Saturday, May 30, 2009

பெரும் போராட்டங்களுக்குத் தயாராவோம்



க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத் தின் இரண்டாவது தவணையாக, 2009 மே 28 வியாழன் அன்று எஞ்சிய கேபினட் அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தேர்தல் முடிவுகள் வெளியாகி பதினைந்து நாட்களாகிவிட்டன. இப்போதுதான் அவர்களால் முழுமையாக அமைச்சரவையையே அமைக்க முடிந்திருக்கிறது. 2004இல் இவ்வாறு அமைச்சரவை அமைத்திட வெறும் பத்துநாட்கள்தான் ஆயின. மேலும் உறுதிமொழி எடுத்த அடுத்த சில மணி நேரத்திற்குள் அமைச்சர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டு விட்டன. சென்ற வாரம் பிரதமருடன் உறுதிமொழி எடுத்துக்கொண்ட 19 அமைச்சர்களில் 13 பேருக்கு இன்னமும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. அரசாங்கத்தின் கொள்கைத் திசைவழியைத் தீர்மானிப்பதிலேயே இவ்வாறு நிச்சயமற்ற தன்மைகள் இருக்குமாயின், பின் நாள்தோறும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமையிலிருந்து விடுபட மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் அரசிடமிருந்து கிடைத்திடுவதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை.

டாக்டர் மன்மோகன்சிங் மீண்டும் ஒருமுறை பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டு, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும்போது, ‘‘மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன்’’ இவ்வெற்றி கிடைத் திருக்கிறது என்று கூறினார். மக்களின் ஆதரவு, ‘‘உள்ளீடான வளர்ச்சி’’ (inclusive growth), ‘‘சீரான வளர்ச்சி’’ மற்றும் ‘‘ஒரு மதச்சார்பற்ற பன்முக இந்தியா’’விற்கான ஒன்று என்று அவர் விவரித்திருக்கிறார். இவை அனைத்தையும் எய்திட வேண்டுமானால், இதற்கான கொள்கைத் திட்டங்களைச் செயல்படுத்தியாக வேண்டும். உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக, இந்தியாவில் ‘‘ஒளிர்கின்ற’’ இந்தியனுக்கும், ‘‘உழல்கின்ற’’ இந்தியனுக்கும் இடையிலான இடைவெளி மேலும் ஆழமாகியுள்ளது. ஆயினும், ஐமுகூ அரசாங்கமானது இப்போதும் இதை மறுக்கும் நிலையிலேயே உள்ளது. 2009ஆ ம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான கேந்திர பொருளாதார அடிப்படைகள் தொடர்பான புள்ளிவிவரங்களைப் பரிசீலிக்கும்போது, இந்தியாவின் தொழில் உற்பத்தியின் அளவு, சென்ற ஆண்டு இதே மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், -2.3 சதவீத வளர்ச்சியாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.
உற்பத்தித் துறை (Manufacturing Sector) நாட்டின் தொழில் உற்பத்தி அட்டவணையில் சுமார் 80 சதவீதம் வேலைவாய்ப்பை அளித்திடும் ஒரு துறையாகும். இதன் வளர்ச்சி விகிதம் மிக மோசமான அளவில் -3.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உலகப் பொருளாதார மந்தத்தின் எதிர்மறைத் தாக்கத்தின் காரணமாக, சர்வதேச வர்த்தகம் கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதி, தொடர்ந்து ஏழாவது மாதமாக சுமார் 33 சதவீதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இறக்குமதிகள், குறிப்பாக கட்டமைப்பு வசதிகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பினைச் செய்திடும் மூலதனப் பொருள்களின் இறக்குமதிகள், 35 சதவீதம் சுருங்கிவிட்டன.

இவை அனைத்தின் பொருள் என்ன? இப்போது இருந்து வரும் வேலைவாய்ப்புகளும் வீழ்ச்சியுறும், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதற்கும் வழியில்லை என்பதேயாகும். இதன் காரணமாக, ‘‘ஒளிர்கின்ற’’ இந்தியனுக்கும் வேலையில்லாது, வேதனையில் ‘‘உழல்கின்ற’’ இந்தியனுக்கும் இடையில் உள்ள இடைவெளி மேலும் ஆழமாகும் என்பதும், மேலும் பல லட்சக் கணக்கான மக்கள் கடும் வறுமை நிலைக்குத் தள்ளப்பட இருக்கிறார்கள் என்பதுமேயாகும். மக்களை இத்தகைய பேரபாயத்திலிருந்து காத்து, அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளித்திட வேண்டுமானால் அதற்கு ஒரேவழி, பொது முதலீட்டை அதிகரித்து, அதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் உள்நாட்டுத் தேவைகளை அதிகரித்து, வளர்ச்சியை ஊக்குவிப்பதேயாகும்.

ஆனால் இதனைச் செய்வதற்குப் பதிலாக, புதிதாக நிதியமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜி, நவீன தாராளமயப் பொருளாதாரம் மற்றும் நிதித்துறைச் சீர்திருத்தங்களை, எவ்விதக் கடிவாளமுமின்றிக் கட்டவிழ்த்துவிட வேண்டுமென்று, இந்தியக் கார்பரேட் நிறுவனங்கள் கோரியிருக்கின்றன. ஐமுகூ அரசாங்கத்திற்குத் தற்சமயம் இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்பதால் குதூகலம் அடைந்துள்ள அவைகள், பொதுத்துறை நிறுவனங்களைப் பெருமளவில் தனியாரிடம் தாரை வார்த்திட அரசு முன்வர வேண்டுமென்றே கோரி வருகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக, ஓய்வூதிய நிதியத்தைத் தனியாரிடம் தாரைவார்த்தல், இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை அதிக அளவில் அனுமதித்தல், இந்தியத் தனியார் வங்கிகளை அந்நிய வங்கிகள் கபளீகரம் செய்திட அனுமதித்தல் போன்ற இடதுசாரிகள் தடுத்து நிறுத்தி வைத்திருந்த அனைத்து நடவடிக்கை களையும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தொடர வேண்டும் என்று அவை கேட்டுள்ளன. இந்திய ரூபாயை முழுமையாக மாற்றத்தக்க தன்மையில் (full convertibility) உயர்த்திட வேண்டு மென்கிற குரலும் விரைவில் வரும் என்று கூறத் தேவையில்லை.

உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாகத்தான் உலக அளவில் மிகவும் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த பல நிறுவனங்கள் தகர்ந்து தரைமட்டமாகியுள்ளன என்கிற எதார்த்த உண்மையை நம் நாட்டில் உள்ள கார்பரேட் முதலாளிகளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாதுதான். அதேபோன்று, ஐமுகூ அரசாங்கத்தின் வெற்றிக்கு, மேற்படி பொருளாதார நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிடாது தடுத்து நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், மக்கள் ஆதரவுக் கொள்கைளை அமல்படுத்த வைத்திட்ட இடதுசாரிக் கட்சிகள்தான் காரணம் என்பதையும் அவ்வளவு எளிதாக அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

உலக ஜாம்பவான்களாகத் திகழ்ந்த ‘ஐவர் கும்பல்’ திவாலாகிப் போன அனுபவத்திலிருந்து இந்திய கார்பரேட் முதலாளிகள் படிப்பினை ஏதும் பெற்றதாகத் தெரியவில்லை. அமெரிக்கஅதிபர் ஒபாமா மக்கள் நலஞ்சார்ந்த கொள்கைகளைப் பேச முன்வந்திருக்கும் நிலையில்கூட, இவர்களால் தங்கள் பழைய நிலையை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
இந்திய அரசாங்கத்தின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது ஜூன் 4 அன்று குடியரசுத் தலைவர் உரையின்போது தெரிய வரலாம் என்பது உண்மைதான். நிதி அமைச்சர் அவர்கள், ஜூலை இறுதிக்குள் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப் பட்டுவிடும் என்று அறிவித் திருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்டின் காலவரையறை ஜூலை 31க்குள் முடிவடைவதால், அதற்குள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி முழு பட்ஜெட் நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அவ்வாறு செய்யப்படாவிடில், மீண்டும் ஒரு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டாக வேண்டும். அது அவ்வளவு விவேகமானதாக இருக்காது.
நாம் இப்பகுதியில் சென்ற வாரம் குறிப்பிட்டதைப்போல, ஐமுகூ அரசாங்கம் எந்த ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தையும் நாட்டின்முன் சமர்ப்பித்திடவில்லை. அவ்வாறு ஒரு திட்டம் இல்லாத நிலையில், பொருளாதார அம்சங்களில் மட்டுமல்ல சமூகப் பாதுகாப்பு தொடர்பாகவும், அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்துத் தெரிந்து கொள்ள நாம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

இவர்கள் மேற்கொள்ள விருக்கும் கொள்கைகள் எப்படி இருந்தபோதிலும், மக்களுக்குத் தேவையான நிவாரணம் ஏற்பட வேண்டுமானாலும், அவர்கள் வாழ்க்கைத் தரத்தில் முன்னேற்றம் காணப்பட வேண்டு மானாலும், விடாப்பிடியான மக்கள் இயக்கங்கள் மற்றும் போராட்டங்கள் மூலம் ஏற்படுத்திடும் நிர்ப்பந்தங்கள் வாயிலாகவே அவற்றைக் கொண்டுவர முடியும். சுயேட்சையான அயல்துறைக் கொள்கையைப் பின்பற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும், நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களைக் காப்பதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இத்தகைய போராட்டங்கள் அவசியம்.

(தமிழில்: ச.வீரமணி)

No comments: