Friday, May 1, 2009

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, தொழிலாளர் வர்க்கம் அணிதிரண்டு வருகிறது-மே தினக் கூட்டத்தில் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை பேச்சு




புதுடில்லி, மே 1-
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக, நாசகர நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் அணிதிரண்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எஸ். ராமச்சந்திரன் பிள்ளை கூறினார்.
மேதினமான மே 1 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகத்தின் முன் எஸ். ராமச்சந்திரன்பிள்ளை செங்கொடியை ஏற்றி, உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தொழிலாளிகள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை மொத்தமாக சுரண்டி கொழுத்தது.
1856 ஏப்ரல் 21 அன்று ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போன் - விக்டோரியாவில், கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள்தான் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக் கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்கம் 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. அத்தோடு “ 1886 மே 1, அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது”. இவ்வியக்கமே ‘மே தினம்’ பிறப்பதற்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த சமயத்தில், மார்க்சும் - ஏங்கெல்சும் இங்கிலாந்தில் இருந்தபோது பிரான்ஸ், ஜெர்மன் மற்றும் இதர நாட்டு தொழிலாளர் குழுக்களுடனும் தொடர்பு கொண்டிருந்தனர். 1847ஆம் ஆண்டு “நீதியாளர் கழகம்” என்ற பெயரில் செயல் பட்டு வந்த அமைப்பு, மார்க்ஸ் - ஏங்கெல்சுடன் தொடர்பு கொண்டு, அவர்களை தங்களது அமைப்பில் இணையும்படி கேட்டுக் கொண்டது. அதன் அடிப்படை யில் மார்க்சும் - ஏங்கெல்சும் இவ்வமைப்பில் இணைந்துக் கொண்டதோடு, இவ்வமைப்பின் பெயரை “கம்யூனிஸ்ட் லீக்” என்று மாற்றினர்.
8 மணி நேர வேலைக்கான இயக்கம் அமெரிக்காவில் வீறு கொண்டு எழுந்தது. 1886 மே 3- அன்று “மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் ஆகஸ்ட் ஸ்பைஸ் எழுச்சி மிகு உரையாற்றினார். கூட்டம் அமைதியாக நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில், பெரும் போலீஸ் படை கூட்டத்தை முற்றுகையிட்டதோடு, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டது. 4 தொழிலாளர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாயினர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.
1886 மே 4 ஹே மார்க்கெட் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் மெக்கார்மிக்கில் நடைபெற்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்தது. ஆகஸ்ட் ஸ்பைஸ் , ஆல்பர்ட் பார்சன்ஸ், சாமுவேல் பீல்டன் பேசத் துவங்கும் போது, போலீசார், கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து, அனைவரையும் கலைந்து செல்லுமாறு மிரட்டியுள்ளனர். இந்த சமயத்தில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டிருக்கிறது; இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார். உடனே போலீஸ் படை கூட்டத்தினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பது இன்றைக்கும் வெளி வராத மர்மமாகவே இருக்கிறது. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஹே மார்க்கெட் சதுக்கமே சிவந்தது.
அமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.
1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிஸ்ட் தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது” 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். ஏங்கெல்ஸ் உட்பட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் காரல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிகாகோ சதியை கண்டித்து, 1890 மே 1 அன்று சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டும் என்றும் அறைகூவல் விடப்பட்டது.
இந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுசரிப்பதற்கு வழிவகுத்தது. இதனைத் தொடர்ந்தே கடந்த 120 ஆண்டுகளாக, மே தினம் உலகம் முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகில் முதன் முதலாக தொழிலாளர் வர்க்கத்தின் அரசு, சோவியத் யூனியனில் அமைந்தது. சுமார் 80 ஆண்டுகளுக்குப்பின் சோவியத் யூனியன் சிதறுண்டது. கிழக்கு ஐரோப்பாவிலிருந்த பல்வேறு சோசலிச நாடுகளும் சிதறிப்போயின. இதன் மூலம் சோசலிய அமைப்பிற்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. இதனை அடுத்து முதலாளித்துவத்திற்கு காவடி தூக்கும் அறிவுஜீவிகள் ‘‘சோஷலிசம் செத்து விட்டது. இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் கிடையாது. முதலாளித்துவம்தான் மனிதகுல நாகரிகத்தின் உச்ச கட்டம்’’ என்றெல்லாம் கூப்பாடு போட்டார்கள். இதனைத் தொடர்ந்து முதலாளித்துவ நாடுகள் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றின.
ஆனால் என்ன ஆயிற்று என்பதை இன்றையதினம் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலாளித்துவ உலகமே மிகவும் ஆழமான பொருளாதார மந்தத்தில் சிக்கிக்கொண்டிருக்கிறது. வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. பங்குச்சந்தைகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. கோடானுகோடி மக்கள தாங்கள் பங்குச்சந்தையில் முதலீட செய்த பணத்தை இழந்து விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்த நிற்கிறார்கள். தொழிற்சாலைகள் மூடப்பட்டு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். சாமானிய மக்களின் துன்ப துயரங்களும் அதிகரித்திருக்கின்றன.
இப்போது இதே முதலாளித்துவ அறிவுஜீவிகள் என்ன சொல்கிறார்கள்? முதலாளித்துவ நாடுகளில் ஆட்சிபுரிந்தவர்கள் திறமையின்மைதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இவ்வாறு அரசாங்கத்தைக் குறைகூறியவர்கள், இப்போது வங்கிகளும், இன்சூரன்ஸ் கம்பெனிகளும் நொறுங்கித் தகர்ந்துகொண்டிருக்கக்கூடிய நிலையில் இவற்றைக் காப்பாற்ற அரசாங்கங்கள் முன்வரவேண்டுமென்று கூப்பாடு போடுகிறார்கள். முதலாளித்துவ அரசாங்கங்களும் அதற்குத் துணைபோகின்றன.
முதலாளித்துவ உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் இந்தியாவில் குறைவுதான். இதற்குக் காரணம், நாம் இந்த அரசாங்கத்தைக் கடிவாளமிட்டு, அதன் இஷ்டத்திற்குச் செயல்படவிடாது தடுத்து நிறுத்தி இருந்ததுதான்.
ஆட்சியாளர்கள், நாட்டில் உள்ள வங்கிகளையும், இன்சூரன்ஸ் துறையையும் தனியாரிடம் அந்நிய பன்னாட்டு நிறுவனங்களிடம் தாரை வார்க்க முயற்சித்த சமயததில், நாம் அதைத் தடுத்து நிறுத்தினோம். பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்க்க அரசு முயற்சித்தபோது நாம் அதைத் தடுத்து நிறுத்தினோம். நம்முடைய நாட்டின் முதலாளித்துவ சந்தையை மேலும் தாராளமயமாக்கிட அரசு முயன்றபோது அதைத் தடுத்து நிறுத்தினோம். இவ்வாறு இடதுசாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தான் இந்தியா இன்றைய தினம் உலகப் பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கிறது.
இன்றைய தினம் லத்தீன் அமெரிக்கா, வெனிசுலா, ஈக்வேடார், பொலிவியா போன்ற நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளிலேயே பலவற்றிலும் தொழிலாளர் வர்க்கம், நாசகர தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒருதுருவக் கோட்பாட்டுக்கு எதிராக, பல்துருவக் கோட்பாட்டை உருவாக்கிடவும் அணிதிரண்டு வருகின்றன. இந்த சக்திகளுடன் நாமும் இணைந்து நின்று -
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், நவீன பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட உறுதி ஏற்போம். சோசலிச அமைப்பை உருவாக்குவதற்கான போராட்டத்தில், சோசலிச மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான போராட்டத்தில் அவர்களுடன் நாமும் ஒன்றுபடுவோம், போராடுவோம், முன்னேறுவோம்.
இவ்வாறு எஸ். ராமச்சந்திரன்பிள்ளை பேசினார்.
(ச.வீரமணி)

No comments: