புதுதில்லி, மார்ச் 4 -
தில்லிப் பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து நன்கு தெரிந்தே தான் மேற்கொள்ளப்பட்டது என்று ஏபிவிபி மாணவன் ஒருவன் தெரிவித்திருக்கிறான்.இதுதொடர்பாக தி ஒயர் இணைய இதழின் செய்தி யாளர் இணைய இதழில் தெரிவித்திருப்பதாவது:பிப்ரவரி 22 அன்று மாலை 4.30 மணியளவில் தில்லிப் பல்கலைக்கழக ராம்ஜாஸ் கல்லூரியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் குறித்து மௌரிஸ் நகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க மாணவர்கள் சென்றிருப்பதாகவும், என்னையும் வருமாறு ஒரு மாணவன் என்னைக் கேட்டுக் கொண்டார். நான் அங்கே சென்றபோது காவல்துறையினர் ஏற்கனவே அந்தப் பகுதியை அடைத்துவைத்திருந்தார்கள்.அப்போது என் பக்கத்தில் ஒரு மாணவன் வந்து நின்றான். அவன் பேசியதிலிருந்து அவன் ஏபிவிபி அமைப்பின்கீழ் இயங்கும் மாணவன் என்பது நன்கு தெரிந்தது.அவன் ராம்ஜாஸ் கல்லூரியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து பக்கத்திலிருந்த மாணவனிடம் தெரிவித்துக்கொண்டிருந்தபோது உண்மையில் நான் மிகவும் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அவன் எப்படியெல்லாம் கல்லூரியின் உடைமைகளை அடித்து நொறுக்கினோம் என்றும், மாணவர்களையும், தில்லிப் பல்கலைக்கழக பேராசிரியர்களையும் செம்மையாக அடித்து நொறுக்கியதையும், அவர்கள் மீது கற்களை எறிந்ததையும் குறித்து மிகவும் வெறித்தனமாக பீற்றிக்கொண்டிருந்தான். அவன் பேசிக்கொண்டிருக்கையில், ‘உமர் காலித் மட்டும் ராம்ஜாஸ் கல்லூரிக்கு வந்திருந்தான் என்றால், அவன் நிச்சயமாகத் திரும்பிப் போயிருக்கமாட்டான்’ என்றும் கூறினான். அங்கே அவர்கள் செய்த கயவாளித்தனங்களை மிகவும் தெள்ளத்தெளிவானமுறையில் தன்நண்பனிடம் அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் தான் செய்தவெறிச்செயல்கள் குறித்து அவன் மிகவும் திருப்தியுடன் இருப்பதையும் காண முடிந்தது. அவன் கூறிய அனைத்தையும் என் போன் மூலம் நன்கு பதிவு செய்துகொண்டேன்.இவன் கூறிய விஷயங்களிலிருந்து ஏபிவிபி அமைப்பு எப்படியெல்லாம் மாணவர்களை வன்முறை வெறியாட்டங்களுக்கு தயார் செய்து வைத்திருக்கிறது என்பதை நன்கு உணர முடிந்தது. அதுமட்டுமல்ல, ஏபிவிபி மாணவர்கள் எந்த அக்கிரம செயல்களைச் செய்தாலும் அதனைத் தடுத்து நிறுத்திட காவல்துறை முன்வராது என்பதும் அம்மாணவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது.
அவன் மிகவும் மலினமான முறையில் தான் செய்த கிரிமினல் நடவடிக்கைகள் குறித்தும், பெண் ஊடகவியலாளர்களிடமும் அப்பாவி சக மாணவர்களிடமும் மற்றும் தன் சொந்த பேராசிரியர்களிடமுமே இழிவாக நடந்துகொண்டது குறித்தும், பீற்றிக்கொண்டிருந்தபோது மற்ற மாணவர்கள் அதனை மிகவும் ரசித்தார்கள். இதனைக் கண்ணுற்றபோது எந்த அளவிற்கு மாணவர் சமுதாயத்தை இவர்கள் மிகவும் இழிவான வகையில் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது.இவ்வாறு ஏபிவிபி மாணவர்கள், வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டிருந்தபோதும், எப்படிக் காவல்துறையும், ஊடகங்களும் இதனை ஏபிவிபிக்கும் இடதுசாரி மாணவர்குழுக்களுக்கும் இடையிலான ‘மோதல்’ என்று குறிப்பிடுகின்றன என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.நிச்சயமாக இது மோதல் கிடையாது. இவ்வாறு பீற்றிக்கொண்ட மாணவனும் அவனுடன் இருந்த மாணவர்களும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நானும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவன்தான். இவ்வாறு என் மாநிலத்தைச் சேர்ந்தவன் பேசியது என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ராம்ஜாஸ் கல்லூரி மகாத்மா காந்தி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட கல்லூரியாகும். இதன் ஆட்சிமன்றக்குழுவின் தலைவராக பி.ஆர்.அம்பேத்கர் இருந்திருக்கிறார். இவ்வளவு புகழ்பெற்ற இக்கல்லூரி வளாகத்தில் இவ்வளவு இழிவானமுறையில் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது குறித்து மிகவும் வெட்கப்படுகிறேன்.இவ்வாறு தி ஒயர் இணைய இதழின் செய்தியாளர்குறிப்பிட்டுள்ளார். (ந.நி.)
No comments:
Post a Comment