இன்றைய பத்திரிகையாளரின் நேற்றைய நீதித்துறை அனுபவங்கள் (2)
1967ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் நாள். மறுநாள் தஞ்சை சட்டமன்றத்
தொகுதிக்குத் தேர்தல். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.ஒய்.எஸ்.
பரிசுத்தம் நாடாருக்காக தெருவில் வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தோம்.
எங்கள் தெரு போஸ்ட்மேன் அண்ணன் கோவிந்தராஜன் அவர்கள், “வீரமணி, உனக்கு employment
exchange-இலிருந்து interview card வந்திருக்கிறது,” என்று கத்திக்கொண்டே வந்து, கார்டை
என்னிடம் கொடுத்தார். 16ஆம் தேதியன்ற கும்பகோணத்தில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட, மாவட்ட
மாஜிஸ்ட்டேட் அலுவலகத்தில் பிற்பகல் 2மணிக்கு
ஆஜராகுமாறு அதில் பணிக்கப்பட்டிருந்தது.
நானும், என் நண்பர் நடராஜமாணிக்கமும் 16ஆம் தேதி காலையே கும்பகோணம்
சென்று என் உறவினரும் எனக்குப் பல்வேறு விஷயங்களில் முன்னோடியும் கால்நடை ஆய்வாளருமான
இரா. இரத்தினகிரியை கால்நடை மருந்தகத்திற்கு சென்று சந்தித்து விவரங்களைக் கூறினோம்.
அவர் மகிழ்ச்சியடைந்து எங்களை மதியம் அவருடன் சாப்பிட அழைத்துச்சென்று, பின்னர் நீதிமன்றத்திற்கும்
அழைத்துச்சென்றார்.
நீதிமன்றத்தில் நாங்கள் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்குச்
செல்லாமல் சப் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திலேயே இரத்தினகிரியுடன் திருவாரூரில் வேலை பார்த்தபோது
அறைநண்பராக இருந்த சுப்பிரமணியம் என்பவரைத் தேடிக்கொண்டிருந்தோம். அவரைக் காணவில்லை.
பின்னர் அங்கே தலைமை எழுத்தராக இருந்தவரிடம் சென்று சுப்பிரமணியம் என்பவர் இருக்கிறாரா
என்று கேட்டோம். அவர், “நான்தான் சுப்பிரமணியம்” என்றார். “இல்லை இல்லை, இன்னொருவரைத்
தேடுகிறோம்” என்று அவர் சொன்னார். அவர்,”மாவட்ட
மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இருக்கிறார். இது சப் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்” என்று
சொன்னதும்தான் நாங்கள் நீதிமன்றம் மாறி வந்து நின்றது தெரிந்தது. பின்னர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்திற்கு விரைந்து
சென்று அவருக்குத் தெரிந்த சுப்பிரமணியம் என்பவரைச் சந்தித்தோம். அவர் எங்களை மேலே
இண்டர்வியு நடந்து கொண்டிருக்கிறது, விரைந்து செல்லுங்கள் என்று துரிதப்படுத்தினார்.
அதற்குள் மேலே 387 மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். நான்
சென்றதும், ஏன் லேட் என்று என்னைக் கேட்க, நாங்கள் தெரியாமல் சப் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில்
நின்றிருந்தோம். இப்போது அவர்கள் சொல்லித்தான் இங்கே ஓடிவந்தோம் என்று சொன்னபிறகு, மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டாக இருந்த ஏ.ஜே.அர்னால்ட் அவர்கள்,
“சரி சரி, சர்ட்டிபிகேட்டுகளைக் கொடு” என்று கேட்டு வாங்கிப் பார்த்துவிட்டு, அசந்துவிட்டார்.
420 மதிப்பெண்கள். (420/600) பின்னர சிரஸ்தாரிடம் (நீதிமன்றங்களில் தலைமை நிர்வாக அலுவலர்)
இந்தப் பையனைவிட வேறு எவராவது இதைவிட மதிப்பெண்கள் அதிகம் பெற்று வந்தால் என்னுடைய
வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். இன்னும் அரை மணி நேரம் பாருங்கள். வேறு எவரும் வராவிட்டால்
இந்தப் பையனுக்கு நியமன உத்தரவை அளித்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு, என்னிடம் தட்டச்சு
மட்டும்போதாது, சுருக்கெழுத்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார். அதன்பிறகு
அவர் பணிசெய்த மூன்று ஆண்டுகளும் என்னிடம் மிகவும் நேசமாகவும், பாசமாகவும் இருந்தார்.
இவ்வாறு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில்
குற்றவியல் நீதித்துறையில், திருவையாறில், நகலராக, நியமனம் செய்யப்பட்டேன். பிப்ரவரி
17ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை பணியில் சேர்ந்தேன்.
என்னைப் பணியில் அமர்த்தியபின் குடந்தைக்கு எழுத்தராகப்பதவிஉயர்வு
பெற்றுச் செல்ல இருந்த டி.வி. சேஷகிரி, எனக்கு joining report dictate செய்ய நான் அதை
எழுதியது இன்றளவும் நினைவில் நிற்கிறது. Joining Report-இல் இருந்த வாசகங்கள்.
To
The Sub Magistrate, Thiruvaiaru.
In obedience to the District Magistrate’s proceedings, I
beg to report myself to duty as Copyist In your Honour’s Court on the forenoon
of 17th February, 1967.
Thanking you,
Yours most obedient servant,
(S. VEERAMANI)
என்கிற விதத்தில் அது இருந்தது. நான், திருவையாறில் பணியாற்றியபோது
சம்பளம் 257 ரூபாய்தான். பின்னர் 1976இல் திருமணம் நடைபெற்றபோது நாகப்பட்டினத்தில்
சுருக்கெழுத்தராகப் பணியில் சேர்ந்தேன். அப்போது சம்பளம் 502 ரூபாய்.
திருவையாறில் பணியாற்றிய
காலத்தில்தான் என் தாய் இறந்தார். என் தாய் இறப்புக்கு முக்கிய காரணம் வறுமைதான்.
150ரூபாய் வீட்டுக்குக் கொடுப்பேன். நான் தஞ்சையிலிருந்து திருவையாறு செல்ல 60 ரூபாய்.
மிகவும் நெருக்கடியாக இருந்த காலம். என் தாய் இறந்த அன்றிரவு திருவையாறில் மலர்மண்டபத்
தெருவில் ஓர் அறையில் நான், வைகறை மற்றும் விஜயரங்கன் முதலானோர் இரவு முழுதும் நம்மாலேயே
நம் தாயைக் காப்பாற்ற முடியவில்லையே, நம்மைவிட மிகவும் கீழான நிலையில் உள்ளவர்கள் நிலைஎன்னவாக
இருக்கும் என்கிற ரீதியில் எங்கள் சிந்தனையோட்டம் இருந்தது. அன்றிரவுதான் பொது வாழ்வில்
ஆழமான முறையில் இறங்க வேண்டும் என்கிற சிந்தனை உதயமானது. அன்றிரவு என் மைத்துனரும்
அப்போது எங்களுக்குத் தலைவராக இருந்தவருமான திரு. இரா. இரத்தினகிரியும், அடல் எழிலனும்
திருவையாறு முழுக்க சுற்றிப்பார்த்துவிட்டு அதிகாலை 4 மணிக்கு எங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.
அதன்பிறகுதான் என் பொதுவாழ்க்கை சுறுசுறுப்பாக மாறியது.
No comments:
Post a Comment