Sunday, January 14, 2018

வழக்குகள் ஒதுக்கப்படுவது “தன்னிச்சையாக” இருக்கக்கூடாது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, முன்னாள் நீதிபதிகள் நால்வர் திறந்த மடல்


புதுதில்லி, ஜன. 15-
“நீதித்துறையின் மீதும், உச்சநீதிமன்றத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை மீளவும் ஏற்படுத்திட” உடனடியான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று வலியுறத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான, நீதியரசர் தீபக் மிஷ்ராவுக்கு, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரும், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் மூவரும் இணைந்து ஒரு திறந்த மடல் அனுப்பி இருக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.பி.சாவந்த், தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா,  மதராஸ் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு மற்றும் பம்பாய் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச். சுரேஷ் ஆகிய நால்வரும் இணைந்து கையொப்பமிட்டு, ஒரு திறந்த மடலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஞாயிறு அன்று அனுப்பி இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
“அன்பார்ந்த தலைமை நீதிபதி அவர்களே,
உச்சநீதிமன்றத்தின்  மூத்த நீதிபதிகள் நால்வர்,  வழக்குகள் ஒதுக்கீடுகள் செய்யும் விதம் குறித்து, அதிலும் முக்கியமாக கூருணர்ச்சிமிக்க ‘சென்சிடிவ்’ வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமர்வாயங்களுக்க ஒதுக்கீடு செய்திருப்பது சம்பந்தமாக, ஓர் சீரியசான பிரச்சனையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். வழக்குகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், ஜூனியர் நீதிபதிகளால் தலைமை தாங்கப்படும் குறிப்பிட்ட சில அமர்வாயங்களுக்கு மட்டும் தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் ஆழ்ந்த கவலையுடன் அவர்கள் இதனைத் தெரிவித்திருக்கிறார்கள். இது, நீதி பரிபாலன அமைப்பு முறைக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் கடும் தீங்கினை ஏற்படுத்திடும்.
நாங்கள், உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகளும் எழுப்பிய பிரச்சனைகளுடன் நாங்கள் ஒத்துப்போகிறோம். வழக்குகளை அமர்வாயங்களுக்குப் பிரித்து அனுப்பும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு என்ற போதிலும், இவ்வாறு பிரித்து அனுப்புவதைத் தன்னிச்சையாக செய்வது, அதுவும் கூருணர்ச்சிமிக்க  ‘சென்சிடிவ்’ மற்றும் முக்கியமான வழக்குகளை பொறுக்கி எடுக்கப்பட்ட ஜூனியர் நீதிபதிகளுக்கு, தலைமை நீதிபதி அனுப்பலாம் என்று இதற்குப் பொருள் அல்ல.        
இந்தப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அமர்வாயங்களுக்கு வழக்குகளை ஒதுக்கீடு செய்வது மற்றும் வழக்குகளைப் பிரித்துக் கொடுப்பது என்பது பகுத்தறிவின் அடிப்படையிலமைந்த (rational). நேர்மையான (fair) மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் (transparent) மிகவும் தெளிவான விதிகள் மற்றும் விதிமுறைகளுடன் அமைந்திட வேண்டியதும் அவசியம். நீதித்துறையின் மீதும் உச்சநீதிமன்றத்தின்மீதும் மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கு உடனடியாக இதனைச் செய்திட வேண்டும்.  
எனினும், இதனைச் செய்யும்வரையிலும், நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட, அனைத்துக் கூருணர்ச்சி மிக்க ‘சென்சிடிவ்’  மற்றும் முக்கியமான வழக்குகளும், உச்சநீதிமன்றத்தின் மிகவும் மூத்த (senior most) நீதிபதிகளின் அரசமைப்புச்சட்ட அமர்வாயத்தால் நடத்தப்பட வேண்டியது முக்கியமாகும். இத்தகைய நடவடிக்கைகள் மூலமாக மட்டும்தான், உச்சநீதிமன்றம் நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்குகளை நீதிபதிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் முறையானது, மிகவும் முக்கியமான மற்றும் கூருணர்ச்சிமிக்க ‘சென்சிடிவ்’ வழக்குகளில் ஒரு குறிப்பிட்ட முடிவினை எய்துவதற்காக,   துஷ்பிரயோகம் செய்திடவில்லை என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்திடும்.
எனவே, நாங்கள் இது தொடர்பாகத் தாங்கள் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்திடுமாறு வலியுறுத்துகிறோம்.”
இவ்வாறு முன்னாள் நீதியரசர்கள் பி.பி.சாவந்த், ஏ.பி.ஷா, கே. சந்துரு மற்றும் எச். சுரேஷ் ஆகிய நான்கு நீதிபதிகளும் தங்கள் திறந்த மடலில் தெரிவித்துள்ளார்கள்.
(ந.நி.)


No comments: