Monday, December 25, 2017

மனுஸ்மிருதியை எரித்த மாணவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல்


கரீம்நகர் (தெலங்கானா), டிச.26-

மனுஸ்மிரிதியின் நகல்களை எரித்த  மாணவர்களை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தெலங்கானா மாநிலம், கரீம்நகரில் அமைந்துள்ள சதவாகனா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ளது.

இது தொடர்பாக ஸ்க்ரோல்(scroll) இணைய இதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தெலங்கானா சதவாகனா பல்கலைக் கழகத்தில் திங்கள் அன்று முற்போக்கு ஜனநாயக மாணவர் அமைப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் மனுஸ்மிருதி சாதியப் பாகுபாடுகளை நியாயப்படுத்துகிறது என்று கூறி அதனை எரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யைச் சேர்ந்த எட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள், தலித் மாணவர்களைக் கற்களை வீசியும் கம்பால் அடித்தும் தாக்கியிருக்கின்றனர். தலித் மாணவர்கள் தாங்கள் இந்தத் தினத்தை “மனுஸ்மிருதி எரிப்பு தினமாக” அனுசரித்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறிய அதே சமயத்தில், பாஜகவினர் இவர்கள் “தேசவிரோத முழக்கமிட்டனர், எனவே தாக்கினோம்” என்ற கூறிக்கொண்டிருக்கின்றனர். பின்னர் காவல்துறையினரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்காக என்று கூறி, தலித் மாணவர்கள் மீது குண்டாந்தடிகளால் தாக்குதல் தொடுத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக தலித் மாணவர்கள், தங்களைத் தாக்கியவர்கள் வெளியாட்கள் என்றும், ஆனால் காவல்துறையினர் அவர்களையும் மாணவர்கள்தான் என்று கூறிக்கொண்டிருக்கிறதென்றும் கூறினார்கள். காவல்துறையினர் இது தொடர்பாக இரு தரப்பிலும் சுமார் 22 பேரைக் கைது செய்து காவல்நிலையத்தில் இருத்தி வைத்திருக்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஜுபக்கா ஸ்ரீனிவாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒவ்வோராண்டும் செய்வதைப்போலவே இந்த ஆண்டும் வழக்கமாக மனுஸ்மிருதியை எரித்திட திட்டமிட்டோம். சுமார் 10.30 மணியளவில் நிகழ்ச்சி நடைபெற்றது. எங்களைத் தாக்கிய இந்த ஆட்கள் யாரென்றே எங்களுக்குத் தெரியாது. அவர்கள் பல்கலைக் கழக வளாகத்திற்குள் திடீரென்று நுழைந்து எங்களைத் தாக்கினார்கள்,” என்றார்.

மேலும் அவர், “பல்கலைக் கழக வளாகத்திற்குள் இவ்வாறு தாக்குதல் சம்பவம் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். இவ்வாறு மனுஸ்மிருதியை எரிப்பதை இதற்கு முன் ஏபிவிபி ஆட்சேபித்ததே இல்லை. மனு ஸ்மிருதியை எரித்த மாணவர்கள் முற்போக்கு ஜனநாயக மாணவர் சங்கம், தலித் மாணவர் சங்கம் மற்றும் வித்யார்த்தி தெலங்கானா வித்யார்த்தி வேதிகாமற்றும் பகுஜன் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்களாகும்,” என்றும் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் பாஜகவைச் சேர்ந்த பண்டி சஞ்சய் என்கிற பாஜகவின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், சம்பவம் பல்கலைக் கழக வளாகத்திற்கு வெளியே நடந்ததாகவும், அவர்கள் தேசத்திற்கு எதிராகவும், இந்துயிசத்திற்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ்-க்கு எதிராகவும் முழக்கமிட்டதால் தலையிட்டோம் என்றும் கூறியுள்ளார். மேலும் தலித் மாணவர்கள்தான் முதலில் பாஜகவினரைத் தாக்கினர் என்றும் கூறினார். ஆனால் காவல்துறையினர் பதிவு செய்துள்ள காணொளிக் காட்சிகள், வன்முறையில் ஈடுபட்டவர்கள் காவிக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை அப்பட்டமாகக் காண்பிக்கிறது.


(ச.வீ.)

No comments: