கோவையில் கலவரத்தைத் தூண்டி பிரியாணி அண்டாவைத் தூக்கிக்கொண்டு ஓடிய கூட்டம், தமிழக அரசியலில் ஒரு சொம்பாவது கிடைக்காதா என அலைந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா உடல்நலக் குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்தில், வெங்கய்யா நாயுடு அடிக்கடி விஜயம் செய்தார். வெங்கய்யா வந்த பிறகுதான், ஜெயலலிதாவின் மறைவுச் செய்தியே அறிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தவருகை தந்த பிரதமர் மோடி, சசிகலாவின்தலையைத் தடவினார்; ஓ. பன்னீர்செல்வத்தைக் கட்டித் தழுவினார்; மக்களைப் பார்த்து கையைக் காலை ஆட்டினார்; செல்பி எடுத்துக் கொள்ளாதது ஒன்றுதான் குறை. ஜெயலலிதாவின் சமாதியில் ஈரம் காயும் முன்பே, அதிமுக-வுக்கும் பாஜகவுக்கும் இடையே சிந்தாந்த ஒற்றுமை உள்ளது என்றுஅழகாக முடிச்சவிழ்க்க முயன்றார் வெங்கய்யா. அதிமுகவை ஹார்லிக்ஸ் போலஅப்படியே சாப்பிட்டு விடலாம் என்று ஆசைப்பட்டனர் பரிவாரத்தினர். ஆர்எஸ்எஸ் பயிற்சிப் பள்ளியில் ஆரம்பக்கல்வி முடித்த இரவல் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூலம் காய் நகர்த்தத் துவங்கினர். அவர்கள்எதிர்பார்த்தது நடக்கவில்லை. பன்னீர்செல்வம் மூலம் அதிமுகவை உடைத்து, பூனைகளின் அப்பத்தை குரங்கு சாப்பிட்ட கதையாக, அதிமுகவை பிரித்து மேய்ந்துவிட முயன்றார்கள். ஆளுநரும் பாதாளத்தில் பதுங்கியும், பாய்ந்தும் பலவேலை செய்து பார்த்தார். தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பாஜக பல காலமாக தலைகீழாக நின்று பார்க்கிறது. சமூகநீதி செழித்தோங்கிய மண்ணில் தங்களது சித்துவேலை நடக்கவில்லையே என்ற ஆத்திரத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான - தமிழகத்திற்கு எதிரான வன்மத்தை அவ்வப்போது கக்கி வருகின்றனர். தாய்மொழிக்காக மூன்று மொழிப்போர் நடந்த மண் தமிழ்மண். ஆனால், இவர்களோ சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணித்துவிட முயல்கின்றனர். நீதிக்கட்சிக் காலத்தில் துவங்கியது, வகுப்புவாரி பிரதிநிதித்துவப் பயணம். தாழ்த்தப்பட்டோர் - பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான 69 சதவிகித இடஒதுக்கீடு வேலிபோட்டு பாதுகாக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இஸ்லாமியர், அருந்ததியர்க்கான உள்ஒதுக்கீடு செய்த பெருமையும் தமிழகத்திற்கு உண்டு. ஆனால், மண்டல் குழு பரிந்துரை நடைமுறைக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அயோத்தி ராமனுக்கு ஆலயம் கட்டப்போவதாக கூறிக்கொண்டு, பாபர் மசூதியை இடித்து, கலவரம் நடத்திய கூட்டம் இது. இடஒதுக்கீடு என்றாலே அவர்களுக்கு எட்டிக்காய்.
இந்தப் பின்னணியில்தான் ‘நீட்’ தேர்வு என்றபெயரில், சமூகநீதியைக் சவக்குழிக்கு அனுப்ப, நீட்டோலை அனுப்புகிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக நடந்த பண்பாட்டுப் போராட்டத்தில் கிழிந்து தொங்கியது ஆர்எஸ்எஸ் - பாஜகவின் பட்டு பீதாம்பரம்தான். ஜல்லிக்கட்டு நடக்கும் என்று வாய்வலிக்காமல் பொன்னாரும், தமிழிசையும் புளுகி வந்தார்கள். ரூ. 500, ரூ. 1000 செல்லாது என்று அறிவித்து, தமிழக மக்கள் வாழ்வில் மட்டுமல்ல; இந்திய மக்கள் அனைவரது வாழ்விலும் இருள்சூழ வைத்தார் மோடி. அதனால்தான் போராடிய இளைஞர்கள், ‘செல்லாது செல்லாது மோடி ரூட்டு செல்லாது’ என்று முழக்கமிட்டார்கள். சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து நடத்திய போராட்டம் கண்டு, எச்.ராஜா ஆத்திரமடைந்து போராட்டக்களத்தில் இஸ்லாமியர்களுக்கு என்ன வேலை? அவர்கள் எப்படி, மெரினாவில் தொழுகை நடத்தினார்கள்? என விஷம் கக்கினார். நெடுவாசல் போராட்டத்திலும் பாஜக-வினர் அகலமாக அம்பலப்பட்டுப் போனார்கள். மந்திரிகுமாரி திரைப்படத்தில், தண்டிக்கப்பட்ட வில்லன் நடிகர் நடராசன், கடைசியாக ஏதாவது கூற விரும்புகிறாயா? என்று கேட்டதற்கு, ‘நாடே நாசமாக போகட்டும்’ என்பார். இல. கணேசனும் அப்படித்தான், தங்கள் கைக்கு வராத தமிழகம் ஒழிந்து போகட்டும் என நினைத்து, ஒரு நாடு வாழ வேண்டுமானால் ஒரு மாநிலம் அழிவதில் தவறில்லை என்று சாபமிட்டுள்ளார்.நெடுவாசலில் போராடுமாறு மாணவர்களை தூண்டிவிடுவது கம்யூனிஸ்ட்டுகள்தான் என்று கோபமாக கூறியுள்ளார் தமிழிசை. கலவரத்தை தூண்டுவது, கவுரவக் கொலைக்கு காவல் நிற்பது உங்களது வேலை. வாடிவாசலைத் தொடர்ந்து நெடுவாசல் போராட்டத்தின் தலைவாசலாக மாறியிருப்பது கண்டு தோழர்கள் மகிழ்கிறார்கள். துணை நிற்கிறார்கள்.வாழை மரம் கட்டிய இடத்திலெல்லாம் சோறு கிடைக்கும் என சிலர் நினைக்கிறார்கள் என தோழர்களை மனதில்வைத்துக்கொண்டு மறைமுகமாக சாடுகிறார் எச்.ராஜா.எங்கேயாவது மகிழ்ச்சியின் அடையாளமாக வாழை மரத்தை பார்த்தால் அதை வெட்டுவதற்குத் துடிப்பார் இந்த வெட்டிவீரர்.புராணப் பொய்யைக் காட்டி, தமிழக மக்களின் 200 ஆண்டுக் கனவான சேதுக்கால்வாய்த் திட்டத்தில் மண் அள்ளிப் போட்டவர்கள் இவர்களே. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கூறி காவிரி காலொடிந்து கிடப்பதற்கும் காரணம் இவர்களே. இதுகுறித்து முறையிடச் சென்ற தமிழக எம்.பி.க்களைக் கூட பார்க்க மறுத்து விட்டார் பிரதமர் மோடி. மீத்தேன், ஷேல் கேஸ், எரிவாயுக் குழாய்பதிக்கும் திட்டம் என தமிழகத்திற்கு எந்தெந்த வகையில் கெடுதி செய்ய முடியும் என ரூம் போட்டு யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள் பாஜக-வினர்.
பொது பட்ஜெட்டையும், ரயில்வே பட்ஜெட்டையும் இணைத்து எப்போது வேண்டுமானாலும் ரயில் கட்டணம் உயரும் என்ற நிலையை ஏற்படுத்தியது மட்டுமல்ல, தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் உரிய நிதி ஒதுக்கப்படவும் இல்லை. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை துவக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை. தமிழகத்தை ஏமாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் ‘எய்ம்’ போலும். வைகை நதிக்கரை நாகரிகத்தை வையத்திற்கு எடுத்துச் சொல்லும் கீழடி அகழ்வாய்வு தொடர்வதற்கான அனுமதியைக் கூட போராடித்தான் பெற வேண்டியது இருந்தது. சித்தர்கள் துவங்கி ராமானுஜர், வைகுண்டசாமி, இராமலிங்க அடிகள், தாயுமானவர் என நெடிய சமய சீர்திருத்தவாதிகள் தோன்றிய பூமிதமிழகம். ஆனால், மோடி வகையறா பாபா ராம்தேவ், பூஜ்யஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ் என கார்ப்பரேட் சாமியார்களுடன் மட்டும்தான் கூடிக் குலாவுகிறார்கள்.வர்தா புயலால் தமிழகம் துயருற்றபோது, வரலாறு காணாத வறட்சியால் மாநிலம் தவித்து நிற்கும்போது வராத மோடி, காட்டை அழித்து, பழங்குடி மக்களை மிரட்டி செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு லிங்கத்தின் சிலையைத் திறக்க ஓடோடிவருகிறார். புயல், வறட்சி என மாறி மாறி வந்தபோது, பஜ்ஜி சாப்பிட மத்தியக்குழுக்கள் வந்துபோயின. ஆனால், இதுவரை மத்திய அரசிடமிருந்து நையா பைசா கூட வரவில்லை. கோவையில் சசிகுமார், சொந்தக் கட்சி பகையின் காரணமாக கொல்லப்பட்டதை, சிறுபான்மை மக்களுக்கு எதிராக திருப்பிவிட்டு, கலவரம் நடத்தியது பாஜக கூட்டம். திருப்பூரில் தற்கொலையை கொலையாக சித்தரித்து,வெறிக்கூச்சல் போட்டதும் இதே கூட்டம்தான். காதலர் தினம் வந்துவிட்டால், கொலைவெறியோடு அலைகிறது இந்தக் கூட்டம். அரியலூரில் நந்தினி என்ற தலித் இளம்பெண், இந்து முன்னணியைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட காமக்கொடூரர்களால் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு சிதைக்கப்பட்டார்.
இதற்குப் பின்னணியாக இருந்த பாஜகவின் மாவட்டத் தலைவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. இது இவர்கள் நடத்தும் ஒருவகையான ‘கவுரவ’க் கொலை.தமிழக ரேசன் கடைகளில் பொருட்கள் காணாமல் போனதற்கும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றிய விவசாயத் தொழிலாளர்களுக்கு பணம் கிடைக்காமல் இருப்பதற்கும் மோடி மந்திரம்தான் காரணம். பாஜக கூட்டம் நல்லவர்களும் அல்ல; நம்மவர்களும் அல்ல! இதை ஊரைக் கூட்டி உரக்கச்சொல்லுவோம். தமிழ்மண்ணில் விஷத்தாமரை விரிய முடியாது என்பதை வீதி வீதியாகஎடுத்துச் செல்வோம்.
No comments:
Post a Comment