Tuesday, March 21, 2017

பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச சேமிப்பு தொகை 5 ஆயிரம் ரூபாய் என்பது ரத்து செய்திட வேண்டும்




பாரத ஸ்டேட் வங்கியில் குறைந்தபட்ச சேமிப்பு  தொகை
5 ஆயிரம் ரூபாய் என்பது ரத்து செய்திட வேண்டும்
மாநிலங்களவையில் கே.கே.ராகேஷ் கோரிக்கை
புதுதில்லி, மார்ச்-
பாரத ஸ்டேட் வங்கி, தன் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் ஐயாயிரம் ரூபாய் இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவித்திருப்பதை ரத்து செய்திட வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.கே.ராகேஷ் கோரினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் கிழமையன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்தபிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில், கே.கே.ராகேஷ் பேசியதாவது:
“நாட்டின் பொதுத்துறை வங்கியில்பெரிய  வங்கியாகத் திகழும் பாரத ஸ்டேட் வங்கி, தன் வாடிக்கையாளர்கள் தங்களுடைய சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச மாதாந்திர சேமிப்புத் தொகை தற்போது ஐநூறு ரூபாய் என்றிருப்பதை, ஐயாயிரம் ரூபாயாக உயர்த்திடத் தீர்மானித்திருக்கிறது. அவ்வாறு ஐயாயிரம் ரூபாய் இருப்புத்தொகையாக வைக்காத நபர்களுக்கு அபராதம் விதித்திடவும் முடிவு செய்திருக்கிறது.  இது இவ்வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள 31 கோடி சந்தாதாரர்களைக் கடுமையாகப் பாதித்திடும். பொதுத்துறை வங்கிகளில் பாரத ஸ்டேட் வங்கிதான் பெரிய வங்கியாகும். இவ்வாறு இந்த வங்கி ஒரு முடிவினை அமல்படுத்தும்போது  இதனை இதர வணிக வங்கிகளும் அமல்படுத்திடும்.  இவ்வாறு அமல்படுத்தும்போது நம் நாட்டின் பொருளாதார முறை மிகப் பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகும்.
பாரத ஸ்டேட் வங்கியின் இம்முடிவு பணக்காரர்களை ஒன்றும் பாதிக்கப்போவதில்லை. மாறாக இது நாட்டிலுள்ள ஏழை மற்றும் நடுத்தர மக்களைத்தான் கடுமையாகப் பாதிக்கும்.
நம் நாட்டில்  தற்போது பொதுத்துறை வங்கிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றன.  அவற்றின் செயல்படுத்தப்படாத சொத்துக்கள் எனப்படும் வராக்கடன்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறு வங்கிகளில் வாங்கிய கடன்களைக் கட்டாதவர்கள் யார்? ஏழைகள் அல்ல. மாறாக இவற்றை வாங்கியவர்கள் பிரதானமாக  கார்ப்பரேட்டுகள் ஆகும். அவர்களுக்கு அளித்த கடன்களை வசூலித்திட இந்த வங்கிகளால் முடியவில்லை. மாறாக அவற்றை அவர்களிடமிருந்து வசூலித்திடாமல் தள்ளுபடி செய்கின்றன. அதே சமயத்தில், இவ்வாறு ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளித்திட ஏழைகளின் வயிற்றில் அடித்திட நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. இது நாட்டின் நலனுக்கு உதவிடாது.
மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு, பாரத ஸ்டேட் வங்கியின் முடிவை ரத்து செய்திட உத்தரவு பிறப்பித்திட வேண்டும்.”
இவ்வாறு கே.கே.ராகேஷ் கோரினார்.
கே.கே.ராகேஸ் கோரிக்கையுடன் அநேகமாக அனைத்து மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களை இணைத்துக் கொண்டனர்.
(ந.நி.) 

No comments: