Sunday, January 14, 2018

“ஆதார்” கட்டாயம் என்பதைக் கைவிடுக


தி டிரிப்யூன் நாளேடு, 100 கோடிக்கும் மேலான ஆதார் எண்களின் விவரங்களைத் தங்கள் செய்தியாளர் எப்படிப் பெற்றார் என்ற ஒரு புலனாய்வு செய்தியை, ஜனவரி 4 அன்று வெளியிட்டிருந்தது. செய்தியாளர் 500 ரூபாயை ஒரு விற்பனையாளரிடம் பேடிஎம் (Paytm) மூலமாகக் கொடுத்து, தனக்கென்று ஒரு இணைய முகவரியை கடவுச்சொல்லுடன் ஏற்படுத்திக்கொண்டு, ஆதார் அமைப்பான யுஐடிஏஐ எனப்படும் யூனிக் ஐடண்டிபிகேசன் அத்தாரிட்டி ஆப் இந்தியா (UIDAI-- Unique Identification Authority of India)வில் பதிவு செய்யப்பட்டுள்ள எந்தவொரு பெயரையும், அவர்களின் முகவரி, போட்டோ, தொலைபேசிஎண் மற்றும் மின் அஞ்சல் முகவரியுடன் பெற முடிந்திருக்கிறது. 
யுஐடிஏஐ அமைப்பினரும் மத்திய அரசாங்கமும் பயோமெட்ரிக் தரவுகள் இல்லாமல் ஆதார் விவரங்களை எவரும் பெற முடியாது என்று கூறிவந்ததை எந்த அளவிற்கு போலியான கூற்று என்பதை  செய்தியாளரின் புலனாய்வு போட்டு உடைத்திருக்கிறது.
ஆதார் திட்டம் ஐமுகூ அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. அவ்வாறு அது தொடங்கப்பட்ட சமயத்திலேயே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இத்திட்டம் குறித்து, எண்ணற்ற ஆட்சேபணைகளை எழுப்பியது. அவற்றில் ஒன்று, இந்தத் திட்டத்தின்கீழ் கணினியில் மென்பொருளைத் தயாரிக்கும் பணியை இரு அமெரிக்க நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, அவை இந்திய மக்களிடம் சேகரிக்கும் அனைத்துத் தரவுகளையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அவற்றுக்கு உண்டு. இவ்வாறு, அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுடன் தொடர்பினை வைத்துக்கொண்டுள்ள இந்த இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் ஆதார் அட்டைதாரர்களின் தரவுகள் ஏற்கனவே முழுமையாகத் தெரியும்.
இவ்வாறு சேகரிக்கப்படும் தரவுகள் தனியார் வர்த்தக நலன்களுக்குப் பயன்படுத்தப்படவும் முடியும் என்பது நாம் எழுப்பிய மற்றுமொரு ஆட்சேபணையாகும்.  அரசாங்கத்தின் இணைய தளங்களில் ஆதார் விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதற்கு ஏற்கனவே ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. தி டிரிப்யூன் புலனாய்வு, அரசாங்கத்தாலும், ஆதார் அமைப்பாலும் பாதுகாப்பானது என்று சொல்லப்படும் வளையத்திற்குள் புகுந்து எவ்வளவு எளிதாக விவரங்களை வெளிக்கொணரமுடியும் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது.
ஆதார் பயோமெட்ரிக் தரவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பாக மற்றொரு அதிர்ச்சியளித்திடும் நிகழ்வு, சென்ற மாதம் வெளிச்சத்திற்கு வந்தது. ஏர்டெல் போன் நெட்வொர்க்கிற்கு மத்திய அரசாங்கம் அதனுடைய மொபைல் போன்களை ஆதார் எண்களுடன் இணைத்துக்கொள்ள அதிகாரம் அளித்திருந்தது. ஏர்டெல் நிறுவனம், அந்த ஆதார் எண்களில் உள்ள நபர்களை, தன்னுடைய ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி (Airtel Payments Bank) யுடன் வாடிக்கையாளராவதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறந்ததன் மூலம் துஷ்பிரயோகம் செய்திருப்பது தெரிய வந்தது. வாடிக்கையாளர்களின் சம்மதத்தைப் பெறாமலேயே, மிகப் பெரிய அளவில் இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் நேரடிப் பயன்பாடுகளுக்கான மான்யத் தொகைகளை, மக்களுக்கு அவர்கள் கடைசியாக ஆதார் எண்களை எந்த வங்கியில் வைத்திருக்கிறார்களோ அந்த வங்கிகள் மூலமாக அவர்களுக்குச் செலுத்தி வந்தது. தற்போதுள்ள விதிகளின்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றிற்காக மான்யங்கள் வாடிக்கையாளர் பெயரில் கடைசியாக எந்த வங்கியில் ஆதார் எண்ணுடன் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறதோ அந்த வங்கிக்கு அனுப்பப்பட்டுவிடும்.
இந்த விதத்தில், ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி இத்தகைய மான்யங்கள் தொகை 190 கோடி ரூபாயைத் தங்கள் வங்கியில் சேகரித்திருக்கிறது. வாடிக்கையாளர்கள் ஆதார் எண்களை இதற்கு முன்பு பதிவு செய்துவைத்திருந்த தங்களுடைய முறையான வங்கிகளில் மான்யங்களைப் பெறமுடியாதபோதுதான், இவ்வாறு ஏர்டெல் பேமெண்ட் வங்கியின் துஷ்பிரயோகம் வெளிச்சத்திற்க வந்தது. யுஐடிஏஐ இப்போது ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியை சஸ்பெண்ட் செய்திருக்கிறது.  அவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை அபராதமாக விதித்திருக்கிறது. ஆயினும் அந்த வங்கி மோசடி செய்த தொகையுடன் ஒப்பிடும்போது, யுஐடிஏஐ அபராதம் விதித்துள்ள தொகை மிகவும் குறைவாகும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொது விநியோக முறையில் ரேஷன் பொருள்களை வாங்குவதற்கும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழான பயன்பாடுகளைப் பெறுவதற்கும் ஆதார் எண்களைக் கட்டாயமாக்கக்கூடாது  என்று கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறது. பொது விநியோக முறையின் கீழ் ரேஷன் பொருட்கள் பயோமெட்ரிக் சான்றுறுதியைப் பெற்ற பிறகுதான் மக்களுக்கு வழங்கப்படுகிறது. ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சான்றுறுதி அளிக்கும் முறை அமலுக்கு வந்துள்ள ராஜஸ்தான், ஜார்கண்ட், தெலங்கானா போன்ற மாநிலங்களில்,  லட்சக்கணக்கான குடும்பங்கள் ரேஷன் பொருட்களைப் பெற முடியாது கொடுமை நடந்துள்ளது. இவ்வாறு அவர்களின் ரேஷன் பொருள்களை மாநில அரசாங்கங்கள் கவர்ந்துகொண்டுவிட்டன.   காரணம், இம்மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள மிஷின்களில் கைரேகை அடையாளம் பதியும் கருவி செயல்படவில்லை. பல வழக்குகளில் ரேஷன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவே இல்லை.
விளைவு, ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது நிறைந்த சந்தோஷி குமாரி என்னும் சிறுமி பட்டினிக் கொடுமையால் இறந்தது போன்ற துயரார்ந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உத்தரப்பிரதேசம் மற்றும் இதர இடங்களிலும் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பொது விநியோக முறைக்கு ஆதார் அடையாளம் அவசியம் என்பது இவ்வாறு நாட்டில் ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்பிற்குப்  பகையானதாக மாறி இருக்கிறது.
இந்த லட்சணத்தில் அரசாங்கமானது பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு உட்பட வாழ்க்கையின் அனைத்து விதமான சங்கதிகளுக்கும் ஆதார் அடையாளத்தை இப்போது திணித்துக் கொண்டிருக்கிறது. சில அரசாங்க மருத்துவமனைகள் கூட ஆதார் அட்டை அடையாளத்தை, நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு முன் கோரக்கூடிய அளவிற்கு நிலைமைகள் சென்றிருக்கின்றன. ஆதார் அடையாளம் இல்லாமல் ஒருவர் நாட்டின் பிரஜையாகவே இருக்க முடியாது, அ வரை இந்த அரசாங்கம் ஒரு மனிதனாகவே மதிக்கமாட்டோம் என்கிற நிலைக்கு  அரசாங்கம் சென்று கொண்டிருக்கிறது.
ஆதார், ஓர் எதேச்சாதிகார அரசாங்கத்தின் கைகளில் மற்றுமோர் ஒடுக்குமுறை கருவியாக மாறி, குடிமக்களுடைய அந்தரங்கம் மற்றும் அடிப்படை உரிமைகள் மீது அரசின் நுண்கண்காணிப்பினைக் கொண்டுவருவதற்கான வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது.
ஆதார் எண்கள் யுஐடிஏஐ நிறுவனத்திடம் அப்படியொன்றும் பாதுகாப்பாக இல்லை என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த, தி டிரிப்யூன் நாளிதழுக்கு எதிராகவும், அதன் செய்தியாளருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்திருப்பதிலிருந்தே அரசாங்கம் மற்றும் யுஐடிஏஐ அமைப்பின் உளப்பாங்கை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆதார் அமைப்புமுறை குறைபாடுகளுடன் கூடியது என்றும், பூரணத்துவமற்ற அமைப்பு என்றும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அரசாங்கமானது இவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த செய்தியாளர் மீதும், பத்திரிகை சுதந்திரத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
அனைத்து அடிப்படை சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என்று கொண்டுவருவதை நிறுத்திக்கொள்வதே இந்த முட்டுக் கட்டையிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழியாகும். அனைத்து வங்கிக் கணக்குகளையும், மொபைல் தொலைபேசி எண்களையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்கிற உத்தரவை அரசாங்கம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
கடந்த ஐந்தாண்டுகளாக, ஆதாருக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தின் முன்பு நிலுவையில் இருந்துகொண்டிருக்கின்றன. இந்த மிகவும் முக்கியமான பிரச்சனைமீது காலத்தே முடிவு எடுக்காமல் நீதிமன்றம்  அசமந்தமாக மனுக்களைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது.
2017 நவம்பரில் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வாயம் இப்போது இந்த மனுக்களை விசாரித்துக்கொண்டிருக்கிறது.  இது மக்களையும், நாட்டின் ஜனநாயக சுதந்திரங்களையும் மிகவும் பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக இருப்பதால்,  நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பினை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இதில் வழங்கிட வேண்டும்.
(ஜனவரி 10, 2018)     

(தமிழில்: ச.வீரமணி) 

No comments: