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின்பால் பிரேமை கொண்டிருந்தபோதிலும், அது மேற்கொண்ட சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்லதோர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தியது, பழங்குடியினர் வன உரிமைகள் சட்டம், அரிசி மற்றும் கோதுமைக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை (Minimum Supprt Price)யை அதிகரித்திருப்பது, விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகளை இவ்வாறு குறிப்பிடலாம். இவற்றில் பல இடதுசாரிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்டவைகளாகும். விவசாய நெருக்கடி தொடர்ந்திட்டபோதிலும் மேற்படி நடவடிக்கைகள் கிராமப்புர மக்களுக்கு ஓரளவுக்கு நிவாரணத்தை அளித்தன. இவற்றுடன் பல மாநில அரசுகளும் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளன. ஆந்திராவில் அரிசி ஒரு கிலோ 2 ரூபாய்க்கான திட்டம், தமிழ்நாட்டில் அரிசி ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ திட்டம் மற்றும் சில சமூக நல நடவடிக்கைகளை இவ்வாறு கூறலாம். ஒரிசாவிலும் கூட, ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கான திட்டம் நவீன் பட்நாயக் அரசாங்கத்திற்கு ஆதரவினை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாகும். அதே சமயத்தில், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ)யின் உயர் வளர்ச்சி விகிதமானது நாட்டின் வளங்கள் மற்றும் வருமானங்களைச் சரியானமுறையில் மறு விநியோகம் செய்ததாகக் கூறுவதற்கில்லை. மாறாக, நாட்டில் மக்களுக்கிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வு கூர்மையாக அதிகரித்திருக்கிறது. இது காங்கிரசின் தளம் விரிவுபடுவதையும் சுருக்கியிருக்கிறது.
சிறுபான்மையினர் மத்தியில், பாஜக-வானது மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்துவதில் உறுதியாக இருந்ததும், அவர்களை காங்கிரசுக்கு ஆதரவாக மாற்றியதற்குக் காரணங்களாகும். நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கட்சிகளை, இவர்கள் ஒரு வலுவான மாற்றாக பார்த்திடவில்லை. காங்கிரசுக்கு சிறுபான்மையினர் ஆதரவு இடம்பெயர்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
காங்கிரஸ் கட்சி, பயங்கரவாத அச்சுறுத்தலை ஒன்றுபட்டு எதிர்த்திட வேண்டும் என்றும், மதவெறி அச்சுறுத்தல் நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்திடும் என்றும் மக்கள் நினைத்ததும், காங்கிரசுக்கு ஆதாயமாக மாறியுள்ளது.

இடதுசாரிகளுக்குப் பின்னடைவு

மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் ஏற்பட்ட இழப்புகள் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுசாரிகளுக்குக் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் கேரளாவில் இடதுஜனநாயக முன்னணி மொத்தம் உள்ள 20 இடங்களில் முன்னெப்போதம் இல்லாத அளவிற்கு 18ஐப் பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சி ஓரிடத்தைக்கூட பெறவில்லை. ஆனால் அதேபோன்று இந்தத் தடவையும் இருந்திடாது என்றும், இடதுசாரிகளுக்கு இடங்கள் குறையக்கூடும் என்று இடதுசாரிகள் எதிர்பார்த்திருந்தபோதிலும், இந்த அளவிற்கு பின்னடைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை. மேற்கு வங்கத்திலும் கூட இந்தத் தடவை காங்கிரசும் திரிணாமுல் காங்கிரசும் ஒன்று சேர்ந்து போட்டியிடுவதாலும், அனைத்து கம்யூனிஸ்ட் எதிர்ப்பு சக்திகளும் ஒன்றிணைந்து, மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இடது முன்னணிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடுத்திருப்பதால் சில இடங்கள் குறையலாம் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் இவ்விரு மாநிலங்களிலும் ஏற்பட்டிருக்கும் தோல்வியிலிருந்து இப்போது மார்க்சிஸ்ட் கட்சிக்கு வெறும் 16 இடங்களே கிடைத்துள்ளன. இதுவரை மக்களவையில் இவ்வளவு குறைவான இடங்களை கட்சி பெற்றதில்லை. இவ்வாறு தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்களை ஆழமாகப் பரிசீலனை செய்ய வேண்டியது அவசியமாகும். இவ்வளவு மோசமான முறையில் நிலைமைகள் மாறியிருப்பதற்கான காரணிகளைக் கண்டறிய சுய விமர்சனரீதியில் பரிசீலனை செய்யப்பட்டாக வேண்டும். தேசிய அளவில் உள்ள காரணிகளையும், மாநில அளவில் உள்ள காரணிகளையும் - இவ்விரு அளவிலான காரணிகளையுமே - ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும். கட்சியால் தேசிய அளவில் வகுக்கப்பட்ட தேர்தல் உத்தி மற்றும் நாடு தழுவிய அளவிலான அரசியல் சூழ்நிலை ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்துடன் மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் உள்ள பிரத்யேகமான காரணிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 2009 மே 18 அன்று நடைபெற்ற அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்தில், இவ்வாறு ஒரு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் இதனை ஜூன் மாதம் நடைபெறவுள்ள மத்தியக்குழுக் கூட்டத்தில் இறுதிப்படுத்திட வேண்டும் என்றும் பணித்துள்ளது. தோல்விக்கான காரணங்களை அடையாளம் கண்டபின், தவறுகளையும் பலவீனங்களையும் களைந்திட, தேவையான அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகளை கட்சி எடுத்திடும். இதன் அடிப்படையில், கட்சியிடமிருந்து விலகிச் சென்றுள்ள மக்களை மீண்டும் கட்சியின்பால் அணிதிரட்டிட, தளராது விடாமுயற்சியுடன் செயலாற்றிடும். கட்சியின் அகில இந்திய மாநாடு வகுத்தளித்துள்ள ஸ்தாபனக் கடமைகளின் அடிப்படையில் கட்சியை வலுப்படுத்துவதற்கும் அதன் வெகுஜன செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் இத்தகைய சுயவிமர்சன ரீதியிலான மறுபரிசீலனை வழிவகுத்திடும்.

மூன்றாவது மாற்று

அரசியல் தலைமைக்குழுவில் நடைபெற்ற விவாதங்களின்போது, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணி ஒன்றை, தேர்தலுக்கான மூன்றாவது மாற்றாக அமைத்திட வேண்டுமென்கிற கட்சியின் முயற்சியானது பூர்வாங்கமான முறையில் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 2009 ஜனவரியில் கொச்சியில் நடைபெற்ற மத்தியக்குழுக் கூட்டத்தில், இதற்கான தேர்தல் உத்தி வகுக்கப்பட்டு, ‘‘இடதுசாரிக் கட்சிகள் மற்ற மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து, ஒரு காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாற்றை ஓர் எதார்த்தபூர்வமானதாக மாற்ற செயல்படும்’’ என்ற திசைவழியைத் தந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டது. கர்நாடகாவில் தொகுதி உடன்பாடு கண்டது. தேர்தல் சமயத்தில் இம்மாநிலங்களில் ஏற்பட்ட தேர்தல் உடன்பாடுகளின் அடிப்படையில், நாம் அவற்றை, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஒரு தேசிய அளவிலான மாற்றாக மக்கள் மத்தியில் சித்தரிக்க முயற்சித்தோம். மேற்கு வங்கத்திலும் கேரளாவில் இடதுசாரிகள் தோல்வி, ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் இடதுசாரிகள் வைத்திருந்த கூட்டணி பெரும்பான்மையான இடங்களைப் பெறாதது, தேசிய அளவில் ‘‘மூன்றாவது மாற்று’’ வலுவான முறையில் அமைந்திட வாய்ப்பளிக்காமல் செய்துவிட்டது. இவ்வாறு பல்வேறு மாநிலங்களிலும் அமைந்த கூட்டணிகள், தேசிய அளவில் ஒரு நம்பகமான (credible) மற்றும் உறுதியான (viable) மாற்றாக அமைந்திடவில்லை. மேலும், மாநிலங்களில் அமைந்திட்ட இத்தகைய கூட்டணிகளால், தேசிய அளவிலான கொள்கைத் திட்டம் எதையும் அளித்திட முடியவில்லை.
இவ்வாறு மூன்றாவது மாற்றை முன்வைத்ததன் மூலமாக இரு அனுகூலங்கள் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக, பாஜக தலைமையிலான தேஜகூட்டணியானது, காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சேர்மானத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒரிசாவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கூட்டணியினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. இரண்டாவதாக, மதச்சார்பற்ற காங்கிரஸ் அல்லாத சேர்மானமானது 21 சதவீத வாக்குகளைப் பெற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினால் அதன் அகில இந்திய மாநாட்டில் வகுக்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் ஒரு மூன்றாவது மாற்றை அமைப்பதற்கான வல்லமையைப் பெற்றிருக்கிறது. அதாவது, தேர்தல் கூட்டணியாக மட்டுமல்லாமல், காங்கிரஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளிலிருந்து முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த மாற்றுக் கொள்கைகளுக்காக, இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலமாக இணைந்த கட்சிகளின் கூட்டணியாக அது விளங்கியது.

பண பலம்

நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இதற்குமுன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, பணபலம் பயன்படுத்தப்பட்டது, மிகவும் மோசமானதோர் அம்சமாகும். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சட்டவிரோதமாக வந்த பணம் புகுந்து விளையாடியது.

பணபலம் மிகவும் கேவலமான முறையில் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு தமிழ்நாட்டில் மதுரைத் தொகுதி மிகவும் மோசமானதோர் உதாரணமாகும். மற்ற மாநிலங்களிலும் கூட, இத்தகு போக்கு வளர்ந்து வருகிறது. இது ஜனநாயகப் பண்புகளை மாசுபடுத்திடும். வாக்காளர்களுக்குப் பணம் வழங்குவதற்காகப் பலல கட்சிகளுங்ம ஏராளமாகப் பணத்தைப் பெற்றிருக்கின்றன. இத்தகைய போக்கானது ஒட்டுமொத்த ஜனநாயக நடைமுறைக்கே ஓர் அச்சுறுத்தலாகும். குறிப்பாக இதுபோன்று கேவலமான முறையில் பணபலத்தைப் பயன்படுத்துவது இடதுசாரிகளின் நலன்களுக்கும் எதிரானதாகும்.

இடதுசாரிகளின் பங்கு

உலகப் பொருளாதார நெருக்கடியானது இந்தியப் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தருணத்தில், மன்மோகன் சிங் அரசாங்கம் இரண்டாவது முறையாகப் பொறுப்புக்கு வருகிறது. மிகப் பெரிய அளவில் வேலை யிழப்புகள், ஆயிரக்கணக்கான சிறிய மற்றும் நடுத்தர தொழிற்பிரிவுகள் மூடல், கிராமப்புற மக்களை வாட்டி வதைத்திடும் விவசாய நெருக்கடி ஆகியன தொடர்கின்றன. மக்களை மேலும் மேலும் சொல்லொணா அவலத்திற்குத் தள்ளவிருக்கும் நவீன தாராளமயப் பொருளாதார நடவடிக்கைகளை எதிர்த்திட, மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் இடதுசாரிக் கட்சிகளும் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வரும். அதே சமயத்தில், மத்திய அரசு சுயேட்சையான அயல்துறைக் கொள்கையை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்திற்காகவும், பொருளாதார இறையாண்மையைப் பாதுகாத்திடுவதற்காகவும், மதச்சார்பின்மையை வலுப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து போராடும். இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து செயல்படும். மக்கள் பிரச்சனைகளின்பால் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற கட்சிகளுடன், கட்சி தன்னுடைய ஒன்றுபட்ட நடவடிக்கைகளையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்திடும்.
தேர்தல் முடிவுகளுக்குப்பின்னர், மேற்கு வங்கத்தில் கட்சியின் மீதும் இடதுசாரிக் கட்சிகள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மே 16க்கு முன்னர், 26 தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் வெளியானபின்னர், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள், அலுவலகங்கள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லங்கள் மீது தாக்குதல்கள் விரிவடைந்துள்ளன. கட்சி ஊழியர்களை மிரட்டி, அடக்கி மக்கள் மத்தியில் அவர்களது செயல்பாடுகளை முடக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. மக்களின் உதவியுடன் இத்தகைய ஜனநாயக விரோத வன்முறைத் தாக்குதல்களை கட்சியும் இடது முன்னணியும் உறுதியாக தடுத்து நிறுத்திடும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடதுமுன்னணிக்கும் ஏற்பட்டுள்ள பின்னடைவினால் கம்யூனிச எதிர்ப்பு முகாம்கள் குதூகலமடைந்திருக்கின்றன. இதற்குமுன்னரும் பலமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதுபோன்ற பல சிரமமான காலகட்டங்களிலிருந்து மீண்டு வந்திருக்கின்றன. ஏகாதிபத்தியம், மதவெறி மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டங்களை நடத்தி தொழிலாளர் வர்க்கத்தின் லட்சியத்திற்காக உறுதியுடன் நின்று முன்னேறி வந்திருக்கின்றன. இந்தத் தேர்தல் தோல்விகளின் மூலமாக கட்சி பெற்றிடும் படிப்பினைகள், மக்களுக்கான போராட்டங்களை முன்னிலும் வீர்யத்துடன் நடத்திடக்கூடிய வகையில், கட்சியை மேலும் உருக்குபோன்று உறுதிப்படுத்திடும்.

தமிழில்: ச.வீரமணி

கட்சி சரியானமுறையில் படிப்பினைகளைப் பெற்று முன்னேறும்



நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அரசை அமைப்பதற்காக, மக்களவைக்குப் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட 274 உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்து அரசு அமைக்க உரிமைகோரியிருக்கிறது. கூடுதலாக, அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக ஓர் 48 உறுப்பினர்களின் பட்டியலும் குடியரசுத் தலைவரால் பெறப்பட்டிருக்கிறது. ஒரே அணியில் இருக்காது என்று பலரால் கருதப்பட்ட பல கட்சிகள் இதிலே அடக்கம். உத்தரப்பிரதேசத்தில் எலியும் பூனையுமாகக் காணப்படும் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கடிதங்கள் தந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன், தங்கள் கட்சி காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியில்தான் அங்கம் வகிக்கும் என்று கூறிய பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியை மாபெரும் மக்கள் பேரணி நடத்தி அறிவித்திட்ட மதச்சார்பற்ற ஜனதா தளமும், இப்போது ஐமுகூட்டணியை ஆதரித்திடத் தீர்மானித்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னமேயே, ஆந்திராவில் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத முன்னணியில் அங்கம் வகித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போய் சேர்ந்து கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு 2009 மே 19 அன்று கூடி விவாதங்களுக்குப்பின் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘‘தேர்தல் சமயத்தில் சில மாநிலங்களில் அமைக்கப்பட்ட மூன்றாவது அணிக்கான கூட்டணிகள் மக்களால் ஒரு நம்பத்தகுந்த (credible) மற்றும் உறுதியான (viable) மாற்றாக தேசிய அளவில் பார்க்கப்படவில்லை’’ என்று மதிப்பீடு செய்திருந்ததை மேலே கூறிய நிகழ்ச்சிப்போக்குகள், உறுதிப்படுத்துகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து நடைபெற்ற தன்னுடைய அகில இந்திய மாநாடுகளின் அரசியல் தீர்மானங்களில், ‘நாட்டின் கொள்கைகளை முற்போக்கான திசைவழியில் தீர்மானிக்கக்கூடிய விதத்தில்’ ஒரு மூன்றாவது அரசியல் மாற்றை உருவாக்க வேண்டியதன் தேவையை தெளிவுபடத் தெரிவித்து வந்திருக்கிறது. அத்தகைய மாற்றானது, தேர்தல் சமயங்களில், வெட்டி ஒட்டக்கூடிய ஏற்பாடாக இருந்திட முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான மூன்றாவது மாற்று என்பது தொடர்ச்சியான மக்கள் போராட்டங் களினூடேதான் உ ருவாகிட முடியும். இதற்கு வேறெந்தக் குறுக்கு வழியும் கிடையாது.

ஆயினும், இப்போது வந்துள்ள தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மிக மோசமான வீழ்ச்சியாகும். 1967இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின், இந்திய கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்குப்பின், நடைபெற்ற முதல் தேர்தலிலேயே, கட்சிக்கு 19 இடங்கள் கிடைத்திருந்தன. இப்போது நடைபெற்றுள்ள தேர்தலில் நமக்கு வெறும் 16 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து வெறும் 24 இடங்களைத் தான் பெற்றிருக்கின்றன. இவ்வாறான படுவீழ்ச்சி குறித்து சுய விமர்சன ரீதியாக மறு ஆய்வு செய்யப்பட்டாக வேண்டும். தவறுகள் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டறிந்து அவற்றைக் களைந்து, முறையான படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும். இடதுசாரிகளிடமிருந்து விலகிச் சென்றுள்ள மக்கள்திரளினை மீண்டும் வென்றெடுத்திட, அவர்களின் நம்பிக்கையையும் நல்லாதரவையும் மீண்டும் பெற்றிட, எதிர்காலத்தில் நம்முடைய செல்வாக்கை ஒருமுகப்படுத்தி விரிவுபடுத்திட, இது அத்தியாவசியமாகும். இந்த நடைமுறை தொடங்கிவிட்டது.

இத்தேர்தலின்போது இடதுசாரிகளுக்கு எதிராக அனைத்து கம்யூனிச எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுசேர்ந்து நின்றதைப் பார்த்தோம். மேற்கு வங்கத்தில் சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற்ற சமயத்தில் அவற்றை மிகவும் விரிவாக நாம் இப்பகுதியில் விவரித்திருக்கிறோம். அத்தகைய மகா கூட்டணியானது தங்கள் வசம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் இடதுசாரிகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக, வீசியது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப்பின்பும் நடைபெற்ற மோதல்களில் 31 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, இப்போது ஏற்பட்டிருப்பதுபோல இதற்கு முன்பும் பலமுறை கம்யூனிச எதிர்ப்புக் கும்பல்கள் உருவாகியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான சமயத்திலேயே, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘சீன ஆதரவாளர்கள்’ என்று பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, நாடு முழுதும் அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நம் தலைவர்களில் பலர் சிறையிலிருந்தே தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். 1967இலும் 1969இலும் மேற்கு வங்கத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டபின்னர், சுமார் பத்தாண்டு காலம் காங்கிரஸ் மேற்கு வங்க மக்கள் மீது அரைப் பாசிச அடக்குமுறையை ஏவி, ஆயிரக்கணக்கான நம் தோழர்களின் உயிரைக் குடித்தது. இவ்வளவு அடக்குமுறையையும் எதிர்கொண்டுதான், நாட்டிலேயே மாபெரும் இடதுசாரி சக்தியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு மீண்டெழுந்தது. இதனை நாட்டின் அரசியல் வரலாற்றில் எவரும் உதாசீனப் படுத்திடவோ அல்லது ஓரங் கட்டிடவோ முடியாது. (கடந்த இருபதாண்டுகளில், 1989இல் வி.பி. சிங் அரசாங்கம் அமைந்ததிலிருந்து, மத்தியில் எந்த ஒரு மதச்சார்பற்ற அரசாங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவும் பங்கேற்பும் இல்லாமல் அமைந்தது கிடையாது.) எனவே, இந்தத் தேர்தலில் நமக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் அதேபோன்று நேர்மையான முறையில் சுயவிமர்சன ரீதியாக மறுபரிசீனை மேற்கொண்டு, சரியான படிப்பினைகளை நாம் பெற்றிட வேண்டும்.

இத்தலையங்கம் நம் வாசகர்களை அடையும் நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சியை நடத்திடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும். 2004இல் இதேபோன்றதொரு சமயத்தில், அப்போது அமைய இருந்த அன்றைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் கூறித்து, மிகவும் ஆழமான முறையில் விவாதங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தன. அவ்வாறு அமைந்திட்ட குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில்தான், ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவினை நல்கின. ஆனால் இந்த சமயத்தில், ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் குறித்து எவரும் வாய்திறக்கவே இல்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், இடதுசாரிகள் ஆதரவு அவசியமற்ற நிலையில் காங்கிரசும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளும் இடதுசாரிகள் வலியுறுத்தும் மக்கள்நலஞ்சார்ந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, ‘‘காங்கிரஸ் கட்சி இந்த அளவிற்கு நல்லதொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு, இடதுசாரிக்கட்சிகளின் நிர்ப்பந்தத்தை அடுத்து ஐமுகூ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பழங்குடியினர் பாதுகாப்பு வன உரிமைகள் சட்டம் மற்றும் சில சமூக நலத் திட்டங்கள் காரணங்களாகும்.’’ ஆனால் அத்தகைய திட்டங்கள் குறித்து இப்போது அது கவலைப்படாமலிப்பது என்னே வேடிக்கை வினோதம்!

இத்தகைய மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைள் எதுவும் வகுக்கப்படாதிருப்பதுதான் எதிர்காலத்தில் இடதுசாரிகளின் பங்கினை வரையறுத்திட இருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாகவும், மிகவும் கடுமையான முறையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருப்பதன் விளைவாகவும், மக்கள் மீது சொல்லொணா அளவிற்குப் பொருளாதாரச் சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, ஆட்சியாளர்களை மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளை வகுத்திட, நிர்ப்பந்திக்கக்கூடிய வகையில் மாபெரும் போராட்டங்களை நடத்திட வேண்டியிருக்கும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக அத்தகு போராட்டங்ளை வலுப்படுத்தும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் முன்னிற்கும் அதே சமயத்தில் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாத்து வலுப்படுத்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

தேர்தல் முடிவும் பொருளாதாரக் கொள்கையும் --வெங்கடேஷ் ஆத்ரேயா





தேர்தல் வெற்றி, ஐமுகூ முகாமிற்கு அளப்பரிய சந்தோஷத்தை அளித்திருப்பதைப் புரிந்துகொள்ளும் அதே சமயத்தில், அரசின் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் அதனை ஆய்வு செய்வது என்பதும் அவசியமாகும். உண்மையில் அரசாங்கமானது 2004க்கும் 2009க்கும் இடையில் கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கைகளுக்கு மக்கள் அளித்திட்ட அங்கீகாரம் என்ற முறையில் இதனை அரசு கூறுவதற்கும் வாய்ப்பு உண்டு. மேலும், குறிப்பாக, தேர்தல் முடிவானது, இடதுசாரிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருப்பதும், தாங்கள் மேற்கொண்ட நவீன தாராளமயச் சீர்திருத்தங்களுக்கு மக்கள் அளித்திட்ட ஆதரவு என்று கூட அரசு குதித்துக் கும்மாளமிடலாம். இந்தப் பாணியில் கார்பரேட் நிறுவனங்களும் அவற்றின் ஊதுகுழல்களாகச் செயல்படும் ஊடகங்களும் ஏற்கனவே கத்தத் தொடங்கிவிட்டன. இவ்வாறு தேர்தல் முடிவைத் தங்ளுக்குச் சாதகமாக அவை மாற்ற முனைந்திருப்பதைக் கண்டுகொள்ளாமல் விடுத்தோமானால், அது நாட்டில் மிகப் பெரிய பொருளதாரச் சீரழிவிற்கே இட்டுச் செல்லும்.

2008 செப்டம்பரில் உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்களாகத் திகழ்ந்த பல நிதி நிறுவனங்கள் தகர்ந்து தரைமட்டமான சமயத்தில், அரசின் செய்தித் தொடர்பாளர்கள், ‘‘இதன் தாக்கம் இந்தியாவைப் பாதிக்க வாய்ப்பில்லை’’ என்றும் ‘‘ஏனெனில் இந்தியாவில் உள்ள நிதித்துறை என்பது உலக நிதித்துறையிடமிருந்து ‘வேறுபட்டது’ என்றும், ‘‘நம் நாட்டைப் பொறுத்தவரை நாம் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் வலுவான முறையில் பொதுத்துறையைப் பெற்றிருக்கிறோம்’’ என்றும் கூறி பெருமைப்பட்டுக் கொண்டார்கள். இவர்கள் கூற்று சற்று மிகைஎன்றபோதிலும், உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியப் பொருளாதாரத்தையும் பல வழிகளில் தாக்கியது என்பதே உண்மையாகும். ஆயினும், இந்தியப் பொருளதாரத்தில் உலக நிதி நெருக்கடியின் தாக்கம் கடுமையான முறையில் ஏற்படாது தடுத்திட அவை -அதாவது இந்தியப் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் - பெரிதும் உதவின. ஆனால், இந்தியாவில் நிதித்துறையில் சீர்திருத்தங்களைக் கொணர அரசு முயற்சிகளை மேற்கொண்டபோது, அதனை இந்திய இடதுசாரிக் கட்சிகள், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும், கடுமையாகவும் உறுதியாகவும், எதிர்த்ததுதான் இதற்குக் காரணங்களாகும்.

தேர்தல் முடிவுகள் நாட்டின் பல பகுதிகளிலும் மக்களின் பல்வேறு மனவோட்டங்களின் விளைவாகவும் பல்வேறு காரணிகளைப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்துள்ளன. மத்தியில் நிலையான ஆட்சிக்கான அவா, மதவெறி மற்றும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான கடும் வெறுப்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிபுரிவோருக்கு எதிரான சக்திகளுக்கிடையேயான ஒற்றுமையின்மை மற்றும் ஸ்தலத்தில் உள்ள பிரத்யேகக் காரணிகள் ஆகியவற்றுடன் பொருளாதார அம்சங்களும் காரணமாகும்.
ஐமுகூ அரசாங்கத்தின் வெற்றிக்கான முக்கியமான காரணிகளில், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டமும் ஒன்று. இத்திட்ட அமலாக்கத்தில் பல இடங்களில் பல்வேறு கோளாறுகளும் பலவீனங்களும் இருந்தபோதிலும், ஒட்டுமொத்த அளவில் நாட்டுப்புற ஏழை மக்களுக்கு அது கணிசமான அளவிற்கு நிவாரணம் அளித்தது. அதேபோன்று பழங்குடியினர் பாதுகாப்பு குறித்து நிறைவேற்றப்பட்ட சட்டம் பழங்குடி இன மக்களுக்கு வன உரிமைகளை அளித்தது. ஆனால் இவ்விரு சட்டங்களும் அதிலிருந்த பல்வேறு ஓட்டைகளையும் அடைத்து, நிறைவேற்றப்பட முக்கிய காரணமாக இருந்தது இடதுசாரிக் கட்சிகளாகும். இவ்வாறு ஐமுகூ அரசாங்கத்தின் குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் இருந்த மக்கள் நலத் திட்டங்கள் அமலாக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவை இடதுசாரிக் கட்சிகளாகும். ஆனால் அதன் விளைவாக மக்கள் மத்தியில் ஏற்பட்ட மனமாற்றங்களை ஐமுகூ அரசாங்கத்தில் அங்கம் வகித்த கட்சிகள் அறுவடை செய்துகொண்டுவிட்டன.

புதிதாக அமைய இருக்கும் அரசாங்கமானது இவற்றையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும். ‘இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் பலவீனமடைந்துவிட்டார்கள், எனவே நிதித் சீர்திருத்த நடவடிக்கைகளை தாராளமாக நிறைவேற்றிக் கொள்ள மக்களால் பச்சைவிளக்கு காட்டப்பட்டுவிட்டது’ என்று கருதிக்கொள்ளக்கூடாது. குறிப்பாக இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகப்படுத்திட முயற்சித்தல், ஓய்வூதிய நிதிய மேலாண்மையைத் தனியாரிடம் தாரை வார்க்க விழைதல், பங்குச்சந்தையில் பார்ட்டிசிபேடரி நோட்ஸ் (யீயசவiஉiயீயவடிசல nடிவநள)என்னும் வெற்றுப் பத்திரங்களை அனுமதிக்கும் போக்கு ஆகியவற்றைத் தங்கள் இஷ்டம்போல் தொடரலாம் என்று கருதிவிடக்கூடாது. சமீபத்தில் ஏற்பட்ட உலகப் பொருளாதார சுனாமியால், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஓய்வூதிய நிதியத்தில் முதலீடு செய்திருந்த பல லட்சக்கணக்கான மூத்த குடிமக்களின் பல லட்சம் கோடி டாலர்கள் திடீரென்று காணாமல் போனதையடுத்த அவர்களின் எதிர்கால வாழ்வே கடும் கேள்விக்குறியாகியுள்ளதை அரசு மனதில் கொள்ள வேண்டியது அவசியம்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ழுனுஞ) கடந்த இருபதாண்டுகளில் நன்கு வளர்ச்சியடைந்திருக்கிறது என்று அரசு பீற்றிக்கொண்டபோதிலும், நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு என்பது இன்னும் முழுமையடையாத நிலையிலேயே இருக்கிறது. குழந்தைகளில் பெரும்பான்மையானவை ஊட்டச்சத்துக் குறைவினால் எடை குறைந்தவைகளாகவே காணப்படுகின்றன. அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம், அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பு என்பதும் புதிய அரசாங்கத்தின் முன் உள்ள மாபெரும் சவாலாகும். நவீன தாராளயமயப் பொருளாதாரக் கொள்கையால் இவற்றை நிறைவேற்றிட முடியாது என்பதை அரசு உணர வேண்டும். அதேபோன்று தொடரும் விவசாய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் அரசு தன் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகும். அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் சுகாதாரம் அளிப்பதற்குத் தேவையான அளவில் முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டியதும், மீண்டும் முன்பிருந்தபடி, அனைவருக்கும் பொது விநியோக முறையை அமல்படுத்துவதும் அவசியமாகும். இவற்றை நிறைவேற்றிட அரசுக்கு ஓர் அரசியல் உறுதி அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

Friday, May 8, 2009

காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற புதியதோர் அணியை உருவாக்கிடுவோம்




பல்வேறு சமூகக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட இந்தியா போன்றதொரு நாடானது, அதற்கேற்ற வகையிலேயே அதன் அரசியல் பன்முகத் தன்மையையும் வெளிப்படுத்திடும் என்று நாம் இப்பகுதியில் பலமுறை உறுதிபடத் தெரிவித்து வந்த போதிலும், பாஜகவும் காங்கிரசும் மட்டும், இந்திய அரசியல் என்பது அடிப்படையில் தங்கள் இரு கட்சிகளைச் சார்ந்துதான் இயங்க முடியும் என்றும், மற்ற கட்சிகள் அனைத்துமே தங்களைத்தான் சுற்றிச்சுற்றி வர வேண்டும் என்றும் மிகவும் ஆரவாரத் தன்மையுடன் தங்கள் தேர்தல் பிரச்சாரங்ளைத் தொடங்கின.
ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த அதன் கூட்டணிக் கட்சிகளில் பல அதனைக் கைவிட்டுவிட்டதை அடுத்து அவை அனைத்தும் வீண் வெற்றுப்பிரச்சாரம்தான் என்பதை வெளிப்படுத்திவிட்டன. இதில் அவர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய அம்சம், ஒரிசாவில் பிஜூ ஜனதா தளம், அவர்களை விட்டு வெளியேறியதுதான். அதேபோன்று ஐமுகூட்டணியில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் தற்போதும் மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்தபோதிலும், தேர்தலுக்குப்பின் காங்கிரசை விட்டு விலகி புதிய அணிசேர்க்கையில் தங்களை இணைத்துக்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன. இத்தகைய நிகழ்ச்சிப்போக்குகள், சிலர் கூறுவதுபோல், சந்தர்ப்பவாதம் என்றோ, பிராந்தியக் கட்சிகள் இவ்வாறு சமயத்திற்கேற்ற முறையில் ‘நிலை எடுக்கும்’ என்றோ கூறுவது சரியல்ல. மாறாக, தாங்கவொண்ணாத பொருளாதாரச் சுமைகளிலிருந்து நிவாரணம் கோருவதற்காக அதனைச் சார்ந்துள்ள வெகுஜனத் திரள், அவற்றின் மீது செலுத்திடும் நிர்ப்பந்தத்தின் பிரதிபலிப்பாகவே இவற்றைக் கொள்ள வேண்டும். அதாவது, மக்கள் சரியானதொரு மாற்றை விரும்புகிறார்கள் என்பதன் பிரதிபலிப்பே இது. அந்த மாற்று என்ன அல்லது அது எவ்வாறு வகைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளால் வரையறுக்கப்பட வேண்டியிருக்கிறது.
மக்களுக்கு நன்மைபயக்கும் விதத்தில் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான மாற்றுக் கொள்கையின் அவசியத்தை இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இத்தகைய மாற்றுக் கொள்கையை நிறைவேற்றும் தகுதி, காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத ஓர் அரசியல் மாற்றால்தான் முடியும் என்பதே கடந்த கால அனுபவமாக இருக்கிறது. எனவே, இன்றைய காலத்தின் தேவை என்னவெனில், மத்தியில் ஒரு காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற மாற்று அரசாங்கத்தை நிறுவுவதேயாகும். இடதுசாரிக் கட்சிகள் இந்தக் குறிக்கோளையே குவிமையமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
தேர்தல்களின் மூன்றாம் கட்டம் முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரசானது திடீரென்று தேர்தலுக்குப்பின் இடதுசாரிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்திட சாத்தியக்கூறுகள் உள்ளதாகப் பேச ஆரம்பித்திருக்கிறது. தேர்தலுக்குப்பின் தற்போதுள்ள கூட்டணிக் கட்சிகளுடன் அரசாங்கத்தை அமைத்திட சாத்தியமில்லை என்பதைக் காங்கிரஸ் புரிந்துகொண்டிருப்பதன் அறிகுறியே இது.
இன்றைய இந்திய அரசியல்வானில் இடதுசாரிகளை எவரும் தவிர்த்திட முடியாது என்கிற நிலை உருவாகியிருப்பதைn ய இது காட்டுகிறது. அதனால்தான், பாஜக-வின் கூட்டணியில் தற்போது இருந்திடும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர்களும், காங்கிரசின் கூட்டணியில் இருந்திடும் தேசியவாதக் காங்கிரசின் தலைவர்களும் இடதுசாரிகளுடன் இணைந்திட விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். எனவே, தேர்தலுக்குப்பின்னர் அமையவிருக்கும் அரசாங்கமானது புதிய மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் சேர்மானமாக இருந்திடும் என்பது தெளிவாகி வருகிறது. சமீபகாலத்திய இந்திய அரசியலில், இது ஒன்றும் புதிதல்ல. நாம் ஏற்கனவே இப்பகுதியில் பலமுறை குறிப்பிட்டிருப்பதைப்போல, 1996 தேர்தலுக்குப்பின்னர்தான் ஐக்கிய முன்னணி உருவானது, 1998 தேர்தலுக்குப்பின்னர்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவானது, 2004 தேர்தலுக்குப்பின்னர்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் உருவானது. அதைப்போலவே 2009 தேர்தலுக்குப்பின்பும் புதியதோர் கூட்டணி உருவாகும்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தமானது நாட்டின் உச்சபட்ச நலனுக்காக மேற்கொள்ளப்பட்டதே என்று அதனை நியாயப்படுத்திக் கூறிக்கொண்டே, இடதுசாரிகளுடனும் நேசத் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முயற்சிக்கிறது. இடதுசாரிகள், இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை ஒருதலைப் பட்சமாக நிறைவேற்ற ஐமுகூ அரசாங்கம் முடிவெடுத்தபின்னர், இடதுசாரிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது சரியான நடவடிக்கைதான் என்பதை இப்போது அமெரிக்காவின் ஆட்சியாளர்கள் அறிவித்துள்ள சமீபத்திய அறிவிப்புகள் மெய்ப்பித்து நிலை நாட்டியிருக்கின்றன. நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கும் சமயத்தில், அமெரிக்க அரசின் உதவி செயலாளர், ரோஸ் கோட்டிமோலர் (சுடிளந ழுடிவவநஅடிநடடநச), ஐ.நா. தலைமையிடத்தில் அமைந்துள்ள 2010 அணுசக்தி அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்த மறுஆய்வு மாநாட்டிற்கான தயாரிப்புக் குழு (ஞசநயீயசயவடிசல ஊடிஅஅவைவநந கடிச வாந 2010 சூரஉடநயச சூடிn-ஞசடிடகைநசயவiடிn கூசநயவல சுநஎநைற ஊடிகேநசநnஉந)விடம், ‘‘இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் மற்றும் வடகொரியா உட்பட உலகில் உள்ள அனைத்து நாடுகளும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தினை பின்பற்றிட வேண்டும் என்பதே அமெரிக்காவின் அடிப்படைக் குறிக்கோள்’’ என்று கூறியிருக்கிறார். அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவைக் கொண்டுவருவது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கையில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்ல, ஒருங்கிணைந்த ஆய்வுத் தடை ஒப்பந்தம் (ஊகூக்ஷகூ - ஊடிஅயீசநாநளேiஎந கூநளவ க்ஷயn கூசநயவல) மற்றும் அணுஆயுதம் தொடர்பான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளிலும் அமெரிக்காவுடன் முழுமையாக ஒத்துப்போக இந்தியா இசைந்திருப்பதற்கும் அவர் பாராட்டுக்களைத் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா இதுநாள்வரை என்பிடி என்னும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையும் (சூஞகூ-சூடிn-ஞசடிடகைநசயவiடிn கூசநயவல)மற்றும் சிடிபிடி என்னும் ஒருங்கிணைந்த ஆய்வுத் தடை ஒப்பந்தத்தையும் (ஊகூக்ஷகூ-ஊடிஅயீசநாநளேiஎந கூநளவ க்ஷயn கூசநயவல) ஏற்றுக்கொள்ள மறுத்தே வந்திருக்கிறது. ஏனெனில் இந்த ஒப்பந்தங்களானது, அமெரிக்கா, இங்கிலாந்து, ருஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணு ஆயுதங்களின் மேலாதிக்கம் செலுத்திட அனுமதித்திடும் அதே சமயத்தில் உலகில் உள்ள மற்ற நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கோ, அவற்றில் சோதனைகள் செய்வதற்கோ தடை விதிக்கின்றன என்பதே காரணங்களாகும்.
வாஜ்பாய் தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, அமெரிக்க அரசாங்கத்துடன் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி சிடிபிடி என்னும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள சமரசம் செய்துவந்திருக்கிறது. ஆனால் அப்போது அமெரிக்க காங்கிரஸ், அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க மறுத்ததால், அதிர்ஷ்டவசமாக அது தப்பித்தது.
இப்போது, இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றியிருப்பதன் வாயிலாக, டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தங்களுக்கு ஏறத்தாழ சரணடைந்துவிட்ட நிலையில், என்பிடி என்னும் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையும் இந்தியா ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. இதன்மூலம் இந்தியா இதுநாள்வரை கடைப்பிடித்து வந்த கொள்கையை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட்டது. உண்மையில், ராஜீவ்காந்தி பிரதமராக இருந்த காலத்தில், இந்தப் பூமண்டலத்திலிருந்தே அணு ஆயுதங்களை முழுமையாக ஒழித்துக்கட்ட ஒரு கால அட்டவணையை ஐ.நா.ஸ்தாபனத்திடம் இந்தியா முன்வைத்தது. அந்த சமயத்தில் இந்தியா, இவ்வாறு பூமண்டலத்திலிருந்து அணுஆயுதங்கள் முழுமையாக ஒழித்துக்கட்டப்படும் வரை, என்பிடி மற்றும் சிடிபிடி ஆகிய இரு ஒப்பந்தங்களையும் ஏற்க முடியாது என்றும் அறிவித்தது. ஆனால், மன்மோகன்சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமோ, இந்தியாவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்த்தந்திரக் கூட்டணியின் ஒரு தொங்கு சதையாக அடியோடு மாற்றி அமைத்துவிட்டதன் மூலம், மேற்படி நிலையை முற்றிலுமாக மறுதலித்திருக்கிறது.
எனவேதான், சர்வதேச சமூகத்தின் மத்தியில் இந்தியா பெற்றிருந்த மதிப்பையும் மரியாதையையும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இந்தியா இதுநாள்வரைக்கடைப்பிடித்து வந்த சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கக்கூடிய விதத்தில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கத்தை மத்தியில் அமர்த்துவதே இன்றைய காலத்தின் கட்டாயமாகும். மேலும் பொருளாதாரத் துறையிலும் ஒரு மாற்றுப் பொருளாதாரக் கொள்கையை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ள அதே சமயத்தில் மத்தியில் ஆட்சியில் அமரக்கூடிய அரசானது, வலுவான வகையில் சமூக நீதியை உத்தரவாதப்படுத்தவும், வகுப்புவாதம் மற்றும் பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கவும் உறுதியான நிலைப்பாட்டினை மேற்கொள்ளக்கூடிய விதத்திலும் காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற சேர்மானம் உருவாக்கக்கூடிய விதத்தில் அமைவதும் அத்தியாவசியமானதாகும்.
(தமிழில்: ச.வீரமணி)

Saturday, May 2, 2009

மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதிராக நச்சுப் பிரச்சாரம் - மக்கள் சரியாகப் பதிலடி கொடுப்பார்கள்



ரு கால் நூற்றாண்டுக்கு முன்பு, ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமராக இருந்த சமயத்தில், ‘‘கல்கத்தா ஓர் இறந்து கொண்டிருக்கும் நகரம்’’ என்று இகழார்ந்த முறையில் விமர்சனம் செய்தார். இவ்வாறு இவர்களது அவதூறுப் பிரச்சாரம் அனைத்தையும் மீறித்தான், மேற்கு வங்கம் நவீன இந்தியாவை சிருஷ்டிப்பதற்கு மகத்தான அளவில் தன் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயங்களில் எல்லாம், இவர்களின் துர்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இன்று, அவரது புதல்வரும், காங்கிரசின் பொதுச் செயலாளருமாகிய ராகுல் காந்தி, தன் தந்தையின் குரலையே எதிரொலிக்கிறார். ‘‘இந்தக் கம்யூனிஸ்ட்டுகளின் அரசாங்கம், ஏழைகளை மறந்துவிட்டது. மேலும், மாநிலத்தை முன்னேற்றிச் செல்வதற்குப் பதிலாக, கடந்த முப்பதாண்டுகளில், குறைந்தபட்சம் முப்பதாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது,’’ என்று பேசியுள்ளார். மேலும், வங்கத்தில் உள்ள வறுமையின் அளவை, ஒரிசா மாநிலம் காலஹண்டி, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுடன் ஒப்பிட்டிருக்கிறார். தரையில் உறுதியாகத் தடம் பதிக்காது, வானத்தில் மகிழ்ச்சியுடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பவர் களிடமிருந்து இத்தகைய அபத்தமான பேத்தல்கள்தான் வரும். அவர் பேசிய இடமான புருலியாவின் நிலைமையே, ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்ளில் அவர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமல்ல, காங்கிரசின் தலைரும் பொதுச் செயலாளரும் பிரதிநிதித்துவப்படுத்தும் ரேபரேலி மற்றும் அமெதி தொகுதிகளில் உள்ள நிலைமைகளுக்கும் மேம்பட்டதாகும்.

காங்கிரசின் தலைவரான சோனியா காந்தியும், மேற்கு வங்கத்தில் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதிகள், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், திருப்பி விடப்படுவதாகவும் மிகவும் இழிவான முறையில் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐமுகூ அரசாங்கமானது நிலை எடுத்ததனை அடுத்து, அதற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்ட பின்னர், மன்மோகன் சிங் அரசாங்கமானது, நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்குப் பயன்படுத்திய கத்தை கத்தையான கரன்சி நோட்டுக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் காட்டப்படும் அளவிற்கு, மிகவும் மட்டமான அரசியல் ஒழுக்கக்கேட்டிற்கு ஆளான ஒரு கட்சியின் தலைவரிடமிருந்து, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வருவது, வேடிக்கை விநோதம்தான்.

மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கமானது, தனக்கு அளித்திட்ட தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு பொதுவான பல்லவி பாடப்படுகிறது. தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணிகள் பிரதானமாக வறண்ட மற்றும் பாதி வறண்ட நிலப்பகுதிகளுக்கானது என்றும், எனவே அதிக அளவில் மழை பெய்யும் வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இது பொருந்தாது என்றும் மேற்கு வங்க இடது முன்னணி அரசு மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறது. எனவே, இத்திட்டத்தின் கீழ் வேலைக்காக நியமிக்கப்படும் மக்களை மத்திய அரசின் வேறு பல திட்டப்பணிகளிலும் இணைத்திட அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு மத்திய அரசைக் கேட்டிருக்கிறது. ஆயினும், மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. எனவே, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழான பணிகள் செம்மையாக நடைபெறாததற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இடது முன்னணி அரசாங்கமானது ‘‘லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு’’ ‘வேலை அட்டைகள்’ (‘job cards’) கொடுக்கவில்லை என்று காங்கிரசின் தலைவர்களால் இவ்வாறு அர்த்தமற்ற முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட போதிலும், மேற்கு வங்க அரசாங்மானது தகுதியுள்ள ஏழை மக்களில் 95 லட்சம் வேலை அட்டைகள் இப்போது கொடுக்கப் பட்டிருக்கின்றன என்பதே உண்மை நிலவரமாகும். நாடு முழுவதுமே மொத்தம் 4 கோடி வேலை அட்டைகள்தான் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் வெறும் 8 சதவீதத்தினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள மேற்கு வங்கம், நாட்டில் விநியோகிக்கப்பட்ட மொத்த வேலை அட்டைகளில் 25 சதவீதத்தை விநியோகித் திருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் இடது முன்னணிக்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறு குறித்தும் ஆராய்வோம். சென்ற ஆண்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட 1993க்கும் 2003க்கும் இடையிலான பத்தாண்டு காலத்தில் - அதாவது நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்பட்ட காலத்தில் - மாநில உள்நாட்டு உற்பத்தி (state domestic product)யில் மேற்கு வங்க மாநிலத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.10 சதவீதமாகும். இந்த அளவானது நாட்டின் பதினாறு பெரிய மாநிலங்களுக்கிடையே உயர்ந்தபட்ச அளவாகும். இது, மகாராஷ்ட்ராவில் 4.74 சதவீதம், குஜராத்தில் 5.87 சதவீதம், கர்நாடகாவில் 6.27 சதவீதம், ஆந்திராவில் 5.27 சதவீதம், தமிழ்நட்டில் 5.24 சதவீதம் என்பதுடன் ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தின் உயர் சதவீதத்தின் அருமை நன்கு புரியும். இந்த ஆய்வானது, மத்திய அரசின் கொள்கை மாற்றுக்கான மையம் வெளியிட்ட ஒன்றாகும். இம்மையமானது மத்திய புள்ளியியல் அமைப்பு, பொருளாதார சர்வே மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் அடிப்படையில் இதனைத் தயாரித்துள்ளது. முன்னதாக உலக வங்கி மற்றும் திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தயாரித்திட்ட ஆய்வுகளும் மேற்படி ஆய்வுக்கு ஒத்துப்போகின்றன.
ஒவ்வொருவருக்குமான தனிநபர் வருமானம் (per capita income) என்று எடுத்துக் கொண்டோமானால், தேசிய சராசரி 4.01 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் அதே சமயத்தில் மேற்கு வங்கமானது 5.51 சதவீத அளவிற்கு சராசரி வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. மற்ற மாநிலங்களை விட மக்கள் தொகைப் பெருக்கம், 1.64 சதவீதம் அதிகரித்திட்ட போதிலும், இந்த வளர்ச்சியை மேற்கு வங்கம் பெற்றிருக்கிறது. வங்கதேசத்திலிருந்து மட்டுமல்ல நேபாளத்திலிருந்தும் புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதும், பீகார் மற்றும் ஒரிசா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் இவ்வாறு மக்கள்தொகைப் பெருக்கத்திற்குக் காரணங்களாக உள்ளன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு எண்ணற்ற இடர்ப்பாடுகள் இல்லாம லிருந்திருந்தால், மேற்கு வங்கத்தில் தனிநபர் வருமானம் இப்போதிருப்பதை விட மேலும் அதிகமான அளவில் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மேற்கு வங்க வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான். பொதுவாக, நிலச்சீர்திருத்தங்கள் என்பது மனிதாபிமான அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒன்றுமே இல்லாத மக்களுக்கு இது ஒரு முக்கியமான வாழ்வாதாரமாகும். சரியான முறையில் நில விநியோகம் செய்யப்பட்டால் அது உற்பத்தித் திறனையும் (நிலம் மற்றும் உழைப்பு ஆகிய இரண்டின் உற்பத்தித் திறனையுமே) அதிகரித்திடும். அதன் விளைவாக பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடும். இவ்வாறாக, வேளாண்மைத் துறையில் ‘உள்ளீடான வளர்ச்சி’ (‘inclusive growth’), விவசாய உற்பத்தித் திறன் வளர்ச்சி மற்றும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு ஆகிய மூன்றையுமே இன்று மேற்கு வங்கத்தில் நன்கு பார்க்க முடியும்.

சுமார் 13 லட்சம் ஏக்கர நிலம் இடது முன்னணி அரசாங்கத்தால் கையகப் படுத்தப்பட்டு, நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இதன் விளைவாக சுமார் 25 லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலம் - மிகவும் குறைச்சலாக - பத்து லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இவ்வாறு நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரும். இந் அளவிற்கான வள ஆதாரம் பணக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மேற்கு வங்கத்தில் அபரிமிதமான அளவில் செல்வவளம் பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பதுதான், வேகமான கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும். மேலும் கூடுதலாக, சுமார் 20 லட்சம் குத்தகை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பொருள், அவர்களை நிலப்பிரபுக்கள் நிலத்திலிருந்து வெளியேற்றிட முடியாது என்பதாகும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு நிலத்தில் உழுவதற்கானப் பாரம்பர்ய உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து, மாநிலத்தில் சுமார் 50 லட்சம் விவசாயிகளின் அல்லது சுமார் இரண்டரை அல்லது 3 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கையை புரட்சிகரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறது.

நாட்டில் மிகவும் நெருக்கமான முறையில் விவசாயப் பணிகள் நடைபெறும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆயினும், விவசாய நிலத்தில் 28.1 சதவீத அளவற்கே நீர்ப்பாசன வசதி பெற்றிருக்கிறது. பஞ்சாப்பில் இது 89.72 சதவீதமாகும். மத்தியஅரசு, பக்ராநங்கல் அணை கட்டிக் கொடுத்திருப்பதன் காரணமாக அங்கே அது சாத்தியமாகியிருக்கிறது. ஆளால் அதுபோன்ற திட்டங்களை மேற்கு வங்கத்தில் நிறைவேற்றிட மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆயினும் கூட, நாட்டில் விளையும் உணவு தான்ய உற்பத்தியில் உயர்ந்த அளவிற்கு சராசரி விளைச்சல் காணும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. (பஞ்சாப், உத்தரப்பிரதேசம் முதல் இரு மாநிலங்களாகும்.) இன்றைய தினம் நாட்டிலேயே அரிசி உற்பத்தியில் மாபெரும் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. 1980களில் நாட்டின் சராசரி உற்பத்தி அளவைவிட மேற்கு வங்கம் 18 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் தேசிய சராசரியை விட 10 சதவீதம் அதிகரித்து முன்னணியில் நிற்கிறது.

இவ்வாறான யதார்த்த உண்மைகள்தான், மேற்கு வங்க மக்கள், கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணி மீது அபரிமிதமான அன்பும் ஆதரவும் வைத்திருப்பதற்குக் காரணிகளாகும். அதனால்தான், காங்கிரசும் அதன் புதிய கூட்டாளியான திரிணாமுல் காங்கிரசும், இடது முன்னணியின் ‘அடாவடி ஆட்சி’ மேற்கு வங்கத்தில் நடைபெறுவதாக கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருந்தாலும், மக்கள் மத்தியில் அது கிஞ்சிற்றும் எடுபடவில்லை. எந்த ஒரு ஜனநாயகத்திலும், மக்கள், தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முன்வந்த அரசியல் கட்சிகளைத்தான் தேர்வு செய்திடுவார்கள். இந்த அணுகுமுறைப்படி பார்த்தோமானால், மேற்கு வங்கத்தில் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட்ட இடது முன்னணி மீது அபரிமிதமான நம்பிக்கையை மக்கள் தொடர்வதில் ஆச்சர்யம் எதுவுமில்லை,

கடந்த காலங்களில் இடது முன்னணியானது, ‘விஞ்ஞானரீதியான தேர்தல் மோசடி மூலம்’ (‘scientific wrigging’) தேர்தலில் வெற்றி பெறுகிறதென்று அடிக்கடி எதிரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை நம்பி, தேர்தல் ஆணையம் கூட, மாநில சட்டமன்றத் தேர்தல்கள் 2006இல் நடைபெற்ற சமயத்தில், அம்மாநிலத்தில் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்திடவும், தேர்தலை நடத்திடுவதற்காகப் பாதுகாப்புப் படையினரையும் தேர்தல் பணியாளர்களையும் வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ததையும் பார்த்தோம். (மேற்கு வங்க அரசு ஊழியர்கள் அனைவருமே மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர்) தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் நாம் அந்த சமயத்தில், ‘‘வாக்காளர்களை மேற்கு வங்கத்திற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யாதவரை, இடது முன்னணியைத் தோற்கடிக்க எவராலும் முடியாது’’ என்று பிரகடனம் செய்தோம். தேர்தலில் மக்கள் இடது முன்னணிககு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவினை அளித்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தனர்.

இவ்வாறாக, வங்கத்தில் கடந்த முப்பதாண்டுகளாக இடது முன்னணியின் ‘அடாவடி’ ஆட்சி நடைபெறுகிறது என்று எதிரிகள் கூறுவதன் மூலம் அவர்கள் இடதுமுன்னணியைத் தேர்ந்தெடுக்கும் மக்களை அவமதிக்கிறார்கள். ஆயினும் மேற்கு வங்க மக்கள், தங்கள் சொந்த அனுபவத்தின் காரணமாக, கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணிக்கு அன்பும் ஆதரவும் அளித்து வந்ததைப்போலவே இப்போதும் ஆதரவினை நல்கி, எதிரிகளின் நச்சுப்பிரச்சாரத்திற்குத் தக்க பதிலடி அளிப்பார்கள் என்பது திண்ணம்.

(தமிழில்: ச.வீரமணி)

Friday, May 1, 2009

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, தொழிலாளர் வர்க்கம் அணிதிரண்டு வருகிறது-மே தினக் கூட்டத்தில் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை பேச்சு




புதுடில்லி, மே 1-
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, நாசகர நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் அணிதிரண்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை கூறினார்.
மேதினமான மே 1 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தின் முன் எஸ். ராமச்சந்திரன்பிள்ளை செங்கொடியை ஏற்றி, உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது.
1856 ஏப்ரல் 21 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக் கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “ 1886 மே 1, அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த சமயத்தில், மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல் பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் - ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படை யில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் லீக்” என்று மாற்றினர்.
8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது. 1886 மே 3- அன்று “மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆகஸ்ட் ஸ்பைஸ் எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீஸ் படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
1886 மே 4 ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆகஸ்ட் ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, போலீசார், கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது; இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். உடனே போலீஸ் படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளி வராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹே மார்க்கெட் சதுக்கமே சிவந்தது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிஸ்ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஏங்கெல்ஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை கண்டித்து, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே கடந்த 120 ஆண்டுகளாக, மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகில் முதன் முதலாக தொழிலாளர் வர்க்கத்தின் அரசு, சோவியத் யூனியனில் அமைந்தது. சுமார் 80 ஆண்டுகளுக்குப்பின் சோவியத் யூனியன் சிதறுண்டது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பல்வேறு சோசலிச நாடுகளும் சிதறிப்போயின. இதன் மூலம் சோசலிய அமைப்பிற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. இதனை அடுத்து முதலாளித்துவத்திற்கு காவடி தூக்கும் அறிவுஜீவிகள் ‘‘சோஷலிசம் செத்து விட்டது. இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் கிடையாது. முதலாளித்துவம்தான் மனிதகுல நாகரிகத்தின் உச்ச கட்டம்’’ என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். இதனைத் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின.
ஆனால் என்ன ஆயிற்று என்பதை இன்றையதினம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலாளித்துவ உலகமே மிகவும் ஆழமான பொருளாதார மந்தத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. பங்குச்சந்தைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. கோடானுகோடி மக்கள தாங்கள் பங்குச்சந்தையில் முதலீட செய்த பணத்தை இழந்து விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்த நிற்கிறார்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். சாமானிய மக்களின் துன்ப துயரங்களும் அதிகரித்திருக்கின்றன.
இப்போது இதே முதலாளித்துவ அறிவுஜீவிகள் என்ன சொல்கிறார்கள்? முதலாளித்துவ நாடுகளில் ஆட்சிபுரிந்தவர்கள் திறமையின்மைதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இவ்வாறு அரசாங்கத்தைக் குறைகூறியவர்கள், இப்போது வங்கிகளும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் நொறுங்கித் தகர்ந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் இவற்றைக் காப்பாற்ற அரசாங்கங்கள் முன்வரவேண்டுமென்று கூப்பாடு போடுகிறார்கள். முதலாளித்துவ அரசாங்கங்களும் அதற்குத் துணைபோகின்றன.
முதலாளித்துவ உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் இந்தியாவில் குறைவுதான். இதற்குக் காரணம், நாம் இந்த அரசாங்கத்தைக் கடிவாளமிட்டு, அதன் இஷ்டத்திற்குச் செயல்படவிடாது தடுத்து நிறுத்தி இருந்ததுதான்.
ஆட்சியாளர்கள், நாட்டில் உள்ள வங்கிகளையும், இன்சூரன்ஸ் துறையையும் தனியாரிடம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரை வார்க்க முயற்சித்த சமயததில், நாம் அதைத் தடுத்து நிறுத்தினோம். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க அரசு முயற்சித்தபோது நாம் அதைத் தடுத்து நிறுத்தினோம். நம்முடைய நாட்டின் முதலாளித்துவ சந்தையை மேலும் தாராளமயமாக்கிட அரசு முயன்றபோது அதைத் தடுத்து நிறுத்தினோம். இவ்வாறு இடதுசாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தான் இந்தியா இன்றைய தினம் உலகப் பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் லத்தீன் அமெரிக்கா, வெனிசுலா, ஈக்வேடார், பொலிவியா போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலேயே பலவற்றிலும் தொழிலாளர் வர்க்கம், நாசகர தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவக் கோட்பாட்டுக்கு எதிராக, பல்துருவக் கோட்பாட்டை உருவாக்கிடவும் அணிதிரண்டு வருகின்றன. இந்த சக்திகளுடன் நாமும் இணைந்து நின்று -
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நவீன பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட உறுதி ஏற்போம். சோசலிச அமைப்பை உருவாக்குவதற்கான போராட்டத்தில், சோசலிச மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர்களுடன் நாமும் ஒன்றுபடுவோம், போராடுவோம், முன்னேறுவோம்.
இவ்வாறு எஸ். ராமச்சந்திரன்பிள்ளை பேசினார்.
(ச.வீரமணி)

S. RAMACHANDRAN PILLAI ON MAY DAY

MAY DAY CELEBRATED AT AKG BHAVAN

New Delhi, May 1: On the occasion of May Day 2009, the red flag was hoisted by S Ramachandran Pillai, Politburo member of the CPI (M) at AKG Bhavan, this morning. Speaking to a gathering of comrades working at Party centre and mass organisations, SRP recounted the history of May Day struggle as follows: