Friday, May 22, 2009

கட்சி சரியானமுறையில் படிப்பினைகளைப் பெற்று முன்னேறும்



நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம், அரசை அமைப்பதற்காக, மக்களவைக்குப் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட 274 உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்து அரசு அமைக்க உரிமைகோரியிருக்கிறது. கூடுதலாக, அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக ஓர் 48 உறுப்பினர்களின் பட்டியலும் குடியரசுத் தலைவரால் பெறப்பட்டிருக்கிறது. ஒரே அணியில் இருக்காது என்று பலரால் கருதப்பட்ட பல கட்சிகள் இதிலே அடக்கம். உத்தரப்பிரதேசத்தில் எலியும் பூனையுமாகக் காணப்படும் சமாஜ்வாதிக் கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கடிதங்கள் தந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன், தங்கள் கட்சி காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியில்தான் அங்கம் வகிக்கும் என்று கூறிய பகுஜன் சமாஜ் கட்சியும், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத கூட்டணியை மாபெரும் மக்கள் பேரணி நடத்தி அறிவித்திட்ட மதச்சார்பற்ற ஜனதா தளமும், இப்போது ஐமுகூட்டணியை ஆதரித்திடத் தீர்மானித்திருக்கின்றன. தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னமேயே, ஆந்திராவில் பாஜக அல்லாத, காங்கிரஸ் அல்லாத முன்னணியில் அங்கம் வகித்த தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போய் சேர்ந்து கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு 2009 மே 19 அன்று கூடி விவாதங்களுக்குப்பின் ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ‘‘தேர்தல் சமயத்தில் சில மாநிலங்களில் அமைக்கப்பட்ட மூன்றாவது அணிக்கான கூட்டணிகள் மக்களால் ஒரு நம்பத்தகுந்த (credible) மற்றும் உறுதியான (viable) மாற்றாக தேசிய அளவில் பார்க்கப்படவில்லை’’ என்று மதிப்பீடு செய்திருந்ததை மேலே கூறிய நிகழ்ச்சிப்போக்குகள், உறுதிப்படுத்துகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொடர்ந்து நடைபெற்ற தன்னுடைய அகில இந்திய மாநாடுகளின் அரசியல் தீர்மானங்களில், ‘நாட்டின் கொள்கைகளை முற்போக்கான திசைவழியில் தீர்மானிக்கக்கூடிய விதத்தில்’ ஒரு மூன்றாவது அரசியல் மாற்றை உருவாக்க வேண்டியதன் தேவையை தெளிவுபடத் தெரிவித்து வந்திருக்கிறது. அத்தகைய மாற்றானது, தேர்தல் சமயங்களில், வெட்டி ஒட்டக்கூடிய ஏற்பாடாக இருந்திட முடியாது என்பதும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறான மூன்றாவது மாற்று என்பது தொடர்ச்சியான மக்கள் போராட்டங் களினூடேதான் உ ருவாகிட முடியும். இதற்கு வேறெந்தக் குறுக்கு வழியும் கிடையாது.

ஆயினும், இப்போது வந்துள்ள தேர்தல் முடிவுகள், மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை மிக மோசமான வீழ்ச்சியாகும். 1967இல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபின், இந்திய கம்யூனிச இயக்கத்தில் திருத்தல்வாதத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்திற்குப்பின், நடைபெற்ற முதல் தேர்தலிலேயே, கட்சிக்கு 19 இடங்கள் கிடைத்திருந்தன. இப்போது நடைபெற்றுள்ள தேர்தலில் நமக்கு வெறும் 16 இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் சேர்ந்து வெறும் 24 இடங்களைத் தான் பெற்றிருக்கின்றன. இவ்வாறான படுவீழ்ச்சி குறித்து சுய விமர்சன ரீதியாக மறு ஆய்வு செய்யப்பட்டாக வேண்டும். தவறுகள் மற்றும் பலவீனங்களை அடையாளம் கண்டறிந்து அவற்றைக் களைந்து, முறையான படிப்பினைகளைப் பெற்றாக வேண்டும். இடதுசாரிகளிடமிருந்து விலகிச் சென்றுள்ள மக்கள்திரளினை மீண்டும் வென்றெடுத்திட, அவர்களின் நம்பிக்கையையும் நல்லாதரவையும் மீண்டும் பெற்றிட, எதிர்காலத்தில் நம்முடைய செல்வாக்கை ஒருமுகப்படுத்தி விரிவுபடுத்திட, இது அத்தியாவசியமாகும். இந்த நடைமுறை தொடங்கிவிட்டது.

இத்தேர்தலின்போது இடதுசாரிகளுக்கு எதிராக அனைத்து கம்யூனிச எதிர்ப்பு சக்திகளும் ஒன்றுசேர்ந்து நின்றதைப் பார்த்தோம். மேற்கு வங்கத்தில் சிங்கூர் மற்றும் நந்திகிராம் நிகழ்ச்சிப் போக்குகள் நடைபெற்ற சமயத்தில் அவற்றை மிகவும் விரிவாக நாம் இப்பகுதியில் விவரித்திருக்கிறோம். அத்தகைய மகா கூட்டணியானது தங்கள் வசம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் இடதுசாரிகளுக்கு எதிராக, அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக, வீசியது. மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்குப்பின்பும் நடைபெற்ற மோதல்களில் 31 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக, இப்போது ஏற்பட்டிருப்பதுபோல இதற்கு முன்பும் பலமுறை கம்யூனிச எதிர்ப்புக் கும்பல்கள் உருவாகியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான சமயத்திலேயே, மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘சீன ஆதரவாளர்கள்’ என்று பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, நாடு முழுதும் அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நம் தலைவர்களில் பலர் சிறையிலிருந்தே தேர்தல்களில் போட்டியிட்டு, வெற்றி பெற்றனர். 1967இலும் 1969இலும் மேற்கு வங்கத்தில் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கம் ஜனநாயக விரோதமான முறையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டபின்னர், சுமார் பத்தாண்டு காலம் காங்கிரஸ் மேற்கு வங்க மக்கள் மீது அரைப் பாசிச அடக்குமுறையை ஏவி, ஆயிரக்கணக்கான நம் தோழர்களின் உயிரைக் குடித்தது. இவ்வளவு அடக்குமுறையையும் எதிர்கொண்டுதான், நாட்டிலேயே மாபெரும் இடதுசாரி சக்தியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கு மீண்டெழுந்தது. இதனை நாட்டின் அரசியல் வரலாற்றில் எவரும் உதாசீனப் படுத்திடவோ அல்லது ஓரங் கட்டிடவோ முடியாது. (கடந்த இருபதாண்டுகளில், 1989இல் வி.பி. சிங் அரசாங்கம் அமைந்ததிலிருந்து, மத்தியில் எந்த ஒரு மதச்சார்பற்ற அரசாங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவும் பங்கேற்பும் இல்லாமல் அமைந்தது கிடையாது.) எனவே, இந்தத் தேர்தலில் நமக்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்தும் அதேபோன்று நேர்மையான முறையில் சுயவிமர்சன ரீதியாக மறுபரிசீனை மேற்கொண்டு, சரியான படிப்பினைகளை நாம் பெற்றிட வேண்டும்.

இத்தலையங்கம் நம் வாசகர்களை அடையும் நேரத்தில், டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சியை நடத்திடுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும். 2004இல் இதேபோன்றதொரு சமயத்தில், அப்போது அமைய இருந்த அன்றைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் கூறித்து, மிகவும் ஆழமான முறையில் விவாதங்கள் அப்போது நடந்துகொண்டிருந்தன. அவ்வாறு அமைந்திட்ட குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில்தான், ஐமுகூ அரசாங்கத்திற்கு இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவினை நல்கின. ஆனால் இந்த சமயத்தில், ஐமுகூ அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் குறித்து எவரும் வாய்திறக்கவே இல்லை. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், இடதுசாரிகள் ஆதரவு அவசியமற்ற நிலையில் காங்கிரசும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளும் இடதுசாரிகள் வலியுறுத்தும் மக்கள்நலஞ்சார்ந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏதுமில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதைப்போல, ‘‘காங்கிரஸ் கட்சி இந்த அளவிற்கு நல்லதொரு இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதற்கு, இடதுசாரிக்கட்சிகளின் நிர்ப்பந்தத்தை அடுத்து ஐமுகூ அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், பழங்குடியினர் பாதுகாப்பு வன உரிமைகள் சட்டம் மற்றும் சில சமூக நலத் திட்டங்கள் காரணங்களாகும்.’’ ஆனால் அத்தகைய திட்டங்கள் குறித்து இப்போது அது கவலைப்படாமலிப்பது என்னே வேடிக்கை வினோதம்!

இத்தகைய மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைள் எதுவும் வகுக்கப்படாதிருப்பதுதான் எதிர்காலத்தில் இடதுசாரிகளின் பங்கினை வரையறுத்திட இருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாகவும், மிகவும் கடுமையான முறையில் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்து கொண்டிருப்பதன் விளைவாகவும், மக்கள் மீது சொல்லொணா அளவிற்குப் பொருளாதாரச் சுமைகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், மக்களின் நலன்களைப் பாதுகாத்திட, ஆட்சியாளர்களை மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளை வகுத்திட, நிர்ப்பந்திக்கக்கூடிய வகையில் மாபெரும் போராட்டங்களை நடத்திட வேண்டியிருக்கும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்திற்காக அத்தகு போராட்டங்ளை வலுப்படுத்தும் பணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியுடன் முன்னிற்கும் அதே சமயத்தில் நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாத்து வலுப்படுத்திடும்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: