Wednesday, January 17, 2018

என்னைப்பற்றி (1)


என்னைப்பற்றி (1)
அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,
வணக்கம்.  என் பால்ய காலம் மற்றும் பதின்பருவக் காலம் குறித்தும் பின்னர் என் அரச ஊழியர் காலம் குறித்தும், பின்னர் என் பொது வாழ்வு குறித்தும் பதிவிட விரும்புகிறேன்.
நான்  சாதாரண ஏழை விவசாய வர்க்கத்தில் என் பெற்றோருக்கு உயிரோடு இருக்கும் குழந்தைகளில் நான்காவதாக பிறந்தேன். என் தந்தை, தஞ்சை  அரண்மனை அருகில் உள்ள பெரிய மார்க்கெட்டில் சிறிய  காய்கறி கடை நடத்திவந்தார். காலை 4 மணிக்குச் சென்றார் என்றால் இரவுதான் திரும்புவார். மதியம் என் தாயோ அல்லது நானோ சென்று சிறிது நேரம் கடையில் அமர்ந்திருப்போம். பெரிய வருமானம் என்று சொல்வதற்கில்லை. ஒவ்வொரு நாளிரவும் என் தாய் சாப்பிட்டுவிட்டுக் கையைக் கழுவும்போது, “இன்றைய பொழுதை ஆண்டவன் எப்படியோ கொடுத்துவிட்டான், நாளைய பொழுது எப்படியோ” என்று நாள் தோறும் கூறுவதை நான் பல தடவை கேட்டிருக்கிறேன்.
எங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிருந்த ஸ்ரீ சதாசிவா உயர்தொடக்கப்பள்ளியில் அடுத்த வீட்டில் வசித்த  நண்பன் குப்புசாமியை சரஸ்வதி பூஜை அன்றைக்குப் பள்ளியில் சேர்த்தபோது நானும் அவனுடன் சென்றேன். அப்படித்தான் என் பள்ளிப்படிப்பு தொடங்கியது.
நான் ஐந்தாம் வகுப்போ, ஆறாம் வகுப்போ படிக்கும்போது, பள்ளியிலிருந்து வெளியேறும் மாணவர்களிடம் தலைமையாசிரியர் நாளை மாதாந்திர கட்டணத்தைக் கொண்டுவரவில்லை என்றால் பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொல்லியே அனுப்புவார். அப்போதுமட்டும் தமிழகத்தின் முதல்வராக இருந்த பெரும் தலைவர் காமராசர் அவர்கள், இலவசக் கல்வித் திட்டத்தை அமல்படுத்தியிருக்காவிட்டால், நான் எஸ்எஸ்எல்சி வரை படித்திருப்பேனா என்பது சந்தேகமே.
நான் இரண்டாவது படிக்கும்போது  வாய்ப்பாட்டில் 1 முதல் 15 வரை ஒப்பிப்பேன். மூன்றாவது படிக்கும்போது 16ஆம் வாய்ப்பாட்டையும் மனனம் செய்துவிட்டேன். பள்ளியில் கணக்கில் நான்தான் அநேகமாக முதல் மாணவனாக இருந்தேன். எட்டாம் வகுப்பு வரை ஸ்ரீ சதாசிவா உயர்தொடக்கப்பள்ளியிலும், பின்னர் செயின்ட் பீட்டர்ஸ் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பது, பத்து மற்றும்  பதினொன்றாம் வகுப்புகளில் நான் படிக்கும்போதும் இது தொடர்ந்தது.
அதேபோல் எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே, 9,10,11 ஆம் வகுப்புகள் வரையிலும் தமிழ்ப் பாடப்பிரிவில் எங்களுக்குப் பாடங்களாக வந்த திருக்குறள், சிலப்பதிகாரம், மற்றும் கவிதைகள் அனைத்தையும் அது மனப்பாடப்பகுதியாக இல்லாவிட்டாலும் முழுமையாக மனனம் செய்துவிடுவேன். எஸ்எஸ்எல்சி படிக்கும்போது எனக்கு இருந்த சிலப்பதிகார வரிகள் இன்றளவும் என் நெஞ்சத்தை விட்டு நீங்க வில்லை.
1965ஆம் ஆண்டு நான் எஸ்எஸ்எல்சி படிக்கும்போதுதான் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. ஒருநாள் நானும் சிறைக்குச் சென்றிருக்கிறேன். அந்த ஆண்டு மே மாதம்தான் தேர்வு நடந்தது. எங்கள் பள்ளியில் ஐந்துபேர் 600க்கு 400க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்த ஐந்து மாணவர்களின் நானும் ஒருவன். என் மதிப்பெண் 420/600. இந்த ஐந்து பேரில் நானும், அப்துல்ரகிம் என்ற மாணவனும்தான் கல்லூரிக்குச் செல்லவில்லை. எனினும் அப்துல் ரகிம் அஞ்சல் அலுவலகத்தில் வேலையில் சேர்ந்துவிட்டான். எனக்கு 18 வயது நிரம்பவில்லை என்பதால் அங்கே வேலை கிடைக்கவில்லை. ஆயினும் பதினேழரை வயதில் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்துவிட்டேன்.  அதற்குள் தட்டச்சு – ஆங்கிலம் – இளநிலைத் தேர்ச்சியடைந்ததால் நீதிமன்றத்தில் நகலர் என்னும் பணிக்கு வேலைவாய்ப்பகத்திலிருந்து நேர்காணல் அட்டை வந்து, முதல் நேர்காணலிலேயே பணியில் சேர்ந்துவிட்டேன். அப்போது வேலைக்கு ஆள் எடுத்த கும்பகோணத்தில் இயங்கிவந்த மாவட்டத் தலைமை நீதித்துறை நடுவர், ஏ.ஜே. அர்னால்ட் அவர்கள், நேர்காணலுக்கு வந்த மாணவர்கள் எட்டு பேரையும் வரிசையாக எஸ்எஸ்எல்சியில் பெற்ற மதிப்பெண்களைச் சொல்லச் சொன்னார். நான்தான் அதிக மதிப்பெண். எனவே என்னைத் தேர்வு செய்துவிட்டு, இன்னும் அரைமணி நேரத்திற்குள் இவனை விட அதிக மதிப்பெண் எடுத்து எவரேனும் வந்தால் என் வீட்டிற்கு அனுப்புங்கள். இல்லையெனில் வீரமணியைத் தேர்வு செய்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். இவ்வாறு என் நீதிமன்றப் பணி பதினேழரை வயதிலேயே தொடங்கிவிட்டது. இடையில் ஒருசில மாதங்கள் பணியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும், மீளவும் நீதிமன்றத்திலேயே பணி கிடைத்து சுமார் 27 ஆண்டுகள் தஞ்சை மாவட்டத்தில் நகலர், ஆராய்வாளர், தட்டச்சர், பின்னர் சுருக்கெழுத்தர் என்று பணி உயர்வு பெற்றேன். எனினும் சம்பளம் மிகவும் குறைவுதான்.

(இனி அரசு ஊழியர் அனுபவங்களைப் பகிர்கிறேன்.)

No comments: