Saturday, May 2, 2009

மேற்கு வங்க இடது முன்னணிக்கு எதிராக நச்சுப் பிரச்சாரம் - மக்கள் சரியாகப் பதிலடி கொடுப்பார்கள்



ரு கால் நூற்றாண்டுக்கு முன்பு, ராஜீவ் காந்தி, இந்தியப் பிரதமராக இருந்த சமயத்தில், ‘‘கல்கத்தா ஓர் இறந்து கொண்டிருக்கும் நகரம்’’ என்று இகழார்ந்த முறையில் விமர்சனம் செய்தார். இவ்வாறு இவர்களது அவதூறுப் பிரச்சாரம் அனைத்தையும் மீறித்தான், மேற்கு வங்கம் நவீன இந்தியாவை சிருஷ்டிப்பதற்கு மகத்தான அளவில் தன் பங்களிப்பினைச் செய்து கொண்டிருக்கிறது. கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் தேர்தல் நடைபெற்ற சமயங்களில் எல்லாம், இவர்களின் துர்ப்பிரச்சாரத்திற்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இன்று, அவரது புதல்வரும், காங்கிரசின் பொதுச் செயலாளருமாகிய ராகுல் காந்தி, தன் தந்தையின் குரலையே எதிரொலிக்கிறார். ‘‘இந்தக் கம்யூனிஸ்ட்டுகளின் அரசாங்கம், ஏழைகளை மறந்துவிட்டது. மேலும், மாநிலத்தை முன்னேற்றிச் செல்வதற்குப் பதிலாக, கடந்த முப்பதாண்டுகளில், குறைந்தபட்சம் முப்பதாண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிட்டது,’’ என்று பேசியுள்ளார். மேலும், வங்கத்தில் உள்ள வறுமையின் அளவை, ஒரிசா மாநிலம் காலஹண்டி, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளுடன் ஒப்பிட்டிருக்கிறார். தரையில் உறுதியாகத் தடம் பதிக்காது, வானத்தில் மகிழ்ச்சியுடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பவர் களிடமிருந்து இத்தகைய அபத்தமான பேத்தல்கள்தான் வரும். அவர் பேசிய இடமான புருலியாவின் நிலைமையே, ஒரிசா, பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்ளில் அவர் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமல்ல, காங்கிரசின் தலைரும் பொதுச் செயலாளரும் பிரதிநிதித்துவப்படுத்தும் ரேபரேலி மற்றும் அமெதி தொகுதிகளில் உள்ள நிலைமைகளுக்கும் மேம்பட்டதாகும்.

காங்கிரசின் தலைவரான சோனியா காந்தியும், மேற்கு வங்கத்தில் மத்திய அரசிடமிருந்து பெறப்படும் நிதிகள், துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும், திருப்பி விடப்படுவதாகவும் மிகவும் இழிவான முறையில் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஐமுகூ அரசாங்கமானது நிலை எடுத்ததனை அடுத்து, அதற்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் விலக்கிக் கொண்ட பின்னர், மன்மோகன் சிங் அரசாங்கமானது, நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்குப் பயன்படுத்திய கத்தை கத்தையான கரன்சி நோட்டுக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாடாளுமன்ற மக்களவையில் காட்டப்படும் அளவிற்கு, மிகவும் மட்டமான அரசியல் ஒழுக்கக்கேட்டிற்கு ஆளான ஒரு கட்சியின் தலைவரிடமிருந்து, இத்தகைய குற்றச்சாட்டுக்கள் வருவது, வேடிக்கை விநோதம்தான்.

மேற்கு வங்க இடது முன்னணி அரசாங்கமானது, தனக்கு அளித்திட்ட தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைத் திறமையாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு பொதுவான பல்லவி பாடப்படுகிறது. தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் பணிகள் பிரதானமாக வறண்ட மற்றும் பாதி வறண்ட நிலப்பகுதிகளுக்கானது என்றும், எனவே அதிக அளவில் மழை பெய்யும் வங்கம் போன்ற மாநிலங்களுக்கு இது பொருந்தாது என்றும் மேற்கு வங்க இடது முன்னணி அரசு மத்திய அரசுக்கு எழுதியிருக்கிறது. எனவே, இத்திட்டத்தின் கீழ் வேலைக்காக நியமிக்கப்படும் மக்களை மத்திய அரசின் வேறு பல திட்டப்பணிகளிலும் இணைத்திட அனுமதிக்க வேண்டும் என்றும் மேற்கு வங்க அரசு மத்திய அரசைக் கேட்டிருக்கிறது. ஆயினும், மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்துவிட்டது. எனவே, கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழான பணிகள் செம்மையாக நடைபெறாததற்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். இடது முன்னணி அரசாங்கமானது ‘‘லட்சக்கணக்கான ஏழை விவசாயிகளுக்கு’’ ‘வேலை அட்டைகள்’ (‘job cards’) கொடுக்கவில்லை என்று காங்கிரசின் தலைவர்களால் இவ்வாறு அர்த்தமற்ற முறையில் தாக்குதல்கள் தொடுக்கப்பட்ட போதிலும், மேற்கு வங்க அரசாங்மானது தகுதியுள்ள ஏழை மக்களில் 95 லட்சம் வேலை அட்டைகள் இப்போது கொடுக்கப் பட்டிருக்கின்றன என்பதே உண்மை நிலவரமாகும். நாடு முழுவதுமே மொத்தம் 4 கோடி வேலை அட்டைகள்தான் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நாட்டின் மொத்த ஜனத் தொகையில் வெறும் 8 சதவீதத்தினரை மட்டுமே உள்ளடக்கியுள்ள மேற்கு வங்கம், நாட்டில் விநியோகிக்கப்பட்ட மொத்த வேலை அட்டைகளில் 25 சதவீதத்தை விநியோகித் திருக்கிறது.

மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்தும் இடது முன்னணிக்கு எதிராகப் பரப்பப்படும் அவதூறு குறித்தும் ஆராய்வோம். சென்ற ஆண்டு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட 1993க்கும் 2003க்கும் இடையிலான பத்தாண்டு காலத்தில் - அதாவது நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்பட்ட காலத்தில் - மாநில உள்நாட்டு உற்பத்தி (state domestic product)யில் மேற்கு வங்க மாநிலத்தின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.10 சதவீதமாகும். இந்த அளவானது நாட்டின் பதினாறு பெரிய மாநிலங்களுக்கிடையே உயர்ந்தபட்ச அளவாகும். இது, மகாராஷ்ட்ராவில் 4.74 சதவீதம், குஜராத்தில் 5.87 சதவீதம், கர்நாடகாவில் 6.27 சதவீதம், ஆந்திராவில் 5.27 சதவீதம், தமிழ்நட்டில் 5.24 சதவீதம் என்பதுடன் ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தின் உயர் சதவீதத்தின் அருமை நன்கு புரியும். இந்த ஆய்வானது, மத்திய அரசின் கொள்கை மாற்றுக்கான மையம் வெளியிட்ட ஒன்றாகும். இம்மையமானது மத்திய புள்ளியியல் அமைப்பு, பொருளாதார சர்வே மற்றும் ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் அடிப்படையில் இதனைத் தயாரித்துள்ளது. முன்னதாக உலக வங்கி மற்றும் திட்டக் கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் தயாரித்திட்ட ஆய்வுகளும் மேற்படி ஆய்வுக்கு ஒத்துப்போகின்றன.
ஒவ்வொருவருக்குமான தனிநபர் வருமானம் (per capita income) என்று எடுத்துக் கொண்டோமானால், தேசிய சராசரி 4.01 சதவீதம் என்ற நிலையில் இருக்கும் அதே சமயத்தில் மேற்கு வங்கமானது 5.51 சதவீத அளவிற்கு சராசரி வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கிறது. மற்ற மாநிலங்களை விட மக்கள் தொகைப் பெருக்கம், 1.64 சதவீதம் அதிகரித்திட்ட போதிலும், இந்த வளர்ச்சியை மேற்கு வங்கம் பெற்றிருக்கிறது. வங்கதேசத்திலிருந்து மட்டுமல்ல நேபாளத்திலிருந்தும் புலம்பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பதும், பீகார் மற்றும் ஒரிசா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து வருவோரின் எண்ணிக்கையும் இவ்வாறு மக்கள்தொகைப் பெருக்கத்திற்குக் காரணங்களாக உள்ளன என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு எண்ணற்ற இடர்ப்பாடுகள் இல்லாம லிருந்திருந்தால், மேற்கு வங்கத்தில் தனிநபர் வருமானம் இப்போதிருப்பதை விட மேலும் அதிகமான அளவில் இருந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மேற்கு வங்க வளர்ச்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிதான். பொதுவாக, நிலச்சீர்திருத்தங்கள் என்பது மனிதாபிமான அம்சமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆனால் ஒன்றுமே இல்லாத மக்களுக்கு இது ஒரு முக்கியமான வாழ்வாதாரமாகும். சரியான முறையில் நில விநியோகம் செய்யப்பட்டால் அது உற்பத்தித் திறனையும் (நிலம் மற்றும் உழைப்பு ஆகிய இரண்டின் உற்பத்தித் திறனையுமே) அதிகரித்திடும். அதன் விளைவாக பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்திடும். இவ்வாறாக, வேளாண்மைத் துறையில் ‘உள்ளீடான வளர்ச்சி’ (‘inclusive growth’), விவசாய உற்பத்தித் திறன் வளர்ச்சி மற்றும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு ஆகிய மூன்றையுமே இன்று மேற்கு வங்கத்தில் நன்கு பார்க்க முடியும்.

