Wednesday, March 1, 2017

கடைசி மூச்சு வரை கட்சிக்காக உழைத்தவர் ஆர்.கோவிந்தராஜன் ஜி. ராமகிருஷ்ணன் புகழஞ்சலி




கடைசி மூச்சு வரை கட்சிக்காக உழைத்தவர் ஆர்.கோவிந்தராஜன்
ஜி. ராமகிருஷ்ணன் புகழஞ்சலி
தஞ்சாவூர், மார்ச் 1-
‘‘தோழர் ஆர்.ஜி. தன் கடைசி மூச்சு உள்ளவரை இயக்கத்திற்காக, கட்சிக்காக உழைத்தார்’’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ் மாநில செயலாளருமான ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
இன்சூரன்ஸ் ஊழியர்களின் முன்னோடித் தலைவர், பொதுவுடைமைப் போராளி, அன்புகெழுமிய தோழர் ஆர்.ஜி. என்னும் ஆர். கோவிந்தராஜன் அவர்களுக்கு புகழஞ்சலி கூட்டம் தஞ்சாவூர், பேரறிஞர் அண்ணா கலையரங்கத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத் திற்கு தஞ்சைக் கோட்டம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தின் தலைவர் இரா. புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் எஸ். செல்வராஜ் வரவேற்புரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தோழர் ஆர்.ஜி.யின் படத்தைத் திறந்துவைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனம், தனியார் துறையாகஇருந்து பின்னர் பொதுத்துறையாக அது மாறியபிறகு, 1960களின் துவக் கத்தில் அதில் ஊழியராகச் சேர்ந்து, படிப்படியாக சங்க நிர்வாகியாக மாறி, சங்கத்தின் பொதுச் செயலாளராக உயர்ந்தவர் தோழர் ஆர்.ஜி.பின்னர் தோழர் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் என்னும் பொறுப்புக்கும் உயர்ந்தார். இது மிகவும் முக்கியமான பொறுப்பாகும். இவ்வாறு செயல்படும் அதே சமயத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திலேயே மாவட் டக்குழு உறுப்பினராக இருந்து, பின்னர் மாநிலக்குழு உறுப்பினராகவும் உயர்ந்தார்.தோழர் ஆர்.ஜி. கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக நாள்தோறும் கட்சி அலுவலகத் திற்கு வந்து தன் கடமைகளைச் செய்து வந்தார். தன் கடைசி மூச்சு இருக்கும்வரைக்கும் கட்சியின் தத்துவார்த்த இதழான மார்க்சிஸ்ட் (தமிழ்) இதழின் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தார். கட்சியின் ஒழுங்கு கட்டுப்பாடு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.இவ்வாறாக சங்கம் தோழர் ஆர்.ஜி.யை வளர்த்தது. தோழர் ஆர்.ஜி.யும் சங்கத்தை வளர்த்தார், கட்சியை வளர்த்தார். இவ்வாறு தன் கடைசிமூச்சு உள்ளவரை, மனிதகுல விடுதலை என்னும் பொன்னான மார்க்கத்துக்காக தன்னை முழுமையாக அர்ப் பணித்துக் கொண்டவர் தோழர் ஆர்.ஜி. எந்த லட்சியத்திற்காக அவரைப்போலவே நாமும் நம் வாழ்நாள் முழுவதும் பணியாற்றுவதே அவருக்கு நாம் செய்யும் அஞ்சலியாகும்.”இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் பேசினார்.
எஸ்.என்.எம். உபயதுல்லா
கூட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா பேசுகையில் கூறியதாவது:
தோழர் ஆர்.ஜி.யின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் எனக்கு தனிப்பட்டமுறையில் நன்கு தெரியும். அவர் சகோதரியின் கணவர் சண்முகநாதன் அரசாங்கத்தில் மிகப்பெரிய பதவியில்கல்வி அதிகாரியாக - இருந்தவர். அவரும் ஆர்.ஜி.யைப் போலவே எளிமைக்குச் சொந்தக்காரர்.ஆர்.ஜி.யின் சகோதரர் பாலகுமார் எங்கள் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர். அந்தக் குடும்பமே சமூக நலனின்மீது மிகுந்த அக்கறை கொண்ட குடும்பமாகும்.எல்ஐசி அலுவலகமும் என் கடையும் அருகருகே இருந்ததால் நான் ஆர்.ஜி., என்.எஸ்., கே.லட்சுமணன் ஆகியோருடன் அடிக்கடி பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைக் கும். 1976இல் அவசரநிலை நெருக்கடி பிரகடனம் செய்யப் பட்டிருந்த சமயத்தில் அவர்களை அதிகமான அளவில் சந்தித்துப் பேசிக்கொண்டிருப்போம்.
தோழர் ஆர்.ஜி. குறித்து ஜி.ராமகிருஷ்ணன் அருமையாக உரையை இங்கே நிகழ்த்தினார். அதேபோன்று இன்றைய தீக்கதிரில் இருவர்  நல்ல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். ஒருவர் க.சாமினாதன். மற்றொருவர் ச.வீரமணி. இரண்டு கட்டுரைகளுமே ஆர்.ஜி. அவர்களிடம் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளை மிகவும் உணர்ச்சிகரமான முறையில் நம்முன்னால் வைக்கக்கூடிய அளவிற்கு அற்புதமாக இருந்தன. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் “சித்திரச் சோலைகளே” என்னும் பாடலில் பாடியிருப்பதைப்போல, தோழர் ஆர்.ஜி. இயக்கத்திற்காக, அமைப்பிற்காக, தொழிற்சங்கத்திற்காக, ரத்தம் சிந்தி இருக்கிறார். தோழர் ஆர்.ஜி.க்கு நீங்கள் எல்லோரும் வந்திருந்து, இவ்வளவு அருமையாக இந்தப் புகழஞ்சலி நிகழ்ச்சியை  நடத்திக் கொண்டிருப்பது எந்த அளவிற்கு அவர் உங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுகிறது.  தன் வாழ்நாள் முழுதும் தன் உழைப்பை தோழர்களுக்காக வழங்கிய ஆர்.ஜி.யின் புகழ் என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும்.”
இவ்வாறு எஸ்.என்.எம். உபயதுல்லா கூறினார்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், துணைத் தலைவர் .சாமிநாதன், தீக்கதிர் முன்னாள் முதன்மை பொது மேலாளர் என்.சீனிவாசன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், மாவட்டச் செயலாளர் ஆர். மனோகரன் முதலானவர்களும் உரையாற்றினார்கள். காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் சீதளா கவிதாஞ்சலி செலுத்தினார்.
(ச.வீரமணி)

No comments: