நேபாளத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில்
நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-உம்,
நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்)-உம் கூட்டணி அமைத்து, கூட்டாட்சி முறையில்
நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில் மாபெரும் வெற்றி
பெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி
வாழ்த்துச்செய்தி அனுப்பியுள்ளார்.
நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தலைவரான கே.பி. ஓலிக்கு
அவர் எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:
“நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில் வரலாற்றுச்
சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிருப்பதற்கு என்னுடைய புரட்சி வாழ்த்துக்களையும், நெஞ்சம்
நிறைந்த பாராட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இன்னமும் முறையாக வரவில்லை
என்றபோதிலும், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) மற்றும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி
(மாவோயிஸ்ட் மையம்) ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று
எடுத்திட்ட முக்கியமானஅரசியல் நடவடிக்கை என்பது நாடு முழுதும் எதிரொலிக்கக்கூடிய விதத்தில்
நேபாள மக்கள் மத்தியில் மகத்தான நம்பிக்கையை வென்றிருக்கிறது என்பதைத் தெள்ளத் தெளிவாக்கியிருக்கிறது.
நேபாள கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் மொத்தம் 275
இடங்கள் இருக்கின்றன. இவற்றில் 165 இடங்களுக்குத் தொகுதி வாரியாக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்
படுவார்கள். 110 இடங்களுக்கு கட்சிகள் இவ்விடங்களில் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின்
அடிப்படையில் (இதற்கெனத் தனி வாக்கெடுப்பு நடைபெற்றது) பிரதிநிதித்துவ அடிப்படையில்
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில்
நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) 80 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்
மையம்) 36 இடங்களையும் (ஆக மொத்தம் 116 இடங்களை) வென்றுள்ளன. கட்சிகள்
பிரதிநிதித்துவ அடிப்படையில் பெற்றுள்ள வாக்குகள் சதவீதத்தின் அடிப்படையில், (இதன்
முடிவு இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றபோதிலும்) நேபாளம் கம்யூனிஸ்ட்
கட்சி(யுஎம்எல்) 41 இடங்களையும், நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) 17
இடங்களையும் (ஆக மொத்தம் 58 இடங்களைப்) பெற்றிருக்கின்றன. ஒட்டுமொத்தத்தில், இடதுசாரிக்
கூட்டணி 174 இடங்களைப் பெற்றிருக்கிறது. இது மொத்த இடங்களில் 63.3 சதவீதமாகும். மூன்றில்
இரண்டு பங்கிற்குச் சிறிது குறைவு. மாகாணங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், மொத்தம்
உள்ள ஏழு மாகாணங்களில் இடதுசாரிக் கூட்டணி ஆறு மாகாணங்களில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
இத்தேர்தல் முடிவுகள் நேபாளத்தில் அரசியல் ஸ்திரத்தன்மைக்கான
காலம் தொடங்கிவிட்டது என்று கட்டியங்கூறுகின்றன. கடந்த பத்தாண்டுகளாக நேபாளத்தில் அரசாட்சியிலிருந்து
குடியரசாக மாறுவதற்காக நடைபெற்ற இடைமாறுபாட்டுக் காலம் இப்போது முழுமை பெற்றுவிட்டதாகவும்
உறுதியானமுறையில் ஒருங்கிணைக்கப்பட்டு விட்டதாகவும் நான் உறுதியாக நம்புகிறேன். நேபாளக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குணாம்சம்
நேபாளத்தில் மட்டுமல்ல தெற்காசியா முழுவதுமே ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி மீது ஒரு நீண்ட
நெடிய செல்வாக்கினைச் செலுத்திடும்.
நேபாள மக்களும் இந்திய மக்களும் பலவகைகளிலும் பிணைக்கப்பட்டவர்கள்
என்று நான் எப்போதுமே கூறி வந்திருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். இங்கே பெரிய
அண்ணனோ அல்லது சின்னத் தம்பியோ கிடையாது. இருவருமே இரட்டைச் சகோதரர்கள்தான். ஒவ்வொருவரும்
மற்றவரின் வெற்றிகளைக் கொண்டாடுவோம். அதேபோன்று
ஒருவருக்கு நெருக்கடி வருமானால் மற்றவர் அந்தத் துயரத்தைப் பகிர்ந்து கொள்வோம்.
நேபாளத்தில் அமையவிருக்கும் புதிய அரசாங்கம் இருநாட்டு மக்களுக்கும் இடையேயான இத்தகைய
நட்புறவையும் சகோதரத்துவத்தையும் மேலும் வலுப்படுத்தும்
என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
உங்கள் வெற்றியைக் கொண்டாடுவதிலும், உங்கள் வெற்றிக்காக
கழிபேருவகை அடைவதிலும் இந்தியாவில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களோடு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னை இணைத்துக் கொள்கிறது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)-இன் அனைத்து
உறுப்பினர்களுக்கும் மற்றும் நேபாள மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்திடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
வரலாறுச்சிறப்புமிக்க இவ்விடைநிலை மாறுபாட்டுக்குப்பிறகு,
நேபாளத்தை ஒரு வலுவான மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கிடவும், நேபாள மக்களின்
முன்னேற்றம் மற்றும் வளமான வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு வேண்டிய அனைத்துப் பிரச்சனைகளையும்
தீர்த்துவைத்திடவும் வாழ்த்துகிறேன்.”
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துச் செய்தி
அனுப்பியிருக்கிறார்.
நேபாளக் கம்யூனிஸ்ட்
கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவருக்கு வாழ்த்து
இதேபோன்று நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்
மையம்) தலைவர் பிரசந்தா புஷ்பகமால் தாகலுக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேபாளத்தில் சமீபத்தில் நடைபெற்றுமுடிந்த கூட்டாட்சி
அடிப்படையிலான நாடாளுமன்ற மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல்களில் கம்யூனிஸ்ட் கூட்டணி
மாபெரும் வெற்றி பெற்றிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் என்னுடைய
புரட்சி வாழ்த்துக்களையும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுதல்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்), நேபாள கம்யூனிஸ்ட்
கட்சி (மாவோயிஸ்ட் மையம்) ஆகிய இரண்டும் கூட்டணி அமைத்ததனால் கிட்டத்தட்ட மூன்றில்
இரண்டு பங்கு வெற்றி பெற்றிருப்பதானது, நேபாளத்தை அரசாட்சியிலிருந்து குடியரசாக மாற்றும்
இடைநிலைக் காலத்தை உறுதியாக கம்யூனிஸ்ட் கூட்டணி எடுத்துச் செல்லும் என்கிற நம்பிக்கையை
அபரிமிதமான முறையில் வைத்திருக்கிறார்கள் என்பதைத் தெள்ளத்தெளிவாக்கி இருக்கிறது.
இக்கூட்டணி மொத்தம் உள்ள ஏழு மாகாணங்களுக்கான சட்டமன்றங்களில்
ஆறில் பெரும்பான்மையை வென்றிருப்பதையும் மேலும் மெய்ப்பித்திருக்கிறது.
புதிய அரசாங்கம் அமைந்தபிறகு, நேபாளத்தை ஒரு மதச்சார்பற்ற
ஜனநாயகக் குடியரசாக மாற்றும் இடைநிலைக் காலம் செய்துமுடித்திடும் என்று நான் உளப்பூர்வமாக
நம்புகிறேன். அதேபோன்று நேபாள மக்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான முக்கியமான
பிரச்சனைகளையும் இந்த அரசாங்கம் தீர்த்து அவர்களுக்கு முன்னேற்றத்தையும் வளமான வாழ்க்கையையும்
ஏற்படுத்திடும் என்றும் நம்புகிறேன்.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) அனைத்து
உறுப்பினர்களுக்கும் மற்றும் நேபாள மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்திடும்படிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி வாழ்த்துச் செய்தி
அனுப்பியிருக்கிறார்.
(ச.வீரமணி)
No comments:
Post a Comment