Thursday, March 23, 2017

தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுக மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு



தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள
கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுக
மாநிலங்களவையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு
புதுதில்லி, மார்ச் 23-
தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. புதன் அன்-று மாலை மாநிலங்களவையில் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:
“எனக்கு முன் பேசிய தலைவர்கள் பல கருத்துக்களை இதில் எடுத்து வைத்திருக்கிறார்கள்.அவற்றில் பெரும்பாலானவற்றுடன் நானும் ஒத்துப்போகிறேன். எனவே அவற்றை மீளவும் இங்கே நேரம் கருதி பேசிடவில்லை.
மாண்புமிகு உறுப்பினர் திரு. சரத் யாதவ் ஒருமுக்கியமான பிரச்சனை குறித்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார். அதாவது இன்றுள்ள ஊடகங்களின் பிரச்சனை குறித்து அவர் பேசிவிட்டுச்சென்றிருக்கிறார். ஆம், அது மற்றுமொரு முக்கியமான பிரச்சனையாகும். அது குறித்து அவர் கூறியுள்ள அறிவுரைகளை ஏற்றுக்கொண்டு அது தொடர்பாக தனியே விவாதித்திட முன்வருவீர்கள் என நம்புகிறேன்.
ஜனநாயகம்
நாம் அனைவரும் நம்முடைய ஜனநாயகத்தின் மீது மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம். நாம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திவரும் நம் அரசமைப்புச்சட்டம் நமக்கு ‘ஒரு மனிதர், ஒரு வாக்கு’, அல்லது ‘ஒரு நபர், ஒரு வாக்கு‘ மற்றும் ‘ஒரு வாக்-கு, ஒரு மதிப்பு‘ ('one man, one vote'; or,  'one person, one vote' and  'one vote, one value') என்பனவற்றை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது.
இந்த அரசியல் சமத்துவம், நம் தேர்தல் நடைமுறைகளின்மூலமாக நமக்கு நடைமுறையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. நம் தேர்தல் நடைமுறைகள் குறைபாடு உடையதாக இருப்பின், எப்போதும் அதனைச் சரிசெய்து அதனை மெருகூட்டவேண்டியது அவசியத் தேவையாகும். இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் கூறியது மிகவும் சரி. இதனை கடந்த பல ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி  வந்திருக்கிறோம்.   
எனினும், இப்போது, மக்களின் ஜனநாயக அபிலாசைகள் உருக்குலைக்கப்படுவதைத் தடுத்துநிறுத்திட வேண்டுமானால் நாட்டின்  தேர்தல் நடைமுறைகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். அதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது என்று நான் கருதுகிறேன். மக்களின் ஜனநாயக அபிலாசைகளை, பணபலம் மூலமாகவோ, அல்லது, புஜபலம் மூலமாகவோ, அல்லது, மதவெறியைக் கிளப்பியோ, அல்லது, சாதி வெறியைக் கிளப்பியோ உருக்குலைத்திடக் கூடாது. இத்தகைய நடைமுறைகளின் மூலம் இப்போது ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இத்தகைய நலிந்த தளர்ந்த நிலைகளை நாம்  சரி செய்திட வேண்டியிருக்கிறது.
இவற்றை இப்போது நாம் ஏன் வலியுறுத்துகின்றோம். நாம் மேற்கொள்ள வேண்டிய தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக இதற்கு முன்பும் பலமுறை நாம் பேசியிருக்கிறோம்.  
 ஒரு கார் விபத்தில் மறைந்திட்ட தினேஷ் கோஸ்வாமி அவர்கள் இது தொடர்பாக ஒரு பெரிய அறிக்கை அளித்திருக்கிறார். இந்திரஜித் குப்தா ஆணையம் இது தொடர்பாக ஒரு மிகச்சிறந்த அறிக்கையை அளித்திருக்கிறது. அது இங்கே தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் உள்ள எந்த ஆலோசனைகளும் உண்மையில் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
நாம் நம்முடைய தேர்தல் நடைமுறையை சரிசெய்ய வேண்டியிருக்கிறது. எப்படிச் சரி செய்யப்போகிறோம்? நம்முடைய தேர்தல் நடைமுறையிலும், நம்முடைய அமைப்பிலும் ஏற்பட்டுள்ள ஜனநாயக சிதைவுகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும். அவற்றை எப்படிச் சரிசெய்யப் போகிறோம்.
தற்போது மத்திய அரசாம், தன்னுடைய பட்ஜெட்டில் இரு முன்மொழிவுகளை இது தொடர்பாக ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலில் பண பலம் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் பணத்தின் செல்வாக்கு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அந்த முன்மொழிவுகள் என்ன சொல்கின்றன? முதலாவதாக, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பது என்பது இருபதாயிரம் ரூபாயிலிருந்து ஈராயிரம் ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, அரசின் சார்பில் தேர்தல் பத்திரங்கள் வெளியிடப் போகிறார்களாம். மக்கள் அவற்றை வாங்க முடியுமாம். அவற்றை அவர்கள் அரசியல் கட்சிகளுக்கு கொடுக்க முடியுமாம். அரசியல் கட்சிகள் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமாம். இவ்வாறு அரசு கொண்டுவந்துள்ள முன்மொழிவுகள் இரண்டுமே வெறும் கண்துடைப்பாகும். கண்துடைப்பு மட்டுமல்ல, பண மோசடி மேற்கொள்வது மேலும் வாய்ப்புவாசல்கள் திறந்துவிடப்பட்டிருக்கின்றன எனக் கூற முடியும்.
இருபதாயிரம் ரூபாய் என்பதை ஈராயிரம் ரூபாய் என்று மாற்றியதால் என்ன நடக்கப் போகிறது. ஒருவர் இருபதாயிரம் ரூபாய் கொடுத்தார் என்றால் இனி அதை பத்து பேர் பெயர்களில் பதிய வைத்துக்கொள்ளப் போகிறார்கள். வேறென்ன பெரிய வித்தியாசம் வந்துவிடப் போகிறது? இதுஒரு கேலிக்கூத்தாகும்.
அடுத்து, தேர்தல் பத்திரங்களை எடுத்துக்கொள்ளுங்கள். யார் அவற்றை வாங்குகிறார்கள்? யாருக்குக் கொடுக்கிறார்கள்? யார் அவற்றை உங்களுக்குக் கொடுக்கிறார்கள்? அனைத்தும் ரகசியம்.  அன்றையதினம் ஆட்சியில் உள்ளவர்களைத் தவிர வேறெவருக்கும் அது குறித்துத் தெரியப் போவதில்லை. ஆட்சியிலுள்ளவர்கள் அதனை சாக்காக வைத்துக்கொண்டு, “ஏன் அவர்களுக்கு அவ்வளவு கொடுத்திருக்கிறீர்கள்?” என்று மிரட்டுவதற்கு வேண்டுமானால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  எனவே இது ஒன்றும் சீர்திருத்தம் அல்ல.
தேர்தல் நடைமுறைகளை மேலும் சிதைப்பதற்கே இது வழிதிறந்துவிடும். தேர்தலில் பணபலத்தின் பங்கினைக் குறைத்திட வேண்டும் என்று உண்மையிலேயே நீங்கள் விரும்பினால், அரசியல் கட்சிகள் செய்திடும் செலவினங்களுக்கு வரம்பினைக் கொண்டுவாருங்கள். இதனை நான் கடந்த பத்தாண்டுகளாகவே சொல்லிக் கொண்டிருக்கிறேன். வேட்பாளருக்கு செய்திருப்பதைப் போல அரசியல் கட்சிகளுக்கும் செய்திடுங்கள். செலவினத்திற்கான வரம்பை உயர்த்த வேண்டும் என்று விரும்பினால், உயர்த்திக்கொள்ளுங்கள். ஆனால், அரசியல் கட்சிகள் தாங்கள் செய்திடும் செலவினங்களுக்கு வரம்பு விதிக்கப்படவில்லை என்றால், உங்களால் தேர்தலில் பணபலத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்திட முடியாது.
இதனை நான் விமானநிலையங்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். நாம் அனைவருமே பார்த்திருக்கிறோம். நாம் ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்காகப் போவதற்காக, காத்துக்கொண்டிருக்கும்போது, நாம் பயணம் செய்ய வேண்டிய கமர்சியல் விமானம் தாமதமாகிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், தனியார்ஜெட் விமானங்களில் வேறு சிலர் அவர்களின் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்று கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.  அவர்கள்  ஆகாயம் வழியாக வருவார்கள், தரை இறங்குவார்கள், பின்னர் தங்களுடைய ஹெலிகாப்டர்களில் தேர்தல் பிரச்சாரத்திற்காகப் பறந்து செல்வார்கள். ஏழு கூட்டங்களில் பங்கெடுப்பார்கள். ஆனால் நாம் ஒன்று அல்லது இரு கூட்டங்களில் சாலை வழியே சென்று செய்ய முடியும். நாம் அனைவரும் இதனைப் பார்த்திருக்கிறோம்.  
அடுத்து, கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக. கார்ப்பரேட்டுகள்  ஒத்துழைக்கட்டும். இந்தியாவின் ஜனநாயக அமைப்பு முறைக்கு அவர்கள் ஒத்துழைத்திட வேண்டும். இந்திய ஜனநாயகம் செயல்படுவதற்கு அவர்களின் பங்களிப்பு அவசியம். அவர்கள் தாங்கள் அளித்திடும் பங்களிப்பை அரசிடம்  அளித்திடட்டும். .அரசாங்கம் அதனை தேர்தல் ஆணையம் மூலமாகவோ அல்லது வேறெந்த ஏஜன்சி மூலமாகவோ மேலாண்மை செய்து, நிர்வகிக்கட்டும். இதனை இந்திஜித் குப்தா ஆணையம் பரிந்துரைத்திருந்தது. இதனை அமல்படுத்துவதற்கு இது மிகவும் சரியான தருணமாகும்.  அரசின் சார்பில் செலவினம் என்பது ரொக்கமாக இருக்கக்கூடாது. அவை பொருள்களாக இருந்திட வேண்டும். வாகனங்கள், ஓட்டுநர்கள், பெட்ரோல் அல்லது எரிபொருள் நிரப்பப்படுதல், போஸ்டர்கள் போன்றவைகளாக இருந்திட வேண்டும். இவை அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். இப்போது இதில் நீங்கள் ஹெலிகாப்டர்களையும் சேர்த்துக்கொள்ளலாம், தனியார் ஜெட் விமானங்களையும்கூட சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறு அரசின் மூலமாகவே அனைத்தையும் செய்யுங்கள்.  மேற்கத்திய நாடுகளிடம் இந்த நடைமுறை இருக்கிறது. இது ஒன்றும் உலகில் புதிதாக நடைபெறும் விஷயம் அல்ல.
நம்முடைய ஜனநாயகம் குறித்து ஒரு விஷயத்தில் எனக்கு எப்போதுமே  பெருமிதம் உண்டு. ஜனாதிபதி ஒபாமா நம் நாட்டிற்கு முதன்முறை வந்தபோது நடந்த நிகழ்வை நினைவுகூர்ந்திடுங்கள். அவர் இங்கே வந்தபோது நம்முடைய தங்கப் புத்தகத்தில் (golden book) என்ன எழுதினார் என்பதை நினைவுகூருங்கள். உண்மையில் தங்கத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நம்முடைய சென்ட்ரல் ஹாலில் அதனை வைத்திருப்போம். அதன் பெயர் அவ்வாறு இருந்துவருகிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் அரசியல் தலைவர்கள் அதில் தங்கள் கருத்தைப் பதிவு செய்வார்கள். அதில் அவர், “உலகின் மிகப் பழைமையான ஜனநாயகத்திலிருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு வாழ்த்துக்கள்” (‘Greetings from the world’s oldest democracy to the world’s largest democracy’ ) என்று எழுதினார்.
அன்றுமாலையே அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோது, “நீங்கள் உலகின் மிகப்பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து வந்திருப்பதாகக் கூறுவது சரியல்ல” என்று கூறினேன்.
துணைத் தலைவர்:  அது எப்படி?
சீத்தாராம் யெச்சூரி: ஜனாதிபதி ஒபாமா அமெரிக்காவில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்புதான் பிறந்தார். அதாவது, அமெரிக்காவில் அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது, 1962இல். அவர் பிறந்தது 1961இல். 1962க்கு முன்பு அமெரிக்காவில் ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆனால் நாம் எப்போது சுதந்திரம் வாங்கினோமோ அப்போதே அனைவருக்கும் வாக்குரிமை அளித்துவிட்டோம். இது நம் ஜனநாயகத்தின் பெருமிதம் ஆகும்.
ஆனால் அதனை நாம் எங்ஙனம் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்? நாம் அதனை தேர்தல் நடைமுறைகள் மூலமும், தேர்தல் அமைப்பு மூலமும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நம்முடைய தேர்தல் நடைமுறை  பணபலம்  போன்று பலவிதங்களில் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
பணபலம் குடிறத்து மாண்புமிகு உறுப்பினர் ராம் கோபால் யாதவ் கூறியது முழுவதும் சரி. நாம் எங்கெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றோமோ அங்கெல்லாம் நம்மால் பணத்தைச் செலவு செய்ய முடியவில்லை. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பு ஆட்சியில் இருப்பவர்களைத் தவிர மற்ற அனைவரையும் கடுமையாகப் பாதித்திருந்தது. ஆனால் ஆட்சியிலிருப்போர் நன்கு செலவு செய்ததைப் பார்க்க முடிந்தது.  இதுவே பெரும்பான்மையான மக்களின் உணர்வாகவும் இருந்தது.
எனவேதான் தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக இரு நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியத்  தேவையாகும். அரசியல் கட்சிகளின் செலவினங்களுக்கு வரம்பு விதித்திடுங்கள். அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்குத் தடை விதித்திடுங்கள். அவர்கள் நிதி அளிக்க வேண்டுமென்று விரும்பினால் அதற்காக அரசு நிர்ணயிக்கும் அமைப்பிடம் செலுத்தட்டும். அந்த அமைப்பிடமிருநது அரசியல் கட்சிகளுக்குப் பணம் வரட்டும். உங்.களால் இதனைச் செய்யாமுடியாது என்றால், குறைந்தபட்சம், தேர்தல் நடைமுறையில் செல்வாக்கு செலுத்துவதற்கு பணத்தைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு சில கட்டுப்பாடுகளைக் கொண்டுவாருங்கள். இன்றைய  தினம் தேர்தல் பண பலத்தைப் பயன்படுத்துவது என்பது  உச்சத்திற்குச் சென்றுவிட்டது. சமீபத்திய தேர்தல்களில் இதனை நாம் நன்கு பார்த்தோம். எனவே இது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும்.
இதனை எப்படிச் சரி செய்யலாம் என்பதற்கு நான் சில பரிந்துரைகளை அளித்திட விரும்புகிறேன்.
அடுத்து இரண்டாவதாக நான் கூற விரும்பும் மிக முக்கியமான விஷயம் நம் தேர்தல் அமைப்புமுறை குறித்ததாகும். ஜனநாயகம் என்றால் என்ன? இது தொடர்பாக நாம் புரிந்துகொண்டிருப்பது என்னவெனில், பெரும்பான்மையோரின் ஆட்சி என்பதாகும்., சுதந்திரம் பெற்ற பின்னர் அமையப்பட்ட ஆட்சிகளுக்கு மக்களின் ஆதரவு என்பதன் நிலை என்ன தெரியுமா? இதுவரை அமைந்த எந்த ஆட்சிக்கும் மக்களின் வாக்குகள் என்பது 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது கிடையாது. ஒரேயொரு தடவைதான், ராஜீவ் காந்தி ஆட்சி அமைத்தபோதுதான், அவருக்கு 48 சதவீதத்திற்கு மக்கள் வாக்களித்திருந்தார்கள். 405 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்திருந்தார். அதுவும் கூட 50 சதவீதத்திற்குக் கீழ்தான்.
இப்போதுள்ள பாஜக தலைமையிலான ஆட்சி வெறும் 31 சதவீதம்தான் பெற்றிருக்கிறது. நம் அமைப்பு முறையில் யார் அதிக வாக்குகள் பெற்றிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்று உருவாக்கி வைத்திருக்கிறோம். இது நம் அமைப்புமுறையில் உள்ள பலவீனமாகும். இதனை நாம் சரி செய்தாக வேண்டும்.
ஜனநாயகம் என்றால், அது பெரும்பான்மையோரின் ஆட்சி என்றால், இது சரி செய்யப்பட்டாக வேண்டும். இது சரி செய்யப்பட வேண்டுமானால், நாம் ஒரு பகுதி பிரதிநிதித்துவ ஆட்சி  அமைப்பு முறைக்கு மாறிட வேண்டும்.  அதற்கான சரியான தருணம் இதுவாகும் என்றே நான் கருதுகிறேன்.
இந்தியா என்பது பல்வேறு விதமான வேற்றுமைகளுடன் உள்ள ஒரு நாடாகும். நம்முடைய ஒவ்வொரு கலாச்சாரத்துடனும் இருக்கின்ற அனைவருமே நம் நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செலுத்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது நியாயமானதும் கூட. நாட்டுமக்களின் நியாயமான இந்த உணர்வை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.  அதே சமயத்தில் ஜனநாயகத்தை சிதைத்திடும் தற்போதைய அமைப்புமுறையை சரிசெய்திடவும் நாம் முன்வர வேண்டும். இதனை ஒரு பகுதி பிரதிநிதித்துவ ஆட்சி அமைப்பு முறையை (partial-proportional representative system)கொண்டுவருவதன் மூலம் சரி செய்திட வேண்டும். இதனை எப்படிச் செய்வது?
இதுதொடர்பாக நாங்கள் முன்வைக்கும் யோசனைஎன்ன? இப்போது நாடாளுமன்ற மக்களவைக்கான இடங்கள் 542 ஆகும்.   இதனைச் சரிபாதியாக – அதாவது 271 ஆகக் குறைத்திடுங்கள். ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் வாக்காளர்கள் இரு வாக்குகள் அளித்திட வேண்டும். ஒரு வாக்கை, அவர் விரும்பும் அரசியல் கட்சிக்கும், மற்றொன்றை அங்கே நிற்கிற வேட்பாளருக்கும் அளித்திட வேண்டும்.  அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பாகவே தன் கட்சி சார்பில் எவரெவரை மக்களவை உறுப்பினராகத்  தேர்ந்தெடுத்திட வேண்டும் என்கிற பெயர்ப்பட்டியலை  தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒவ்வொரு கட்சியும் பெற்றிருக்கிற வாக்குகளின் சதவீத அடிப்படையில் கட்சிகள் அளித்திருக்கிற பட்டியலில் இருந்து நபர்களைத் தேர்வு செய்திடும். அதேபோன்று மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் மக்களவைக்கு வருவார்கள். இதன்மூலம் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு பாதுகாக்கப்படும். நாட்டின் ஜனநாயக மாண்பும் நன்கு நிலைநிறுத்தப்படும்.  இதன் காரணமாக மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களித்த கட்சி ஆட்சி அமைத்திடுவது என்பது உத்தரவாதப்படுத்தப்படும். இல்லையேல், ஜனநாயகம் என்பது பெரும்பான்மையோரின் ஆட்சி என்பதை உண்மையில் நாம் பின்பற்றுவதாகக் கொள்ள முடியாது.  எனவே இதனைப் பரிசீலிப்பதற்கான காலம் வந்துவிட்டது.
இவ்வாறு பிரதிநிதித்துவ அமைப்புமுறையில் இரு அனுகூலங்கள் உண்டு.  
உதாரணமாக, பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை அளித்திட வேண்டும் என்று இந்த அவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால்  அது மக்களவையில் நிறைவேறவில்லை. சுமார் இருபதாண்டு காலமாக இந்த நிலை நீடிக்கிறது. பிரதிநிதித்துவ அமைப்புமுறை வந்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்.கள் கட்சி சார்பில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்களைத்  தேர்ந்தெடுத்திட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிட முடியும்.
இரண்டாவது முக்கியமான அம்சம், வாக்காளர்களை பணபலம், புஜபலம், சாதி ரீதியாக வேண்டுகோள்கள், மத ரீதியாக வேண்டுகோள்கள் போன்றவற்றைக் கூறி வாக்குகளைப் பெற மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும். மாறாக மக்கள் தங்கள் வாக்குகளில் சரிபாதி வாக்குகளை, போட்டியிடும் அரசியல் கட்சிகளின் கொள்கைத் திட்டங்களுக்காகத்தான் அளிக்கப் போகிறார்கள். தனிநபர்களுக்கான கோரிக்கை என்பது மறு பாதியில்தான் இருக்கிறது.
நம்முடைய ஜனநாயக அமைப்பை மெருகேற்றி பூரணத்துவப்படுத்திட வேண்டும் என்று உண்மையிலேயே நாம் விரும்புவோமானால் இதனைச் செய்திட முன்வர வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால், அரசமைப்புச் சட்டம் உருவானதற்குப் பிறகு பிறந்துள்ள என்னுடைய தலைமுறை இதனால் மிகவும் பெருமிதம் கொள்ளும்.
ஊடகங்கள்
அடுத்ததாக, ஊடகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாடு குறித்து ஒருசிலவற்றைத் தெரிவிக்க விரும்புகிறேன். அச்சு ஊடகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் ஆகிய இரண்டு குறித்தும் இந்த அவையில் இதற்கு முன்பும் நாம் விவாதித்திருக்கிறோம். காசு கொடுத்து செய்தி போடுவது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் நான் பங்கேற்றிருக்கிறேன். ஆனால் இப்பிரச்சனை தொடர்பாக எதுவும் நடந்திடவில்லை.
அதனை விளம்பரமாகக் கருதி, அதனை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அல்லது வேட்பாளரின் கணக்கில் சேர்த்திட வேண்டும். முதலாவதாக இதனை நிறுத்திட முயற்சி செய்யுங்கள். இவ்வாறு காசு கொடுத்து செய்தி வெளியிடும் முறை மீது நடவடிக்கை எடுத்திடுங்கள்.
இரண்டாவது, ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு குறித்ததாகும். எந்தவொரு பெரிய ஜனநாயக நாட்டிலும் கார்ப்பரேட்டுகள் ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை.  அங்கெல்லாம் கார்ப்பரேட்டுகள் செய்தித்தாள், தொலைக்காட்சி அலைவரிசைகள்  மற்றும்  இணையதளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை. அதேபோன்று சமூக வலைத்தளங்கள் குறித்து உறுப்பினர்கள் கூறியதும் மிகவும் சரியானவைகளாகும். சமூக வலைத்தளங்களில் வாட்ஸ்அப் 98 சதவீத அளவிற்கு மக்களிடம் கருத்துக்களைத்திணித்திட பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. 2014இல் கண்டுபிடிக்கப்பட்ட முகநூல், ட்விட்டர் பின்னுக்குப் போய்விட்டது. தகவல் தொழில்நுட்ப காலத்தில் மூன்றாண்டுகள் என்பது ஒரு நீண்ட காலமாகும். இப்போது அவை எல்லாம் பின்னுக்குப் போய்விட்டன. வாட்ஸ்அப் மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அதன் சாராம்சம் என்ன? அதில் என்ன பரவிக்கொண்டிருக்கிறது? அது மேற்கொண்டுள்ள சிதைவுகள் என்னென்ன? இவை அனைத்து குறித்தும் முழுமையாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.  வாட்ஸ்அப் உதவியுடன் உத்தரப்பிரதேசத்தில் பாஜக எப்படி வெற்றி பெற்றிருக்கிறது என்பதை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திட வேண்டும். அது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். ஆனால் நம் அரசமைப்புச்சட்டத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படுகின்ற ஊடகங்கள் மீது நம் கட்டுப்பாடு என்ன? இவற்றில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்தை தடை செய்திட வேண்டும். காசு கொடுத்து செய்தி வெளியிடுவது தொடர்பாக அவ்வாறு செய்திடுபவர்களைத் தண்டிக்கக்கூடிய விதத்தில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.
நம் நாட்டை வீர்யம் மிக்கதாகவும் சிறந்ததாகவும் உருவாக்க வேண்டும் என்று எண்ணம் படைத்த என் இனிய, செய்தியாளர் நண்பர்களுக்கு , நல்ல மனம் படைத்தோருக்கு, நாட்டுப்பற்று மிகுந்த நல்லவர்களுக்கு, என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுதான். “தயவுசெய்து, நிரந்தர வருவாய் பெறுவதிலிருந்து ஒப்பந்த ஊதியம் பெறும் முறைக்கு மாறும் தவறைத் தயவுசெய்து புரிந்திடாதீர்கள்.”
ஆனால் நடந்து கொண்டிருப்பது என்ன? எலக்ட்ரானிக் ஊடகங்கள் முழுமையாக அதன் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. தூர்தர்ஷனில் தேசிய அரசியல் கட்சிகளுக்கு பேசுவதற்கான வாய்ப்பு அவை பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அளிக்கப்படுவதாகக் கூறுகிறீர்கள். ஆனால் தனியார் தொலைக்காட்சி  அலைவரிசைகளில் என்ன நிலை? அது முழுமையாக பூஜ்யமாகும்.  
இன்று எந்த தனியார் சேனலைத் திறந்தாலும், என்ன பார்க்கிறோம்? மாண்புமிகு பிரதமர் நேரடியாக உரையாற்றுவதைப் பார்க்கிறோம். ஒரேயொரு கேமரா பிரதமருடன் செல்கிறது. அது அனைத்து தனியார் சேனல்களுக்கும் செய்திகளை அனுப்பிவிடுகிறது. நீங்கள் பயணம் செய்யும்போதும், வானொலியில் ஒலிபரப்பைக்  கேட்கும்போதும், பிரதமரின் மனதின் குரலைக் கேட்காமல் இருக்க முடியாது. பழைய இந்தி பாடல்களை எல்லாம் நீங்கள் கேட்க முடியாது. பிரதமர் மக்கள் முன் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆனால் மக்களின்  பார்க்கும் உரிமையை, கேட்கும் உரிமையைப் பறிப்பதற்கு நீங்கள் யார்? இதுவா ஜனநாயகம்? உங்களுக்கு என்று வானொலி நிலையங்கள் இருக்கின்றன, அதில் உங்கள் செய்திகளை ஒலிபரப்புங்கள். அனைத்து தனியார் வானொலி நிலையங்களையும் ஏன் ஆக்கிரமிக்கிறீர்கள்? இதுவா ஜனநாயகம்? இவ்வாறு ஊடகங்களில் நடந்துகொண்டிருப்பவைகளைப் பற்றி ஆழமான முறையில் விவாதித்திட வேண்டியது அவசியமாகும்.
எலக்ட்ரானிக் வாக்கு எந்திரங்கள்
அடுத்ததாக, மின் அணு வாக்கு எந்திரங்கள் (EVMs) குறித்து பேச விரும்புகிறேன். (ஒரு படத்தைக் காட்டுகிறார். அத்வானி, நரசிம்மராவ் அந்த படத்தில் இருக்கின்றனர். அவர்கள் கையில் ஒரு புத்தகம். மின்அணு எந்திரங்களால் ஜனநாயகத்திற்கு இடர்ப்பாடு ('Democracy at Risk Due to EVMs'.) என்று அதன் தலைப்பு வாசகமாகும்.  இது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் குழுக்களிலும் நான் கலந்துகொண்டு என் கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறேன்.
இது தொடர்பாக  அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத்துறையில்  பணியாற்றும் நம் மக்களை (இவர்களில் அதிகமானவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்) வரவழைத்தோம். அவர்கள் வந்து அவை செயல்படும் விதத்தை செய்து காட்டினார்கள். அதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. அவற்றைக் களைந்திட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையமும் கூறியது. பின்னர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தாள்கள் மூலம் சோதனை செய்திட வேண்டும் என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள். அப்போது குரேசி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தார். நாம் தாள் சோதனையை (Paper trial) முன்மொழிந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர், அது உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. உச்சநீதிமன்றமும் அதனை ஒப்புக்கொண்டது.  2013 இறுதி வாக்கில் இது நடந்தது.   
2014இல் ஆட்சி மாறியது. நேற்றைய முன்தினம், குரேசி ஊடகங்களிடம் ஒன்றைக் கூறியிருக்கிறார். “இது தொடர்வதற்கு நிதி அளிப்பதை அரசாங்கம் நிறுத்திவிட்டது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார். நேற்றையதினம், தலைமைத் தேர்தல் ஆணையர், பிரதமருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இது போல் முன்னெப்போதும் நடந்ததில்லை.
தேர்தல் ஆணையம் என்பது அரசமைப்புச்சட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஓர் அமைப்பு. இதற்கு அரசாங்கத்துடன் சம்பந்தம் கிடையாது. இதற்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இது குடியரசுத் தலைவரிடமோ அல்லது அவரால் அமர்த்தப்பட்டுள்ள அலுவலர்களிடமோதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் இப்போது ஆட்சியாளர்களிடம் சென்றிருக்கிறார்.   இதுபோன்று முன்னெப்போதும் நடந்ததில்லை. எந்த அளவிற்கு விரக்தியடைந்திருக்கிறார் என்று பாருங்கள். அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாததால்  அவருக்கு வேறு வழி தெரியவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து மாண்புமிகு உறுப்பினர் ராம்கோபால் யாதவ் கூறினார். எனவே மீண்டும் தாள்கள் மூலம் வாக்களிக்கும் முறையை சோதனை அடிப்படையில் மீண்டும் கொண்டுவர வேண்டும். சென்ற பொதுத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் 22 தொகுதிகளில் இதனை மேற்கொண்டோம். 12இல் அவர்கள் வென்றார்கள். 10இல் நாங்கள் வென்றோம்.
ஏதேனும் பிரச்சனை என்றால் வாக்குச்சீட்டுகளை திரும்பவும் எண்ண முடியும். ஆனால் மின்னணு எந்திரங்களை அவ்வாறு செய்ய முடியாது. எனவேதான் வாக்குச்சீட்டுகளைக் கொண்டுவர தேர்தல் ஆணையம் தயார், உச்சநீதிமன்றமும் தயார். நாம் ஏன் அதற்குத் தயாரில்லை?  இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், நம் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்,
அடுத்து, ஒரேசமயத்தில் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்படுவது தொடர்பாக ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன்.  1952இல் ஒரே சமயத்தில் தேர்தல்கள் நடந்தன. பின்னர் 1957இல் நடந்தது. 1962இலும் நடந்தது. பின்னர் ஏன் தனித்தனியாக நடைபெற வேண்டி இருந்தது? அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கேரள அரசாங்கம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதன்பின்னர் அதேபோன்று பல அரசுகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. எனவேதான் நேரம் இரண்டையும் ஒன்றாக நடத்த அதன்பின்னர் ஒத்துவரவில்லை.
நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை நீக்குவதற்குத் தயாரா? ஒரே சமயத்தில் தேர்தல் வேண்டும் என்றால், இந்தப் பிரிவை நீக்குவதற்கு நீங்கள் தயாரா? உங்களால் அதனை நீக்க முடியாது என்றால், உங்களால் ஒரே சமயத்தில் தேர்தல்களை நடத்தவும் முடியாது. தயவுசெய்து இதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? இது ஒன்றும் வித்தைகாட்டும் நிகழ்வோ அல்லது விளம்பரமோ அல்ல. இது ஜனநாயகத்தின்மீது ஏவப்பட்டுள்ள சவால் ஆகும்.  
இப்போது அவர்கள் என்ன கூறிக்கொண்டிருக்கிறார்கள்? 2019இல் அனைத்து மாநில அரசாங்கங்களையும் கலைத்துவிடப் போகிறார்களாம், நாடாளுமன்றத்துக்கான  தேர்தலுடன் மாநில சட்டமன்றங்களுக்கும் நடத்தப் போகிறார்களாம். இது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை, குடியரசுத்தலைவர் ஆட்சி வடிவத்திற்கு மாற்றுவதற்கான ஒரு மறைமுகமான சூழ்ச்சியாகும். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அரசியல்நிர்ணயசபையில் நீண்ட நெடிய விவாதங்களுக்குப்பின்னர் இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறை கொண்டுவரப்பட்டது. இதற்கு இணையாக உலகில் வேறெங்கும் கிடையாது. நம்மைப்போன்று வேற்றுமைகளில் ஒற்றுமை கண்டுள்ள ஒரு நாட்டில், நாடாளுமன்ற ஜனநாயக .அமைப்புதான் சிறந்ததோர் அமைப்பாகும்.  அதைத்தான் டாக்டர் அம்பேத்கர் கூறினார். ஒட்டுமொத்த அரசியல் நிர்ணயசபையும் கூறியது. எனவே அவ்வாறு நாம் முடிவிற்கும் வந்தோம்.  அதனை மாற்றி, குடியரசுத்தலைவர் ஆட்சியைக் கொண்டுவர கொல்லைப்புற வழியாக இவர்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இதனை நாம் ஒருபோதும் அனுமதித்திட முடியாது.
தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து இன்னும் பல பிரச்சனைகளை ஆய்வு செய்திட வேண்டியிருக்கிறது. எனினும் என்னை முடித்துக்கொள்ளச்சொல்லி மணி அடித்துவிட்டதால் ஒரேயொரு விஷயத்தை மட்டும் சொல்லிமுடித்துக் கொள்கிறேன்.
உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தலில் மதவெறி அடிப்படையில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருக்கிறது. “கசாப்” என்றும்,
“கப்ரிஸ்தான்” என்றும் ”ஷம்ஷான் காட்” என்றும் (சுடுகாடு,இடுகாடு) ஈத்துப் பெருவிழா, தீபாவளி பண்டிகை என்றும் நேரடியாகவே மதவெறியை மக்கள் மத்தியில் விசிறிவிடப்பட்டதைப் பார்த்தோம். இவ்வாறு மதவெறியை விசிறி விட்டவர்கள் யார்? நாட்டின் பிரதமரும்,  நாட்டை ஆளும் கட்சியின் தலைவருமே இவ்வாறு கூறியவர்கள். இவ்வாறு இவர்களே மதவெறியைக் கிளப்பிவிடுவார்கள் என்றால், அதற்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் கிடையாது என்றால், நாம் ஜனநாயகம் குறித்துப் பேசிக் கொண்டிருப்பதன் அர்த்தம் என்ன? நாம் ஏன் இந்தியத் தண்டனைச் சட்டத்தைப் பெற்றிருக்கிறோம்? இதுகுறித்தெல்லாம் நாம் ஆழமான முறையில் பரிசீலனை செய்தாக வேண்டும்.
2014 அக்டோபரில் இந்த அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து கருத்துக்களைக் கேட்டது. நாமும் கருத்துக்களை அளித்திருக்கிறோம். இப்போது2017 நடந்துகொண்டிருக்கிறது. அவற்றின்மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இப்போதாவது அவை குறித்து ஆழமாகவும் முறையாகவும் விவாதித்திட,ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திடுங்கள். அதில் சட்ட வல்லுநர்களையும், அரசமைப்புச்சட்ட வல்லுநர்களையும் முன்னணி அரசியல் தலைவர்களையும் இணைத்திடுங்கள். தேர்தல் நடைமுறையை ஆழமான முறையில் சீர்திருத்திட நடவடிக்கைகள் எடுத்திடுவோம். நம் ஜனநாயகத்தைப் பாதுகாத்திட இது மிக மிக அவசியமாகும்.
--தமிழில்: ச.வீரமணி

No comments: