Thursday, January 25, 2018

குடியரசு அரசமைப்புச்சட்டத்திற்கு அச்சுறுத்தல்கள்

 தலையங்கம்
நாடு, குடியரசின் 68ஆம் ஆண்டைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், நம் அரசமைப்புச்சட்டம் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26இலிருந்து அமலுக்கு வந்தது என்பதையும் அன்றிலிருந்துதான் இந்தியா ஒரு குடியரசு நாடாக மாறியது என்பதையும் மீண்டும் நினைவுகூர்தல் அவசியமாகும்.  அத்தகைய அரசமைப்புச்சட்டம் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு, தற்போது ஆளாகி இருக்கிறது என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஓர் உண்மையாகும்.
இந்தியா, நம் அரசமைப்புச்சட்டத்தின் காரணமாக மதச்சார்பின்மை அடிப்படையிலான நாடாளுமன்ற ஜனநாயக நாடாக மாறி இருக்கிறது. நம் அரசமைப்புச்சட்டம், அனைத்துக் குடிமக்களுக்கும், அவர்கள் இனம், மதம், பாலினம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி இருக்கிறது. அடிப்படை உரிமைகளையும் அனைத்துக் குடிமக்களுக்கும் உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. மேலும் அரசமைப்புச்சட்டமானது, சிறுபான்மையினருக்கும், தலித்துகள், பழங்குடியினர் போன்ற சமூகரீதியாக ஒடுக்கப்பட்டவர்களுக்குமான உரிமைகளையும் அங்கீகரித்திருக்கிறது. 
இத்தகைய அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைகளுக்கே இன்றைய தினம் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அரசமைப்புச்சட்டத்தினையும் அதன் இதர அமைப்புகளையும்  உயர்த்திப்பிடித்திட வேண்டும் என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டவர்களே இத்தகைய அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிற நிலை உருவாகி இருக்கிறது. ஆளும் பாஜக-ஆர்எஸ்எஸ் வகையறா இந்துத்துவா சித்தாந்தத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கிறது. இது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை மாண்புகளுக்கு விரோதமானவைகளாகும். ஆர்எஸ்எஸ் இயக்கமும் அதன் சிந்தனாவாதிகளும் நாட்டின் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று கூறுவதை எந்தக்காலத்திலும் மூடி மறைத்ததில்லை.
ஆர்எஸ்எஸ்-இன் இரண்டாவது தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கரின் கூற்றுப்படி, நம் அரசமைப்புச்சட்டமானது, “மேற்கத்திய நாடுகள் பலவற்றின் அரசமைப்புச்சட்டங்களிலிருந்து பிய்த்து பிய்த்துக் கோர்க்கப்பட்ட கதம்பமாகும்.“  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு தலைவரும், ஜன சங்கத்திற்கு ஒரு சமயம் தலைவராக இருந்தவருமான தீன் தயாள் உபாத்யாயா, இதே கருத்தை எதிரொலித்து, இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் போலியான ஒன்று என்றும், இந்தியாவின் வாழ்க்கை முறை மற்றும் சிந்தனைகளை முறித்துக் கொண்ட ஒன்று என்றும் கூறினார். அவர்கள் விரும்பும் அரசமைப்புச்சட்டம் என்னவென்றால், இந்தியாவின் புராதனக் கலாச்சாரத்தையும், சமுதாயப் பண்புகளின் அடிப்படைக்கூறுகளுக்கும் ஒத்துப்போகிற, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட மனுஸ்மிருதியைத்தான் நாட்டின் அரசமைப்புச்சட்டமாகக் கொண்டுவர வேண்டும் என்பதாகும்.
மோடி அரசாங்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்ததிலிருந்தே, அவருக்குக் கீழ் செயல்படும் அமைச்சர்களும் மற்றும் முக்கியமான பொறுப்புகள் பலவற்றை வகிப்பவர்களும் அவ்வப்போது தற்போதைய அரசமைப்புச்சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த விதத்தில் சமீபத்தில் ஆனந்த் குமார் ஹெக்டே என்கிற ஒரு மத்திய அமைச்சர் வரவிருக்கும் காலங்களில் தற்போதைய அரசமைப்புச்சட்டம் மாற்றப்படும் என்று கூறினார். உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இருக்கும் ஆதித்யநாத், ‘மதச்சார்பின்மை‘ என்கிற சொல் சுதந்திரத்திற்குப் பின் கூறப்பட்டுவரும் மிகப்பெரிய பொய் என்று கூறியிருப்பதன்மூலம், அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள் மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார்.
அரசமைப்புச்சட்டத்தின் பல்வேறு அம்சங்களும் தற்போது தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன. அரசமைப்புச்சட்டம் பிரச்சாரம் செய்யும் அறிவியல் மனோபாவம், இந்துத்துவா பக்தர்களுக்கு வெறுக்கத்தக்க பொருளாக மாறியிருக்கிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைப் போற்றிப் புகழுதலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத சிந்தனைகளும் இன்றைய ஆட்சியாளர்களின் அடையாளங்களாக மாறி இருக்கின்றன. டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடானது அறிவியல்பூர்வமாகத் தவறானது என்று சமீபத்தில் ஒரு மத்திய மனிதவள வளர்ச்சித்துறை  இணை அமைச்சர், சத்யபால் சிங், கூறியிருப்பது சமீபத்திய எடுத்துக்காட்டாகும். 
இந்தத்தருணத்தில், 1949ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று அரசியல் நிர்ணயசபையில் இறுதியாகப் பேருரையாற்றிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் கூற்றை மீளவும் நினைவு கூர்வது மிகவும் பொருத்தமானதாகும். அப்போது அவர், “ஓர் அரசமைப்புச்சட்டம் என்னதான் நல்லவிதமாக அமைந்திருந்தாலும், அதனைச் செயல்படுத்த வேண்டியவர்கள் மோசமானவர்களாக இருந்தால், அரசமைப்புச்சட்டமும் மோசமானதாக மாறிவிடும்,“ என்றார். இப்போது அரசமைப்புச்சட்டத்தின் கீழ் செயல்பட்டுக்கொண்டிருப்பவர்கள், உண்மையில் மிக மோசமானவர்களாவார்கள்.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-இன் இறுதிக் குறிக்கோள் தற்போதைய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவது என்பதே. ஆனால்  தற்போது நடந்துகொண்டிருப்பது என்னவென்றால், எந்த அரசமைப்புச்சட்டத்தின்கீழ் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறார்களோ அவர்களே அதனை அழித்து வீழ்த்துவதற்கான செயல்களில் இறங்கியிருப்பதாகும்.  அரசமைப்புச்சட்டத்தின் கீழான ஒவ்வொரு அமைப்பும், அது நீதித்துறையாக இருந்தாலும் சரி, அல்லது சிவில் சர்வீஸாக இருந்தாலும் சரி, அல்லது ஆயுதப்படையாக இருந்தாலும் சரி, அனைத்துமே உள்ளுக்குள்ளேயே அரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன, அவற்றின் நேர்மையான செயல்பாடுகள் ஐயுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசமைப்புச்சட்டத்தினை உயர்த்திப்பிடிக்க வேண்டிய இடத்தில் அமர்ந்திருக்கும் ஆளுநர்கள் போன்றவர்களே அரசமைப்புச்சட்டத்திற்கு விரோதமான சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
அரசமைப்புச்சட்டத்தைப் பலவீனப்படுத்துவதற்கான இத்தகைய முயற்சிகளும், அதனை அரிக்கச் செய்திட அவர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலாகும். இவை நம் மதச்சார்பற்ற-ஜனநாயகக் குடியரசுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக உருவாகி இருக்கின்றன. இத்தகைய தாக்குதல் எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியதாகும். மக்கள்தான்  அதனைச் செய்திட முடியும். ஏனெனில், இறுதியில் அவர்கள்தான் அரசமைப்புச்சட்டத்தின் பாதுகாவலர்களாவார்கள்.
(ஜனவரி 24, 2018)
தமிழில்: ச.வீரமணி  



No comments: