Showing posts with label Trump. Show all posts
Showing posts with label Trump. Show all posts

Sunday, August 27, 2017

அமெரிக்காவுடன் மேலும் நெருங்கிடும் மோடியின் விசுவாசம்


மோடி அரசாங்கம், அமெரிக்காவை ராணுவ ரீதியாக மிகவும் நெருக்கமானமுறையில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்திற்கு நரேந்திர மோடி தன்னாலான அனைத்து விதங்களிலும் விசுவாசமாக நடந்துகொள்வார் என்றே தோன்றுகிறது.
ஆகஸ்ட் 15 அன்று, டொனால்டு டிரம்பிற்கும் நரேந்திர மோடிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. டிரம்ப், மோடிக்கு இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறியதுடன், இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையே புதிய சில நடவடிக்கைகள் குறித்தும் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்.
வெள்ளை மாளிகை யிலிருந்து வந்துள்ள செய்தி, “இருநாட்டின் தலைவர்களும் இந்தியபசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலேயும் இரு அமைச்சர்களைக் கொண்ட ஓர் அமைப்பு நிறுவப்படும்என்றும்அந்த அமைப்பு ராணுவரீதியான (strategic) கலந்தாலோசனைகளை முன்னெடுத்துச் செல்லும்என்றும் கூறுகிறது.

புதிய இரண்டுக்கு இரண்டு

இரண்டுக்கு இரண்டு அமைச்சர்கள் என்பது, இந்தியாவின் தரப்பில் ராணுவ அமைச்சர் மற்றும் அயல்துறை அமைச்சர்களையும், இதேபோன்று அமெரிக்காவில் இத்துறைகளுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்களையும் குறிப்பிடுகிறது.

இதுவரை இந்த 2க்கு 2 என்பது, நம் நாட்டின் சார்பில் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாக இருந்தார்கள். அதேபோன்று அமெரிக்காவின் சார்பிலும் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாகத்தான் இருந்தார்கள். இப்போது வர்த்தகத்துறை அமைச்சர் என்பது ராணுவத்துறை அமைச்சர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
இம்மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பு அதிகரித்துக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. அமெரிக்கா, ஆசியாபசிபிக் பிராந்தியத்தில் இவ்வாறு 2க்கு 2 அமைச்சர்களைக் கொண்ட ராணுவக் கூட்டணிகளை இதுவரையிலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன்தான் வைத்திருந்தது. இப்போது அதனுடன் இந்தியாவும் சேர்ந்துகொண்டிருக்கிறது.
இந்திய-பசிபிக் பிராந்தியம் என்பதன் பொருள் என்னவென்பதை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும். 2015 ஜனவரியில் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த சமயத்தில், ஆசியபசிபிக் மீதான அமெரிக்கஇந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (US-India Joint Vision Statement on Asia Pacific)  ஒன்று தயாரிக்கப்பட்டதைப் பார்த்திட வேண்டும். இப்போது இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டணி என்பது, சீனாவே தங்களின் பிரதான கவலை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மோடியின் நன்றி உணர்த்துவது என்ன?

இந்தப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு மோடி சென்றிருப்பதை, மோடி “வட கொரிய அச்சுறுத்தலுக்கு எதிராக உலகத்தை ஒன்றுபடுத்திட ஒரு வலுவான தலைமையைக் கொடுப்பதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி தெரிவித்திருப்பதிலிருந்தே நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியா, அமெரிக்காவின் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்திடும் என்பதை மீண்டும் உறுதியளித்திடும் விதத்தில் இந்தக்கூற்று அமைந்திருக்கிறது.

அதன்பிறகு, ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தானத்துடனும், தெற்கு ஆசிய நாடுகளுடனும் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்திட வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்துள்ள பயங்கரவாதிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததில் மோடி அரசாங்கம் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது.

டிரம்ப் மேலும் கூறுகையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் கொடுத்திருப்பதாகவும், இந்நிலையில் தாங்கள் யாருக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ அத்தகைய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவ்வாறு அறிக்கைகள் விடுவதெல்லாம் அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததுதான். எதார்த்த நிலை என்னவென்றால், ஆப்கானிஸ்தானத்தில் பாகிஸ்தானின் உதவியில்லாமல் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான்.
டிரம்பின் எதிர்பார்ப்பு

இந்தியா குறித்து, டிரம்ப் கூறுகையில், “இந்தியா, அமெரிக்காவுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் எங்களுக்கு அதிக அளவில் இந்தியா உதவிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக, பொருளாதார உதவி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளில் அதன் உதவி மிகவும் அவசியமாகும்.
டிரம்ப், தன்னுடைய நேட்டோ கூட்டணி நாடுகளுடனும் இதே போன்றே நிலை எடுத்திருக்கிறார். தாங்கள் தங்களுடைய ராணுவத்தினருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்துகொண்டிருப்பதாகவும், அத்தகைய செலவுகளைத் தங்களுடன் ராணுவக் கூட்டணி வைத்துள்ள நாடுகள் தாங்குவதை அமெரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறியிருக் கிறார். ஆப்கானிஸ்தானத்தைப் பொறுத்தவரை, தன்னுடைய கூட்டணிகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தானும் இந்தியாவும் பல பில்லியன் டாலர்கள் ஈட்டிக்கொண்டிருப்பதால், அதற்குப்பிரதிபலனாக தங்களுடைய உரிய பங்கினைச் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.
இந்த ஆண்டின் இறுதிவாக்கில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் இந்தியா வர இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. லீமோ (LEMOA-Logistics Exchange Agreement)  கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்த னை ஒப்பந்தத்தினைத் துவக்கி வைப்பதே அவர் திட்டம். அப்போது அவர் இந்தியாவிற்குக் கொண்டு வரும் விமானப்படை விமானத்திற்கு எரிபொருள் களை நிரப்புதல் மற்றும் பணிபுரிதல் ஆகிய வற்றைத் திறந்துவைத்திடுவார்.
லீமோ என்பது இந்திய தலங்களை (bases)  அமெரிக்கப் போர் விமானங்கள்
மற்றும் போர்க் கப்பல்கள் பயன்படுத்திக்கொள் வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.

தங்கள் வளைக்குள் இழுக்க

அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருப்பது, டோக்லாம் சமவெளியில் சீனாவுடன் பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டி ருக்கும் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியாவை தங்களின் போர்த்தந்திர வலைக்குள் ஈர்ப்பதற்குச் சரியான தருணம் என்று அமெரிக்கா கருதுகிறது.

ஒவ்வோராண்டும் நடத்தப்படும் மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியாவையும் சேர்த்து அதனை விரிவாக்கிடவேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நச்சரித்துக்கொண்டி ருக்கிறது. அவ்வாறு நடைபெற்றால் அது நான்கு நாடுகளின்அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என நான்கு நாடுகளின்கூட்டுப் பயிற்சியாக மாறிவிடும்.
மோடி அரசாங்கம், போர் ஆயுதங்கள் செய்திடும் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் ராணுவத்தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்குக் கதவைத் திறந்துவிடும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.இவற்றுடன் இந்தியக் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கேந்திரமான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்திடவும் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவை அடிபணிய வைத்திருப்பது, நாட்டின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் மாபெரும் அச்சுறுத்தலாகும். போலி தேசிய இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்துடன் அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடைந்துகொண்டிருப்பதற்கு எதிராகவும் போராடிட வேண்டும்.
செப்டம்பர் 1 அன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தினமாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான தினமாகவும் அனுசரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் எடுத்துச் சென்றிட வேண்டும்.

===பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்====                                                                                              தமிழில்: .வீரமணி


Saturday, July 1, 2017

டிரம்ப்லேண்டில் மோடி


People’s Democracy
தலையங்கம்
பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா விற்கு ஐந்தாவது தடவையாக பயணம் செய்திருக்கிறார். இந்தத் தடவை அவர் முதன்முறையாக ஜனாதிபதி டொனால்டு டிரம்பை அதிகாரப்பூர்வமாகச் சந்தித்து, இந்தி யாவானது, அமெரிக்க-இந்திய நீண்டகால ராணுவசூழ்ச்சித் திட்டத்தின் இளைய பங்காளி என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.வெள்ளைமாளிகைக்கு மோடியின் விஜயம்தொடர்பாக இந்திய அரசாங்கத்தின் தரப்பில் சிலஐயங்கள் ஏற்பட்டிருந்தன.
ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் நலன்களைப் பாதிக்கக்கூடியவிதத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்திருந்த தால், இதற்குமுன் எவரும் ஊகித்துணர முடியாத அளவிற்கு இத்தகைய ஐயங்கள் ஏற்பட்டிருந்தன. புவிவெப்பமயமாதல் தொடர்பாக பாரீஸ்ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு எதிராக டிரம்பின்விமர்சனம், இந்திய இளைஞர்கள் அமெரிக்காவில் வேலைசெய்வதற்கு எச்-1பி விசா வழங்குவதில் கட்டுப் பாடுகள், அமெரிக்க வேலைகளை இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யக் கூடாது என்று அவர் அழுத்தம் செலுத்தி வந்தது போன்ற அம்சங்கள் டிரம்ப்பால் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை என்று இந்திய அரசாங்கத்தின் தரப்பில் கருதப் பட்டு வந்தது.அமெரிக்காவின் ராணுவ சூழ்ச்சி அம்சங்கள்அனைத்திற்கும் மோடி அரசாங்கம் வளைந்துகொடுத்திருக்கிறது. மோடியின் பயணத்தின் நிறைவில் இரு நாடுகளுக்கும் இடையே வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கை இத்தகைய அணுகு முறையுடன்தான் வர்ணம் பூசப்பட்டிருக்கிறது.இருநாடுகளுக்கும் இடையே ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளில் ஒத்துழைப்பினை ஆழப்படுத்திட உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?இந்தியா, அமெரிக்காவிடமிருந்து இந்த ஒத்துழைப்பின் அடிப்படையில், 2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கடல் கண்காணிப்பு ஆயுதத் தளவாடங்களை இந்தியா வாங்க இருக்கிறது.மேலும் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கிடையேயும் ராணுவ ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. அமெரிக்க பகாசுர ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்கீட் மார்ட்டின், இந்திய நிறுவனமான டாடாவுடன் இந்தியாவில் கூட்டாக எப்.16 போர்விமானங்களைக் கட்டுவதற்கு ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. ஜூலை மாதத்தில் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான கப்பல் படைகளுக்கு இடையே நடைபெறவுள்ள மலபார் கூட்டுப் பயிற்சி குறித்தும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இந்தியா அணி சேர்ந்ததற்குப்பின்னர், இவ்விருநாட்டின் தலைவர்களும் தங்கள் பிணைப்பை, ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் ‘பொறுப்புள்ள பணியாளர்கள்’ என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். தென்சீனக் கடல் தொடர்பான இவர்களது அறிக்கை, ‘இப்பிராந்தியம் முழுவதும் கடல்வழியே பயணிப்ப தற்கும், கடலுக்கு மேல் வான்வழியே செல்வதற்கும், வணிகரீதியாக செயல்படுவதற்கும் உள்ள சுதந்தி ரத்தை மதித்திடுவதன் முக்கியத்துவம்’ குறித்தும் குறிப்பிட்டிருப்பதானது, சீனாவிடமிருந்து விலகிச் செல்ல விருப்பம் தெரிவித்து, மோடி சமிக்ஞை அளித்துவிட்டார் என்பதையே காட்டுகிறது.
வடகொரியாவுக்கு குறி
இந்த அறிக்கையில், வடகொரியா குறித்த அமெரிக்காவின் நிலைபாடும் குறிப்பிடப்பட்டிருக் கிறது. ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் (DPRK)தொடர் ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை எதிர்த்திட இவ்விருநாடுகளும் இணைந்து செயல்பட உறுதிகொள்கிறது’ என்று இந்தியா கூறியிருக் கிறது. ‘கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் இத்திட்டங்களுக்கு ஒத்துழைத்திடும் அனைத்துத்தரப்பினருக்கு எதிராகவும் இணைந்து செயல்படவும்’ இந்தியா உறுதி எடுத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு இந்தியா, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசுக்கு எதிராக தீவிரமான முறையில் நிலைபாட்டினை மேற்கொண்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.
அமெரிக்காவுக்கு இந்தியா தாராளம்
அமெரிக்காவிற்குள்ளேயே அதிக வேலைகளை உருவாக்குவதற்கு இந்தியா தன்னா லான அனைத்தையும் செய்திடும் என்கிற உத்தர வாதத்தை மீண்டும் டிரம்ப்புக்கு அளிக்கக்கூடிய அளவிற்கு, மோடி சென்றிருப்பதுபோலவே தோன்றுகிறது. இந்தியா, அமெரிக்காவிடமிருந்து 100 போயிங்ரக பயணிகள் விமானங்களை வாங்கிடும் என்கிறஅறிவிப்பானது, டிரம்ப்பால் வரவேற்கப்பட்டி ருக்கிறது. இது அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கிட உதவும் என்று அவர் கூறியிருக்கிறார். அதேபோன்று, இருநாடுகளின் கூட்டறிக்கையானது, வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் கம்பெனிக்்கும் இந்திய அணுமின் கழகத்திற்கும் இடையே,ஆறு அணு உலைகள் வாங்குவது சம்பந்தமான இறுதிக்கட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் குறிப்பிட்டிருக் கிறது. வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் சமீபத்தில்தான் தன்னுடைய திவால் தன்மையை பிரகடனம் செய்திருக்கிறது. இவ்வாறு திவாலாகிப்போன நிறுவனத்தை தூக்கிப்பிடிப்பதற்கு, இந்திய மக்களின் வரிப் பணத்தை வாரி வழங்கிட மோடிஅரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. மேலும், மேற்படி அணுமின், திட்டங்களை நிறைவேற்றக் கூடிய விதத்தில் தோஷிபா நிறுவனத்தின் தலைமை யிலான வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்திற்குத் தற்போது போதிய அளவிற்கு வல்லமை உண்டா என்பதற்கான உத்தரவாதம் எதுவும் கிடையாது.
இந்தியச் சந்தைக்கு குறி
டிரம்ப் நிர்வாகம் தங்களை முழுமையாகப் பாதுகாத்துக்கொள்ளக் கூடிய விதத்தில் இந்தக் கூட்டறிக்கையை உருவாக்கியுள்ள அதே சமயத்தில், இந்தக் கூட்டறிக்கையானது, இருநாடு களுக்குமிடையே சுதந்திரமான மற்றும் நேர்மையான வர்த்தகக் கொள்கைகளை உயர்த்திப்பிடித் திடுவோம் என்று வஞ்சகமானமுறையில் கூறிக்கொண்டிருக்கிறது. மேலும், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தக உறவுகளை ஒருங்கிணைந்த முறையில் மறுஆய்வு செய்திட இருக்கிறோம் என்ற முன்மொழிவும்கூட, நம்நாட்டைப்பொறுத்தவரை ஓர் ஆபத்தான அறிகுறியையே காட்டுகிறது.
இதனை அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இப்போதி ருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றும், வர்த்தகப் பற்றாக்குறை குறைக்கப்பட வேண்டும் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்ற சமயத்தில், டிரம்ப் மோடியிடம் கூறியிருப்பதுடன் பொருத்திப் பார்த்திட வேண்டும். அமெரிக்காவில் உற்பத்தியாகும் அனைத்துவிதமான பொருட்களும் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இன்றி, இனி இந்திய சந்தைக்குள் பாயும் என்பதே இதன் பொருளாகும்.‘இந்தியாவில் உற்பத்தி செய்க’ என்னும் மோடியின் முழக்கத்திற்கு அமெரிக்கா எப்படி உதவும் என்பது குறித்து கூட்டறிக்கையில் எதுவும் இல்லை. அதேபோன்று இந்தியாவின் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஒப்பந்தத்தை நிறை வேற்றிட இந்தியா பசுமைத் தொழில்நுட்பத்தை பெறுவதற்கு அமெரிக்கா எந்த விதத்தில் உதவிடும் என்பது குறித்தும் கூட்டறிக்கையில் எதுவும் இல்லை.
அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர் களுக்கு எச்-1பி விசா வசதிகளைத் தொடர்வது சம்பந்தமாகவும் எவ்விதமான உறுதிமொழியும் இக்கூட்டறிக்கையில் இல்லை. கூட்டறிக்கை தொடர்பாக மோடி அரசாங்கம் தம்பட்டம் அடித்துக்கொள்ளக்கூடிய ஒரே யொரு வெளிப்பாடு என்னவெனில், பாகிஸ்தான்தன் எல்லையை பிற நாடுகள் மீதான பயங்கர வாதத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தாது என்பதைஉத்தரவாதப்படுத்திட வேண்டும் என்று குறிப்பிட்டி ருப்பதாகும். இது, இதற்கு முன்னர் ஜனாதிபதி ஒபாமாவுடன் செய்துகொள்ளப்பட்டுள்ள அறிக்கை யுடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.
எனினும்,டிரம்ப் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் உள்ளநிலைமைகளைச் சமாளித்திட பாகிஸ்தானைத் தான் ராணுவ சூழ்ச்சிக்கான தளமாக பார்ப்பது இப்போதும் தொடர்கிறது. மோடி பகட்டான ஆரவாரத்துடன் மும்முறைடிரம்பைக் கட்டித்தழுவிய போதிலும், இருநாடு களுக்கும் இடையேயான கூட்டறிக்கையானது, அமெரிக்காவின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடிய விதத்திலும், இந்தியாவின் நலன்களை மிகவும் எச்சரிக்கையுடன் கண்டு கொள்ளாமல் உதாசீனம் செய்துள்ள நிலையில் இருப்பதையுமே காட்டுகிறது.
ஜூன் 29, 2017
தமிழில்: ச. வீரமணி