Sunday, March 12, 2017

எதற்கெடுத்தாலும் ஆதாரா?


[பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பதற்கு ஆதார் அடை யாளத்தைக் கட்டாயமாக்கிடும் அரசின் ஆணையை உடனடியாக அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும்.]
மத்திய மோடி அரசாங்கம், அனைத்து விதமான அரசாங்கத்தின் திட்டங்களுக்கும், சேவைகளுக்கும், ஆதார் அடையாள எண், அடிப்படை என்று குடிமக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கிறது.சமீபத்திய எடுத்துக்காட்டு, மத்திய அரசின் மனிதவள வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கையின்படி, அரசாங்கத் தின் பள்ளிக்கூடங்களில் மதிய உணவுத் திட்டத்தின்கீழ் குழந்தைகள் சாப்பிட வேண்டு மானால் ஆதார் எண் கட்டாயமாகும். அதுமட்டுமல்ல, மதிய உணவுத் திட்டத்தின்கீழ் வேலையில் சேர்ந்துள்ள சமையலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஆதார் எண்ணுடன் தங்களை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.மதிய உணவுத் திட்டத்திற்கு ஆதார் திட்டத்தைத் திணிப்பது என்பது குழந்தை களுக்கான உணவு உரிமை மீதான தாக்குத லாகும்.
பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதை எவ்விதமான நிபந்தனைகளின் கீழும் தடுத்திடக் கூடாது. ஆதார்எண் இல்லை என்பதற்காக ஒரு குழந்தைக்கு உணவு மறுக்கப்படுமானால், அது மிகவும்கேவலமான அருவருப்பான நடவடிக்கை யாகும். உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய அம்சம் என்னவெனில், அரசாங்கத்தின் சேவைகள் மற்றும் பயன்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்வதற்காக ஆதாரை கட்டாய ப்படுத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் திரும்பத்திரும்ப அளித்துள்ள கட்டளைகளை மத்திய அரசாங்கம் அவமதிக்கும் விதத்தில் மிகவும் அப்பட்டமாக மீறியிருப்பதாகும்.உச்சநீதிமன்றத்தின் முந்தைய தலைமைநீதிபதியின் தலைமையில் அமைந்திட்ட ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச்சட்ட அமர்வாயம், 2015 அக்டோபர் 15 அன்றுபிறப்பித்திருந்த கட்டளையில் குறிப்பிட்டி ருப்பதாவது: ‘‘…இது தொடர்பாக இந்த நீதி மன்றம் பிறப்பித்திட்ட முந்தைய உத்தரவுகள் அனைத்தையும் கறாராகப் பின்பற்ற வேண்டும் என்றும் இதனை 2013 செப்டம்பர் 23இலிருந்து பின்பற்றிட வேண்டும் என்றும் மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், நாங்கள், இதுதொடர்பாக இந்நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளிக்கும்வரை, ஆதார் அட்டைத் திட்டம் முற்றிலும் தன்னிச்சையான ஒன்றே தவிரஅதனைக் கட்டாயமான (mandatory) ஒன்றுஎன மாற்ற முடியாது என்பதையும் தெளிவு படுத்துகிறோம்.’’ தொடர் மீறல்கள்உச்சநீதிமன்றம் இது தொடர்பாக ஓர் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், ஆதார் அட்டையை மத்திய அர சாங்கம், பொது விநியோகமுறை மற்றும் மண்ணெண்ணெய் - சமையல் எரிவாயு போன்றவற்றின் விநியோகம் ஆகிய இரண்டையும் தவிர வேறு எந்தவிதமான காரணத்திற் காகவும் பயன்படுத்த முடியாது என்று குறிப்பி ட்டிருந்தது. மோடி அரசாங்கம், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்திற்கு, ஓய்வூதியம் விநியோகம் மற்றும் பல அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதார் அட்டை அவசியம் என்று நீட்டித்த தன் மூலம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறியது.இவ்வாறு மோடி அரசாங்கத்தின் சமீபத்திய மீறல் நடவடிக்கை என்பது, 2017ஏப்ரல் 1இலிருந்து ரயில்வேயில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளைப் பெற ஆதார் அவசியம் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்திருப்பதாகும்.
மேலும் வரும் நிதி யாண்டிலிருந்து இணையம் வழி (On line) ரயில் டிக்கெட்டுகள் ஆதார் அடிப்படையில்தான் பதிவு செய்யப்பட முடியும் என்றும் ரயில்வே அமைச்சகம் அறிவித்திருக்கிறது.அதேபோன்று, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் வேலை செய்திடும் தொழிலாளர்கள் கைரேகை பதியும் எந்திரத்தில் (biometric) கைரேகையைக் கட்டாயமாகப் பதியவேண்டும் என்கிற முடிவின் காரணமாகப் பல தொழிலாளர்களுக்கு ஊதியம் கிடைத்திட வில்லை. ஏனெனில் அவர்களது கைரேகை அடையாளங்கள் சரிவரப் பதிவாகவில்லை. பொது விநியோகமுறையின்கீழ் உணவு தானியங்களைப் பெறுபவர்களுக்கும் இதே பிரச்சனை ஏற்பட்டது. இவ்வாறு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவது என்பது அதிகபட்ச மக்களுக்கு இவற்றின்கீழான உதவிகள் சென்று அடையக்கூடாது என்கிற நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு ஆதார் அடையாள எண்ணு க்காகப் பெறப்பட்ட தரவுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக வருகின்ற தகவல்கள் மிகவும் கவலையளிக்கின்றன. தரவுகள் சேகரிக்கும்பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனங்கள் இவற்றைத் தங்கள் இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்க உளவு மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளுடன் தொடர்புகள் கொண்டிருப்பவைகளாகும்.16 மாதங்களுக்குப் பின்னும்தனிநபர்களின் தரவுகள் அந்தரங்கம் பற்றிய பிரச்சனை குறித்து விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வாயம், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் ஒருவிரிவான அமர்வாயம் அமைக்கப்பட்டு அது ஆதார் மற்றும் அதனைக் கட்டாயமாகப் பயன்படுத்திடும் பிரச்சனைகள் குறித்து முழுமையாக விசாரணை செய்து முடிவு கண்டிட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.
இவ்வாறுபரிந்துரைத்து பதினாறு மாதங்கள் உருண் டோடியபின்னரும்கூட, அத்தகையதொரு அமர்வாயம் இதுநாள்வரை அமைக்கப் படாதது துரதிர்ஷ்டமாகும்.இவ்வாறு தாமதம் ஏற்படுவதன் காரண மாகத்தான், அரசாங்கம் ஆதாரைக் கட்டாய மாக்கிடும் வேலைகளில் வேகம் வேகமாக இறங்கிக் கொண்டிருக்கிறது.அடுத்த சில வாரங்களில் 50க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கிட அரசாங்கம் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுவருவது குறித்து கடும் விமர்சனங்கள் வருவதைத் திசைதிருப்பும் நோக்கத்துடன் மத்திய அரசாங்கம் பல்வேறு மழுப்பல் வேலைகளில் இறங்கி இருக்கிறது. அரசாங்கம் 2017 மார்ச் 7 அன்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதன்படி ஆதார் எண் இல்லை என்பதற்காக எவரொருவருக்கும் எவ்விதமான பயன்பாடும் நிறுத்தப்படாதாம், மாறாக அவர்களுக்கு ஆதார் எண் அளிக்கப்படும்வரை அது வழங்கப்படுமாம்.துன்புறுத்தவே வழிவகுக்கும்எனவே, மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிக்கூட நிர்வாகங்கள் மதிய உணவுசாப்பிடும் குழந்தைகளின் ஆதார் எண்களை சேகரித்திட கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. ஒருவேளை குழந்தை களிடம் ஆதார் எண் இல்லை என்றால், அவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்படும்வரை யிலும், பள்ளி நிர்வாகங்களே பதிவேட்டில் பதிவு செய்துகொண்டு, பயன்களைத் தொடரவேண்டும் என்று பணித்திருக்கிறது. இது, பள்ளிநிர்வாகங்கள் மேலும் பள்ளிக் குழந்தைகளை யும் அவர்களின் பெற்றோர்களையும் துன்புறுத்துவதற்கே இட்டுச்செல்லும்.
பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு மதிய உணவு அளிப்பதற்கு ஆதார் அடை யாளத்தைக் கட்டாயமாக்கிடும் அரசின் ஆணையை உடனடியாக அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக இறுதித் தீர்ப்பைக் கூறும்வரையில், அரசின் திட்டங்களுக்கும் பயன்பாடுகளுக்கும் ஆதார் எண் கேட்கக்கூடாது என்கிற உச்சநீதிமன்றத்தின் கட்டளையை அரசாங்கம் உளப்பூர்வமாக ஏற்று செயல்படுத்த முன்வர வேண்டும்.
(மார்ச் 8, 2017)
(தமிழில்: . வீரமணி)

No comments: