Friday, January 19, 2018

பாஜகவின் நிகழ்ச்சி நிரலைத் தோற்கடிப்பதுதான் மிகவும் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றாகும் –


பாஜகவின் நிகழ்ச்சி நிரலைத் தோற்கடிப்பதுதான்

மிகவும் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றாகும் –

தி டெலிகிராப் நாளேட்டுக்கு சீத்தாராம் யெச்சூரி பேட்டி


புதுதில்லி, ஜன. 19-
பாஜகவின் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பது என்பதுதான் இன்று நம்முன் உள்ள மிகவும் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் கொல்கத்தாவில் (இன்று) வெள்ளிக்கிழமையன்று தொடங்குகிறது. இதனையொட்டி கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி டெலிகிராப் நாளேடு சீத்தாராம் யெச்சூரியைப் பேட்டி கண்டது. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்திட்ட பதில்களும் வருமாறு:
கேள்வி: நான் தற்போது கேட்கவிருப்பது குறித்து நீங்கள் மறுக்கலாம். எனினும் கேட்கிறேன். அக்டோபர் மத்தியக்குழுக் கூட்டத்திற்குப்பின்பும், டிசம்பர் அரசியல் தலைமைக்குழுக் கூட்டத்திற்குப்பின்பும் கட்சியின் சார்பில் வெளியிடப்பட்ட பத்திரிக்கைக் குறிப்பில் (press communique) வரைவு அரசியல் தீர்மானம் மீதான கருத்துவேறுபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக நடைபெற்ற விவாதங்கள் குறித்து கொஞ்சம் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியுமா?

சீத்தாராம் யெச்சூரி: விவாதங்கள், எப்படி பாஜகவைத் தோற்படிப்பது என்பது குறித்தும், பாஜக எதிர்ப்பு சக்திகளை எந்த அளவிற்கு அதிகபட்ச அளவில் ஒருங்கிணைப்பது என்பது குறித்தும் சுற்றிச்சுற்றி வந்தன.  நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடும் அனைவரும்  அறிந்ததே. இதில் எவ்விதமான  சமரசத்திற்கும் இடமில்லை.
அதனால்தான்,  இந்த நிகழ்ச்சிநிரலைப்பின்பற்றிக் கொண்டிருக்கும் ஆளும்வர்க்க கட்சிகளுடன் அரசியல் முன்னணி/கூட்டணி எதையும் நாங்கள் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
ஆனால், இன்றையதினம் ஆட்சியில் பாஜகவினர் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிராக நான்கு முனைகளில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள், நவீன தாராளமய சீர்திருத்தங்களைப் பின்பற்றுவதில் மிகவும் மூர்க்கத்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று, நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வெட்டிவீழ்த்திவிட்டு அந்த இடத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரம்  குறிக்கோளைக் கொண்டுவர வேண்டும் என்ற குறிக்கோளோடு மதவெறி நடவடிக்கைகளையும்  மிகவெறித்தனமாக தொடர்ந்து  ஏவிக் கொண்டிருக் கிறார்கள்.  நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும் அதன் அரசமைப்புச்சட்டத்தின் கீழான நிறுவனங்களையும்கூட ஒழுங்காகச் செயல்படவிடாமல் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை முழுமையாகச் சரண்செய்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பாதுகாப்பு முன்னுரிமைகளுக்குச் சேவகம் செய்திடும் விதத்தில் அதன் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவை நான்கும் நாம் எதற்காக நிற்கிறோமோ அவற்றிற்கு முற்றிலும் எதிரானவைகளாகும். இத்தகைய இவர்களின் நிகழ்ச்சிநிரலை முறியடிப்பதுதான் இன்றைய மிகவும் முக்கியமான முன்னுரிமையாகும்.
 கேள்வி: இந்தப் போராட்டத்தை நீங்கள், முன்பு ஐமுகூ-1 அரசாங்கத்துடன் செய்துகொண்டிருந்ததைப்போன்று, ஐமுகூ-1 அரசாங்கத்திலும், அதன் கொள்கைகளை நிர்ணயிப்பதிலும் இடதுசாரிகள் ஒரு வலுவான பங்கினைச் செய்ததைப்போன்று, இப்போதும் செய்துகொண்டு, வலுவாகச் செய்ய முடியாதா?

சீத்தாராம் யெச்சூரி: இதற்கு நான் மத்தியக்குழுக் கூட்டத்திற்குப்பின்தான் பதில் கூற முடியும்.

கேள்வி: 1996இலும் 2004இலும் தேர்தலுக்குப்பின் வெளியிலிருந்து ஆதரவு அளித்ததைப்போன்ற பரிசோதனைகள் மீண்டும் திரும்புமா  அல்லது அவ்வாறு மேற்கொண்டால்  அது உங்களை ‘காங்கிரஸ் ஆதரவாளர்கள்‘ என்று காட்டிவிடாதா?

சீத்தாராம் யெச்சூரி: நான் காங்கிரஸ் ஆதரவாளனும் இல்லை, பாஜக ஆதரவாளனும் இல்லை. நான் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு ஆதரவாளனாவேன். இன்றையதினம், இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கு என்ன  தேவை என்றால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரச் சுமைகளிலிருந்து உடனடி நிவாரணமும், மதவெறியர்களின் வன்முறை வெறியாட்டங்களால்  உருக்குலைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவியும் ஆகும். இவற்றிற்கு இந்திய அரசாங்கம் மதவெறியர்களால் ஆளப்படக்கூடாது.

 கேள்வி: நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கிறீர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டால், உங்கள் நிலைப்பாட்டை எதிர்ப்பவர்கள் தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்துக்கொள்ளக்கூடாது என்று கூறுபவர்களை பாஜக ஆதரவாளர்கள் என்று அதேதொனியில் கூற முடியாதா?

சீத்தாராம் யெச்சூரி: இத்தகைய குற்றச்சாட்டுகளை மிதக்க விடுவது, மிகவும் கேலிக்குரியவைகளாகும். இவ்வாறு எனக்கு எதிராகக் குற்றஞ்சாட்டுபவர்களை, புரட்சியாளர்கள் என முகமூடி அணிந்துகொண்டு எதார்த்தத்தில் பாஜக ஆதரவாளர்களாவார்களாக இருக்கிறார்கள் என்று எளிதாகக் கூறிவிட முடியும். இவ்வாறு குற்றச்சாட்டுகள் வீசப்படுவதை நான் நம்பவில்லை. இது என்னுடைய குணமும் அல்ல, என் பழக்கமும் இல்லை.

 கேள்வி: ஐமுகூ-1 பரிசோதனையை எப்படி நீங்கள் மதிப்பீடு செய்கிறீர்கள்?

சீத்தாராம் யெச்சூரி: சுதந்திரம் பெற்ற பின் முதன்முறையாக அரசமைப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட உரிமைகளை விரிவாக்கக்கூடிய விதத்தில் செயல்பட்ட முதல் மத்திய அரசாங்கம் இதுதான்.
அரசமைப்புச்சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மக்களுக்கு விரிவாகக் கொண்டுசெல்வதில் ஆளும் வர்க்கங்களை எந்தளவிற்கு உந்தித்தள்ளமுடியும் என்று பார்க்கக்கூடிய விதத்தில்தான் ஐமுகூ-1விற்கு நாங்கள் அளித்துவந்த ஆதரவு என்கிற  பரிசோதனை உண்மையில் அமைந்திருந்தது. ஐமுகூ-1 அரசாங்கம் மேற்கொண்ட பல முக்கிய கொள்கை முடிவுகளில் இடதுசாரிகள் மிகவும் தீர்மானகரமானதொரு பங்கினை வகித்தார்கள்.
கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை அமல்படுத்தினோம். அதனை நகர்ப்புற ஏழைகளுக்கும் கொண்டுவர வேண்டும் என்கிற உறுதிமொழியையும் பெற்றோம். கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்பு உரிமைச் சட்டம், வன உற்பத்திப் பொருள்களில் பழங்குடியினர் உரிமைகளுக்கான சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் என எண்ணற்ற சட்டங்களை நிறைவேற்ற முடிந்தது. இவற்றின்மூலம் ஏற்கனவே இருந்துவந்த அரசமைப்புச்சட்ட உரிமைகளை ஒருமுகப்படுத்துவதுடன் மேலும் புதிய முன்னேற்றங்களையும் விரிவாக்க முடிந்தது.
இந்தச் சட்டங்களின் கீழான  வரம்புகள் என்னவாக இருந்தபோதிலும் அவற்றையும் முழுமையாக வெட்டிக்குறைத்திடுவதிலேயே இப்போதைய பாஜக அரசாங்கம் குறியாக இருக்கிறது.
 கேள்வி: தில்லியில் உள்ள இந்தியன் பெண்கள் பத்திரிகையாளர் அணி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின்போது, நீங்கள், மாற்றுக் கொள்கை என்பது பொருளாதாரக் கொள்கைகளை மட்டும் சார்ந்திருப்பது அல்ல என்றும், மாறாக சமூகக் கொள்கைகளையும் உள்ளடக்கியது என்றும் குறிப்பிட்டீர்கள். தயவுசெய்து விளக்குங்களேன்.

சீத்தாராம் யெச்சூரி: நாம் முன்வைத்திடும் மாற்றுக் கொள்கை என்பது வெறுமனே பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பை மட்டும் கொண்டதில்லை மற்றும் கொண்டதாக இருக்கவும் முடியாது. இந்தியா என்பது பல்வேறு விதமான வேற்றுமைகளுடன் உள்ள நாடாகும். நம் நாட்டின், நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு என்பது இவ்வேற்றுமைகளுக்கிடையேயுள்ள பொதுப்பண்பைப் பிணைத்து வலுப்படுத்துவதன் மூலமே நிலைநிறுத்திட முடியும்.
இத்தகைய வேற்றுமைகளைக் களைந்து ஒரே சீரான தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்று பாஜக அரசாங்கம் மேற்கொள்கிற முயற்சிகள் சமூகத்தில் திடீரென்று வெடிப்பினை ஏற்படுத்திடும். … எனவேதான், அனைவரையும் அரவணைத்துச்செல்லக்கூடிய விதத்திலான கொள்கைகளும், சமூக நீதிக்கான கொள்கைகளும் இடதுசாரிகளின் மாற்றுக் கொள்கைகளில் மிக முக்கியமான கூறுகளாக அமைந்திருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)



No comments: