அன்பார்ந்த நண்பர்களே,
பல்வேறு வேலைபளுவின் காரணமாக சுயபுராணத்தைத் தொடர முடியவில்லை.
இருப்பினும் தற்சமயம் போக்குவரத்துக் கட்டணத்திற்கு எதிராக மாணவர்களும், வாலிபர்களும்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். பல ஆண்டு
கால இடைவெளிக்குப்பின் ஆட்சியாளர்கள் போராடுபவர்களைச் சிறையில் தள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தநிலையில் எனக்கு இதுபோன்று பொதுநலன்களுக்காகப் போராடுபவர்களைச்
சிறையில் தள்ளும்போது, நீதிமன்ற நடுவர்கள் சிலர் நடந்துகொண்ட விதம் குறித்துக் குறிப்பிட்டால்,
இன்றைக்குப் போராடும் தோழர்களுக்கும், அவர்களைக் குற்றவியல் நீதிமன்றத்தில் சந்தித்திடும்
நீதிமன்ற ஊழியர்கள், வழக்குரைஞர்களுக்கும் பயனளிக்கும் என்பதால், பதிவு செய்திட விரும்புகிறேன்.
நான் திருவையாறில் பணியில் சேர்ந்த ஒரு மாதத்திலேயே oust ஆகிவிட்டது.
பின்னர் உடனடியாக வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டேன். பின்னர் எனக்கு வரவேண்டியிருந்த நிலுவைத்தொகைகளை
வாங்குவதற்காக திருவையாறு நீதிமன்றத்திற்குச் சென்றபோது, சக ஊழியர்களை என்னிடம் கும்பகோணம்
சென்று மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டைப் (இப்போது தலைமை நீதித்துறைநடுவர்) பார் என்றார்கள்.
நான் மறுநாள் குடந்தை சென்று மாவட்ட மாஜிஸ்ட்ரேட், ஏ.ஜே.அர்னால்டைப் பார்க்கச் சென்றபோது
வெளியில் காரை சுத்தம் செய்துகொண்டிருந்த சாமி ஐயா என்கிற ஓட்டுநர் (என்னை அடையாளம்
கண்டு அன்றே நண்பராகவும் மாறிவிட்டார். பின்னர் அவர் நான் பணியிலிருந்த காலம் முழுவதும்
என் நெருங்கிய நண்பராகவே மாறிவிட்டார். இப்போது அவரது மகள் நீதித்துறை ஊழியராகவும்,
அவரது மருமகன் நீதிபதியாகவும் இருக்கிறார்கள்.) என்னை மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச்
சென்றார். அவர் என்னைப் பார்த்தபின் “எங்கே போட்டாலும் போவாயா?“ என்று கேட்டார். நான்
“எந்த ஊர் போட்டாலும் போவேன், ஐயா“ என்றேன். சரி ஆபிசுக்குப் போ, என்று என்னை அனுப்பிவிட்டார்.
ஆபிஸ் வந்தபின் எனக்கு அறந்தாங்கிக்கு (அப்போது அது தஞ்சை மாவட்டத்திலிருந்தது) அடிசனல்
காப்பிஸ்ட்டாக உத்தரவு பிறப்பித்து கையிலேயே கொடுத்துவிட்டார்கள். அங்கே இரண்டு மாதம்
பணியிலிருந்தேன். பின்னர் அங்கும் oust ஆகிவிட்டது.
பின்னர் தஞ்சை வந்தபோது, மறுநாள் வேலைவாய்ப்பகத்திலிருந்து நேர்காணல்
அட்டை வந்திருந்தது. மறுநாள் குடந்தை, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்திற்கு தஞ்சை சப்
டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆராய்வாளர் பணிக்காக நேர்காணலுக்கு வருமாறு அதில்
காணப்பட்டது. மறுநாள் குடந்தை சென்று நேர்காணலைச் சந்தித்தபோது மாஜிஸ்ட்ரேட் ஆச்சர்யம்
அடைந்தார். நீ எங்கே இப்படி என்று கேட்டார். அந்த அடிசனல் காப்பிஸ்ட் போஸ்ட்
oust ஆகிவிட்டது ஐயா என்றேன். “Is it?” என்று
ஆச்சர்யத்துடன் சிரஸ்தாரைக் கேட்க அவர் ஆம் என்றார். பின்னர் வழக்கம்போல் எல்லோரையும்
மதிப்பெண்கள் கூறச் சொன்னார். அப்போதும் நானே அதிக மதிப்பெண். எனவே எனக்கு நியமன உத்தரவைப்
பிறப்பித்துவிட்டு மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டார்.
அடுத்தநாள் தஞ்சையில் வந்து சப் டிவிசனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில்
ஆராய்வாளராக சேர்ந்துவிட்டடேன். இரண்டு மாதங்கள் பணி. பின்னர் அங்கிருந்து திருத்துரைப்பூண்டிக்கு
மாற்றல் செய்யப்பட்டேன். இவ்வாறு 1967இல் தொடங்கிய என் நீதித்துறை ஊழியர்பயணத்தில்
முதல் நான்கைந்து மாதங்களில் திருவையாறு, அறந்தாங்கி, தஞ்சாவூரை அடுத்து திருத்துரைப்பூண்டிக்கு
மாற்றலானேன். இவை அனைத்தும் என் பதின்பருவ வயதிலேயே நிகழ்ந்துவிட்டன. அப்போது என் கல்வித்தகுதி
என்பது எஸ்எஸ்எல்சி, தட்டச்சு ஆங்கிலம் கீழ்நிலை மற்றும் தட்டச்சு தமிழ் கீழ்நிலை என்பவைகளாகும்.
அடுத்தபகுதியில் நீதிமன்றத்தீர்ப்புகள் தொடர்பான அனுபவங்களைத்
தொடர்கிறேன்.
2 comments:
உங்களது வலைத்தளம் நேற்றுதான் என் கண்ணிலேபட்டது... சுவராஸ்யமாக இருக்கிறது... உங்கள் எழுத்துகளை தொடர்கிறேன்
ஆர்வத்தை தூண்டும் தகவல்கள்
Post a Comment