சுமார் 13 லட்சம் ஏக்கர நிலம் இடது முன்னணி அரசாங்கத்தால் கையகப் படுத்தப்பட்டு, நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இதன் விளைவாக சுமார் 25 லட்சம் மக்கள் பயனடைந்திருக்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலம் - மிகவும் குறைச்சலாக - பத்து லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இவ்வாறு நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரும். இந் அளவிற்கான வள ஆதாரம் பணக்காரர்களிடமிருந்து பறிக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறாக, மேற்கு வங்கத்தில் அபரிமிதமான அளவில் செல்வவளம் பகிர்ந்தளிக்கப் பட்டிருப்பதுதான், வேகமான கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாகும். மேலும் கூடுதலாக, சுமார் 20 லட்சம் குத்தகை விவசாயிகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பொருள், அவர்களை நிலப்பிரபுக்கள் நிலத்திலிருந்து வெளியேற்றிட முடியாது என்பதாகும். அதுமட்டுமல்ல, அவர்களுக்கு நிலத்தில் உழுவதற்கானப் பாரம்பர்ய உரிமையும் அளிக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் இணைந்து, மாநிலத்தில் சுமார் 50 லட்சம் விவசாயிகளின் அல்லது சுமார் இரண்டரை அல்லது 3 கோடி விவசாயக் குடும்பங்களின் வாழ்க்கையை புரட்சிகரமான முறையில் மாற்றி அமைத்திருக்கிறது.

நாட்டில் மிகவும் நெருக்கமான முறையில் விவசாயப் பணிகள் நடைபெறும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. ஆயினும், விவசாய நிலத்தில் 28.1 சதவீத அளவற்கே நீர்ப்பாசன வசதி பெற்றிருக்கிறது. பஞ்சாப்பில் இது 89.72 சதவீதமாகும். மத்தியஅரசு, பக்ராநங்கல் அணை கட்டிக் கொடுத்திருப்பதன் காரணமாக அங்கே அது சாத்தியமாகியிருக்கிறது. ஆளால் அதுபோன்ற திட்டங்களை மேற்கு வங்கத்தில் நிறைவேற்றிட மத்திய அரசு மறுத்துவிட்டது. ஆயினும் கூட, நாட்டில் விளையும் உணவு தான்ய உற்பத்தியில் உயர்ந்த அளவிற்கு சராசரி விளைச்சல் காணும் மாநிலங்களில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. (பஞ்சாப், உத்தரப்பிரதேசம் முதல் இரு மாநிலங்களாகும்.) இன்றைய தினம் நாட்டிலேயே அரிசி உற்பத்தியில் மாபெரும் மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது. 1980களில் நாட்டின் சராசரி உற்பத்தி அளவைவிட மேற்கு வங்கம் 18 சதவீதம் குறைவாக இருந்தது. ஆனால் இன்றைய தினம் தேசிய சராசரியை விட 10 சதவீதம் அதிகரித்து முன்னணியில் நிற்கிறது.

இவ்வாறான யதார்த்த உண்மைகள்தான், மேற்கு வங்க மக்கள், கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணி மீது அபரிமிதமான அன்பும் ஆதரவும் வைத்திருப்பதற்குக் காரணிகளாகும். அதனால்தான், காங்கிரசும் அதன் புதிய கூட்டாளியான திரிணாமுல் காங்கிரசும், இடது முன்னணியின் ‘அடாவடி ஆட்சி’ மேற்கு வங்கத்தில் நடைபெறுவதாக கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருந்தாலும், மக்கள் மத்தியில் அது கிஞ்சிற்றும் எடுபடவில்லை. எந்த ஒரு ஜனநாயகத்திலும், மக்கள், தங்கள் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முன்வந்த அரசியல் கட்சிகளைத்தான் தேர்வு செய்திடுவார்கள். இந்த அணுகுமுறைப்படி பார்த்தோமானால், மேற்கு வங்கத்தில் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட்ட இடது முன்னணி மீது அபரிமிதமான நம்பிக்கையை மக்கள் தொடர்வதில் ஆச்சர்யம் எதுவுமில்லை,

கடந்த காலங்களில் இடது முன்னணியானது, ‘விஞ்ஞானரீதியான தேர்தல் மோசடி மூலம்’ (‘scientific wrigging’) தேர்தலில் வெற்றி பெறுகிறதென்று அடிக்கடி எதிரிகளால் குற்றஞ்சாட்டப்பட்டதை நம்பி, தேர்தல் ஆணையம் கூட, மாநில சட்டமன்றத் தேர்தல்கள் 2006இல் நடைபெற்ற சமயத்தில், அம்மாநிலத்தில் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்திடவும், தேர்தலை நடத்திடுவதற்காகப் பாதுகாப்புப் படையினரையும் தேர்தல் பணியாளர்களையும் வெளிமாநிலங்களிலிருந்து இறக்குமதி செய்ததையும் பார்த்தோம். (மேற்கு வங்க அரசு ஊழியர்கள் அனைவருமே மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டனர்) தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கைகளை திரிணாமுல் காங்கிரசின் தலைவர் மம்தா பானர்ஜி உட்பட பலராலும் பாராட்டப்பட்டது. ஆனால் நாம் அந்த சமயத்தில், ‘‘வாக்காளர்களை மேற்கு வங்கத்திற்கு வெளியிலிருந்து இறக்குமதி செய்யாதவரை, இடது முன்னணியைத் தோற்கடிக்க எவராலும் முடியாது’’ என்று பிரகடனம் செய்தோம். தேர்தலில் மக்கள் இடது முன்னணிககு மூன்றில் இரண்டு பங்கு ஆதரவினை அளித்து மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தனர்.

இவ்வாறாக, வங்கத்தில் கடந்த முப்பதாண்டுகளாக இடது முன்னணியின் ‘அடாவடி’ ஆட்சி நடைபெறுகிறது என்று எதிரிகள் கூறுவதன் மூலம் அவர்கள் இடதுமுன்னணியைத் தேர்ந்தெடுக்கும் மக்களை அவமதிக்கிறார்கள். ஆயினும் மேற்கு வங்க மக்கள், தங்கள் சொந்த அனுபவத்தின் காரணமாக, கடந்த முப்பதாண்டு காலமாக இடது முன்னணிக்கு அன்பும் ஆதரவும் அளித்து வந்ததைப்போலவே இப்போதும் ஆதரவினை நல்கி, எதிரிகளின் நச்சுப்பிரச்சாரத்திற்குத் தக்க பதிலடி அளிப்பார்கள் என்பது திண்ணம்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: