மோடி அரசாங்கம், அமெரிக்காவை ராணுவ ரீதியாக மிகவும் நெருக்கமானமுறையில் கட்டித்தழுவிக்கொண்டிருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்திற்கு நரேந்திர மோடி தன்னாலான அனைத்து விதங்களிலும் விசுவாசமாக நடந்துகொள்வார் என்றே தோன்றுகிறது.
ஆகஸ்ட் 15 அன்று, டொனால்டு டிரம்பிற்கும் நரேந்திர மோடிக்கும் இடையே தொலைபேசி வாயிலாக ஓர் உரையாடல் நடந்திருக்கிறது. டிரம்ப், மோடிக்கு இந்தியாவின் சுதந்திர தின வாழ்த்துக்களைக் கூறியதுடன், இரு நாடுகளின் உறவுகளுக்கு இடையே புதிய சில நடவடிக்கைகள் குறித்தும் கோடிட்டுக்காட்டியிருக்கிறார்.
வெள்ளை மாளிகை யிலிருந்து வந்துள்ள செய்தி, “இருநாட்டின் தலைவர்களும் இந்திய – பசிபிக் பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் வளர்த்துக்கொள்வதற்காக ஒவ்வொரு நாட்டின் சார்பிலேயும் இரு அமைச்சர்களைக் கொண்ட ஓர் அமைப்பு நிறுவப்படும்” என்றும் “அந்த அமைப்பு ராணுவரீதியான (strategic) கலந்தாலோசனைகளை முன்னெடுத்துச் செல்லும்” என்றும் கூறுகிறது.
புதிய இரண்டுக்கு இரண்டு
இரண்டுக்கு இரண்டு அமைச்சர்கள் என்பது, இந்தியாவின் தரப்பில் ராணுவ அமைச்சர் மற்றும் அயல்துறை அமைச்சர்களையும், இதேபோன்று அமெரிக்காவில் இத்துறைகளுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர்களையும் குறிப்பிடுகிறது.
இதுவரை இந்த 2க்கு 2 என்பது, நம் நாட்டின் சார்பில் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாக இருந்தார்கள். அதேபோன்று அமெரிக்காவின் சார்பிலும் அயல்துறை அமைச்சரும், வர்த்தகத்துறை அமைச்சருமாகத்தான்
இருந்தார்கள். இப்போது வர்த்தகத்துறை அமைச்சர் என்பது ராணுவத்துறை அமைச்சர் என்று மாற்றப்பட்டிருக்கிறது.
இம்மாற்றம், இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பு அதிகரித்துக்கொண்டிருப்பதையே காட்டுகிறது. அமெரிக்கா, ஆசியா – பசிபிக் பிராந்தியத்தில் இவ்வாறு 2க்கு 2 அமைச்சர்களைக் கொண்ட ராணுவக் கூட்டணிகளை இதுவரையிலும் ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன்தான் வைத்திருந்தது. இப்போது அதனுடன் இந்தியாவும் சேர்ந்துகொண்டிருக்கிறது.
இந்திய-பசிபிக் பிராந்தியம் என்பதன் பொருள் என்னவென்பதை இந்தப் பின்னணியில் பார்த்திட வேண்டும். 2015 ஜனவரியில் ஒபாமா இந்தியாவிற்கு வந்திருந்த சமயத்தில், ஆசிய – பசிபிக் மீதான அமெரிக்க – இந்திய கூட்டு தொலைநோக்கு அறிக்கை (US-India Joint Vision
Statement on Asia Pacific) ஒன்று தயாரிக்கப்பட்டதைப்
பார்த்திட வேண்டும். இப்போது இவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டணி என்பது, சீனாவே தங்களின் பிரதான கவலை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மோடியின் நன்றி உணர்த்துவது என்ன?
இந்தப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலைமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு மோடி சென்றிருப்பதை, மோடி “வட கொரிய அச்சுறுத்தலுக்கு எதிராக உலகத்தை ஒன்றுபடுத்திட ஒரு வலுவான தலைமையைக் கொடுப்பதற்காக ஜனாதிபதி டிரம்புக்கு நன்றி” தெரிவித்திருப்பதிலிருந்தே நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது. இந்தியா, அமெரிக்காவின் ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்திடும் என்பதை மீண்டும் உறுதியளித்திடும் விதத்தில் இந்தக்கூற்று அமைந்திருக்கிறது.
அதன்பிறகு, ஜனாதிபதி டிரம்ப், ஆப்கானிஸ்தானத்துடனும், தெற்கு ஆசிய நாடுகளுடனும் அவருடைய அணுகுமுறை எப்படி இருந்திட வேண்டும் என்று உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்துள்ள பயங்கரவாதிகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததில் மோடி அரசாங்கம் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது.
டிரம்ப் மேலும் கூறுகையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பல பில்லியன் டாலர்கள் கொடுத்திருப்பதாகவும், இந்நிலையில் தாங்கள் யாருக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோமோ
அத்தகைய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதை சகித்துக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இவ்வாறு அறிக்கைகள் விடுவதெல்லாம் அமெரிக்கா கடந்த 15 ஆண்டுகளாக செய்து வந்ததுதான். எதார்த்த நிலை என்னவென்றால், ஆப்கானிஸ்தானத்தில்
பாகிஸ்தானின் உதவியில்லாமல் அமெரிக்காவால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான்.
டிரம்பின் எதிர்பார்ப்பு
இந்தியா குறித்து, டிரம்ப் கூறுகையில், “இந்தியா, அமெரிக்காவுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் எங்களுக்கு அதிக அளவில் இந்தியா உதவிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குறிப்பாக, பொருளாதார உதவி மற்றும் வளர்ச்சிப் பகுதிகளில் அதன் உதவி மிகவும் அவசியமாகும்.
” டிரம்ப், தன்னுடைய நேட்டோ கூட்டணி நாடுகளுடனும் இதே போன்றே நிலை எடுத்திருக்கிறார். தாங்கள் தங்களுடைய ராணுவத்தினருக்கு அதிக அளவில் பணம் செலவு செய்துகொண்டிருப்பதாகவும், அத்தகைய செலவுகளைத் தங்களுடன் ராணுவக் கூட்டணி வைத்துள்ள நாடுகள் தாங்குவதை அமெரிக்க எதிர்பார்க்கவில்லை என்றும் டிரம்ப் கூறியிருக் கிறார். ஆப்கானிஸ்தானத்தைப் பொறுத்தவரை, தன்னுடைய கூட்டணிகளாக இருக்கக்கூடிய பாகிஸ்தானும் இந்தியாவும் பல பில்லியன் டாலர்கள் ஈட்டிக்கொண்டிருப்பதால், அதற்குப்பிரதிபலனாக தங்களுடைய உரிய பங்கினைச் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் எதிர்பார்க்கிறார்.
இந்த ஆண்டின் இறுதிவாக்கில் அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜெனரல் ஜேம்ஸ் மாட்டிஸ் இந்தியா வர இருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது. லீமோ (LEMOA-Logistics Exchange Agreement) கடல்வழி மற்றும் வான்வழி பரிவர்த்த னை ஒப்பந்தத்தினைத் துவக்கி வைப்பதே அவர் திட்டம். அப்போது அவர் இந்தியாவிற்குக் கொண்டு வரும் விமானப்படை விமானத்திற்கு எரிபொருள் களை நிரப்புதல் மற்றும் பணிபுரிதல் ஆகிய வற்றைத் திறந்துவைத்திடுவார்.
லீமோ என்பது இந்திய தலங்களை (bases) அமெரிக்கப் போர் விமானங்கள்
மற்றும் போர்க் கப்பல்கள் பயன்படுத்திக்கொள் வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.
மற்றும் போர்க் கப்பல்கள் பயன்படுத்திக்கொள் வதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஒப்பந்தமாகும்.
தங்கள் வளைக்குள் இழுக்க…
அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்துக் கொண்டிருப்பது, டோக்லாம் சமவெளியில் சீனாவுடன் பிரச்சனைகள் தொடர்ந்துகொண்டி ருக்கும் பின்னணியில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுவே இந்தியாவை தங்களின் போர்த்தந்திர வலைக்குள் ஈர்ப்பதற்குச் சரியான தருணம் என்று அமெரிக்கா கருதுகிறது.
ஒவ்வோராண்டும் நடத்தப்படும் மலபார் பயிற்சியில் ஆஸ்திரேலியாவையும் சேர்த்து அதனை விரிவாக்கிடவேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா நச்சரித்துக்கொண்டி ருக்கிறது. அவ்வாறு நடைபெற்றால் அது நான்கு நாடுகளின் – அதாவது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என நான்கு நாடுகளின் – கூட்டுப் பயிற்சியாக மாறிவிடும்.
மோடி அரசாங்கம், போர் ஆயுதங்கள் செய்திடும் அமெரிக்க நிறுவனங்கள், இந்தியாவில் ராணுவத்தளவாடங்கள் உற்பத்தி செய்வதற்குக் கதவைத் திறந்துவிடும் வேலைகளிலும் இறங்கி இருக்கிறது.இவற்றுடன் இந்தியக் கார்ப்பரேட்டுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கேந்திரமான ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்திடவும் கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது.
அமெரிக்காவின் ராணுவ மற்றும் போர்த்தந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவை அடிபணிய வைத்திருப்பது, நாட்டின் இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் மாபெரும் அச்சுறுத்தலாகும். போலி தேசிய இந்துத்துவா சக்திகளுக்கு எதிரான போராட்டத்துடன் அமெரிக்காவிடம் இந்தியா சரணாகதி அடைந்துகொண்டிருப்பதற்கு எதிராகவும் போராடிட வேண்டும்.
செப்டம்பர் 1 அன்று ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தினமாகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான தினமாகவும் அனுசரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தி யக்குழு அறைகூவல் விடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் எடுத்துச் சென்றிட வேண்டும்.
===பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்==== தமிழில்: ச.வீரமணி
No comments:
Post a Comment