2018ஆம் ஆண்டிற்கான உறுதிமொழி – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்
on 0 COMMENTS
நடந்து முடிந்த 2017ஆம் ஆண்டைத் திரும்பிப் பார்க்கும்போது, நாட்டின் நிலைமையில் ஏற்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை அனைவரும் குறித்துக் கொள்ள வேண்டும். நடந்த முடிந்த ஆண்டில் பிற்போக்கு சக்திகளின் ஆட்டங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. ஆயினும் ஆண்டின் கடைசிக் காலாண்டில் வலதுசாரித் தாக்குதலுக்கு எதிராகப் போராடி வந்த சக்திகளும் தங்களை ஒருமுகப்படுத்தி, முன்னுக்கு வந்திருக்கின்றன.
மக்கள் 2017ஆம் ஆண்டில் தங்கள் மீது வலதுசாரிகள் ஏவிய தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மோடியின் ஆட்சியின் கீழ், இந்துத்துவா சக்திகள் மிகவும் தைரியம் பெற்றிருக்கின்றன. பசுப் பாதுகாப்புப் படை என்ற பெயரில் அவர்கள் மேற்கொண்ட வன்முறை வெறியாட்டத்திற்கு ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் என்னும் ஊரில் பெஹ்லுகான் என்பவரைக் கொலை செய்தது ஓர் எடுத்துக் காட்டாகும். முஸ்லீம்களுக்கு எதிரான இவர்களுடைய வெறுப்புப் பிரச்சாரம் ஜுனைத், அஃப்ரசல் போன்று எண்ணற்றோர் உயிரைப் பலிகொண்டிருக்கிறது. இந்துத்துவா சக்திகள், நாட்டில் எவ்வகையான திரைப்படங்கள் வெளியாக வேண்டும், எவ்விதமான புத்தகங்கள் படிக்கப்பட வேண்டும், பல்கலைக் கழகங்களில் என்ன மாதிரியான பாடத்திட்டங்கள் போதிக்கப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கக்கூடிய அளவிற்குச் சென்றிருக்கின்றன.
அரசியல்ரீதியாக, 2017ஆம் ஆண்டு, உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக அபரிமிதமான வெற்றியைப் பெற்றதுடன் துவங்கியது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல்வராக ஆதித்யநாத் அமர்த்தப்பட்டதென்பது, வெறிபிடித்த வலதுசாரி மதவெறி அரசியல் துவக்கப்பட்டுவிட்டது என்பதற்கான சமிக்ஞையாகும். தேர்தலில் பெரும்பான்மை பெறாத கோவா மற்றும் மணிப்பூரிலும்கூட அது எப்படியோ அரசாங்கங்களை அமைத்துவிட்டது. இமாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. குஜராத்தை அது தக்க வைத்துக்கொண்டிருந்தபோதிலும் கூட, அங்கே அது கடும் எதிர்ப்பினைச் சந்தித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும்தான் காங்கிரஸ் கட்சி, அகாலி தளம்-பாஜக கூட்டணியைத் தோற்கடிக்க முடிந்திருக்கிறது.
பொருளாதார ரீதியாகப் பார்த்தோமானால், 2016ஆம் ஆண்டின் இறுதியில் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று ஆட்சியாளர்கள் பிறப்பித்த அறிவிப்பின் தாக்கம் 2017ஆம் ஆண்டிலும் தொடர்ந்ததைப் பார்க்க முடிந்தது. சிறு தொழில் பிரிவினரையும், அதிலும் குறிப்பாக முறைசாராத் தொழில் பிரிவினரையும் அது கடுமையாகப் பாதித்து, ஏராளமானவர்களை வேலையிழக்கச் செய்துவிட்டது. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி என்னும் ஜிஎஸ்டி அமலாக்கம் மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றியிருப்பதுடன், சிறிய வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களையும் கடுமையாகப் பாதித்திருக்கிறது.
விவசாய நெருக்கடியின் தாக்கமும் நாட்டின் பல பகுதிகளிலும் விவசாயிகளால் மிகவும் கடுமையாக உணரப்பட்டிருக்கிறது. பொருளாதார மந்தம் பொருளாதாரத்தின் பல துறைகளிலும் வேலையிழப்புக்கு இட்டுச் சென்றிருக்கிறது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், வேலை வாய்ப்பு முன்னணியில் மோடி அரசாங்கத்தின் படுதோல்வியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இத்துடன் அத்தியாவசியப் பொருள்களின் விலைஉயர்வும் சேர்ந்து கொண்டு மக்களை மிகவும் மோசமான விதத்தில் பாதித்திருக்கிறது.
பாஜக அரசாங்கமானது பொதுத்துறையையும் மற்றும் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளையும் தனியாரிடம் தாரைவார்ப்பதற்கான கொள்கைகளை மிகவும் அரக்கத்தனமான முறையில் உந்தித்தள்ளிக் கொண்டிருக்கிறது. அதேபோன்று பொதுக் கல்வியையும், பொது சுகாதாரத் திட்டங்களையும் தனியாரிடம் மிகப்பெரிய அளவில் தாரை வார்த்திடவும் திட்டங்கள் தீட்டி இருக்கிறது. இப்போது நாடாளுமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள நிதித் தீர்மானம் மற்றும் சேமிப்புக் காப்பீடு சட்டமுன்வடிவு (FRDI- The Financial Resolution & Deposit Insurance Bill), கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கும் ஊதாரித்தனமான முறையில் கடன்களை அள்ளிக்கொடுத்துவிட்டுத் திரும்பப் பெற முடியாது, அவற்றை செயல்படா சொத்துக்கள் (NPA-Non-performing assets) என்று மாற்றிவிட்டு, தத்தளித்துக் கொண்டிருக்கும் வங்கிகளைத் தூக்கி நிறுத்துவதற்காக, வங்கிகளில் சேமிப்பாக வைத்துள்ள மக்களின் சேமிப்புத்தொகைகளைக் கையகப்படுத்திட வகை செய்கிறது.
ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் மாநிலங்கள் மற்றும் அரசமைப்புச்சட்ட அமைப்புகளின் அதிகாரங்களையும் அரித்துவீழ்த்திட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை எவர் எதிர்த்தாலும் அவரை தேச விரோதி என்று முத்திரை குத்துகிறது. 2017ஆம் ஆண்டு மோடி ஆட்சியின் எதேச்சாதிகார கோர முகத்தைக் கண்கூசச்செய்யும் அளவிற்குப் பார்த்தது.
டொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மாறியபின்னர், இந்தியாவை அமெரிக்காவின் அடிவருடியாக மாற்றுவதற்கான வேலைகளை மோடி அரசாங்கம் முடுக்கிவிட்டிருக்கிறது. டிரம்ப் ஆட்சியின் கீழ் அமெரிக்காவின் அயல்துறைக் கொள்கையில் எவரும் ஊகிக்கமுடியாத அளவிற்கு மாற்றங்கள் ஏற்படுவதன்காரணமாக, அமெரிக்காவுடன் கூட்டணி வைத்திருப்பது நம் நாட்டின் நலன்களுக்குக் குந்தகம் விளைவித்திடும் விரும்பத்தகாத நிலைமைகளை உருவாக்கிடும். இதற்குச் சமீபத்திய உதாரணம், அமெரிக்கா, இஸ்ரேலின் தலைநகர் ஜெருசேலம் என்று அறிவித்ததில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடாகும். ஆரம்பத்தில் அமெரிக்காவின் அறிவிப்பை விமர்சனம் செய்வதற்கே மறுத்துவிட்டு, பின்னர் ஐ.நா.மன்றத்தில் எப்படி அது தன் நிலையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது என்பதைப் பார்த்தோம்.
ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால், ஆண்டின் இறுதியில் நாட்டிற்குள் உள்ள நிலைமை, மக்களின் வாழ்வாதாரங்களின் மீதும் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மீதும் சுற்றி சுற்றித் தாக்குதல் தொடுக்கப்படுவது தொடர்வதைப் பார்க்கிறோம். எனினும், இது சித்திரத்தின் ஒரு பக்கம்தான். 2017ஆம் ஆண்டு சித்திரத்தின் மறு பக்கம் என்பது, மத்திய அரசாங்கம் மற்றும் பாஜகவின் மாநில அரசாங்கங்களின் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு பிரிவைச் சேர்ந்த மக்களும் ஒன்றுபட்டு போராட்டங்களை மேற்கொண்டு அவற்றுக்கு எதிராக ஓர் உறுதியான எதிர்ப்பினை அளித்து வருவது அதிகரித்துக் கொண்டிருப்பதாகும்.
இவற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை மகாராஷ்ட்ரம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களாகும். குறிப்பாக மகாராஷ்ட்ராவிலும் ராஜஸ்தானிலும் அனைத்துத்தரப்பு விவசாயிகளையும் அணிதிரட்டி நடைபெற்ற போராட்டங்களின் காரணமாக அங்கே ஆட்சியில் உள்ளவர்கள், விவசாயிகளின் ஒருசில கோரிக்கைகளை ஏற்கச் செய்வதற்கு இட்டுச்சென்றது. நவம்பர் 20 அன்று தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரே மேடையின் கீழ் விவசாயிகளின் நாடாளுமன்றத்தை (kisan parliament) நடத்தியதைப் பார்த்தோம்.
தொழிலாளி வர்க்கம் 2016 செப்டம்பர் 2 அன்று பொது வேலை நிறுத்தத்தை நடத்தியதும், அதனைத் தொடர்ந்து நவம்பர் 9 முதல் 11 வரை தில்லியில் நடத்திய மாபெரும் முற்றுகைப் போராட்டமும், பெரிய அளவிலான ஒன்றுபட்ட தொழிற்சங்க நடவடிக்கையாகும். மூன்று நாட்கள் நடைபெற்ற இம்மாபெரும் தர்ணா போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றார்கள்.
மேலும், 2017இல் இந்துத்துவா வெறிக் கொள்கைகளைத் திணித்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும், எதேச்சாதிகார தாக்குதல்களுக்கு எதிராகவும், மத்தியப் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தியதையும் பார்த்தோம். இந்துத்துவா தீவிரவாதிகள் கௌரி லங்கேஷ் அவர்களை கொன்றதற்கு எதிராக நாடு முழுதும் விரிவான அளவில் எதிர்ப்பியக்கங்கள் நடைபெற்றன.
2017இல் பாஜக அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு மக்கள் பிரிவினர் மத்தியிலும் அதிருப்தி அதிகரித்திருப்பதையும் பார்த்தோம். இதன் காரணமாக கடந்த மூன்றாண்டுகளில் பாஜகவின் அரசியல் முன்னேற்றம் என்பது தடுத்து நிறுத்தப்படுவது தொடங்கி இருக்கிறது. குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருப்பினும் 1995க்குப்பின் அது, குறைந்த அளவிற்கே இடங்கள் பெற்றிருப்பது என்பதானது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியின் அடையாளமேயாகும்.
இவை அனைத்தும் நமக்கு 2018 குறித்து அறிவித்திடும் எச்சரிக்கைகள் என்ன? நாட்டிலுள்ள நிலைமைகள் ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர் மீது ஏவிவரும் தாக்குதல்களுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் விரிவான அளவில் மக்கள் ஒற்றுமையைக் கட்டி எழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் மேலும் உக்கிரமான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
இத்தகைய ஒன்றுபட்ட போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் மூலமாகத்தான் ஓர் இடதுசாரி மற்றும் ஜனநாயகத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும். இத்தகையதொரு திட்டம்தான் பாஜக அரசாங்கத்தின் நவீன தாராளமயக் கொள்கைகள் மற்றும் மதவெறி நிகழ்ச்சிநிரலுக்கு நம்பகமான மாற்றாக அமைந்திட முடியும். இந்தப் பின்னணியில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் திரிபுராவில் இடது முன்னணி அரசாங்கங்களின் கொள்கைகளும், செயல்பாடுகளும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்து வருகின்றன.
நாட்டில் இடது மற்றும் ஜனநாயக சக்திகளின் முன்னால் இருக்கின்ற மாபெரும் பணி என்பது மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் மற்றும் இந்துத்துவா மதவெறிக்கு எதிராகவும் போராட்டங்களை முடுக்கிவிடுவதேயாகும். இப்பிரச்சனைகளின் மீது மக்களின் ஒற்றுமையை ஒன்றிணைப்பதன் மூலம் பாஜகவைத் தோற்கடிப்பதற்கான மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமை வளர்ந்தோங்கும். 2018ஆம் ஆண்டு நாம் மேற்கொள்ள வேண்டிய உறுதிமொழியாக இது அமைந்திடட்டும்.
(டிசம்பர் 27, 2017)
(தமிழில்: ச. வீரமணி)
No comments:
Post a Comment